கோமேதகக் கோட்டை | 15 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
தன்னிடமிருந்து மந்திரப்பாயையும் மந்திரக் கோலையும் எடுத்துக்கொண்டு சூர்ப்பனாக பறப்பதை பார்த்த வித்யாதரனால் சில நிமிடங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை..! சிறிய கவனக்குறைவு இத்தனை பெரிய விபரீதம் ஆகிவிட்டதே..! மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று அவன் மனம் கலங்கி நின்றான். அவனது மனம் “கணேசா காப்பாற்று!” என்று காரியசித்தி கணபதியை நினைத்துப் பிரார்த்தித்தது.
அப்போது ஆகாய வீதியில் பறந்து கொண்டிருந்த சூர்ப்பனகாவின் எதிரே ஓர் உருவம் பறந்து வந்து நின்றது. அதன் வயிறு பெருத்திருந்தது. காதுகள் நீன்றிருந்தது. முகத்தில் நீண்டதொரு மூக்கு தும்பிக்கையாக அமைந்திருந்தது அதன் கைகளும் கால்களும் யானை போல பெருத்திருந்தது. மேலும் அந்த உருவம், “நில் சூர்ப்பனகா!” என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தது.
அந்தக் குரல் சூர்ப்பனாகவையே கொஞ்சம் ஆட்டம் காண வைத்தது. அவள் முகம் பேயறைந்தாற் போல மாறிவிட்டது. “யார்..? யாரது..?” என்று அவள் குரல் தேய்ந்து போய் ஒலித்தது.
“சூர்ப்பனகா..! என்னைத்தெரியவில்லையா..? என்னை உன்னால் மறக்கத்தான் முடியுமா..?” என்றது அந்தக் குரல்.
சூர்ப்பனகாவை அந்தக் குரல் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
“நீ… நீ… அந்தச் சுட்டி கணேசன் தானே..!” என்றாள்.
“ஆமாம், அதே கணேசன் தான்..! வயதானாலும் உன் விளையாடல்களை நீ இன்னும் குறைத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறதே..!” என்றான் சுட்டி கணேசன்.
“என் இளவயதில் தாளப்புரி நாட்டு மன்ன்ன் ஆதித்யவர்மாவை மணந்து அந்த நாட்டுக்கு ராணியாக முடிசூட ஆசைப்பட்டேன்..! அதற்கு நீ முட்டுக் கட்டை போட்டாய்..! என் மந்திரக் கோலை உடைத்து என் மந்திரசக்தியைப் பிடுங்கிக் கொண்டாய். பின்னர் பல ஆண்டுகள் மீண்டும் மந்திர உச்சாடனம் செய்து வேறு மந்திரக்கோலை அடைந்தேன். இப்போது என் வழியில் நீ ஏன் குறுக்கிடுகிறாய்..? வழியை விடு..!” என்றாள் சூர்ப்பனகா..!
“என் பக்தனிடமிருந்து மந்திரப்பாயை அபகரித்துச் சென்று கொண்டிருக்கிறாயே… அதைக் கொடுத்துவிடு..! நான் உன் வழியில் குறுக்கிடாமல் இருந்து விடுகிறேன்..!”
“அட..! நாடு முழுவதும் உன் பக்தர்கள்தான் போலிருக்கிறது..! அங்கே ஆதித்யவர்மாவுக்கு உதவினாய்..! இப்போது வித்யாதரனுக்கு உதவப் போகிறாயா? அது நடக்காது..!”
“மந்திரப்பாய் நடக்காது..! பறக்கத்தான் செய்யும்..! அது எனக்கும் தெரியும் சூர்ப்பனகா..! மரியாதையாக மந்திரப் பாயை வித்யாதரனிடம் தந்துவிடு..!”
