அவர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்த படம் ரஜனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் இமயமலை பயணத்தை தொடங்க ரஜினி முடிவு செய்தார். அதன்படி இன்று புதன்கிழமை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை தொடங்கினார். இன்று காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார். இமயமலையில் ஒரு மாதம் வரையில் தங்கி இருக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வு எடுப்பதையும் அங்கு சாதாரண மனிதர்களை போல் காவி வேட்டியுடன் சுற்றி திரிவதையும் அதிகம் விரும்புவார்.
இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் “ஜெயிலர்” படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து விட்டு கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஒரு மாத கால இமயமலை பயணம் முடிந்த பின்னர் அடுத்த மாதம் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.