பயராமனும் பாட்டில் பூதமும் | 2 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 2 | பாலகணேஷ்

ஜெயராமன் குழம்பினான். ‘தன்னைப் பார்த்து இப்படியோர் அழகி சிரிக்கக் காரணமேயிராதே.. ஒருவேளை…’ வலப்புறம் திரும்பி பார்த்தான். அங்கே யாரும் இல்லை. திடீரென ஒரு பெரும் சந்தேகம் அவனை ஆட்கொண்டது. தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டான். இல்லை… எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்கிறோம்.

சிந்தனையிலிருந்தவனை இழுத்துப் பிடித்தது, “சார், ஜெயராமன் சார்…” என்ற அவளது இனிய குரல்.

அட..! என் பெயர் இவளுக்கெப்படித் தெரியும்..? ‘ழே’யென்று விழித்தான்.

“இன்னிக்காவது வந்தீங்களே இங்க. உங்களுக்காக ஒரு மாசமாக் காத்திருக்கேன் ஜெயராமன் சார்…” என்றாள்.

ஜெயராமனுக்குத் தான் காண்பது, கேட்பது கனவா, நிஜமா என்று குழப்பமாக இருந்தது. இத்தனை அழகான பெண், என்னைத் தேடி வந்து பேசுகிறாளா..? நைசாக கையைத் தொடைக்குக் கொண்டு சென்று கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அட, வலிக்கவில்லை!! கனவுதான்!!

“ஆ… ஏன் சார் கிள்றீங்க..?” என்று அலறினாள் அவள். அட, கனவில்லை!! நிஜம்தான்!!

“ஹி… ஹி… ஸாரிங்க..” என்று இளித்தான்.

“நெருக்கமா உக்காந்துக்கிட்ருக்கைல இப்டி அகலமாச் சிரிக்காதீங்க சார். பயமாருக்கு” என்றதும், பட்டென்று வாயை மூடினான்.

“அதுசரி… உங்களுக்கு எப்டி என்னோட பேரு தெரியும்..?”

“உங்க பேரு மட்டுமில்லை… உங்க வீட்டம்மா பேரு தனலட்சுமி. சரியா..?”

“……….….” பிளந்த வாயிலிருந்து காற்றுத்தான் வந்தது ஜெயராமனுக்கு.

அவள் சிரித்தாள். “என்ன சார்..? கரெக்ட்டுதான..?”

தலையாட்டினான். “எப்டிங்க..? எப்டி இதெல்லாம்..?”

“எல்லாம் நாடில இருக்கு சார்…”

“நாடியா.? நீங்கதான் என் கையப்புடிச்சு பாக்கவே இல்லையே… அப்பறம் எப்டி நாடில தெரிஞ்சது..?”

“கடவுளே… நாடின்னா அதில்லை சார். நாடி ஜோசியம். அகத்திய மாமுனி உங்க பேருக்கு எழுதி வெச்ச ஓலை! அதுல எல்லா விவரமுமே இருக்கும்.”

“அவரு எதுக்கு என் பேருல ஓலை எழுதி வெக்கணும்..? சொத்து கித்து எதுவும் எழுதி வெச்சிருக்காரா..?”

“ஆமா. ஆனா அவர் எழுதிவெச்ச சொத்து நீங்க நினைக்கற மாதிரி பணமோ, வீடோ இல்லை. ஒரு பாட்டில்.”

“என்னது..? பாட்டிலா..? ஸாரிம்மா. எனக்குக் குடிக்கற பழக்கம் இல்லை…”

“அகத்தியருக்கும் இருந்திருக்காது சார். இது வேற மாதிரியான பாட்டில். இப்ப நீங்க என்னோட, என் வீட்டுக்கு வரீங்க. அந்த பாட்டிலை வாங்கிக்கறீங்க. மத்த டீட்டெய்ல்ஸ் அங்க போய் பேசிக்கலாம்.” என்று அவள் எழுந்து கொண்டாள்.

“நான் வரமாட்டேன்னா..?” என்று சிரித்தான் ஜெயராமன்.

