அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்
அமெரிக்காவின் அருகேயுள்ள தீவு நாடான கியூபாவை வெறும் உல்லாச விடுதி போலவே கருதி வந்தனர் அமெரிக்கர்கள். சூதாட்ட விடுதிகளுக்காகவும், விபசார அழகிகளைச் சுவைப்பதற்காகவும் கியூபாவுக்குப் படையெடுத்து வந்தனர். அமெரிக்காவின் அடிமையாக மாறிப்போய் கிடப்பதைப் பார்த்து மனம் வெதும்பாத மானமுள்ள கியூப மக்களே கிடையாது. ஆனால் வெதும்புவதால் தீர்வு கிடைக்காது, வெஞ்சுடராய் மாற வேண்டும் என புயலாய் சீறினார் பிடல் காஸ்ட்ரோ.
இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மிகப்பெரிய ஆதரவோடு, 1959 இல் புரட்சியை வழிநடத்தி வெற்றி பெற்றார் பிடல் காஸ்ட்ரோ. அவர் 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
கியூப மண்ணை முதல் பொதுவுடைமை அரசாக மாற்றிய புரட்சிப் போராளி ஃபிடல் காஸ்ட்ரோ.. கியூபாவை மக்களிடம் அளித்து அழகுபார்த்த மாபெரும் தலைவராக அவர் அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார்.
தன் 90 வயதில் 2016 நவம்பர் 25 ஆம் தேதியன்று காற்றில் கரைந்துவிட்ட ஃபிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கையும் போர்க்குணமும், இன்று உலகமெங்கும் சமூக அரசியல் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்கும் இளைஞர்களின் மனங் களில் வெளிச்சங்களாகப் பரவியிருக்கின்றன.
பிடல் காஸ்ரோ யார்?
கியூபாவில் உள்ள பிரான் என்ற இடத்தில் கடந்த 1926-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி ஏன்சல் காஸ்ட்ரோ, லினா ஆகியோருக்கு மகனாக பிறந்தார், பிடல் அய்ஜாந்திரோ காஸ்ட்ரோ. இவர் பிறந்த பிறகே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனால் தனது தாய் மற்றும் தந்தையின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு, பிடல் காஸ்ட்ரோவுக்கு கிடைத்தது. இவருக்கு சிறுவயதில் இருந்தே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு இருந்தது. அவருடைய தந்தை நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின உழைப்பினால் பண்ணையாராக உயர்ந்தார். அவர்களின் பண்ணையில் ஆயிரக்கணக்கிலான கியூப மக்கள் பணிபுரிந்தனர். கிட்டத்தட்ட 1940 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையை சொந்தமாக வைத் திருந்தார் என்று கூறப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ 1930-ம் ஆண்டு சான்டியாகோ-டி- கியூபா என்ற ஊரில் உள்ள லாசேல் பள்ளியில் தனது படிப்பை தொடங்கினார். அதன் பிறகு டோலோரஸ் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். 1941-ம் ஆண்டு பெலன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதுதான் அவர் கம்யூனிச கொள்கைகளை பற்றி தெரிந்து கொண்டார். அதில் ஆரம்ப காலத்தில் பெரியளவில் நாட்டம் இல்லை. 1945-ம் ஆண்டு 2-வது உலகப்போர் முடிவுக்கு வந்தபோதுதான் பிடல் காஸ்ட்ரோ தனது கல்லூரி படிப்பை முடித்து இருந்தார். ஹவானா சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரியில் பயிலும்போதே பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தன் அபார பேச்சு திறமையால் மக்களை அதிகம் கவர்ந்தார்.கியூபாவின் எல்லா வளங் களும், சொத்துக்களும் கியூபாவுக்கும், கியூப மக்களுக்குமே சொந்தம், வேறு எந்த நாட்டவர்களுக்கும் உரிமை கிடையாது என்று பேசினார். 1952-ம் ஆண்டு கியூபாவின் ஆட்சியை பாடிஸ்டா கைப்பற்றினார். அப்போது பிடல் காஸ்ட்ரோ ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற இதழை தொடங்கினார். பின்னர் அதில் பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளையும், பாடிஸ்டா அமெரிக்காவின் கைப்பாவை என்ப தையும் அம்பலப்படுத்தி மக்களை புரட்சிக்கு திரட்டினார்.
பின்னர் படிப்படியாக முன்னேறி கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிச குடியரசு கட்சி ஆட்சியை பிடித்தது. உடனே அவரை அமெரிக்கா தன்வசம் இழுக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மேலும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூப மக்களுக்கே சொந்தம் என்று மீண்டும் கூறினார் பிடல் காஸ்ட்ரோ. இதன் காரணமாக கியூபா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. அவற்றை சாதுர்யமாக எதிர்கொண்டார், பிடல் காஸ்ட்ரோ. கியூபாவை அடைய முடியாமல் போனதால், அதற்கு காரணமான பிடல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா திட்டம் தீட்டியது. அதுவும் ஒருமுறை, இருமுறை அல்ல. மொத்தம் 638 முறை அவரை கொல்ல அமெரிக்கா வின் சி.ஐ.ஏ. முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. கியூபாவில் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை பிடல் காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். இதன் பலனாக 1995-ம் ஆண்டு கியூபாவின் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆக உயர்ந்தது. மருத்துவத் துறையில் உலகிலேயே சிறந்த நாடாக இன்றுவரை கியூபா விளங்குகிறது. தனது தலைமையில் ஆட்சி அமைந்ததும் முதல் பணியாக எழுத்தறிவு இயக்கம் ஒன்றை பிடல் காஸ்ட்ரோ தொடங்கினார். இதன் நோக்கம், ‘தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந் தவர்கள் கற்றுக்கொடுங்கள்’ என்பது ஆகும். இதன் மூலம் ஒரே ஆண்டில் 30 சதவிகிதமாக இருந்த எழுத, படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை 98.2 சதவிகித மாக உயர்ந்தது. பிடல் காஸ்ட்ரோ, 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்தார். 1976-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை கியூபாவின் அதிபராக இருந்தார். பின்னர் வயது மூப்பு மற்றும் செரிமான கோளாறு ஆகிய காரணங்களால் பதவி விலகினார். மேலும் தனது தம்பியான ராவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பதவியை ஒப்படைத்தார். அதன்பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி இரவில் தனது 90-வது வயதில் பிடல் காஸ்ட்ரோ இயற்கை எய்தினார்.