பருவ நிலை மாறும் நேரத்தில் வரும் காய்ச்சல்கள் கவனம்!
சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக பரவுவது வழக்கமான தொல்லைகளில் ஒன்று தான்.
தற்போது சிலவகை காய்ச்சல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பலருக்கும் பரவுகிறது.
குழந்தைகள், பெரியவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் பயப்படக்கூடிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் சுகாதார தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை சொல்கிறது.
காய்ச்சல் சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களில் வரும் குழந்தைகளில் பலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக ரத்த பரிசோதனை முடிவு தெரிவிக்கின்றன என்கிறார்கள் டாக்டர்கள்.
காய்ச்சல் வயிற்றுப்போக்குடன் வரும் குழந்தைகள் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தால் நலம். மழை மற்றும் கடும் வெயில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது.
அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் இப்பாதிப்பு பொதுவாக அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டைபாய்டு காய்ச்சல் பாதிக்கப்படும் பெரியவர்களுக்கு பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு புற நோயாளிகளாக வந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குழந்தைகள் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் வழிகாட்டுகிறார்கள்.
டைபாய்டு வந்தால் கவனத்தில் கொள்ள வேண்டியது:
டைபாய்டு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியதாகும்.
இது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீரில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் வெளி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தொற்றை ஏற்படுத்துகிறது.
குடிக்கும் நீரில் இருந்து வைரஸ் கிருமி பாதிப்பை உண்டாக்குகிறது.
சுகாதார மற்ற தண்ணீரை பருகும் போது பாதிப்பு ஏற்படும்.
அதிகபட்சமாக 104 டிகிரி வரை காய்ச்சல் தாக்கும்.
தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமான சுத்திகரிப்பு செய்யாத குடிநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
வெளியில் சாப்பிடும்போது பழங்கள், பச்சை காய்கறிகள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வெளியில் சாப்பிடும் உணவுகள் சூடாக உட்கொள்ள வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது.
தெருவோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கும் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள கூடாது.
தொடர் வயிற்றுப் போக்கு, கடும் ஜூரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.