‘திருவாசகம்’ தந்த மாணிக்கவாசகர் குரு பூஜை இன்று

 ‘திருவாசகம்’ தந்த மாணிக்கவாசகர்    குரு பூஜை இன்று

மாணிக்கவாசகர் சைவ மயக்குரவர்கள் நால்வரில் ஒருவர். குன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் பாடியது. இது எட்டாம் திருமுறையாகும். 9ஆம் நுற்றாண்டில் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்த (863-911) இவர், அரிமர்த்த பாண்டியன் அமைச்சரசையில் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.

உயர்ந்த பதவி, செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த மணிவாசகர் சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவவழிபாடு மேற்கொண்டு வந்தார்.

ஞானநெறியைப் பின்பற்றிய மணிவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மாதத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார்.

சிவபெருமான் திருப்பெருந்துறைக்குத் தனது அருட்சக்தியோடு எழுந்தருளி வந்து மாணிக்கவாசகரை அமுதமயமாக மாற்றியருளினான். அவரைக் கொண்டு திருவாசகத்தை அருளிச் செய்தான். அருகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கைச்சாத்தும் இட்டான். ஊழிக்காலத்தில் தக் தனிமையைத் தவிர்க்கப் பத்திரமாகத் தன்னோடு வைத்துக் கொண்டான். அது மட்டுதல்லாது துருவாசகத்தையே தனது இருப்பிடமாகவும் கொண்டான் சிவன்.

திருவாசகத் தேன் அமுதம்

திருவாசகம் என்பது ஒரு தேன், தேனில் பல வகைகள் உண்டு. மலைத்தேன், நிலத்தில் தேனீக்கள் சேகரிக்கும் தேன், சிறப்பு வாய்ந்த தேன் என்பன. ஒரே மலரிடம் இருந்து சேகரிக்கும் தேனே சிறந்தது. மாணிக்கவாசகர் ஒரு தேனீ போல் சிவபெருமானின் பாத மலர்களை முகர்ந்து அந்த மலர்களிடமிருந்து உறிஞ்சி தான் பெற்ற தேனை நமக்கெல்லாம் கிடைக்கப் பெற அருளியது திருவாசகம் என்னும் தேன். அவரே தெய்வத் தேனைப் பற்றி திருவேசறவு பதிகத்தில் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம்.

“நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்

தேனாயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்

தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்

ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.”

குருவாக வந்த சிவனை நேரில் கண்டு உபதேசம் பெற்று அதை உணர்ந்து அனுபவிக்கும் வேளையில் குருவானவர் மறைந்தபோது தான் அடைந்த துயரங்களை வார்த்தையில் வடிவமைத்தது திருவாசகம். எனக்கு உபதேசித்து ஏன் பரிதவிக்கவிட்டீர்கள் என அழுது புலம்பியதே திருவாசகம்.

சைவத்தின் தலைவர் சிவபெருமான் ஆவார். அருவமானவன் உருவமானவன், திருமாலுக்கும் பிரம்மனுக்கும் காணமுடியாத வடிவை உடையவன். அடி முடியைக் காணாமல் தவித்தவர்கள் இருவருமே. அப்படி உருவமற்றவனை வடிவாகக் கண்டு திகைத்து, பின் காண முடியவில்லையே என ஏங்கிய மணிவாசகர் அருளியது திருவாசகம். இத்தகைய பெருமை வாய்ந்த திருவாசகத்தின் பெருமையினைத் தமிழர் அல்லாதோர் பலரும் உணர்ந்து அனுபவித்துள்ளனர்.

இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஒரு சமயம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் செய்தபோது ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதன் விளைவாகச் சிறையில் அடைக்கப்பட்டபொழுது அவரைப் பார்ப்பதற்கு வந்த பாலசுந்தரம் மற்றும் தில்லையாடி வள்ளியம்மை என்ற 13 வயது நிரம்பிய நங்கையும் ஆங்கிலேயரின் சித்ரவதைக்கு உட்பட்டு உயிருக்குப் போராடிவந்த நிலையிலும், காந்தியடிகளைக் காண்பதற்கு அங்கு வந்திருந்தார்கள். அது சமயம் வள்ளியம்மை தனது இறுதி மூச்சு அடங்கும் நிலையிலும் பாலசுந்தரத்தைப் பார்த்து, திருவாசகத்தில் ஒரு பதிகம் பாடச் சொல்லி கேட்டார்கள். உடனே பாலசுந்தரம் அச்சோப் பதிகத்தில் உள்ள பாடல்களைப் பாடினார். அதனைக் கேட்டவாறே வள்ளியம்மை அவர்கள் தனது இறுதி மூச்சினை விட்டார். அந்தப் பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

“முத்திநெறிய யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.”

காந்தியடிகள் பாலசுந்தரத்தைப் பார்த்து “இது என்ன பாடல்? இதன் பொருள் என்ன?” என்று வினாவினார். உடனே பாலசுந்தரம், “இது திருவாசகத்தில் உள்ளது” எனக் கூற தமிழில் உள்ள இத்தகைய சிறப்பான பாடலை, தமிழ் தெரியாத காரணத்தினால்தான் அனுபவித்துப் பாட முடியவில்லை என்று காந்தியடிகள் வருந்தினார். உடனே பாலசுந்தரம் அவர்கள் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தார். காந்தியடிகள் அதைப் பெற்றுக்கொண்டு “இப்படிப்பட்ட தெய்வீகப் பாடலைத் தனது மாலை பிரார்த்தனையில் பாடுவேன்” எனக் கூறினார்.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் திருவாசகத்தைத் தனது நெஞ்சில் பதித்தவர். அவர்கள் சிறைவாசம் அனுபவிக்கும் சமயத்தில் எப்போதும் திருவாசகத்தை உருகிப் பாடி இறைவனிடம் கதறுவார்.

இங்கிலாந்திலிருந்து கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காகத் தமிழகத்திற்கு வந்தவர் ஜி.யு.போப். இவர் நெஞ்சிலும், கையிலும் பைபிலைக் கொண்டு, கழுத்தில் சிலுவையை அணிந்துகொண்டு வந்தவர். தமிழை அறிய திருக்குறளைப் படித்தார்.மேலும் சைவத்தைப் புரிந்துகொள்ள திருவாசகத்தைப் படிக்கத் தொடங்கி அந்தப் பாடலில் உருகி நெஞ்சிலே ஏற்றிக்கொண்டார்கள். அவரை மிகவும் கவர்ந்த திருவாசக வரி ‘இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க’ என்பதே.

பொருள் பொதிந்த, கண்களில் கண்ணீர் தளும்பச் செய்த இந்த வரியை, வேறு எந்த மொழியிலும், எந்த மதத்திலும் இல்லாததைக் கண்டு வாய்விட்டு சொல்லி மலைத்தார். அந்த வரி எம்மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்ற வரியாக இருந்த நிலையினைப் புரிந்து கொண்டு, கண்ணீர் மல்கிய அவர், தனது மதத்தின் மேலிடத்திற்குக் கடிதம் எழுதும்போது முதல் வரியாக இவ்வரியை எழுதிக் கடிதத்தைத் தொடங்குவதைத் தனது பழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் அவர் எப்பொழுதெல்லாம் கடிதம் எழுதுகிறாரோ அப்போதெல்லாம் திருவாசகத்தின் பதிகங்களில் ஒன்றை எழுதிக் கடிதத்தை ஆரம்பிப்பார். மேலும் அவர் அடைந்த பரவசத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இங்கிலாத்துக்குச் சென்ற தருணங்களில், தனது திருச்சபையில் உள்ள நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் திருவாசகத்தின் மகிமையைச் சொல்லி அவர் பூரிப்படைந்தார். அத்தகைய ஒரு தருணத்தில், அவரது நண்பர் ஒருவர் தாங்கள் ஏன் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கக் கூடாது என்று வினவினார். அப்போது “எனக்கு 73 வயது ஆகிவிட்டது. என்னால் எழுதமுடியுமா?” எனப் பதிலளித்தார். அதற்கு அவரது நண்பர் “கர்த்தர் துணையிருப்பார்’’ எனக் கூற 1893-ல் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார் ஜி.யு.போப்.
1897-ஆம் ஆண்டு முக்கால் பகுதி முடித்த சமயத்தில் ஒரு பிரதி
10 ரூபாய் என விளம்பரம் செய்தார். அந்தக் காலத்தில் 10 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. 1900ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி ஆங்கில மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிட்டார். பன்னிரு திருமுறைகளில் முதன்முதலில் அச்சில் ஏறியது திருவாசகமே. மேலும் பிரஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் அச்சேறியது. அண்டம் 101 என விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்பைக் கூறினார்கள். ஆனால் மாணிக்க வாசகவடிகளார்

