வெற்றிகளை அள்ள – நேர்மறை அணுகுமுறை | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
வாழ்வின் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நபரா நீங்கள்? எவ்வளவோ முயற்சிகள் செய்தும், எனக்குத் தோல்விகள் மட்டுமே பரிசாய்க் கிடைக்கின்றன என்று வாழ்க்கை சலித்து நிற்கும் நபரா நீங்கள்?…
அப்படியென்றால் கொஞ்சம் உங்களின் காதைக் கொடுங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். தோல்விகளைத் தள்ளி, வெற்றிகளை அள்ள ஒரே வழி, உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். அதாவது உங்கள் ரூட்டைக் கொஞ்சம் மாற்றுங்கள். புலம்புவதை நிறுத்தி, நேர்மறையான அணுகுமுறையை பின்பற்ற ஆரம்பியுங்கள்.
நேர்மறையான அணுகுமுறை என்பது வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்ணோட்டமாகும். அதாவது, வாழ்க்கையை நாம் எந்த விதத்தில் அணுகுகின்றோம் என்பதைப் பொறுத்தே, நம் வெற்றியும் தோல்வியும் இருக்கின்றது. நேர்மறையான அணுகுமுறை எந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் உள்ள நல்லதை மட்டுமே கண்டறிய அனுமதிக்கிறது. ஆக, மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் தேவையான ஒன்று. நேர்மறையான அணுகுமுறையை வளர்ப்பதற்கான சிறந்த வழி ஒவ்வொரு சூழ்நிலையிலும் உள்ள நல்லதை அங்கீகரிப்பதன் மூலம் தொடங்குவதாகும்.
‘கெட்டதிலும் நல்லது’ என்பார்கள் நம் முன்னோர்கள். கஷ்டங்களும், நஷ்டங்களும் நிறைந்த நம் வாழ்வில் கடினமான காலங்களில் கூட, அதிலிருந்து எதாவது நேர்மறையான ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு தேர்வில் தோல்வியடைந்தால், எதனால் தேர்வில் தோல்வி அடைந்தோம் என்பதனைக் கண்டுபிடித்து, அந்த அனுபவங்களை அடுத்த முறை உந்துதலாகப் பயன்படுத்தி, மேலும் விடாமுயற்சியுடன் படித்து முதல் மதிப்பெண்ணே பெறும் அளவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். வேலைத் தேடிச் சென்ற இடத்தில் வேலை கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்து விடாமல், பெற்ற அனுபவங்களைக் கொண்டு, அடுத்தடுத்து வரும் நேர்முகத் தேர்வுகளை நல்ல முறையில் அணுகி வாழ்வின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி விடலாம். நேர்மறை அணுகுமுறையில் தோல்வி என்பதே கிடையாது. ‘வெற்றி கிடைக்கவில்லை என்றால் அனுபவங்கள் கிடைத்தன’, என்பதே நேர்மறை அணுகுமுறையின் பாலபாடம்.
“அணுகுமுறையே உயர்வு”
‘நாம் திறமையற்றவர்கள், இந்த உலகில் வாழத் தகுதி அற்றவர்கள்’ என்ற எண்ணம் கொண்டு அலையும் இளைஞர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என்றால் மனம் உடைந்து, செய்வதறியாது திகைத்துப் போய் வாழ்க்கையை வெறுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்கள் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். கடவுள் கொடுத்த கைகள் இருக்கின்றன. நடக்கக் கால்கள் இருக்கின்றன. நமக்கு என்ன குறை என்று? கைகளும், கால்களும் இல்லாத மனிதர்கள் கூட நேர்மறை எண்ணங்களோடு வாழ்வில் வெற்றி பெறுவதை இவர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் ஆரம்பமே எதிர்நீச்சலாக அமைந்த “நிக் உஜிசிக்” (Nick Vujicic) என்ற இளைஞர், தன்னம்பிக்கையே தனது கைகள், துணிச்சலே தனது கால்கள் என்று வாழ்ந்து காட்டுகிறார். தன்னிடம் இல்லாததை நினைத்து உறைந்து போகாமல், இருப்பதைக் கொண்டு வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொண்டவர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த நிக் உஜிசிக் என அழைக்கப்படும், 36 வயது (டிச.4,1982) நிரம்பிய இவர், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இன்றி பிறந்தவர். இவர், ஒரு கட்டத்தில் தான் உயிர் வாழ வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆயினும், தன் பெற்றோரை நினைத்து தனது முடிவை மாற்றிக் கொண்டு, தன்னால் என்ன செய்ய முடியும் என சிந்தித்தார். முதலில் கால்களாலேயே எழுதத்தொடங்கிய இவர், படித்து பட்டம் பெற்று, நீச்சல், ஓவியம், போலோ போன்ற விளையாட்டுகளையும் திறமையாக விளையாடுகிறார். பல அசாத்திய செயல்களால் உலகினரை வியக்க வைத்து வருகிறார்.
