உறவியல் சிக்கல்களை பேசும் “தீராக காதல்” – விமர்சனம்! – தனுஜா ஜெயராமன்
லைக்காவின் தயாரிப்பில் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜெய், ஷிவதா இவர்களின் நடிப்பில் வெளிவந்து திரையரங்கினில் வெற்றிகரமாக ஓடி தற்போது நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “தீராக்காதல்” . மனிதர்களின் உ(ள)றவியல் சிக்கல்கள் குறித்து பேசுகிறது இத்திரைப்படம் .
ஜெய் திருமணமாகி ஷிவ்தா மற்றும் தனது ஆறு வயது குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு வேலை விஷயமாக மங்களூர் செல்லும் ஜெய் , இரயிலில் தனது பழைய காதலியான ஜஸ்வர்யா ராஜேஷை சந்திக்கிறார்.. படம் ஆரம்பித்தவுடனே ஐஸ்வர்யா ராஜேஷன் கணவன் அம்ஜத் அடிதடி மற்றும் அடாவடியானவனாக பார்வையாளருக்கு உணர்த்தி விடுகிறார்கள்.
மங்களூரில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் வேலைகளுக்கிடையே நட்புக்கும், காதலுக்கும் இடையேயான ஏதோ ஒன்றை தங்களுக்குள் பரிமாறி கொள்கிறார்கள்.
ஜெய் ஊருக்கு திரும்ப நினைக்கும் போது இனி இருவரும் இந்த நட்பை மறந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கலாம் என சொல்ல ஐஸ்வர்யாவும் அதை ஒப்புக் கொள்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஊர் திரும்பியதும் கணவனின் அதீத கொடுமையால் அவனை பிரிகிறார்.. கொடுத்த வாக்கை மறந்துவிட்டு. மீண்டும் ஜெய்யை சந்திக்கிறார்..
மனைவி குழந்தைகளுடன் நிம்மதியாக வாழும் ஜெய் ஐஸ்வர்யாவின் வரவினால் ஏற்படும் ப்ரச்சனைகளில் தலையை பீய்த்து கொள்கிறார்.. ஐஸ்வர்யாவோ குடும்பத்தை துறந்து ஜெய்யை தன்னோடு வந்துவிட நிர்பந்திக்கிறார். ஜெய் என்ன முடிவெடுக்கிறார் என்பதே மீதிக்கதை..
காதலனாக தடம்மாற துடிப்பதாகட்டும், கணவனாக தடுமாற்றம் கொள்வதாகட்டும் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஐஸ்வர்யா நாயகியா வில்லியா என புரியாத தடுமாற்றமான கதாப்பாத்திரத்திலும் வழக்கம் போலவே நடித்து தள்ளுகிறார். ஷிவ்தா பாந்தமான மனைவியாக, அதே சமயம் கணவனின் தவறுகளை கண்டு வெடித்து கிளம்புவதாகட்டும் கச்சிதமாய் செய்திருக்கிறார்.
கதை மூலம் பழைய விஷயங்களை ரீசைக்கிள் செய்வதால் வரும் குழப்பங்கள் ப்ரச்சனைகளை இந்த கால தலைமுறையினருக்கு புரிய வைக்க முயல்கிறார் இயக்குனர்.
ஐஸ்வர்யாவை வில்லியாக்குவதா?கதாநாயகியாக்குவதா? என்கிற குழப்பத்திலேயே படத்தின் கதையை நகர்த்துகிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.
ஜெய் மற்றும் ஐஸ்வர்யா இவ்வளவு காதலிப்பவர்கள் ஏன் பிரிந்து போயினர் என்ற தகவல்கள் படத்தில் தெளிவாக சொல்லப்படவில்லை.
காதல் காட்சிகளும் , ஜெய் மனைவியிடம் காதலியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகளில் அவ்வளவு அழுத்தமாக காண்பிக்கபடவில்லை..
கதை திரைக்கதையோ காட்சியமைப்பிலோ எந்த புதுமையுமில்லை. பழைய தொன்னையில் கொடுக்கப்பட்ட அதே பழைய ஆறிப் போன பொங்கலே தான்..
தீராக்காதல் ஆறிய காதல்….!!!