விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்மா பொண்ணு என்கிற லீலாவதி
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்பது நீண்ட நெடியது. அப்போராட்டக் களத்தில் ஈடுபட்டு இந்திய விடுதலைக்காக வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வீரர்களும் வீராங்கனைகளும் தன்னலமற்றுப் போராடி தங்கள் வாழ்வை, இன்னுயிரை இழந்தனர்.
இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது. எண்ணற்ற போராளிகள் தங்களின் தியாகத்தால், தீரத்தால், வீரத்தால், சேவையால் இந்திய விடுதலைக்கு வீரியத்துடன் வித்திட்டனர். அவர்களில் பலரின் தியாக வாழ்க்கை பற்றி அறியபட்டு இருந்தாலும் விடுதலை வேள்வியில் ஈடுபட்டு சிறை சென்று போராடிய பலரைப் பற்றிப் பேசப்படாமல் அறியப்படாமலேயே உள்ளது.
அவர்களது தியாகமும், போராட்ட வரலாறும் சரியான முறையில் உலகிற்கு எடுத்துச் சொல்லப்படாமலேயே உள்ளன.
அவ்வாறு பேசப்படாமல் போன வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்தான் விடுதலைப் போராட்ட வீராங்கனை அம்மா பொண்ணு (எ) லீலாவதி.
தென்னாட்டு ஜான்சி ராணி என்று அண்ணல் காந்தியாரால் அழைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள் – முருகப்பா இணையருக்கு 1916இல் மூன்றாவதாகப் பிறந்த புதல்விதான் அம்மா பொண்ணு.
அம்மா பொண்ணுவின் தந்தையார் முருகப்பா அவர்களும் விடுதலை வேள்வியில் கடலூர் அஞ்சலை அம்மாளுடன் பங்கு பெற்றவர். விடுதலைப் போராட்டத்திற்காகத் தங்களது சொத்துகளை இழந்த குடும்பம். கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்கள் வீரம் செறிந்த வரலாற்றைப் படிக்கும்போது, அம்மா பொண்ணு அவர்களின் தியாக வரலாற்றை நம்மால் அறிய முடிகிறது.
கடலூர் அஞ்சலை அம்மாள் 1927ஆம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை உடைப்புப் போராட்டத்தில் தலைமையேற்று ஈடுபட்டபோது, 11 வயது அம்மா பொண்ணு தனது தாயுடன் அப்போராட்டத்தில் கலந்துகொண்டு கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் தோளின் மீது ஏறி சுத்தியல் கொண்டு நீலன் சிலையை உடைக்க முற்பட்டார்.
வெள்ளை ஏகாதிபத்திய அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டபோது கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களுடன் அம்மாபொண்ணும் சிறைச் சென்றார். தனது 11ஆம் வயதிலேயே போராளியாகச் சிறை சென்ற பெருமை உடையவர் அம்மா பொண்ணு. காந்தியடிகள் கடலூர் அஞ்சலை அம்மாளைப் பார்க்க கடலூர் சிறைக்குப் பலமுறை வந்தபோது அம்மா பொண்ணுவிடம் மிக அன்பாக நலம் விசாரித்து பாராட்டுவார்.
காந்தியடிகள் போராட்டங்களில் கலந்துகொள்ளக் கடலூருக்கு வரும் போதெல்லாம் கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் இல்லத்தில்தான் தங்குவார். அப்போது அம்மா பொண்ணு, மிகச் சிறப்பான வகையில் பாசத்தோடு காந்தியாரை உபசரிப்பார். கடலூர் அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொண்டு அடிக்கடி சிறை செல்வதால் மகளை கவனிக்க முடியாத சூழல் உருவானதை அறிந்த காந்தியார், அம்மா பொண்ணுவை லீலாவதி என்று பெயர் மாற்றி அவரைத் தனது வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அம்மா பொண்ணு (எ) லீலாவதி, வார்தா ஆசிரமத்தில் நான்காண்டுகள் சேவை செய்து பின்பு மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது அன்னையுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். நான்காண்டுகள் வரை வெள்ளைக்கார அரசால் சிறைப்படுத்தப்பட்டார் அம்மா பொண்ணு (எ) லீலாவதி.
அம்மா பொண்ணு (எ) லீலாவதியின் கணவர்தான் விடுதலைப் போராட்டத் வீரரும், விடுதலை வேள்விக் களங்களில் முன்னின்று ஈடுபட்டதால் பல்லாண்டுகள் இந்திய நாட்டின் பல சிறைகளில் அடைக்கப்பட்ட தீரருமான, மார்க்சிய தலைவரும் பன்மொழி அறிஞர் க.ரா.ஜமதக்னி.
அம்மா பொண்ணு (எ) லீலாவதியின் இளைய சகோதரர் ஜெயவீரன் என்கிற ஜெயில் வீரன். கடலூர் அஞ்சலை அம்மாள் கர்ப்பிணியாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றபோதுதான், சிறையிலேயே பிள்ளையைப் பெற்றெடுத்தார். அவர்தான் ஜெயவீரன். சிறையிலேயே பிறந்ததால் அவரை ஜெயில் வீரன் என்றே அனைவரும் அழைத்தனர்.
தாய், தந்தை, கணவர் என்று இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக அம்மா பொண்ணு (எ) லீலாவதி அவர்களின் குடும்பம் தங்களது சொத்துகளையம், உடைமைகளையும் இழந்து மொத்தமாக 27 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றது. இத்தகைய பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்ற அம்மா பொண்ணு (எ) லீலாவதி அவர்களின் புகழை குடத்திலிட்ட விளக்கை குன்றின்மீது ஏற்றி வைப்பது போன்று நாம் ஏற்றிப் போற்ற வேண்டும்.
-ந.பாலசுந்தரம், எம்.ஏ.,எம்.காம்.