21 தலைமுறை பாவங்கள் தீர திருவெண்காடு கோயிலுக்குச் செல்லுங்கள்!

 21 தலைமுறை பாவங்கள் தீர திருவெண்காடு கோயிலுக்குச் செல்லுங்கள்!

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் சமயக் குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் அமைந் துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாகக் கருதப் படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது பழங்கால நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தி யாக அருள்பாலிக்கிறார்.

பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந் தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத் தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண் காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண் காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.

சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம். புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.

சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின்போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.

படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

  • திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்தக் கோவில் பற்றி  அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
  • காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியைவிட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
  • புதன் தசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
  • ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக் கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.
  • பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
  • திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட எட்டு வகையான அதிகாரங்கள் கைகூடும்.
  • திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
  • சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.
  • திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
  • திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
  • அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.
  • இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்துப் போரிடச் சென்ற நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும்போது அதைப் பார்க்க முடியும். இந்த நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
  • திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாகப் பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியைப் பெறலாம்.
  • திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடை யாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்குச் சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.‘
  • இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்தக் காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரங் களை எல்லாம் தவறாது தருபவள்.
  • காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.
  • இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்டபத்தில் தல வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
  • நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.
  • திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் பெரிய பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.
  • சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தைக் கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது!

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...