நடிகர் திலகம் தலைமையில் ‘ஓவியன்’ நாடகம் அரங்கேற்றம் (பகுதி 3)
பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை அவர்கள் தன் நீண்ட கால நாடக அனுபவங்களை இங்கே சுவையாக நம் வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்கிறார்.
நடிகர் திலகம் தலைமையில் ‘ஓவியன்’ அரங்கேற்றம்
என் குருநாதன் கே.என்.காளை தயாரித்த ‘ஓவியன்’ நாடகத்திற்குத் தலைமை தாங்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்தபோது, கதாநாயகனாக புதிதாக ஒருவரை நடிக்கவைக்க வேண்டியதாகிவிட்டது. அவரக்கு வசனங்கள் தெரியாது. ராஜா வேஷத்தில் நடித்தவருக்குத் திடீரென்று நான் எப்படிப் பின்னணியில் இருந்து வசனத்தை எடுத்துக் கொடுத்தேன், அவர் எப்படி அதைக் கேட்டுப் பேசினார் என்பது ஒரு ஆச்சரியம் தானே.
அந்தச் சூழ்நிலையை இதோ காட்சியாக விளக்கிச் சொல்கிறேன். படித்து மகிழுங்கள்.
வேட்டைக்குப் போன என் கணவர் ராஜா விக்ரமன் மாலை வரை வந்து சேரவில்லையே, என் கணவரது நிலை என்ன என்று பார்த்துச் சொல்லும்படி ஜோதிடரிடம் கேட்டார் ராணி கல்பனா.
மாலை வரை வராததால், ஒருவேளை மன்னர் விலங்கினங்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கலாம் என்று சொன்ன அந்த அரைகுறை ஜோதிடரின் சொல், ராணியின் மனதை பாதிக்கவே பாம்பு புற்றில் கொண்டு கையைவிட, பாம்பு தீண்டி ராணி கல்பனா மரணம் அடைந்து கீழே விழுகிறார். அப்போது ராஜா குதிரையில் வந்து இறங்கியவுடன் நடந்த செய்திகள் அனைத்தும் ராஜாவின் காதில் விழ மனம் கலங்கிய மன்னர் உடனே ஜோதிடரைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.
பிறகு ஓவியர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் வரவழைத்து தன் மனைவி ராணி கல்பனாவின் அங்க அடையாளங்களை வருணிக்கிறார். அதைக் கேட்ட ஓவியன் ஒருவன் ராணியின் உருவத்தை தத்துரூபமாக வரைந்து தருகிறார். அவருக்கு சாமுத்திரிகா லட்சணம் தெரிந்ததால்தான் அதை வரைய முடிந்தது.
ராஜா விக்ரமன் ராணியின் அங்க அடையாளங்களை ஓவியர்கள் முன் வர்ணிக்கிறார். இதோ அந்த வர்ணனையைப் பதிவு செய்துள்ளேன் நீங்களும் படியுங்கள்.
மாரிகாலத்து கார்மேகம் போல்
கருத்து செழித்து நீண்டு வளர்ந்த கூந்தல்
அவற்றுள் ஓரிரு சுழல்கள்
ஆறாம் பிறை சந்திரனை ஒற்ற நெற்றியில்
இளம் தென்றலாய் அசைந்தாடி விளையாடும்
உதய வேளை குவளை போல்
நீண்டு விரிந்து மலர்ந்த
மானின் மருட்சியின் குளுமை
கொஞ்சும் கண் மலர்கள் அதன்
இமைக்கரங்களிலே
அஞ்சனம் தீட்டப்பட்ட அழகு
வெள்ளை ரோஜாவின்
மொக்கு போன்ற மூக்கு
காவியகர்த்தாவுக்குச்
சவால் விடுப்பது போல்
உவமைக்கு அடங்காத
கவர்ச்சி மிக்க காதுகள்
கொவ்வைக் கணியை ஒற்ற
செவ்விய அதிரங்கள்.
செந்தாமரை மலர் போன்ற பாதங்கள்
இத்தனை அம்சங்களும் நிறைந்தவள்தான்
என் பட்டத்து ராணி கல்பனா..
முக்கிய குறிப்பு
இந்த நாடகத்தில் ஜோதிடராக நடிகர் சுருளிராஜனும் அவர் மகனாக கலைமாமணி (நான்) துரையும் நடித்தார்கள். போட்டோவைப் பாருங்கள். சிறுவனாக நிற்பவர்தான் கலைமாமணி P.R.துரை.