“இயக்குனர் பாலா – ஒரு சுட்டெறிக்கும் சுவாரஸ்யம்”
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பரிமாணத்தை கடைபிடித்து எதார்த்தமான பல படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் பாலா. பாலாவின் படம் என்றாலே நிச்சயம் விருது வாங்கும் திரைப்படம் என மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி பாலா இதுவரை ஆறு தேசிய விருதுகள், 13 மாநில அரசின் விருதுகள், மேலும் பல மதிப்பிற்குரிய விருதுகளை வாங்கி அடுக்கியுள்ளார். பாலாவின் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் அவரின் கதைக்கு ஏற்ப ஒரு புதிய பரிமாணத்தை உள்வாங்கி தங்களை தயார் செய்து கொள்வர்.
இயக்குனர் பாலா சினிமாவில் ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவிற்கு அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்தார். 1999-ல் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சேது தான் பாலா இயக்கிய முதல் திரைப்படம். முதல் படத்திலேயே தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதை பாலா பெற்றார். அதுமட்டுமின்றி அந்த ஆண்டின் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் சேது திரைப்படம் வாங்கியது. விக்ரம் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையை சேது திரைப்படம் அமைத்துக் கொடுத்தது என்றே கூறலாம்.
பாலா, தமிழ் திரையுலக மேடையில் தனக்கானப் பொன் நாற்காலியைத் துவளாமல் போராடி போராடி பெற்று தவிர்க்க முடியாத இடத்தில் நிரந்தரமாக அமர்ந்தவர். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து திரைக்கல்வி பயின்றவர். இதைத்தவிர வேறு எந்தவித திரைப்பட பின்னணிகளும் இல்லாமல் முதல் திரைப்படம் இயக்க நினைத்தவர்க்கு பலவித தடைகள். சேது திரைப்பட வெற்றிக்கு முன்னர் ‘புறக்கணிப்பு’ என்ற ஒன்றை மட்டுமே மாறி மாறி சந்தித்தது இவரின் வாழ்க்கை கருவிலே இறந்து போன குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடும் ஒரு தாயைப் போல நிறுத்தப்பட்ட தன் முதல் திரைப்படத்திற்கு யாரிடமும் சொல்ல முடியாத சூழலில் மனதுக்குள் துடித்துக்கொண்டே தொடக்க நிகழ்ச்சியை நடத்தினார், பாலா. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ் திரையுலகின் தடைக்கற்களில் ஒன்றான ராசியில்லாதவன் என்ற முத்திரை இவரின் மீது குத்தப்பட்டது.
சிறந்த படைப்பான ‘சேது’ உருவாக்கப்பட்டு திரையிடலுக்குத் தயாராக இருந்த சமயம் தமிழ் மக்களை பொழுதுப்போக்கிற்காக மழுங்கடித்துக் கொண்டிருந்தார்கள், தயாரிப்பாளர்கள். படம் வெளியாவதற்கு முன்பே தொடர்ந்து பல மாதங்கள் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஆனால் யாரும் படத்தை வாங்குவதற்கு தயாராக இல்லை. அதற்கு சொல்லப்பட்ட காரணம் ‘படத்தின் முடிவு சோகமாக இருக்கிறது’. பல தடைகளைத் தாண்டி எந்த பரபரப்பான விளம்பரமும் இல்லாமல் படம் வெளியானது. படத்தை பார்த்த மக்களுக்கு பிரம்மிப்பு விலக இரண்டு மூன்று நாட்களானது. பின்னர் மறுபடியும் திரையரங்கம் சென்று பார்த்தனர். சேது திரைப்படத்திற்கு இருந்த ஒரே வலிமையான விளம்பரம் ரசிகர்களின் பேச்சு (word of mouth) மட்டுமே. திரையுலகின் பலவித எழுதபடாத விதிகளைத் தாண்டி ‘சேது’ வெற்றி பெற்றான்.
எளிமையின் ஊடே மென்மை கலந்த கதைகளும், சமூக அவலங்களின் மீது கடுங்கோவமும் கொண்ட படைப்புகளைத் தருபவர். ஒரு உயிராகக் கூட சமூகத்தால் மதிக்கப்படாத மனிதர்களைக் கதாப்பாத்திரமாகத் திரையில் வாழவைக்கக்கூடியவர். ஹீரோயிசம், கமெர்சியல், நகைச்சுவை என்பதையும் தாண்டி இயக்குனர் பாலாவுக்கு என்றே ரசிகர்கள் உண்டு. பாரதிராஜா, மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குனர்களுக்கு பிறகு இயக்குனர் பாலாவின் படங்களை மக்கள் எதிர்ப்பார்க்கத் தொடங்கினர். இவரின் படைப்புகளைப் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக சில நாட்களாவது படத்தின் ஞாபகம், பிரம்மிப்பு, மிரட்சி இருக்கும். தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது சமூக அவலங்களைக் காட்டுவது சிறப்பு. உன்னிப்பாக கவனித்தால் அந்த அவலங்களைச் சார்ந்தே கதையின் முடிவு இருக்கும்.
