தேவர் மகன் இசக்கி, மாமன்னன் ஆனார்..?

 தேவர் மகன் இசக்கி, மாமன்னன் ஆனார்..?

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழா, இதில் படக் குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் தவிர, நடிகர் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன. தேவர் மகனின் இசக்கிதான் தனது மாமன்னன் என்கிறார் மாரி செல்வராஜ். அது ஏன்?

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இசை வெளியிட்டு விழாவின் வீடியோ தொகுப்பு சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் மாரி செல்வராஜ் பேசும்போது தேவர் மகன் பற்றி குறிப்பிட்டதுதான் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. “‘மாமன்னன்’ படம் உருவானதற்கு காரணமே ‘தேவர் மகன்’ படம்தான். ’தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால் கடக்கமுடியவில்லை. ‘தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். இதை எப்படி புரிந்துகொள்வது? இந்தப் படம் சரியா? தவறா? என்று புரியாமல் அப்படி ஒரு வலி. இந்த ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’.

நான் ‘பரியேறும் பெருமாள்’ எடுக்கும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுதான் எடுத்தேன். ‘கர்ணன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ’மாமன்னன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்” என்று குறிப்பிட்டார் மாரி செல்வராஜ். இதையடுத்து மாரி செல்வராஜ் குறித்தும் தேவர் மகன் திரைப்படம் குறித்தும் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

மாரிசெல்வராஜ் தனது பேச்சில், தேவர் மகன் படத்தில் வடிவேலு ஏற்று நடித்த இசக்கி கதாபாத்திரத்தை ஒடுக்கப்பட்ட சமூகமாக கருதியிருப்பதாகவும் ஆனால், அது சரியான கருத்து அல்ல என சிலர் பதிவிட்டுள்ளனர். இசக்கி பாத்திரத்தை என்னவாகக் கருதினார் என மாரிசெல்வராஜ் தனது பேச்சில் தெளிவாக சொல்லவில்லை முடிவாகப் பார்க்கும் போது, தேவர் மகன் திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு மாற்றான ஒரு தாக்கத்தை உருவாக்க மாரி செல்வராஜ் விரும்புவதாகவும், அதற்காகவே இசக்கி பாத்திரத்தை நாயகனாக மாற்றிக்கொள்வதாகவும் புரிந்துகொள்ளலாம் என்கிறார்..

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...