“முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் -வசந்தகுமாரி யின் அட்வைஸ்”

 “முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் -வசந்தகுமாரி யின் அட்வைஸ்”

தமிழ்நாட்டின் முதல் அரசுப் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான வசந்த குமாரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ரீத்தாபுரம் அருகே ஒற்றப்பனை விளை கிராமத்தில் தனது 400 சதுர அடி அளவிலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே உள்ள இலவுவிளை கிராமம். ஒரு வயது ஐந்து மாதமாக இருக்கும் போதே தாய் இறந்து விட்டார். அதன் பின்னர் தாய் வழி பாட்டி மற்றும் மாமா ஆகியோரின் வளர்பில் இலவுவிளை பகுதியில் வளர்ந்ததாக கூறுகிறார் வசந்த குமாரி. தனக்கு 14 -15 வயது இருக்கும் போது தனது அண்ணன் (பெரியப்பாவின் மகன்) தான் முதலில் அவருக்கு அம்பாசிடர் கார் இயக்கக் கற்றுக் தந்தாதாகக் கூறும் வசந்த குமாரி, 1985-86 காலகட்டத்தில் கார் இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் எடுத்ததாகக் கூறுகிறார். அதன் பின்னர் தனது 19-வது வயதில் டெம்போ, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கப் பழகினார்.

“20 வயதில் எனக்கு செபாஸ்டின் என்பவரோடு திருமணம் நடந்தது. அவருக்கு அது இரண்டாவது திருமணம். அவருக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். எங்களுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது,” என்கிறார். திருமணத்திற்குப் பிறகு கட்டுமான தொழிலாளியான தனது கணவரின் வருமானம் போதுமானதாக இல்லாததால், அவர்கள் குழந்தைகளுக்கு சரியாக சாப்பாடு கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதனால் வறுமையைப் போக்க அவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க தீர்மானித்தார். அப்போது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து வேலைகளிலும் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி இருந்தார்கள். “கனரக வாகனம் இயக்க எனக்கு தெரியும் என்பதால் அரசு பேருந்து ஓட்டுனர் பணிக்கு நான் விண்ணப்பித்தேன்,” என்கிறார்.

ஆனால் இவருக்குப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் வேலை அளிக்கத் தயங்கியது என்கிறார்.பல இடர்பாடுகளைத் தாண்டி, தனக்கு 1993 மார்ச் 30-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அரசு பேருந்து ஓட்டுனருக்கான பணி ஆணையை வழங்குயதாகக் கூறுகிறார்.வேலைக்குச் சேர்ந்த பிறகும் பல இன்னல்களை சந்தித்ததாக கூறும் வசந்த குமாரி, ஆரம்ப காலத்தில் பணிமனையில் சீருடை அணிய கூட சரியான இடம் இல்லாமல் அவதியுற்றதாக தெரிவித்தார்.“பணிமனையில் உள்ள கழிவறைக்குச் சென்றுதான் புடவையை மாற்றி ஓட்டுநர் சீருடை அணிவேன். அதன் பிறகு வீட்டில் இருந்து செல்லும் போதே சீருடை அணிந்து செல்ல துவங்கினேன்,” என்கிறார்.தனக்கு முதல் முதலாக நாகர்கோவில் நகரத்தில் மிகக் கடினமான வழித்தடமாக அறியப்படும் அப்துல்காதர் மருத்துவமனை முதல் புத்தேரி வரையிலான வழித்தடத்தில் பணி ஒதுக்கப்பட்டது. குறுகலான சாலைகள் கொண்ட அந்த வழித்தடத்தில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும்.