“சுட்டி கணேசா! அது மட்டும் முடியாது..! இந்த மந்திரப்பாயை என் வசமாக்கிக் கொள்ள எத்தனை நாளாகத் தவமிருந்தேன் தெரியுமா? என் மந்திரங்கள் சித்திக்கவில்லை..! வித்யாதரனிடம் இந்த மந்திரப்பாய் இருப்பதை அறிந்து அவனை ஏமாற்றி அபகரிக்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை..! ஆனால் விதி அவனை ஏமாற்றிவிட்டது. ஒரு சிறு கவனக் குறைவினால் அவன் மந்திரப் பாயை இழந்து விட்டான். இதைத் திரும்பவும் அவனிடம் ஒப்படைக்க நான் என்ன முட்டாளா..? முடியாது..!”
”அப்படியானால் மந்திரப்பாயை உன்னால் தர முடியாது..?”
“ஆம்..! மந்திரப்பாய் இப்போது என் வசம்..! அதை நான் யாருக்கும் தரமாட்டேன். உனக்கு சாமர்த்தியம் இருந்தால் என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்.”
”என்னிடமிருந்து எப்போதும் எதையாவது வாங்கி வாங்கியே உனக்குப் பழக்கம் ஆகிவிட்டது. கொடுத்துப் பழக மறுக்கிறாய்.! சரி வாங்கிக் கொள்..!” என்று கணேசர் சொல்லியவாறே தன் தும்பிக்கையை நீட்ட ஆரம்பித்தார். அது வளர்ந்து சென்று அப்படியே சூர்ப்பனகாவை வளைத்து பிடித்தது. அவள் இப்போது பாயை விட்டு கணேசரின் பிடியில் சிக்கிவிட பாய் கட்டுப்பாட்டை இழந்து கீழே இருந்த வித்யாதரனின் கையில் வந்து விழுந்தது.
“ஐயோ… என்னை விடு…! விட்டுவிடு..!” என்று அலறினாள் சூர்ப்பனகா
”இப்படியே விட்டு விட்டுவிடட்டுமா..? கீழே விழுந்தால் ஒரு எலும்பு கூடத் தேறாது..!” என்றார் கணேசர்.
“ஆ.. வேண்டாம் விட்டு விடாதே..! என்னை இறக்கிவிடு..! இனி உன் வழியில் குறுக்கிடமாட்டேன்..!”
“அப்படியா..? உன்னை கீழே இறக்கிவிட வேண்டுமானால் இன்னும் ஒன்று தேவையாயிற்றே..!”
”என்ன அது..? என்னைவிடப் பலசாலியான தங்களுக்கு என்னிடம் கொடுக்க என்ன இருக்கிறது..?”
”பலே..! சிலருக்குத் தண்டணை கொடுத்தால்தான் பணிவு தானாக வருகிறது. உன்னிடம் எனக்கு எந்த வேலையும் இல்லை..! ஆனால் என் பக்தனுக்கு உன் உதவி தேவைப்படுகிறது. அவன் ராட்சதனை அழிக்க உன் உதவி தேவை.”
”சுட்டி கணேசரே..! உங்கள் சொல்படி கேட்கிறேன்..! என்னைக் கீழே போட்டுவிடாதீர்கள்..! வித்யாதரனுக்கு உதவியாக ராட்சதனை அழிக்க என்னால் இயன்றதைச் செய்கிறேன்..!”
”இது வெறும் வாய் வார்த்தையாக இருக்க்க் கூடாது..! உள்ளப்பூர்வமாக சொன்னதாக இருக்க வேண்டும்.”
”மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்! வித்யாதரனுக்கு உதவுகின்றேன்..! இது சத்தியம்”.
”சரி அப்போது கீழே இறங்குவோம்..!” என்று சொன்ன சுட்டி கணேசர் மெதுவாக சூர்ப்பனகாவுடன் கீழே இறங்கினார்.
சுட்டிகணேசரை வணங்கினான் வித்யாதரன்.