‘நந்தா’ திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை மீட்கும் காட்சியில் வில்லன் அறிமுகம், ‘பிதாமகன்’ திரைப்படத்தில் கஞ்சா செடி வளர்க்கும் “மகாதேவன்” சித்தனின் நண்பன் சக்தியைக் கொன்ற பிறகான கதையின் தீவிர போக்கு, ‘நான் கடவுளில்’ மாற்றுத்திறனாளிகளைப் பிச்சைக்காரர்களாக வைத்து பிழைப்பு நடத்தும் வில்லனைத் தண்டிக்கும் கதாநாயகன் என சமூக அநீதிகளை மையமாக வைத்து கதைப்பின்ன கூடியவர். ‘அவன் இவன்’ திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவுடன், ராஜபக்ஷேவை ஒப்பிட்டு பயிற்சி வகுப்பின் ஆசிரியர் மாணாக்களிடம் ஒரு கேள்வி கேட்பார். அதற்கு ‘கும்பிடுறேன் சாமி’ கதாபாத்திரம் நாணயத்தை சுண்டிவிட்டு பதில் தேட முனையும் இவரின் காட்சியமைப்பு, ராஜபக்ஷேவை நக்கல் செய்தும், மேலும் தமிழக கடைக்கோடி பாமர மக்களிடம் உள்ள ஈழத்தைப் பற்றிய அறியாமை பற்றியும் ஒரு சேர சுட்டியிருக்கும்.
திரைப்பட நுட்பங்களை அறிந்தவர்களுக்கு ‘அவன் இவன்’ பெரும் ஏமாற்றம் தந்தது. இயக்குனர் பாலா மீது “நீங்களே இப்படி படம் எடுக்கலாமா” என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள் வந்தது. இந்த விமர்சனங்கள் ஒரு நல்ல படைப்பாளின் மீதான நல்லவர்களின் வார்த்தைகள். படத்தின் இறுதியில் “ஜமீன்தார் அயனஸ்” இறப்பும், வில்லனை கதாநாயகர்கள் இருவரும் கொல்வதும் இல்லையென்றால் “இது கண்டிப்பாக பாலாவின் படமில்லை” என்று எதிர் காலங்களில் அடித்து சொல்லியிருப்பார்கள். துயரம் என்பதை சற்றும் உணராதவர்களைக் கூட இவரின் படைப்புகள் கண்கலங்க வைக்கும். பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் பாலாவின் கதைக்களம் ஒரு சிறந்த ஆய்வுக்கான தகுதியுடையது.
“நான் கடவுள்” திரைப்படம் இயக்குனர் பாலாவின் பெயரை உச்சத்திற்கு எடுத்து சென்றது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது நான் கடவுள் திரைப்படத்திற்காக இயக்குனர் பாலாவுக்கு கிடைத்தது. ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நாம் சிறிதும் திரும்பி பார்க்காத இன்னோரு உலகத்தைப் பற்றியது. தமிழில் இதுவரை யாரும் தொட நினைக்காத கதைக்களம். எந்தவித சமரசமும் இல்லாமல் மூடநம்பிக்கைகளை சாடி பல காட்சியமைப்புகள் இருக்கும்.
“பரதேசி” திரைப்படம் இயக்குனர் பாலாவின் உச்சக்கட்ட அத்தியாயம். தமிழ் திரையுலகை மற்றவர்கள் திரும்பிப்பார்க்க வைத்த இன்னும் ஒரு படைப்பு. விமசகர்களால் இயக்குனர் பாலாவின் திரைப்படங்களின் மீது சொல்லப்பட்ட பெரும் குற்றசாட்டு பெண்ணடிமை, அதிகப்படியான வன்முறை. இந்த இரண்டும் இல்லாமல் பரதேசி என்னும் காவியத்தை படைத்துக் காண்பித்தார். படம் முடியும் தருவாயில் “ராசா” கதாப்பாத்திரம் இதுவரை வந்த பாலா படங்களைப் போல கோவம் கொண்டு கங்கானிகளையும், வெள்ளைக்காரர்களையும் அடித்து துவைத்து அனைவரையும் மீட்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். இந்த எதிர்ப்பார்ப்பு ‘அதிக வன்முறை’ என விமர்சித்த விமசகர்களுக்கும் இருந்திருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் அவரின் வழக்கமான பாணியை மக்களிலிருந்து அனைவரும் விரும்பினர். ஆனால் முடிவு மிகவும் எதார்த்தமாக இருந்தது. பல திரைப்பட விழாக்களுக்கு “பரதேசி” சென்று வந்தான். தமிழ் கலைத்தாய்க்கு “பரதேசி” திரைப்படம் சிறப்பானதொரு தங்கமகுடம்.
தான் கடந்து வந்த பாதையை “இவன்தான் பாலா” எனும் புத்தகமாக எழுதி தான் சிறந்த எழுத்தாளன் என்பதையும் நிரூபித்தார். சிறந்த இயக்குனர் என்ற பதவியைக் கழற்றி வைத்துவிட்டு எழுதிய புத்தகம். தன் திரைப்படத்தைப் போலவே இதிலும் அவர் எந்த சமரசமும் செய்துக்கொள்ளவில்லை. பாலா, தமிழ் திரையுலகின் கடவுள். “திரைப்பட உருவாக்கத்தில் பெரும் கால விரயம் செய்கிறார்” என்பது தங்களைப் பிரம்மனாக நினைத்துக்கொள்ளும் சில விமர்சகர்களின் கருத்து. “கடலை மிட்டாய் தின்பவன் அதன் ருசியை மட்டுமே ஆராய வேண்டுமே தவிர, அது தயார் செய்யப்படும் காலத்தை நினைத்து கவலைக்கொள்ளத் தேவையில்லை. அது பற்றிய நினைப்பு உரிமையாளனக்கு உரியது” என்பதை இந்த விமர்சகர்கள் கருதுவதில்லை.