அப்போதே திருவண்டப்பகுதி என்ற பதிகத்தில் சிவபெருமான் இல்லாத இடம் இல்லை என நூற்றியொரு கோடியின் மேற்படி எனக் கூறினார்.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இன்னுழை கதிரின் துன்னணுப் புரைய…”

1937ஆம் ஆண்டு சேலத்தில் சக்கரவர்த்தி ராஜகோபால ஆச்சாரியார் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தபோது காவல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த கிருஷ்ணய்யர் மூலமாகத் திருவாசகத்தை அறிந்து படிக்க ஆரம்பித்தார். பூமிதான இயக்கத் தலைவர் வினோபா பாவே திருவாசகத்தை ‘தெய்வத்தேன்’ எனக் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். நாத்திகம் பேசிவந்த வைகோ அவர்கள் திருவாசகத்தைப் படித்துப் புகழ்ந்து மயங்கினார்.

வடலூர் வள்ளலார் தனக்குத் திருமணமாகி முதலிரவு அன்று தனது மனைவியிடம் திருவாசகத்தைக் கூறி விடியும் வரை திருவாசக முற்றோதல் செய்தார். சீர்திருத்த பகுத்தறிவாளர்களான ஈ.வே.ரா. அவர்கள், தனது நண்பர் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அன்னாரது இறுதிச் சடங்கில் திருவாசகத்தைத் தான் படித்தது மட்டுமல்லாமல் மற்றவர்களும் படிக்கக் கேட்டுக் கொண்டார்.

1925-ஆம் ஆண்டு கந்தசாமி பிள்ளை அவர்கள் தனது நண்பரான ஆங்கில வழக்கறிஞரிடம் லத்தீன் மொழியைப் படிக்கச் சென்ற சமயத்தில் ஆங்கில வழக்கறிஞர் தனக்குத் திருவாசகத்தைச் சொல்லித் தருமாறு வேண்டினார். ஒரு நாள் அந்த ஆங்கில வழக்கறிஞர் நிம்மதியில்லாமல் நீதிமன்றத்திலிருந்து வந்தபோது கந்தசாமி பிள்ளையிடம் இறைவனை அடைய திருவாசகத்தில் உள்ள பதிகத்தைக் கூறுமாறு வேண்டினார். அப்போது அடைக்கலப் பத்திலுள்ள கீழ்க்காணும் பாடலை எழுதிக் கொடுத்தார்.

“மாவடுவகி ரன்னகண்ணி பங்காநின் மலரடிக்கே

கூவிடுவாய் கும்பிக்கே யிடுவாய்நின் குறிப்பறியேன்

பாவிடை யாடுகுழல் போற்கரந்து பரந்ததுள்ளம்

ஆகெடுவேன் உடையாய் அடியேனுன் அடைக்கலமே.”

அந்த வழக்கறிஞர் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டும் தனியாகச் சுவரில் எழுதித் தரவேண்டினார். அது ‘மாவடுவகி ரன்னகண்ணி பங்காநின் மலரடிக்கே கூவிடுவாய்’ இதை மட்டும் இரவு முழுவதும் படித்து ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தார்.

