துறவின் திலகம் ஸ்ரீ அன்னை சாரதாதேவி
மேற்கு வங்காளத்தில் ராமச்சந்திர முகர்ஜி. சியாமா சுந்தரிக்கு மகளாக ஜெயராம் பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22-ஆம் தேதி பிறந்தார் அன்னை சாரதா தேவி.
சாரதாதேவி சிறுமியாக இருந்தபோது தம்பி, தங்கைகளைப் பராமரிப்பது, சமைப் பது, பூணூல் செய்வது, வீட்டில் உள்ள மாட்டுக்குப் புல் வெட்டுவது போன்ற காரியங்களைச் செய்வார்.
பொம்மைகள் செய்து விளையாடுவார். காளி, லட்சுமி தேவியரை மலர்களால் அலங்கரித்து தியானிப்பார். ஒருமுறை ஜெயராம் பாடியில் கடும் பஞ்சம் நிலவிய போது ராமச்சந்திரர் ஏழைகளுக்கு உணவளித்தார். சாரதையும் தன்னாலான உதவிகளை அப்போது செய்தார்.
திருமணத்திற்குப் பிறகு நஹபத்தில் சாரதாதேவி தமது தவ வாழ்க்கையைத் தொடங்கினார். இராம கிருஷ்ணருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் பக்தர்களுக்கும் அயராது பணிவிடை செய்தார். தம்பதி இருவரும் ஆன்மிக நிலையில் திளைத்தனர்.
இராமகிருஷ்ணரிடம் கற்ற ஆன்மிகப் பாடங்களை சாரதாதேவி கடைப்பிடித்தார். இராமகிருஷ்ணர் அன்னை சாரதா தேவிக்கு தியான முறைகளைக் கற்றுக் கொடுத்தார்.
‘நிலவில் களங்கம் இருக்கலாம். ஆனால் என் மனத்தில் சிறிதளவுகூட களங்கம் இருக்கக்கூடாது என்று இறைவனிடம் அவர் பிரார்த்திப்பார். ஒருநாள் பவதாரிணி காளி பூஜை அன்று இராம கிருஷ்ணர் சாரதாதேவி ஷோடசி தேவியாகப் பூஜித்தார்.
தமது ஆன்மிக சாதனைகளின் பலன்களை எல்லாம் அவரிடம் சமர்ப்பித்தார். தேவியாக வழிபடப்பட்டாலும் அன்னை சாரதாதேவி குடும்ப காரியங்கள் அனைத்தையும் செய்து வந்தார்.
தெய்விக சக்தியோடு சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் அன்புத் தாயாய் விளங்கி னார். இராமகிருஷ்ணர் தமக்குப் பின்னர் அன்னை சாரதாதேவி ஆன்மிகத்தில் அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும் என்று எண்ணினார். அதற்காகப் பல்வேறு மந்திரங்களையும், தியான முறைகளையும் கற்பித்தார்.
கணவர் ராமகிருஷ்ணர் இறந்த சோகத்தை மறக்க அன்னை சாரதாதேவி காசி, பிருந்தாவனம் போன்ற தலங்களுக்குச் சென்று தவமியற்றினார். இடைவிடாது பிரார்த்தனை செய்தார்.
இராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு அவருடைய உறவினர்களின் புறக் கணிப்பு, வறுமை போன்ற சூழ்நிலையிலும் அன்னை சிறிதும் கலங்கவில்லை. ‘இறைவனை மட்டும் எப்போதும் சார்ந்திரு’ என்று குருதேவரின் உபதேசத்தை அவர் கட்டளையாய் ஏற்றார்.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரும் அன்னையும் சில சீடர்களும் தொடங்கிய பேலூர் மடத்தில் தங்கினார் அன்னை. மேலை நாட்டிலிருந்து வந்த விவேகானந்தரின் சீடர்களுக்கு அன்னை மந்திர தீட்சை தந்தார்.
இடைவிடாது ஜபம், தியானம் மற்றும் சேவை செய்து வந்தார். அது இந்திய சுதந்திரப் போராட்ட காலம். பிரிட்டிஷ் போலீசார் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளை அன்னை எதிர்த்தார்.
இயல்பிலேயே எளியோரிடம் இரங்குபவர் அவர். வறுமை காரணமாய் திருடி சிறைக்குச் சென்று திரும்பியவனுக்கு உணவளித்து ஆசி கூறுவார். அவருடைய அன்பு சாதி, மதம் கடந்தது. எல்லாரையும் தமது பிள்ளைகளாகவே கருதி, யாரையும் பாரபட்சமின்றி நடத்துவார் அவர்.
அன்னை சாரதாதேவி 1911-ல் தமிழகம் வந்து சென்னையிலுள்ள கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்தார். இராமேஸ்வரம் சென்று அங்குள்ள லிங்கத்துக்கு கங்கை நீராலும், 108 வில்வ தளங்களாலும் பூஜை செய்தார்.
மடத்துப்பணிகளை குருதேவருக்கான கைங்கர்யமாய் கருதவேண்டும் என்று அன்னை அனைவருக்கும் போதித்தார். அவர் சமுதாய உணர்வோடு தமது கிராமத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியும், அணை கட்டவும் ஏற்பாடு செய்தார்.
சாரதாதேவி பல காலம் பரவச நிலையில் இருந்து, வந்தவர்களுக்கெல்லாம் தொடர்ந்து தீட்சை அளித்தார். தினமும் அவரே பக்தர்களுக்காக சமைத்துப் பரிமாறுவார். இடைவிடாத உழைப்பில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
1920, ஜூலை 20-ஆம் தேதி அன்னை தமது பூத உடலை உகுத்தார். ஆனாலும் அவருடைய சாந்நித்யம் என்றும் இங்கே நிலைத்திருக்கிறது.