சுவாமி ராம்தாஸ் வாழ்வும் பணியும்
‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ என்ற இறைவனின் பெயரை மட்டும் நம்பி, தனது வீட்டிலிருந்து கிளம்பி, இந்தியா முழுவதும் இறைவன் தனது உள்ளுணர் வில் தெரிவித்தபடி பயணித்து, ஆசிரமம் நிறுவிய கதை. எந்த ஒரு திகில் நாவலுக்கும் சற்றும் குறையில்லாத சுவாரசியமான சுயசரிதை கடவுளைத் தேடி. இதை எழுதியவர் சுவாமி ராம்தாஸ் அல்லது பாப்பா ராம்தாஸ்.
1884-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பவுர்ணமி தினம் அன்றைய தினம் ராமதூதனான அனுமனின் ஜயந்தி விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வந்தது. அந்த தருணத்தில், பகவான் நாராயணனின் பூரண அருளுடன் பாலகிருஷ்ணா ராவ் – லலிதா பாய் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. விட்டல் ராவ் எனப் பெயரிடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் ராமனுக் குத் தாசனாகவே ஆகி எல்லாராலும் வினயமுடன் பாபா ராமதாஸ் என அழைக்கப்பட்டான்.
விட்டலுக்குப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் செல்லவில்லை. ஆனால் விஷயங் களை நன்றாகப் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் இருந்தது. நகைச்சுவை கலந்த தன் நாவன்மையால் மற்றவர்களை மயக்கித் தன்பால் ஈர்க்கும் சக்தியும் அவரிடம் இருந்தது. சிறு வயதிலிருந்தே பக்தி மார்க்கத்தில் மனதைப் பறி கொடுத்து, எப்போதும் ராம் ராம் என்று உச்சரித்தபடியே வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
காலப்போக்கில் மும்பையில் நெசவுத் தொழில் படிப்பில் பட்டம் பெற்று, கர்நாட கம் குல்பரக்காவில் நூற்பாலை ஒன்றில் ஸ்பின்னிங் மாஸ்டராகப் பணியில் அமர்ந்தார். கையிலுள்ள காசையெல்லாம் பிறருக்கே அளித்து வள்ளலாகவே திகழ்ந்தார். 1908-ஆம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகியும் இல்லறத்தில் மனம் லயிக்காமல் தாமரை இலைத் தண்ணீர் போலவே இருந்தார். தன் தகப்பனாரிடமே ‘ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திர உபதேசம் பெற்றுக் கொண்டார். அதன் பின் ஊர் ஊராகத் திரியும் தேசாந்திரியாகத் திரிந்தார்.
சுவாமி ராம்தாஸ் எப்போதும் ‘ராம்தாஸ் சென்றான். நீர் குடித்தான்’ என்று தன்னையே படர்க்கை நிலையில் பேசினார். ராம்தாஸ் எல்லாவற்றையும் இறைவனின் செயலாகவே பார்ப்பவர். அவரைப் பொறுத்தவரையில், எல்லாம் ராம். ராமைத் தவிர மற்ற வேறொன்றுமில்லை. இவருக்கு ராம் என்பது பிரபஞ்ச ஆன்மா. அவரைப் பொறுத்தவரை, யார் வந்து பேசினாலும், ராம் பேசுவதாகவே எண்ணுவார்.
அவர் ஒருமுறை ஒரு ஊரில் தங்கியிருந்தபோது, மக்கள் அவரை உபசரித்து, தினமும் பூஜித்தனர். அவரது உள்ளத்திலிருந்த அந்தர்யாமியான ராமரின் அறிவுறுத்தல்படி, அவர் அந்த ஊரிலிருந்து கிளம்பினார். அப்போது, மூன்றாவது வகுப்பில் ரயிலில் ஏறினார். அங்கு, பூட்ஸ் கால்களால், அவர் மிதிக்கப்பட்டார். அவர் ராமரிடம் ‘ நேற்று மலர்களால் எனக்கு பூஜை. இப்போது, பூட்ஸ் கால்களால் பூஜை. இறைவா. உனது கருணைக்கு நன்றி’ என்றார். சுகமோ, துக்கமோ இரண் டையும் இறைவனின் கருணையாகவே பார்த்தார் சுவாமி ராம்தாஸ்.
அவர் பூரி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு பெரும் திருவிழா. அவர் இறைவனை தரிசிக்க விரும்பினார். எங்கிருந்தோ, கூட்டத்திலிருந்து, ஒருவன் அவரிடம் வந்து, அவரை அழைத்துச் சென்று, தரிசனம் வாங்கிக் கொடுத்து, மறுபடி சென்றுவிட்டான். இதனைப் போலவே, அவர் ஆஜ்மீர் தர்கா சென்றபோது, எங்கிருந்தோ ஒருவன் வந்து, அவரை அழைத்துச் சென்று, வழிபாட்டுக்கு வழி வகுத்தான். அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லா மதங்களும் ஒரே இறை வனையே குறிக்கின்றன என்று மதநல்லிணக்கத்தினை தனது கடவுளைத் தேடி என்கிற சுயசரிதையில் வலியுறுத்துகிறார்.
ஒருமுறை ரயில் வண்டியில் பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களை, அடிப்ப தற்காக வரிசையில் நிறுத்தி வைத்தனர். ராம்தாஸ் மற்றவர்கள் அடிவாங்க வேண்டாமென, முதலில் நின்றார். அவரது தலையைப் பிடித்து, உலுக்கிய காவல் காரனுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான அனுபவம் உண்டாக, கருணை நிறைந்த வனாய், இவர் உட்பட எல்லாரையும் விட்டுவிட்டான்.
இன்னும் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் படிக்க வேண்டியது. மதங்களைக் கடந்த மனிதநேயத்தை ராம்தாஸ் சுயசரிதை யில் காண முடியும்.
திருவண்ணாமலை விசிறி சாமியார் என்றழைக்கப்பட்ட ராம்சுரத்குமார் சுவாமி ராம்தாஸிடம் தீட்சை பெற்றவரே.
பப்பா ராம்தாஸ் (Papa Ramdas) கேரளாவில் காசர்கோடில் உள்ள காஞ்ஞாங்காடை (kanhangad) சேர்ந்தவர். ஆன்மிக நாட்டம் கொண்டு நாடு முழுவதும் சுற்றித் திரிந் தார். அவருடைய அனுபவங்களின் தொகுப்பாக அவர் எழுதிய நூல் தான் ‘in quest of god’. இது தமிழிலும் இலவச தரவிறக்கமாக கிடைக்கிறது. இவர் ஸ்தாபித்த ஆனந்தாஸ்ரமம் கேரளா காசர்கோடு ஜில்லாவில் கஞ்சன்கோடு கிராமத்தில் அமைந்துள்ளது. கிராமத்தின் பெயரிலேயே விளங்கும் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் ஊர் உள்ளது. இது மங்களூரு – க்ஷஷாரனூர் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது.