தமிழ்ப் புத்தாண்டிற்கு தள்ளிப்போகும் இந்தியன்-2

 தமிழ்ப் புத்தாண்டிற்கு தள்ளிப்போகும் இந்தியன்-2

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படம் அந்த கால கட்டத்திலேயே பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் அதே கூட்டணியில்

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2020-ம் ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. பின்னர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதனால் இந்தியன் 2 திரைப்படம் கைவிடும் நிலைக்கு சென்றுவிட்டது.

பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை கையில் எடுத்து தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிப்பதாக அறிவித்து பூஜையுடன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அதிலிருந்து ஜெட் வேகத்தில் நடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் மற்றும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் பொங்கல் ரிலீஸ்க்கு எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய முக்கிய ஹீரோக்களின் மூன்று படங்களும் ரெடியாகி கொண்டிருக்கின்றன.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் 3 D தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. மேலும் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் கங்குவா திரைப்படம் வரலாற்று புனைவு கதை எனவும் சொல்லப்படுகிறது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் திரைப்படம்,
சுதந்திரத்திற்கு முன்னான இந்தியாவில் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்த இந்தியர்களை பற்றி எடுக்கப்படும் கதை. இந்த படத்தையும் பொங்கலில் தான் படக்குழு ரிலீஸ் செய்ய இருக்கிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் பொங்கல் ரிலீசுக்கு தான் பிளான் பண்ணப்பட்டிருக்கிறது.

கங்குவா, தங்கலான், கேப்டன் மில்லர் என இந்த மூன்று படங்கள் பொங்கல் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்க இந்த ரேசிலிருந்து இந்தியன் 2 விலகி இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்பட பிரமோசனின் போது சொல்லி இருக்கிறார். இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சொல்லி இருக்கிறார். ஏப்ரல் மாதம் என்பதால் கண்டிப்பாக தமிழ் புத்தாண்டு அன்று தான் இந்த படம் ரிலீஸ் ஆகும்.

படத்தின் 25 சதவீத வேலைகள் மட்டுமே இன்னும் மீதம் இருப்பதாகவும், அதுவும் விரைவில் முடிக்கப்பட இருப்பதாகவும் உதயநிதி சொல்லி இருக்கிறார். அப்படத்தின் ஒரிஜினல் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மாமன்னன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதியிடம் இந்தியன் 2 படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் அப்படம் சூப்பராக வந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 25 நாட்கள் எஞ்சி உள்ளதாகவும், அதன்பின் கிராபிக்ஸ் பணிகள் படத்தில் நிறைய இருப்பதால், படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும் உதயநிதி கூறினார். அதோடு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தையும் ஒருபக்கம் நடந்து வருவதாக உதயநிதி தெரிவித்தார்.

அவர் சொல்வதைப் பார்த்தால் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு இந்தியன் 2 படம் ரிலீஸாகும் போல தெரிகிறது. ’இந்தியன் 2’ படத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இன்னும் அதிகமாக இருப்பதாகவும் அதை வைத்து மூன்றாம் பாகம் உருவாக்கும் திட்டம் உருவாகி உள்ளதாகவும் அவர் கூறினார், மேலும் ’இந்தியன் 2’ படத்தை பார்த்து கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.முதல் முறையாக கமல்ஹாசனின் திரைப்படம் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...