இளையராஜா சொந்தப் படத்தை இயக்கிய கோகுலகிருஷ்ணா || காலச்சக்கரம் சுழல்கிறது – 21
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.
பாலகிருஷ்ணன் பல படங்களில் உதவி இயக்குநராகவும் ஒரு சில படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தவர். விஜயகாந்த் நடித்த ‘கரிமேடு கருவாயன்’, மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட சத்யராஜ் நடித்த ஒரு சில படங்களுக்கு எல்லாம் உரையாடல் எழுதித் தனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்திய இவர், ஒரு காலகட்டத்தில் பாலகிருஷ்ணன் எனும் பெயரை மாற்றி கோகுலகிருஷ்ணா என்ற பெயரில் கலை உலகில் வலம் வந்தார்.
இசைஞானி இளையராஜா தான் சொந்தமாக எடுத்த ‘ஆனந்த கும்மி’ என்ற படத்திற்கு கதை, வசனம், டைரக்ஷன் என பல பொறுப்புகளையும் கோகுல கிருஷ்ணாவிடம்தான் ஒப்படைத்தார்.
இசைஞானி தன் சொந்த படம் என்பதால் பாடல்கள் எல்லாம் மும்பை சென்று பதிவு செய்தார். ‘ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா’ போன்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்களைக் கவர்ந்தன.
நாயகன், நாயகியாக இரண்டு புது முகங்களை அறிமுகம் செய்த கோகுலகிருஷ்ணா தேர்ந்தெடுத்த கதை ஒரு கான்ட்ரவர்ஸியாக இருந்ததால் படம் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை.
தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு படத்திற்கு நல்லதொரு கதையைத் தேர்ந்தெடுக்காதது கோகுலகிருஷ்ணாவின் தவறுதான். இதையும் தாண்டி அர்ச்சனை பூக்கள், உதவிக்கு வரலாமா, பூவரசன், மரகதவீணை, ரசிகன், ஏர்போர்ட் போன்ற படங்களை எல்லாம் தன் உரையாடல் மூலம் வெற்றி பெறச் செய்த இவர் எப்படியோ வெற்றி பட இயக்குனர் பாசிலின் கண்ணில் பட்டவுடன் அவரது படங்களுக்கு ஆஸ்தான வசனகர்த்தாவானார்.
‘பூவே பூச்சூடவா’ படத்தில் இவரது வசனங்களைப் பேசி நடித்த நாட்டியப் பேரொளி பத்மினியே, “ரொம்ப நல்லா எழுதறார்” என்று இயக்குநர் பாசிலிடம் தன் பாராட்டைத் தெரிவித்ததோடு, கோகுலகிருஷ்ணாவையும் நேரில் பார்த்துப் பாராட்டி இருக்கிறார்.
அந்தப் படத்தில் எனது அருமை நண்பர் திரு. எஸ்.வி.சேகரும் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது கோகுலகிருஷ்ணாவின் கட்டுரையில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம்.
கோகுலகிருஷ்ணா எனது ஆத்மார்த்த நண்பர். அவர் தன் மனைவியிடம் “இன்னைக்கு எனக்கு மத்தியான சாப்பாடு பி.ஆர் துரை அண்ணாவின் வீட்டில் தான்” என்று சொல்லிவிட்டு அவர் என் வீட்டில் மதியான சாப்பாட்டை ருசித்து பல நாட்கள் சாப்பிட்டதுண்டு.
சீரியஸோடு நகைச்சுவையும் நன்றாக எழுதக்கூடிய கதாசிரியர்களில் கோகுலகிருஷ்ணாவும் ஒருவர். அவர் எழுதிய ‘ஆனந்த கும்மி’யிலும் நான் நடித்திருக்கிறேன். ‘வருஷம் 16’ படத்திலும் நடித்திருக்கிறேன். ‘வருஷம் 16’ல் கோகுல கருஷ்ணா ஒரு ஜோதிடராக பூர்ணம் விஸ்வநாதன் அவர்களோடு சேர்ந்து நடித்திருக்கும் காட்சி கதைக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் திரைப்படங்களில் சிக்கலான காட்சிகள் வரும்போது அதற்குத் தீர்வு சொல்வதும் கதாசிரியர்களின் பொறுப்பு. அதையெல்லாம் சரியாகச் செய்த கோகுலகிருஷ்ணா பாசிலின் பேரன்பைப் பெற்றவர்.
கதையைப் பற்றி விவாதிக்கும்போது கோகுலகிருஷ்ணா வந்த பிறகு அவரைக் கலந்துதான் நான் எந்த முடிவும் எடுப்பேன் என்று சொல்லும் ஒரு மிகப்பெரிய இயக்குநரான பாசில் இயக்கிய ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘அரங்கேற்ற வேளை’, ‘பிரன்ட்ஸ்’, ‘கோபுர வாசலிலே’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற எண்ணற்ற பாசிலின் படங்களுக்கு உரையாடல் எழுதிய கோகுலகிருஷ்ணாவின் எழுத்தாற்றல் மிகவும் போற்றுத்தக்கது.
எளிமை, எப்போதும் ஒரு புன்சிரிப்புடன் திரையுலகில் வலம்வந்த எனது இனிய நண்பர் பாலகிருஷ்ணன் எனும் கோகுலகிருஷ்ணா எப்போதும் கோவிலில்தான் இருப்பார்.
இப்போது தெய்வத்துடன் சேர்ந்துவிட்டார். அவர் மறைந்துவிட்டாலும் அவர் எழுதிய படைப்புகள் மறையாது. நான் என்றென்றும் போற்றிப் புகழ்வது கோகுலகிருஷ்ணாவின் எழுத்துத் திறமையைத்தான்.