சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் இனி வாட்சப் இல்
சென்னை மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இல்லாமல் சென்னை மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை பெரிதும் உதவுகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 8 ஆண்டுகள் ஆகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில்களுக்கு முதலில் சென்னைவாசிகள் இடையே பெரியளவில் வரவேற்பு இல்லை. மற்ற போக்குவரத்து சேவையை விட கட்டணம் அதிகம் என கூறப்பட்டது.
காலப்போக்கில் மெட்ரோ ரயில் சேவையின் முக்கியத்துவத்தை சென்னை மக்கள் உணரத் தொடங்கினர். இதனை அடுத்து, மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. அதன்படி, மெட்ரோ ரயில் நிறுவனமான சிஎம்ஆர்எல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் யுக்தியை கையாண்டது. அதன்படி, மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. சிங்கார சென்னை அட்டை மூலம் டிக்கெட் பெறுவது, பயணிகளுக்கு வாகன நிறுத்தமிடங்களை குறிப்பிட கால அளவுக்கு இலவசமாக அளிப்பது, தனியார் நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட் பெற்று கியூஆர் குறியீடு மூலம் அதனை வழங்குவது உள்ளிட்ட வசதிகள் பயனாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வரிசையில், கடந்த மாதம் (மே மாதம்) 22ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்சப் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதியை சிஎம்ஆர்எல் அறிமுகம் செய்தது. இதன்மூலம் டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் சிரமம் இருக்காது என்பதால் இந்த வசதி மெட்ரோ ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, 83000 86000 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பி மெட்ரோ ரயில் டிக்கெட் பெறலாம். அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் குறித்தும் இந்த வசதி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த சேவையை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 70 ஆயிரத்து 618 பேர் பயன்படுத்தி டிக்கெட் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, கடந்த 17ஆம் தேதி 3,094 பேர் வாட்சப் மூலம் டிக்கெட் எடுத்துள்ளனர்.வாட்சப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிஎம்ஆர்எல் கூறியுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த சேவை இரட்டிப்பாக அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.