“வருவீங்க சார். அதான் விதி. நான் இப்ப என் வீட்டுக்குப் போறேன். சித்தர் சொன்னது நிஜம்னா நீங்க இப்ப என் பின்னாலயே வருவீங்க பாருங்க..” என்று எழுந்து திரும்பியே பார்க்காமல் நடக்கலானாள் அவள்.

அவள் மெல்ல நடப்பதையே வெறித்தபடி அமர்ந்திருந்த ஜெயராமனுக்கு, ‘ஏன், அவள் பின்னால் போய்ப் பார்த்தால்தான் என்ன.?’ என்றொரு எண்ணம் எழுந்தது. அந்த எண்ணம் வலுவாக, ஏதோ உணர்வு உந்த, சட்டென்று எழுந்து அவள் பின்னாலேயே மேரியின் ஆடுபோல நடந்தான் ஜெயராமன்.

தனக்குள் மிக வினோதமாக உணர்ந்தான். நடக்கிற, நடக்கப்போகிற சம்பவங்களுக்கு ஒரு தவிர்க்க முடியாத தன்மை இருக்கிறது என்று மனதில் தோன்றியது அவனுக்கு.

அவள் பல சந்து பொந்துகளில் புகுந்து போய்க் கொண்டே இருந்தாள். தவறியும் திரும்பிப் பார்க்கவில்லை. அதை வியந்தபடியே பின்னாலேயே ஜெயராமனும் போக, ஏழெட்டு தெருக்கள் தாண்டி ஒரு சிறிய வீட்டினுள் நுழைந்தாள். பின்னாலேயே அவனும்.

“வாங்க, உக்காருங்க..” என்று ஒரு சேரைக் கை காட்டினாள். உட்கார்ந்தான்.

“நான் சொன்னபடியே வந்தீங்களா, இல்லியா..? நம்புங்க சார் நான் பேச்சை…”

“அதுசரி… என் பேர், என் வொய்ப் பேரெல்லாம் சொன்னீங்க. உங்க பேரைச் சொல்லலியே..”

“என் பேரு அனிதா சார்… முதமுதலா வீட்டுக்கு வந்துருக்கீங்க. காபி போட்டுத் தரட்டுமா சார்..?”

“வேணாங்க. நான் வெளில எதையும் சாப்டறதில்லை..”

“அப்டின்னா கிச்சனுக்கு வாங்க. அங்க போட்டுத் தரேன்.”

“வெளிலன்னா வீட்டைத் தவிர வேற இடங்கள்லன்னு அர்த்தம் புனிதா..”

“புனிதா இல்ல சார், அனிதா. உங்களோட இந்த மறதி பத்தியும் நாடிச் சுவடில இருக்கு..”

“திரும்பத் திரும்ப நாடி, ஓலைச்சுவடின்னு என்னைத் தெளிவா குழப்பறியேம்மா…”

“இருங்க. ஓலைச்சுவடியை காட்டறேன்..” என்று ஒரு ஷெல்பைத் திறந்தபடியே சொன்னாள்.

“இதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னயே நம் பெரியவங்க எழுதி வெச்சது – பேர் உள்பட. இப்ப நடந்துட்டிருக்கறதெல்லாம் முன்னாடியே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் தெரியுமோ..” என்றாள். ஜெயராமன் மையமாகத் தலையாட்டினான்.

“இதான்… படிச்சுப் பாருங்க..” என்று ஒரு ஓலைச் சுவடியை நீட்டினாள்.

ஜெயராமன் பார்த்தான். கொசகொசவென்று சேமியா உப்புமாவை சுவடியில் கொட்டியது போன்று எழுத்துக்கள் இருந்தன. அவளிடமே நீட்டினான். “ஒண்ணும் புரியல சுனிதா..”

“அனிதா சார்…” நோகாமல் தலையில் தட்டிக் கொண்டாள்.

“நான் படிக்கறேன் கேளுங்க…”

“ஈரிருபதுட ஈரிரண்டாம் ஆண்டதனில் ஈரைந்தாம் மாதந் தனில்

செம்பூப்ரியனவன் பூங்காவதனில் ஜெயங்கொண்ட ராமனவன்

தனங்கொண்ட லட்சுமியின் மணாளனவன் வந்திடுவான்.

