ஸ்படிக மாலை குறித்த புராண வரலாறு

 ஸ்படிக மாலை குறித்த புராண வரலாறு

கௌரவர்களும், பாண்டவர்களும், பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பீஷ்மரின் அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்தனர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார்.

தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில், பகவான் கிருஷ்ணனையும் அவர் கண்டார். ஸ்ரீமந் நாராயணனே பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக பூமியில் அவதரித்திருந்த உண்மையை பீஷ்மர் உணர்ந்திருந்தார். ஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூப தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக் கண் முன் அப்போது தோன்றின.

இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே ‘ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்’ எனும் மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங்களையும் ரூப, நாம, குண மாதுர்யங்களையும், அருட்திறனையும் வர்ணித்து, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மர் போற்றிப் புகழ்ந்து பாடினார்.

சுற்றி நின்றிருந்த அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தனர். ஆனால், துரியோதனன் முதலான கௌரவர்கள், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பீஷ்மர் பாட ஆரம்பித்ததுமே, அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர்.

பாண்டவர்கள் மட்டுமே அவர் கூறிய மந்திர சப்தங்களைக் கேட்டு, மெய்ம்மறந்து நின்றனர். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் நிறைவுற்றதும், தனது விஸ்வரூப தரிசனத்தால் பீஷ்மருக்கு அருள்பாலித்தான் ஸ்ரீகிருஷ்ணன். அனைவரையுமே அந்த மந்திரங்கள் கவர்ந்தன என்றபோதிலும், பாண்டவர்களின் கடைசி சகோதரனான சகாதேவனை அவை தீவிரமான பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.

ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான அவன், எத்தனையோ சாஸ்திர நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். இருந்தாலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வரிகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஆனாலும், பீஷ்மர் கூறிய அனைத்து வாசகங்களும் அவனது நினைவுக்கு வரவில்லை. இதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன், ”இத்தனை அருமையான மந்திர தத்துவங்களை பீஷ்மர் எடுத்துக் கூறியபோது, அவற்றை உனது ஏடுகளில் நீ குறித்துக் கொள்ளவில்லையா?” என்று சகாதேவனிடம் கேட்டான்.

அவ்வாறு செய்யாமல் போனதற்குச் சகாதேவன் வருந்தினான். ஓர் உயர்ந்த பொக்கிஷத்தை- கடவுளைப் போற்றும் பாடல்களை எப்படி நினைவு கூர்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அதற்கான வழியை எடுத்துக் கூறினான் ஸ்ரீகிருஷ்ணன்.

”சகாதேவா! பீஷ்மர் மோட்சம் அடைந்து, அவர் உடலுக்கு மரியாதை செய்து முடித்த பின்பு, அவர் கழுத்தில் அணிந்துள்ள ஸ்படிக மணிமாலையை எடுத்து நீ அணிந்துகொள். அந்த மணிகளின் சக்தியால் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுவதுமாக உன் நினைவுக்கு வரும்!”

சகாதேவன் ஆச்சரியம் அடைந்தான். ”சாதாரண ஸ்படிக மணிகளுக்கு மந்திர ஸப்தங்களை ஈர்த்து, மீண்டும் அவற்றை வெளிப்படுத்தும் சக்தி உண்டா?”என்று கேட்டான். அப்போது, பீஷ்மருக்கு அந்த ஸ்படிக மணிகள் எவ்வாறு கிடைத்தன என்ற வரலாற்றைக் கூறி, அதன் பெருமையை விளக்கினான் ஸ்ரீகிருஷ்ணன்.

பீஷ்மரின் இயற்பெயர் கங்காபுத்திரன். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் பிறந்தவர் அவர். சந்தனு ராஜன் ஒரு மீனவப் பெண்ணை மணக்க விரும்பினார். அந்தப் பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டபடி, தான் திருமணமே செய்துகொள்வது இல்லை என்று சபதமேற்றார் கங்காபுத்திரன்.

வாழ்நாள் முழுவதும் பிரம்மசரிய விரதத்தை முழுமையாக அனுசரித்து வைராக்கியமாக வாழ்ந்ததால், சத்தியவிரதன் என்றும் பீஷ்மர் என்றும் பெயர் பெற்றார்.

இவ்வாறு தன் தந்தைக்காகச் சபதம் ஏற்றபோது, பீஷ்மரின் மனம் சற்றுக் கவலையுற்றது. வாழ்நாள் முழுவதும் சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அபார மனோபலமும், வைராக்கியமும் வேண்டும் என்பதற்காக, தன் தாய் கங்காதேவியைப் பிரார்த்தித்தார்.

அவர் முன் தோன்றிய கங்காதேவி, கங்கை நீரை எடுத்தாள். அப்போது, வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள், அவள் கையிலிருந்த நீர்த்துளிகளில் விழுந்து, வைரம் போல் ஜொலித்தன. தன் கையிலுள்ள கங்கா தீர்த்தத்தை வாங்கிக்கொள்ளும்படி மகனிடம் கூறினாள் கங்காதேவி. பீஷ்மர் தன் இரு கைகளையும் குவித்து, தாயின்
முன்பு நீட்டினார்.

கங்காதேவியின் கரங்களிலிருந்து கங்கை நீர்த் துளிகள் ஸ்படிக மணிகளாக பீஷ்மரின் கைகளில் விழுந்தன. ”மகனே! இவை ஸ்படிக மணிகள். நீருக்குள் நிறைந்துள்ள நெருப்புத் துளிகள் இவை. பிரார்த்தனை செய்வதற்கும், வைராக்கியத்துடன் வாழ்வதற்கும்,
மந்திர சாதகங்கள் புரிவதற்கும் இவை உனக்குப் பெரிதும் உதவும். இந்த மணிகளை மாலையாக எப்போதும் அணிந்திரு. அவை உனக்குச் சத்திய விரதத்திலிருந்து தவறாத மன வலிமையையும் வைராக்கியத்தையும் தரும்” என்று கூறி மறைந்தாள் கங்காதேவி.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறிய இந்த வரலாற்றைக் கேட்டதும்,
பீஷ்மரின் கழுத்தில் இருந்த ஸ்படிக மணி மாலையின் மகிமை, சகாதேவனுக்குப் புரிந்தது. பீஷ்மரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் கூறியது போன்று, பீஷ்மரின் ஸ்படிக மணிமாலையை அணிந்து, பக்தியோடு ஸ்ரீமந் நாராயணனைத் தியானித்து, பீஷ்மர் இயற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள் அனைத்தையும் மீண்டும் உருவாக்கி, ஏடுகளாக்கி உலகுக்கு அளித்தான்.

அதனால்தான் இன்றும் தெய்வீக மனிதர்களும் சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்பவர்களும் ஸ்படிக மணிகளை மாலையாக அணிகிறார்கள்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமம்:

ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம்,
ஸரஸீருஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்

கருத்து:

”சங்கு சக்கரம் தாங்கி, கிரீடமும் குண்டலமும் அணிந்து, பொன்னாடை தரித்த தாமரைக் கண்ணனாய், கௌஸ்துப மாலை பிரகாசிக்க,
நான்கு புஜங்களுடன் விளங்கும் மஹா விஷ்ணுவை, தூய்மையான பக்தியுடன், தலை வணங்கி நமஸ்கரிக்கின்றேன்” என்பது இதன் பொருள்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...