தலம்தோறும் தலைவன் | 13 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 13 | ஜி.ஏ.பிரபா

திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பன்

லம் தோறும் சென்று இறைவனைத் தரிசிப்பது எதனால்..?

எல்லா இடங்களிலும் அருள் செய்வது ஒரே இறைவன் எனும்போது நாம் இருக்கும் இடத்திலேயே அவனை நினைத்தால் போதாதா எனும் கேள்வி இயற்கையாக நமக்குள் எழும்.

ஒரே ஜோதி வடிவின் பல்வேறு சுடர்கள்தான் நாம் காணும் அனைத்து தெய்வச் சுடர்களும். “ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து” என்கிறது திருவாசகம்.

இறைவன் கோவிலில்தான் இருக்கிறானா என்றால் இல்லை என்பதுதான் பதில். பின் இறைவன் உறையும் இடம் எது..?

“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று மாணிக்கவாசகர் இறைவன் நம் நெஞ்சில் உறைகிறான் என்கிறார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும், கல், புல் என எத்தனை உருவெடுத்தாலும், அதற்குள் அந்தர்யாமியாக இறைவன் இருக்கிறான். நெஞ்சில் உறையும் இறைவனைக் காண நாம் ஏன் தலங்கள் தோறும் பயணப்பட வேண்டும்?

அப்பர், சுந்தரர், சம்பந்தர் நடந்தே, பல தலங்களைத் தரிசித்து, ஈசனின் புகழை, பெருமையை, அழகுத் தமிழில் பாடி வைத்தார்கள். காரைக்கால் அம்மையார் ஈசன் வசிக்கும் கயிலை மலையைக் காலால் மிதிக்கக் கூடாது என்று தலையை வைத்து ஏறினார் என்று சொல்வார்கள்.

பரம்பொருள் எங்கும் இருக்கும் நிறை பொருள் என்றாலும், அதன் சான்னித்தியம் பல இடங்களில் அதிக வீர்யத்துடன் இருக்கிறது. சாதகன் அதை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலங்களிலும் இறைவன் நிகழ்த்திய அருளாடல்களை அறிந்து, உணர்ந்து கொள்ளும் பக்தன் ஒரு கட்டத்தில் தனக்குள் இறைவன் உறைகிறான் எனும் உண்மையை உணர்ந்து, தூய்மையானவனாக, ஆனந்த சொரூபியாக மாறுகிறான். உண்மையான ஆனந்தம் எது, செல்வம் எது, நிலையானது எது? நிலையற்றது எது என்பதை உணரும் பக்தனுக்கு எந்த விதத் துன்பங்களும் இல்லை.

தன்னைத் தானே உணர்ந்து கொள்ளவே அடியவர்கள் ஒவ்வொரு தலத்திலும் அற்புதங்கள் நிகழ்த்திய இறைவனைத் தேடி திருத்தல யாத்திரைகள் செய்கிறார்கள்.

நம் பாரத பூமியில் பல ஆலயங்கள் ஈசனின் பெருமைகளைச் சொன்னாலும், சில ஆலயங்கள் மிகப் பிரசித்தி பெற்றது. அதில் ஒன்று திருவையாறு. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தலம் திருவையாறு. காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து ஆறுகள் சுற்றி ஓடுவதால் திருவையாறு என்று இத்தலத்துக்குப் பெயர் என்கிறார்கள்.

ஈசன் சுயம்புவாக இருக்கிறார். இவருக்கு, ஐயாறப்பன், செம்பொற்சோதியார், செப்பெசர்,கயிலைநாதர், பிரணதார்த்திஹரர், பஞ்சநதீஸ்வரர், மகாதேவ பண்டராகரர் எனும் பெயர்களும் வழங்கப் படுகின்றன. ஈசன் ப்ருத்வி (மண்) லிங்கம் என்பதால் லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப் படுகிறது.

