கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் நினைவலை..!

 கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் நினைவலை..!

ஜூன் 24, 1927: கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்
வாழும்போது வரலாறு படைத்துக்‍ கொண்டிருக்‍கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்‍கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்‍கிறார்கள். அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். காலத்தால் மறக்‍க முடியாத காவியங்களைத் தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட மாபெரும் கவிஞன். ‘படித்தால் மட்டும் போதுமா’ என்ற படத்தில் ‘நான் கவிஞனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை… என்ற பாடல் திரைப்படச் சூழலுக்‍காக கவியரசு கண்ணதாசனால் எழுதப்பட்டது என்றாலும், அவரது பாடல்கள் மீது பற்று கொண்ட லட்சக்‍கணக்‍கான ரசிகர்களுக்‍கு இந்தப் பாடல் வரிகள் கண்ணதாசனின் “அவை அடக்‍கம்” என்பதை ஏற்றுக்‍கொள்ள இயலாது. இந்தப் பாடலில் பொருட்பிழை இருப்பதாகவே எண்ணிக்‍கொள்வார்கள்.

  திரையுலக கம்பனாக, வள்ளுவனாக வற்றாத கற்பனையுடனும், வளமான கருத்துகளுடனும் வலம் வந்த கண்ணதாசன், முத்தையாவாக சூல்கொண்டது சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில்.
1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி இந்தக்‍ கவிதை கதிரவனுக்கு சிறுகூடல்பட்டி கிழக்‍கானது. சாத்தப்பனார் – விசாலாட்சி ஆச்சி தம்பதியினருக்‍கு 8-வது பிள்ளையாகப் பிறந்தார் முத்தையா. வணிகர் மரபில் பிறந்த கண்ணதாசனுக்‍கு ஆரம்பக்‍ கல்வி சிறுகூடல்பட்டியில் அமைந்தது. என்னதான் பள்ளிக்‍ கல்வியைப் படித்தாலும், வாழ்க்‍கைக்‍ கல்வி, சமூகத்தில் தான் கிடைக்‍கும் என்பதாலோ என்னவோ, அவரது உயர்கல்வி எட்டாம் வகுப்போடு அவரை விட்டு தூரச் சென்றுவிட்டது.

ஒவ்வொரு படைப்பிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் நிச்சயமாக இருக்கும். பொழிப்புரை தெரியாத செய்யுளைப் படித்துவிட்ட மாணவன் போல, நம் படைப்பு எதற்காக? என்ற குழப்பம்தான், ஏராளமானவர்களுக்கு வந்திருக்கிறது. கண்ணதாசனும் அப்படித்தான். வணிகர் மரபில் பிறந்துவிட்டதால் வட்டிக்கடை நடத்தலாமா? இல்லை வேலைக்குப் போகலாமா? தெளிவான நிலை பிறக்காதபோது, குழப்பம் எப்படி விலகும்?
ஏட்டுச் சுரைக்காய் எட்டாவது படிப்போடு நின்றுவிட்டது. ஆனால், ஞானமோ கைகட்டி சேவகம் செய்தது கண்ணதாசனுக்‍கு. அவர் நாக்‍கில் சுவைத்து வெளிவந்த வார்த்தைகள் தமிழை மேலும் அழகாக்‍கியது. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த புரட்சிக்‍ கவிஞர் பாரதிதாசன் சொன்னதுபோல், கண்ணதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர்.

சொந்த மண்ணைவிட்டு சென்னை வந்த கண்ணதாசன், பார்க்‍காத பணிகள் இல்லை. நதிக்‍குள் சமுத்திரத்தை அடைக்‍க முடியுமா? கண்ணதாசன் கடல், அந்தக்‍ கடலில் இருந்து பொங்கி வந்த கவிதை அலைகள் ஓய்வெடுத்துக்‍ கொள்ள முடியாமல், ஓங்கி உயரமாக எழுந்துகொண்டே இருந்தன. மனக்கரையை முட்டி முட்டி, ஈரமான நினைவுகளைப் பதியவைத்துக் கொண்டிருந்தன.

தன் திறமையைத் தீட்டிக்‍கொள்ள திரைப்படம் என்ற சாணைக்‍கல்தான் சிறந்தது என்ற முடிவுக்‍கு வந்த கண்ணதாசன், திரைப்பட வாய்ப்புகளைத் தேடிப்போனார். வாழ்க்கை என்ற பரமபதத்தில், தாயக்கட்டைகள் உருட்டப்படும்போது, ஒரு சிலருக்குத்தான் ஏணி கிடைக்கிறது. வெற்றி கிடைக்காதா? என ஏங்கித் தவிக்கும் பலருக்கு, பாம்புகளின் பார்வைதான் பரிசாய்க் கிடைக்கிறது. வாழ்க்கையும், விளையாத தரிசாய்க் கிடக்கிறது. அனுபவம் தந்த பாடல்தான் ‘உன்னைச்சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை’ என எழுதவைத்ததோ?

திரைப்படத் துறை பல அவமானங்களையும், அனுபவங்களையும் கண்ணதாசனுக்‍குக் கற்றுக்‍ கொடுத்தன. பல முயற்சிகளுக்குப் பிறகு, கனவுத் தொழிற்சாலையின் கம்பீரமான கதவு கண்ணதாசனுக்கு மெல்லத் திறந்தது. கால் பதிக்க இடம் கிடைத்தது. கண்ணதாசனோ, அதில் கவிதை பதித்தார். ஜுபிட்டர் பிக்‍சர்ஸ் தயாரித்த “கன்னியின் காதலி” என்ற திரைப்படத்தில் “கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்பதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு. முதல் பாடலிலேயே, உடைந்துபோன உள்ளங்களுக்‍கு ஒத்தடம் கொடுக்‍கின்ற ஆறுதலான வரிகள்.

பின்னர், பாட்டுப் பல்லக்‍கில் பயணம் செய்த இந்த ராஜ கவிஞனின் படைப்புகள்தான் எத்தனை எத்தனை?. காதலா? வீரமா? பாசமா? தாலாட்டா? அரவணைப்பா? ஆறுதலா? மனிதனின் ஒவ்வொரு உணர்வுக்‍கும் கண்ணதாசனின் ஒரு பாட்டு கைபிடித்து நடந்தது.

கண்ணதாசனின் படைப்புகளில் “அர்த்தமுள்ள இந்து மதம்” 4 வேதங்களைத் தாண்டி 5-வது வேதமானது. இயேசு காவியமோ 2-வது பைபிள் ஆனது. வனவாசமோ, கண்ணதாசனின் நிர்வாணத்தை அழகு தமிழ் ஆடை கட்டிவிட்டு மறைத்தது. சேரமான் காதலி, சாகித்ய அகாடமி விருது பெற்று தந்தது. கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மேடைப் பேச்சாளர் போன்ற பன்முகத்தன்மை, கண்ணதாசனிடம் கம்பீரமாகக் குடியிருந்தது. அரசியல் களத்தில் கண்ணதாசன் பொம்மையைப் போல உருட்டி விளையாடப்பட்டாலும், ஒரு கவிஞனுக்‍குள்ள நேர்மையால் அந்த பொம்மலாட்டத்தை சவாலோடு அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்ணதாசனின் கவிதையில் வெண்பா, வெற்றிப் பா ஆனது. அறுசீர் விருத்தமோ, அழகியலை ஆடையாய் அணிந்துகொண்டது. செப்பு மொழிகளோ வாழ்க்‍கையின் தத்துவத்தை எதார்த்தமாக சித்தரித்தது.

அதனால் தான் ஒரு கவிஞன் பாடினான்
“கண்ணதாசா
உன் வாழ்க்கையோ திறந்த புத்தகம்
படிப்பவர் வாழ முடியா சிறந்த புத்தகம்..!
என்று.,

கண்ணதாசன் கவிதையில் ஆளுமை அத்தனையும் அருமை…எளிமை… புதுமை…
“நான் மனிதரைப் பாடமாட்டேன்” என்ற அவரது கவிதையின் சிலபகுதிகள் அவரது உள்ளக்கிடக்கையைக் காட்டும் சிறப்பான பகுதியாகும்.

‘‘மானிடரைப் பாடிஅவர்

மாறியதும் ஏசுவதென்

வாடிக்கை யான பதிகம்

மலையளவு தூக்கி உடன்

வலிக்கும் வரை தாக்குவதில்

மனிதரில் நான் தெய்வ மிருகம்’’

என்று பாடுகின்றார்.

யார் இறைவன்? கண்முன்னே காண்பித்த கவிஞர் கண்ணதாசனின் தத்துவம்!

கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு,  ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. ” என கிண்டலாக கேட்டனர். 

அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு 

புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைப் 

புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்!

ஒன்பது ஓட்டைக்குள்ளே

ஒருதுளிக் காற்றை வைத்து

சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன் 

தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்!

மேலும் அனுபவமே கடவுள் என்ற கவிதையில்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

 ஆக அந்த சூட்சமக் கயிற்றை இயக்குபவன் சூழ்ச்சிக்கார்ர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரனாக விளங்கும் எல்லா வல்ல இறைவன்தான் என்ற சித்தர்களின் தத்துவத்தை இந்த சாதாரண கவிதையின் மூலம் நமக்கு கண்ணதாசன் உணர்த்துகிறார்.
இப்படிக்கு கவிஞரின் எழுத்தை அடுக்கி கொண்டே போகலாம், அவர் பிறந்த இந்த நன்னாளில் அவரின் நினைவை போற்றுவோம்…

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...