காத்திருந்து பற்றிடுக. ராமனவன் பாரியன் ஆடியன்

குறைநினைவனவன் கரம்பட்டால் திறந்திடுமே பாண்டமதும்

மேனிதனைப் பெற்றிடுமே சாதுவான ஆன்மமும்…”

“இதான் அந்தப் பாட்டு. புரிஞ்சுதா சார்.?”

ழேயென்று விழித்தான் ஜெயராமன். “படிச்சதெல்லாம் தெளிவா தமிழ்தான்னு புரியுது. ஆனா மீனிங்குதான் ஒரு மண்ணும் புரியல…”

“ஈரிருபதுடன் ஈரிரண்டாம் ஆண்டுன்னா ரெண்டு இருபதோட ரெண்டு போட்டா வர்றது. அதாவது 2022. ஈரைந்தாம் மாதம்னா பத்தாவது மாசம், அதாவது நவம்பர். நேரு பூங்காவுக்கு தனலட்சுமியின் கணவன் ஜெயராமன் வருவான். வெயிட் பண்ணிப் பிடிச்சிடு. அவன் குண்டான ஆசாமி, கண்ணாடி அணிந்தவன், மறதி உள்ளவன், அவன் கரத்தால் மட்டும்தான் பாட்டில் திறக்கும். பாட்டில் திறந்தா உள்ள இருக்கறது வெளிய வரும்-ன்னு சொல்லிருக்கு சார்.”

“உள்ள இருக்கறதுன்னா..?”

“இதான் சார் அந்த பாட்டில்..” நீட்டினாள். “இதுக்குள்ள ஜீனி இருக்கு…”

“ஸாரிம்மா. போன வாரம்தான் ரேஷன்ல போட்டான்னு ஜீனி வாங்கிட்டேன். எனக்கு இப்பத் தேவையில்ல…”

“கடவுளே… உங்களுக்குப் பொது அறிவு இல்லையா சார்..?”

“பொதுவா எனக்கு அறிவே இல்லைன்னு தனம் சொல்லுவா. இப்ப என்ன அதுக்கு..?”

“ஜீனின்னா நீங்க நினைக்கறது இல்ல சார். நன்மை செய்யற பூதம் அது. அதைத்தான் ஜீனிம்பாங்க..”

“பூ… பூ… பூதமா..?” சேரில் உட்கார்ந்த நிலையிலிருந்தே இரண்டடி எம்பிக் குதித்து, அந்த பாட்டிலை விசிறியடித்தான் ஜெயராமன்.

என்ன ஆச்சரியம்! அவன் வீசியடித்த வேகத்துக்கு சுவரில் மோதிய அந்த பாட்டில் சுக்கலாய்ச் சிதறியிருக்க வேண்டும். மாறாக, ஏதோ மரத்தால் செய்தது போல சொத் என்று சத்தம் மட்டும் போட்டுவிட்டு கீழே விழுந்து கம்மென்று கிடந்தது.

மெல்லக் குனிந்து அதை எடுத்தாள்.

“பயப்படாதீங்க சார். இந்தாங்க, புடிங்க… ஆயிரம் வருஷத்துக்கு மேல இதுக்குள்ள அடைபட்டிருக்கற அந்த ஜீவன் வெளியவரது உங்க கைலதான் சார் இருக்கு..” என்றபடி நீட்டினாள்.

கை கால்கள் அவனைக் கேட்காமலேயே புதுவிதமாக பிரபுதேவா போல் நடனம் அமைக்க, மறுபடியும் பயராமனாகி விட்டிருந்த ஜெயராமன் கேட்டான்.

”ஆயிரம் வருஷத்துக்கு மேல உள்ள கெடக்குங்கற. நான்தான் திறக்கணுங்கற. அதுபாட்டுக்கு வெளிய வந்ததும் பசி தாங்கலடா சாமின்னு என்னயை அடிச்சுச் சாப்ட்றுச்சுன்னா..?”