இங்கு ஈசன் பல திருவிளையாடல்கள் புரிந்துள்ளார். சிவாச்சாரியார் ஒருவர், காசி யாத்திரை சென்று உரிய காலத்தில் திரும்பி வர முடியவில்லை. ஈசனின் பூஜை தடைபடுமே என்று வருந்துகிறார். அப்போது ஈசனே அவரின் வடிவம் தாங்கி இக்கோவிலில் தன்னைத் தானே பூஜித்துக் கொண்டார். இதை மாணிக்க வாசகர் “ஐயாறு அதனிற் சைவனாகியும்” என்கிறார்.

நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து, இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அந்த தீர்த்தங்களே ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்று திருவையாறு எனப் பெயர் பெற்றது. நந்திதேவரின் பக்தியில் மகிழ்ந்து ஈசன் அவருக்கு சுயம்பிரகாசை என்னும் மங்கையைத் திருமணம் செய்து வைத்தார். இதனோடு தொடர்புடைய தலங்கள் சப்தஸ்தானம் என்ற பெயருடன் இதனைச் சுற்றி விளங்குகின்றன.

கிளை தரிசனம் காண மாட்டேனோ என்று கதறிய அப்பர் பெருமானுக்கு கயிலைக் காட்சி அருளி அவருக்கு இறைவன் இங்குதான் முக்தி அளித்தார். மேலும் இறைவனைத் தரிசனம் செய்ய சேரமானும், சுந்தரரும் வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட சுந்தரர் இறைவன் மேல் பதிகம் ஒன்று பாடுகிறார்.

பரவும் பரிசொன்றறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்

இரவும் பகலும் நினைத்தாலும் எய்த நினைய மாட்டேன்யான்

கரவில் அருவி கழுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ் கருப்பாலை

அரவந் திரைக்காவிரிக் கோட்டத் தையாறுடைய அடிகேளோ”

எனப் பாட காவிரி வெள்ளம் வடிந்து வழி கிடைக்கிறது.

இங்கு தென்கயிலாயம், வட கயிலாயம் என ஒரே கோவிலுக்குள் மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. ஏறத்தாழ பதினைந்து ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட இதைச் சுற்றி பெரிய மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. திருக்கோயில் பரப்பளவில் தஞ்சை பெரிய கோயிலை விட மூன்று மடங்கு பெரியது.

இக்கோயில் பல்லவர்கள், சோழர்களால் கட்டப்பட்டது. வட கயிலாயம் என்ற கோயில் முதலாம் ராஜராஜ சோழனின் மனைவி உலகமாதேவியால் கட்டப்பட்டதால் லோகமாதேவீச்சரம் என்று அழைக்கப் படுகிறது. தென் கயிலாயத் திருக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்டது.

ராஜராஜ சோழன் காலத்தில் இத்தலம் பொய்கை நாட்டுத் திருவையாறு என்று அழைக்கப் பட்டது. இத்திருக்கோயில் ஈசனை அனைத்து நாயன்மார்களும் புகழ்ந்து பாடியுள்ளனர். கோவில் திருச்சுற்று மதில்களில் புராணங்களைச் சித்தரிக்கும் இயற்கை வண்ண ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. கிழக்கிலும், தெற்கிலும் இரண்டு கோபுர வாயில்கள் உள்ளன. இதன் கட்டிடக்கலை அற்புதம் யாராலும் அறிய முடியாத ரகசியமாக இன்று வரை உள்ளது.

இதன் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நின்று இறைவன் திருப்பெயரை ஐயாறா என்று சொல்லி அழைத்தால் அது ஏழுமுறை எதிரொலிப்பது இத்திருத்தலத்தின் சிறப்பு. இங்குள்ள தென்கயிலாயக் கோவிலில்தான் இறைவன் அப்பருக்கு கயிலாயக் காட்சி அளித்தார். இங்குள்ள ஆட்கொண்டார் சன்னதியில் குங்கிலியம் வாங்கி அங்குள்ள தீக்குண்டத்தில் போட்டு பிரார்த்தனை செய்தால், தேள், பாம்பு, பூரான் போன்ற விஷப் பூச்சிகளின் பாதிப்பு நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை.