திருவண்ணாமலையில் பகவான் ரமணர் தனது தாய் இறுதி மூச்சை விடும்போது திருவாசகத்தை முற்றோதல் செய்தார். தாயார் மறைந்த உடன் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்தபோது, அந்த அன்பர்கள் “உயிரற்ற உடல் கிடக்கும்போது சாப்பிடுவது தீட்டு” எனக் கூறினார்கள். அப்போது பகவான் அவர்கள் “திருவாசகம் படித்தால் தீட்டு கிடையாது” எனக் குறிப்பிட்டு அனைவரையும் உணவு உட்கொள்ளச் செய்தார். இப்படிப் பல செய்திகளைத் திருவாசகத்தின் மகிமையை எடுத்துச்சொல்ல கூறிக்கொண்டே போகலாம்.

காஞ்சி பரமாச்சாரியாரிடம் குழந்தைப் பேறு இல்லாத தம்பதி தங்களது குறையைச் சொல்லி அழுதுபோது, அவரது ஆலோசனையின் பேரில், திருவாசகத்தில் உள்ள ‘கோயில் மூத்த திருப்பதிகத்தை’ கணவன், மனைவி இருவரும் தொடர்ந்து படித்து வர, இரு ஆண் குழந்தைகள் பிறந்தன.

இலங்கையில் பல துன்பங்களுக்கு இடையே சைவ நெறியாளர்கள் திருவாசக அரண்மனை என ஒரு கோயிலை அமைத்து தமிழில் திருவாசகத்தைப் பதித்தது மட்டும் இல்லாமல் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருவாசகத்தைக் கல்லில் பதித்து வைத்துள்ளார்கள். ‘நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்’ என வியக்குமாறு என் மனதில் புகுந்து என்னை மாற்றியவன் சிவனே. திருவாசகம் தவிர வேறு திருமுறைகள் நான் அறியேன். எனக்கு 73 வயது ஆகிவிட்டது. ‘மாவடுவகி ரன்னகண்ணி பங்கா’ என அவன் திருவடிகளை அடைய வேண்டுகிறேன். அதற்கு முன்னால் ஒரு லட்சம் திருவாசகம் புத்தகங்களை அச்சிட்டு சிவனடியார்களுக்கு வழங்க இறைவன் திருவருளை வேண்டுகிறேன். அவன் முனைந்தால் முடியாததும் உளதோ?

மேலும் திருவாசகம் முழுவதும் தமிழ்நாட்டில் திருப்பெருந்துறை கோவிலைத் தவிர வேறு எங்கும் முழு திருவாசகமும் கல்லில் பதிக்கப்படவில்லை. ஆகவே யாழ்ப்பாணத் தமிழர்கள் எப்படி திருவாசகத்திற்கு என ஒரு அரண்மனையைக் கட்டியுள்ளார்களோ, அவ்வாறே இங்கும் திருவாசகத்திற்கு ஒரு கோவிலைக் கட்ட விரும்புகின்றேன். அதற்கு சிவபெருமான் அருள் செய்து முடித்துக் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற் கரியோய்நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள் செய்தாய் யானும் அதுவே

வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே

அன்றே யென்றன் ஆவியும்உடலும்

உடைமை யெல்லாமும் குன்றேயனையாய்

என்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ

இன்றோரிடையூ றெனக்குண்டோ எண்டோள்முக்கண்

எம்மானே நன்றேசெய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.

இத்தகைய அரிய திருவாசக நூலினைப் பொருளுணர்ந்து சொல்லும் செல்வர்களாக அன்பர்கள் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் திருவாசகத்தை ஓதிப் பொருளுணர்ந்து உள்ளம் நெகிழும் அன்பர்கள் திருக்கோவையாரினையும் ஓத வேண்டும் என்பது அடியேனின் ஆசை. இத்தகைய வீடு பேற்றினை எளிதாக அடைய உதவும் திருவாசகத் தேனை யாவரும் பருகி இன்னருள் பெற இளைறவனை வேண்டுகிறேன்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...