அதுவும் அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆறு வருடங்கள் அந்த வழித்தடத்தில் எந்த விபத்தும் இல்லாமல் அவர் பேருந்தை இயக்கி அனுபவம்மிக்க ஓட்டுநராக உருவெடுத்தார்.தொடர்ந்து நாகர்கோவில்–திருவனந்தபுரம் வழித்தடத்தில் 12 வருடங்கள், நாகர்கோவில்-திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களில் விபத்தில்லாமல் பேருந்து இயக்கியதாகக் கூறுகிறார் வசந்தகுமாரி.தனது பணிக்காலத்தில் ஒரு சில பாலியல் ரீதியிலான தொந்தரவுகளையும் சந்தித்ததாகத் தன் கசப்பான நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார் வசந்த குமாரி. இச்சவால்களையும் தாண்டி, அவர் தனது பணியில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். தமக்கு 50 வயது கடந்த பின்னர், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், முதுகு வலி உள்ளிட்ட உடல் நல கோளாறுகளால் அவதிப்பட்டதாகக் கூறுகிறார்.

“இதனால் இலகுவான பணி (லைட் டூட்டி) ஒதுக்குமாறு கோரினேன். ஆனால் நிர்வாகம் அதை எனக்கு வழங்காமல் இழுத்தடித்து அவதியடைய வைத்தனர். பின்னர் உயர்நீதிமன்றம் சென்று இலகுவான பணி ஓதுக்க ஆணை பெற்றேன். ஆனால் அந்த ஆணை எனக்கு கிடைத்தது நான் பணி ஓய்வு பெற இருந்த மாதத்தில் தான்,” என்று வருத்தத்துடன் கூறுகிறார். தனது பணியின்போது பல்வேறு இன்னல்களைச் சந்தித்தாலும் சக ஓட்டுநர்களும் நடத்துனர்களும் தன்னுடன் நன்றாகவே பழகியதாகக் கூறுகிறார். தனது சினிமா அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது, “1994ல் நடிகர் கமல் ஹாசன் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் பேருந்து ஓட்டுநராக நடித்தேன். ஒரு நாள் மட்டும் நடந்த படப்பிடிப்பில் நடித்த எனக்கு ஊதியமாக கமல்ஹாசனின் உதவியாளர் ரூ.2000/- வழங்கினார். ஆனால் அது அன்றைய காலகட்டத்தில் எனக்கு போக்குவரத்து கழகத்தில் கிடைத்த ஒரு மாத ஊதியத்தை விட அதிகமக இருந்தது,” என்கிறார். தனக்கு பேருந்து ஓட்டுநர் பணி கிடைத்து 30 வருடங்கள் கழிந்துவிட்ட பின்னும், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் ஓட்டுநராகியிருப்பதாகக் கூறும் வசந்த குமாரி, அதற்குக் காரணம் இந்தப் பணி கடினமானது என்கிறார்.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சிகரமாக ஓட்டுநராக பணியாற்ற தன்னை ஊக்கப்படுத்தியது பொதுமக்களின் ஆதரவும் வரவேற்பும் தான் என்கிறார் வசந்தகுமாரி.“வெளியூர், வெளி மாநிலம் மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்து சுற்றுலா வருபவர்கள் என்னை குறித்து பத்திரிகைகள் வாயிலாக தெரிந்து கொண்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்து என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து கொள்வார்கள்,” என்கிறார். நாகர்கோவில்–பணகுடி வழித்தடத்தில் பேருந்து இயக்கிய போது, லெப்பை குடியிருப்பு அருகில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்கள் தன்னை வரவேற்கும் விதமாகத் தனக்கு மரியாதை செலுத்தியது இன்றும் தனக்கு பசுமையான நினைவுகளாக உள்ளது என்கிறார். இது போன்ற சம்பவங்கள் தான் தனக்குப் பணிக் காலத்தில் ஊக்கம் அளித்ததாகக் கூறுகிறார். இறுதியாகத், தற்போது பேருந்து இயக்குபவர்கள் மின்மினி பூச்சி போல வெற்று விளம்பரத்துக்காக இந்த பணிக்கு வரக்கூடாது. கடினமான பணி என்பதை தெரிந்து கொண்டு பணியுல் சேர முன்வர வேண்டும் என்கிறார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...