திருமணமாகி மகிழ்வாக குடும்பம் நடத்திவரும் இவருக்கு, நான்கு குழந்தைகளும் உள்ளனர். தான் நேசிக்கும் மனிதரை அணைக்கவோ, எந்தப் பொருளையும் தூக்கவோ, எதையும் தொட்டு அனுபவிக்கவோ கரங்கள் இல்லை. நடக்கவோ, ஓடவோ, ஆடவோ கால்கள் இல்லை. ஆயினும், இவர், மனம் தளராமல், ‘Life without Limbs’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 2005ம் ஆண்டில் ஆரம்பித்து, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கான மாற்றுத்திறனாளர்களுக்கு வாழ்வளித்து வருகிறார். தன்னுடைய தன்னம்பிக்கை உரைகளை ஒலி-ஒளி குறுந்தகடுகளாக வெளியிட்டுவரும் இவர், Life’s Greater Purpose என்ற குறும்படத்தையும், Life without Limits என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். பல குறும்படங்களிலும் நடித்துவரும் இவர், The Butterfly Circus என்ற படத்துக்காக மூன்று விருதுகளையும் பெற்றுள்ளார். ‘எல்லா மனிதருமே ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு பயனாக இருக்க முடியும். யாருமே பயனற்றவர்கள் இல்லை’ என்பதையே, என் வாழ்க்கைச் செய்தியாக மற்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன் என்கிறார், நிக் உஜிசிக்.மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று வாழ்ந்து காட்டுகிறார். தன்னுடைய குறைகளை நிறைகளாக மாற்றி, உலக மக்களுக்கும் தன்னம்பிக்கையையும், துணிவையும் ஊட்டுகிறார். ‘உனது நன்மைக்காக அன்றி, வேறு எதையும் உனது வாழ்வில் நடப்பதற்கு கடவுள் அனுமதிப்பதில்லை’ என்பதே நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக்கின் சித்தாந்தம். இவரின் இந்த நேர்மறையான சிந்தனையே இவரை வாழ்வில் வெற்றி பெற வைத்தது. ஆக மொத்தம், பயனற்றவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை என்பதை நீங்கள் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிகள்
நேர்மறையான எண்ணங்களைப் பெற நல்ல நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படியுங்கள். உங்களைச் சுற்றிலும் நேர்மறையான சிந்தனைகளைக் கொண்டவர்களுடன் பழகுங்கள். நம்பிக்கையுடனும் ஆதரவுடனும் இருப்பவர்களைச் சுற்றி இருப்பது உங்களுக்கு பலத்தைத் தரும். உங்களுக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை கவனித்துக்கொள்வது உங்களின் நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்க உதவுகிறது. சத்தான உணவுகளை உண்பது, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பராமரித்தல் போன்ற சிறிய மாற்றங்கள் உங்கள் அணுகுமுறையை நல்ல முறையில் மாற்றும்.
நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதன் மூலம், சவாலான நேரங்களிலும் நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது. அதனால் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாகத் தீர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள். தடைகளுக்குப் பதிலாக வாய்ப்புகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள். கெட்டதை விட நல்லவற்றில் நீங்கள் கவனம் செலுத்தும்போது உங்களுடைய இலக்குகளை எளிதாக அடைந்து, சமுதாயத்தில் ஒரு வெற்றிகரமான நபராக நீங்கள் மாறத் தொடங்குவீர்கள். உங்களுடைய மன அழுத்தங்கள் குறைந்து, வாழ்க்கையை ரசிக்கத் தொடங்குவீர்கள். வெற்றி தேவதையும் உங்கள் வாசலின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருப்பாள்.
– (முனைவர் சுடர்க்கொடிகண்ணன்)