”வித்யாதரா..! சூர்ப்பனகா உனக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறாள். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இனி இவள் உன்னை தொந்தரவு செய்ய மாட்டாள். ராட்சதனை அழிக்கும் முயற்சியில் இவளும் உனக்கு உதவியாக இருப்பாள். உனக்கு இன்னொரு பரிசையும் அளிக்கிறேன். இதோ இந்த மந்திர காப்பை அணிந்து கொள். இது எதிரியிடமிருந்து உன்னை காப்பதோடு எதிரியை உன் அருகில் நெருங்க விடாது. அமாவாசை வரை காத்திருக்க வேண்டாம் இப்போதே புறப்படு. வழியில் உனக்கு சில சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை வென்று நீ கோமேதகக் கோட்டையை அடைவாய்..! சென்று வா..! வென்றுவா..!” என்ற கணேசர் விடைபெற்று மறைந்தார்.
”சூர்ப்பனகா..! நீ எனக்காக உதவ வேண்டாம்..! இந்த நாட்டில்வாழும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக உதவ வேண்டும். நடந்ததை மறந்து நண்பர்களாக இந்த ராட்சதனை அழிக்கும் போரில் இருவரும் இணைந்து செயல்படுவோம்..!” என்றான் வித்யாதரன்.
”வித்யாதரா..! ஆசைதான் துன்பத்திற்கு காரணம்..! மந்திரப்பாயின் மீதுள்ள ஆசையினால் சொன்ன வாக்கை மறந்து உன்னை ஏமாற்றிப் பயணித்தேன்..! அதற்கு கணேசர் நல்ல தண்டணை கொடுத்துவிட்டார். இனி நாம் இணைந்து ராட்சதனை வெல்லுவோம்..!” என்றாள் சூர்ப்பனகா.
”நன்றி சூர்ப்பனகா..! நாம் இப்போதே மன்னரிடம் சென்று விடைபெற்று கோமேதகக் கோட்டைக்குப் பயணிப்போம்..!” என்று மந்திரப்பாயில் ஏறி மன்னரை சந்திக்க சென்றனர் வித்யாதரனும் சூர்ப்பனகாவும்.
கோமேதகக்கோட்டையில் ராட்சதன் மிகவும் கொந்தளிப்புடன் இருந்தான். ஆந்தை தன்னைக் கொல்ல வித்யாதரன் வரப் போகிறான் என்று சொன்னதும் அவனைப் பார்க்கும் ஆவலில் இருந்தான் ராட்சதன். வித்யாதரன் என்ன அவ்வளவு பெரிய வீரனா..? அவன் எப்படி இருப்பான்..? என் உயரம் இருப்பானா..? அவனது புஜபலம் என்னை விட பெரியதாக இருக்குமா..? இப்படிப் பல கேள்விகள் அவன் மனதிலே உதயமாகி அதன் விளைவாக அவன் முகம் விகாரமாகி கண்கள் சிவந்து கோபக் கனலை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன.
அந்த சமயம் அவனது அரக்கர் கூட்டத்தில் ஒருவன் ராட்சதன் அருகில் வந்து “பிரபோ..! நம்மிடம் இருந்த உணவுகள் தீர்ந்து போய்விட்டது வில்லவபுரம் போய் உணவுகளைக் கொண்டுவர வேண்டும்..!” என்றான்.
”வில்லவபுரம் போக வேண்டுமா..?” என்று கேட்டான் ராட்சதன்.
”ஆம் பிரபோ..! அப்போதுதான் உணவு வகைகளை நாம் எடுத்து வர முடியும் இன்று அங்கு சென்று உணவைக் கொண்டுவரவேண்டிய நாள்தான்.”
”அப்படியா..! வில்லவபுரத்தில் உனக்கு வித்யாதரனைத் தெரியுமா..?”
”வித்யாதரனா..? யார் அவன்..? எனக்குத் தெரியாதே..!”
”மூடா..! அவனைப் பற்றி உனக்கும் ஒன்றும் தெரியாதா..? அப்புறம் பசி மட்டும் எடுக்கிறதா..?”
”அறிவுக்கும் பசிக்கும் சம்பந்தம் இல்லை பிரபோ..!”
”யாரடா இதைச்சொன்னது..? வயிறு பசித்தால் பசியில் ஆத்திரம் அதிகமாகி புத்தியை இழந்துவிடுவோர் நிறைய பேர் உண்டு. ”
”ஆம் பிரபு..! ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே..!”