இங்கு அம்பிகை அறம்வளர்த்த நாயகி என்ற பெயருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். இறைவனிடம் இரண்டு நாழி அரிசி வாங்கிக் கொண்டு வந்து இங்கு முப்பத்தி இரண்டு அறங்களை அம்பிகை வளர்த்ததாக ஐதீகம். நெஞ்சை உருக வைத்து, நிரந்தர மகிழ்ச்சியில் நம்மை ஆழ்த்தும் அழகு திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள் தர்மசம்வர்த்தனி. கைகளில் அபய ஹஸ்தம் இல்லாமல் இடுப்பில் கைகளை ஊன்றியும், மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு ரூபத்தில் காட்சி அளிக்கிறாள் அம்பிகை. திரிபுர சுந்தரி, தருமாம்பிகை, திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அன்னை அழைக்கப்படுகிறாள்.

சுசரித்தான் என்ற சிறுவனின் பெற்றோர் அவனின் சிறு வயதிலேயே இறந்து விடுகின்றனர். அவன் வருத்தத்துடன் தல யாத்திரை செய்யும்போது, திருப்பழனத்தில் எமன் அவன் கனவில் தோன்றி, ‘இன்றிலிருந்து ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்’ என்று கூற பயந்து போன சிறுவன் திருவையாறு சென்று ஈசனைத் தரிசிப்பதே பரிகாரம் என்று அங்கு செல்கிறான்.

அங்கு வசிஷ்டர் கூற்றின்படி சிவ பஞ்சாட்சரத்தை ஜெபித்தபடி, தெற்குக் கோபுர வாயிலில் இருக்கிறான். சொன்னபடி எமன் வந்துவிட, ஈசன் தன் வாயிற்காப்போனான, ஆட்கொண்டாரைக் கொண்டு எமனைத் தண்டித்தார். மேலும் எம பயம் இல்லாமல் மக்களைக் காக்கும்படி ஆட்கொண்டாரைப் பணித்தார் சிவபெருமான்.

எமனைக் காலின் கீழ் வைத்து வதைக்கும் ஆட்கொண்டார் முன் குங்கிலியம் இடும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இச்சன்னதி முன் எப்போதும் புகைந்து கொண்டிருக்கிறது குங்கிலியம்.

தள்ளாத வயதில் தன்னைக் காணக் கயிலை வரும் அப்பரை, தடுத்து நிறுத்தி இப்பூத உடலுடன் கயிலை வருவது சாத்தியமில்லை என்கிறார். அதற்கு அப்பர்,

ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்

மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்”

– என மறுக்கிறார்.

ஒரு முனிவரின் வடிவில் வந்திருந்த ஈசன் அப்பர் பெருமானை அங்கிருந்த பொய்கை ஒன்றில் மூழ்கித் திருவையாறில் கயிலைக் காட்சி காண்பாயாக என்று வரம் அளிக்கிறார்.

அதன்படி திருவையாறு புஷ்கரணியில் மூழ்கி எழுந்த பெருமானுக்கு ரிஷப வாகனத்தில் ஈசன், பார்வதி தேவியுடன் தோன்றி காட்சி அருளினார். ஆடி அமாவாசை அன்று, நடைபெறும் கயிலைத் திருவிழா மிகவும் சிறப்புடையது.

மாதர்ப் பிறைக் கண்ணி யானை மலையான்

மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந்தேத்திப்

புகுவாரவர் பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல்

ஐயாறடைகின்ற போது காதன் மடப்பிடியோடுங்

களிறு வருவன கண்டேன் கண்டேனவர் திருப் பாதம்

கண்டறியாதன கண்டேன்”

என்று பூரிக்கிறார் திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமான்.

கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாறில் காணக் கிடைக்காத இறைவனின் காட்சியைக் கண்டேன் என்று உளம் பூரிக்கிறார். அந்த ஈசனே நம்மையும் காக்க ஓடோடி வருவான்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

1 Comment

  • அற்புதமான தலம்!வரலாறு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...