அவள் வாய்விட்டு பலமாக, அந்த வீடதிரச் சிரித்தாள். “பயப்படாதீங்க சார். அப்டில்லாம் எதுவும் செய்யாது. உண்மைல அதுக்கு விடுதலை குடுத்தீங்கன்னா ஒரு மாச காலத்துக்கு உங்களுக்கு அடிமையா இருந்து நீங்க கேக்கறதையெல்லாம் செஞ்சு தரும்.”

“கேக்கறதையெல்லாம்னா..? நான் பத்து கிலோ தங்கம் வேணும்பேன், பெரிய பங்களா வேணும்பேன்…”

“அதெல்லாம் இந்த ஜீனிக்கு சுண்டைக்காய் சார். பாட்டிலைத் திறந்ததும் நேரடியா பாக்கத்தான போறீங்க..?”

“இதெப்டி உங்கிட்ட வந்தது..?”

“உங்களுக்கு ஆதிகேசவநல்லூர் ஹரிஹரசுப்ரமணிய சர்மாவைத் தெரியுமா..?”

“அப்டியொரு பேரையே இப்பத்தான் கேள்விப்படறேன். யாரு அவரு..?”

“எங்கப்பா சார். போன வருஷம் காலமாய்ட்டார். அவர் ஒரு புகழ்பெற்ற நாடி ஜோதிடர். அவரைத் தேடி வெளிநாட்லருந்துல்லாம் கூட நிறையப் பேர் வந்து பலன் பாத்துட்டுப் போங்க…”

“ஓ… உள்நாட்ல பாக்க மாட்டாங்களா..?”

“அடக்கடவுளே… உள்நாட்ல பிரபலமானதாலதான் சார் வெளிநாட்டுப் புகழே அவருக்கு.”

“சரி, அவருக்கென்ன இப்போ..?”

“அவர் உயிரை விடறப்போ, எங்கிட்ட ஒரு சத்தியம் வாங்கினார்.”

“சர்த்தான். அந்தக் காலத்து தமிழ் சினிமாலருந்து ஆரமிச்சு, இப்ப வரை உசிரை விடறவங்க இந்தப் பழக்கத்தை நிறுத்தலைபோல. என்ன, யாரையாச்சும் பழிவாங்கணும்னு கேட்டாரா..?”

“இல்லை. இந்த ஓலைச்சுவடியையும், பாட்டிலையும் தந்து உங்ககிட்ட ஒப்படைக்கச் சொல்லிட்டு உயிரை விட்டார். எப்படி அவர்ட்ட வந்துச்சுன்னு எனக்குத் தெரியாது. அவர் வாழ்க்கைல செய்ய பாக்கியிருக்கற ஒரே கடமை இதுன்னு வேற சொன்னார். அதான் நான் உங்களைத் தேடி அலைஞ்சேன். ஒருவழியா தேடிப் புடிச்சு உங்ககிட்ட ஒப்படைச்சாச்சு. இனிமே அதுவாச்சு, நீங்களாச்சு.. கௌம்புங்க..” என்று பாட்டிலை அவன் கையில் திணித்து, வாசலைக் கை காட்டினாள் அனிதா.

திகைத்தான் ஜெயராமன். தனலட்சுமியால் உடம்பில் கட்டுப்போட வேண்டிய நிலைமை வருமோ என்று பயந்து பார்க்குக்கு வந்தால் இங்கும் ஓர் இக்கட்டு. என்ன செய்வது..? குழம்பியபடியே மெல்ல எழுந்து நடந்தான். நடந்தான்… யோசித்தபடியே மெல்ல நடந்தான்.

வீட்டின் வாசலைக் கடந்து நடந்து அடுத்த தெருவை அடைகிற சமயம்… அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானித்து விட்டான் ஜெயராமன்.

–பூதம் வரும்…

ganesh

2 Comments

  • Very interesting 😃😃

  • பூதமும் ஜெ யும் அடிக்கப் போகிற லூட்டிக்கு வெயிட்டிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...