”கோபம் என் கூடப் பிறந்த ஒன்று! அதை நான் விடமுடியாது..! நீ சொல்ல வந்த்தைச் சொல்,,!”
”பிரபோ..! உங்களுக்கும் இப்போது பசி அதிகரித்துவிட்டது. உடல் உணவைத் தேடி ஏங்குகிறது..! அதனால்தான் மிகுந்த ஆத்திரத்துடன் இருக்கிறீர்கள்..! வில்லவபுரம் செல்வோம்..! உணவுகளை கொண்டுவந்து தின்போம்..! அப்புறம் நிதானமாக வித்யாதரனைப் பற்றி யோசிப்போம்..!”
”அடேய் முட்டாள் அரக்கா..! வித்யாதரன் என்னுடைய எமன்..! என்னைக் கொல்ல இங்கே வரப் போகிறானாம்..! அவன் என்னைக் கொல்ல வந்து கொண்டிருக்கிறான்..! நான் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமா..? அவனை முதலில் கொன்று புதைக்க வேண்டாமா..? யார் அவன் வித்யாதரன்..? இங்குள்ள அரக்கர் கூட்ட்த்தில் யாருக்காவது அவனைப் பற்றித் தெரியுமா..?” என்று கர்ஜித்தான் ராட்சதன்.
அரக்கர்கள் தலையை ஆட்டி மறுத்தார்கள். ”பிரபோ..! இதுவரை நாங்கள் வித்யாதரனை பற்றி கேள்விப் படவில்லை! நீங்கள் ஏன் அவனைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவன் எப்படி இருந்தால் என்ன..? இந்த உலகில் உங்களை வெல்ல அவனால் முடியுமா..?”
”அரக்கர்களே! இதுவரை என்னை யாரும் வென்றதில்லை..! இந்தக் கோட்டைக்குள் என் அனுமதி இன்றி ஒரு சிறு எறும்பு கூட நுழைய முடியாதுதான்..! ஆனால் இதையெல்லாம் கடந்து அந்த வித்யாதரன் நுழைந்துவிடுவானோ என்று எங்கோ ஓர் மூலையில் என் மனதில் ஐயம் உதிக்கிறது.”
”இந்த வீண் பயத்தை விட்டுவிடுங்கள் பிரபோ!”
”பயமா? எனக்கா..? பயத்திற்கே பயம் காட்டியவன் நான்..! இந்தச் சின்ன விஷயத்திற்கெல்லாம் பயப்பட மாட்டேன்..! ”
”அப்புறம் என்ன பிரபு… நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்..! இந்தக் கோட்டைக்குள் அவனால் நுழைய முடியாது..! நுழைந்தாலும் அவனை உங்கள் அருகே நாங்கள் நெருங்க விட மாட்டோம்.”
”அடேய் முட்டாள்களே..! வித்யாதரன் என்பவன் எப்படி இருப்பான்..? அவன் குட்டையா நெட்டையா..? சிவப்பா கருப்பா என்று அவனைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் அவனை என்னிடம் நெருங்கவிடமாட்டேன் என்று சொல்கிறீர்களே..! அவன் எந்த உருவில் எப்படி இங்கு வருவான் என்று உங்களுக்குத் தெரியுமா..? அவன் இப்படித்தான் இருப்பான் என்றால்தானே அவனை அடையாளம் கண்டு தடுத்து என்னிடம் நெருங்காமல் இருக்கச் செய்ய முடியும்..?”
”ஆம், நீங்கள் சொல்வது சரிதான்..! அவன் யார் என்று அடையாளம் தெரிந்தால்தான் அவனை தடுக்க முடியும்.!”
“அதனால்தான் கேட்கிறேன்… அவன் எப்படி இருப்பான்..? உங்களில் யாருக்காவது தெரியுமா…?”
”எனக்குத் தெரியும்…!” என்று அவர்கள் முன்னே வந்து பதில் சொன்னாள் வில்லவபுர இளவரசி.
அப்புறம் என்ன நடந்தது?