ஆடி கிருத்திகைக்கு ஸ்பெஷல் வசதி…!
ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தாலும் அதில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது ஆடிகிருத்திகை திருநாளே. ஆடிமாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நட்சத்திரம். இந்த கிருத்திகை நட்சத்திர நன்நாளே ஆடிகிருத்திகையாக சிறப்பு பெறுகிறது. கார்த்திகை என்பது முருகனின் சிறப்பு பெயரான கார்த்திகேயன் என்பதனை குறிக்கும். அதுவே கிருத்திகை என்ற சொல்லாக மருவியதே. கிருத்திகை மாதந்தோறும் வந்தாலும் மூன்றாவது தட்சிணாய புண்யகாலமான ஆடிமாதத்தன்று வரும் கிருத்திகை நடசத்திர நன்நாளே மிகச்சிறந்த நாளாகும்.
முருகனுக்கு மிகவும் உகந்த நாளான ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக அறுபடை வீடு உட்பட பல்வேறு முருகப் பெருமானை தரிசிக்க செல்வார்கள். அப்படி செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகனின் ஆறுபடை வீடுகளிலும் பல்வேறு முருகப்பெருமானின் திருத்தலங்களிலும் சுப்ரமண்ய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது.
இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 09 ம் தேதி வருகிறது. இதனையொட்டி இன்று காலையில் 07.33 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி காலை 07.44 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது.
அன்று காலை 09.15 முதல் 10.15 வரை நல்ல நேரம் என்பதால் காலை 9 மணிக்கு துவங்கி 11 வரை முருகப் பெருமானுக்குரிய பூஜைகள் பல்வேறு திருத்தலங்களில் நடைப்பெற உள்ளது.
முருகன் தமிழ் கடவுள் என்பதால் தமிழகத்தில் குறிப்பாக முருகனின் சிறப்பு தலமான அறுபடைவீடுடான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமி மலை, பழனி , திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் ஆடிகிருத்திகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இங்கு பால் காவடி , பன்னீர்காவடி, புஷ்பகாவடி , மச்சகாவடி, சேவல்காவடி , தீர்த்தகாவடி என எடுத்து செல்லுதல் அலகு குத்துதல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் நன்னாளாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. ஆடிகிருத்திகை நன்நாளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனைகள் , அபிஷேக ஆராதனைகள் , உற்சவம், ஊர்வலம் , தெப்போற்சவம் என வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி வெளியூரில் இருந்து முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக ஆடி கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலில் கூடுதல் விசேஷம் என்கிற காரணத்தால் திருத்தணிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நேற்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.