ஜனவரி 30 தியாகிகள் தினம் ஏன்?
இந்தியாவின் சுதந்திரத்துக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பாடு பட்ட மகாத்மா, சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது இதுகாலம் வரைக்கும் மாறாத வருத்தம்.
64 ஆண்டுகளுக்குமுன் இன்றைய நாளில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவின் துக்க நாளாக அமைந்தது.
உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் அறவழியில் போராட்டியவரையே ஒருவன் வன்முறையில் கொன்றது இந்திய வரலாற்றில் தீராப் பழியை ஏற்படுத்தியது.
1948, ஜனவரி 30ஆம் தேதி உலகத்தைத் திடுக்கிடச் செய்த ஒரு நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும். இந்தியா வின் சுதந்திரத்துக்காக 30 ஆண்டு களுக்கு மேலாகப் பாடுபட்ட மகாத்மா, சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக் கொல் லப்பட்டார்.
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்கத்தாவில் நவகாளியில் கலவரப் பகுதிகளில் பாத யாத்திரை செய்துவிட்டு டெல்லி திரும்பிய மகாத்மா காந்தி, டெல்லியிலும் கலவரங்கள் நடப்பதைக் கண்டு மனம் வருந்தி, மீண்டும் அமைதி ஏற்பட ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ தொடங்கி னார். டெல்லியில் பிர்லா மாளிகையில் 1948, ஜனவரி மாதம் 13ஆம் தேதி பகல் 11.55 மணிக்கு இந்த உண்ணாவிரதம் ஆரம்பமாயிற்று. உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டுமானால், அவர் வைத்த கோரிக்கைகள்.
(1) சமீபத்தில் டெல்லியில் நடந்த கலவரத்தின்போது கோவில்களாகவும், அகதி களின் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மசூதிகளை மீண்டும் மசூதிகளாக மாற்ற வேண்டும்.
(2) பாகிஸ்தானுக்கு ஓடிய முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் திரும்ப விரும்பினால் அவர்களை இந்துக்கள் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளை விதித்திருந்தார் காந்திஜி.
இந்த உண்ணாவிரதத்தின்போது, காந்தியின் உடல்நிலை கவலைக்கிடமாகியது. சிறுநீரகம் பழுதடையத் தொடங்கியது. இன்னும் சில நாட்கள் உண்ணாவிரதம் நீடித் தால், காந்தி உணர்விழந்து ‘கோமா’ நிலைக்குப் போய்விடுவார், அதன் பிறகு பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் கூறினர்.
“காந்தி ஒருவேளை உயிர் பிழைத்தாலும் அவர் செயல்பட முடியாதபடி உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம்” என்றும் கவலை தெரிவித்தனர். பிரதமர் நேருவும், பட்டேலும் மற்றும் பல தலைவர்களும் கேட்டுக்கொண்டும், உண்ணா விரதத்தை நிறுத்த காந்திஜி மறுத்துவிட்டார்.
“என் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றால்தான் உண்ணாவிரதத்தைக் கைவிட முடியும்” என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
7 அம்சக் கோரிக்கைகளுடன் இன்னொரு நிபந்தனையையும் விதித்தார் காந்தி.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட ஒப்பந்தத் தின்படி பாகிஸ் தானுக்கு இந்தியா ரூ. 75 கோடி தரவேண்டும். இதில் உடனடியாக ரூ.20 கோடி தரப் பட்டது. மீதமுள்ள 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்குத் தந்தால் அதை இந்தியா வுக்கு எதிராகப் பயன்படுத்தும் என்று இந்திய அரசாங்கம் நினைத்தது. அதனால் பணத்தை அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தது. பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய ரூ.55 கோடியை உடனே தந்துவிட வேண்டும். தயக்கம் காட்டக் கூடாது என்று காந்தி வலியுறுத்தினார்.
அவருடைய உயிரைக் காப்பாற்ற, வேறு வழியின்றி இந்தக் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. “பாகிஸ்தானுக்கு சேரவேண்டிய ரூ.55 கோடியை உடனே அனுப்பி வைப்போம்” என்று துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலும், நிதி மந்திரி ஆர்.கே. சண்முகம் செட்டியாரும் அறிவித்தனர். அமைதி காப்பதாக அனைத்து மதத் தலைவர்களும் கையெழுத்திட்டு உறுதிமொழி அளித்தனர். அதன் பிறகு ஜனவரி 18ஆம் தேதி பகல் 12.45 மணிக்கு காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
காந்தியடிகள் தமது கடைசி உண்ணாவிரதத்தை தொடங்கியபோதே (ஜனவரி 13) அவரைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் புனாவில் உருவாகத் தொடங்கியது.
“பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி கொடுக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார் மகாத்மா காந்தி” என்ற செய்தி ‘ஹிந்து ராஷ்டிரா’ அலுவலகத்தில் இருந்த டெலிபிரிண்டரில் வந்தபோது, அதை கோட்சேவும் ஆப்தேயும் பார்த்தனர்.
“காந்தியின் போக்கு இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்துக்கள் மானத்துடன் வாழவேண்டும். காந்தி உயிரோடு இருக்கும்வரை அது நடக்காத காரியம். எனவே இந்துக்களின் நலனுக்காக அவரை கொலை செய்வது ஒன்றுதான் வழி” என்று கோட்சே கூறினான். அதை ஆப்தே ஆமோதித்தான். காந்தியைக் கொலை செய்வது எப்படி என்று இருவரும் தீவிர ஆலோசனை நடத்தி னார்கள்.
ஜனவரி 13ஆம் தேதி மாலை கோட்சேயும் ஆப்தேயும் புனாவில் இருந்து பம்பாய்க் குப் புறப்பட்டார்கள். மறுநாள் மாலை பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். அன்றிரவு 7.30 மணிக்கு அவர்கள் இந்து மகாசபைத் தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பிறகு இந்து மகாசபை அலுவலகத்திற்குச் சென்றார்கள். அங்கு இவர்களை சாமியார் பாட்ஜே சந்தித்தான். துப்பாக்கியைத் தவிர மற்ற எல்லா ஆயுதங் களையும் கொடுத்தான். “எப்படியும் ஒரு நாட்டுத் துப்பாக்கியையாவது வாங்கித் தருகிறேன்” என்று உறுதியளித் தான்.
ஆப்தேயும் கோட்சையும் காந்தியைக் கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி போகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. இதன்பின் பம்பாயில் புகழ்பெற்ற
‘சீ கிரீன் ஓட்டல்’ என்ற ஓட்டலில் கோட்சேயும், ஆப்தேயும் தங்கினார்கள். பாட்ஜே, கார்கரே, மதன்லால் ஆகியோரை இந்து மகாசபை அலுவலகத்தில் தங்க வைத் தார்கள். அங்கு தங்கள் நண்பர்களைச் சந்தித்தனர். கோட்சேயும், ஆப்தேயும் டெல்லிக்கு விமானத்தில் செல்வது என்றும் மற்றவர்கள் வெவ்வேறு ரெயில்களில் டெல்லிக்குச் செல்வது என்றும் டெல்லியில் இந்து மகாசபை சவர்க்கார் சதன் அலுவலகத்தில் அனைவரும் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவாயிற்று.
இதற்கிடையே பாட்ஜே ஏற்கெனவே உறுதியளித்தவாறு நாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தான். எனினும் அது கோட்சேக்கு திருப்தி இல்லை. தம்பி கோபால் கோட்சேயிடம் ரூ.200 கொடுத்து நல்ல துப்பாக்கி ஒன்றை வாங்கி வருமாறு கூறினான். பிறகு கோட்சேயும், ஆப்தேயும் பம்பாய் ‘ஏர் இந்தியா’ விமானப் போக்கு வரத்து அலுவலகத்துக்குச் சென்று, டி.என். கார் மார்க்கர், எஸ்.மராத்தே என்ற போலிப் பெயர்களில் இரண்டு டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்தனர்.
‘இந்து மகாசபை’ அலுவலகத்தில் இடம் கிடைக்காததால், சாந்தினிசவுக் என்ற இடத்தில் உள்ள ஷெரீப் ஓட்டலில் அறை எடுத்தனர்.
அண்ணன் கொடுத்த ரூ.200ஐ கொண்டு ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு கோபால் கோட்சே 19ஆம் தேதி டெல்லி போய்ச் சேர்ந்தான்.
அன்று மாலை பிர்லா மாளிக்கைக்குச் சென்ற கோபால் கோட்சே, பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியை முதன்முதலாகப் பார்த்தான்.
நிறைய போலீசார் சாதாரண உடை அணிந்து மப்டியில் கூட்டத் தோடு கலந்திருப் பதையும் கவனித்தான். காந்தியைச் சுட்டுவிட்டு, போலீசாரிடமிருந்து தப்பிச் செல் வது கடினம் என்று அவனுக்குத் தோன்றியது. பின்னர் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் மரினா ஓட்டலில் சந்தித்துப் பேசினார்கள். கொலைத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று முடிவு செய்யும் முழு அதிகாரமும் ஆப்தேக்கு வழங்கப்பட்டது.
நீண்ட ஆலோசனைக்குப்பின் ‘1948, ஜனவரி 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிர்லா மாளிகையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொல்லவேண்டும்” என்று தீர்மானிக்கப்பட்டது.
“பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடலில் சோதனையிடக்கூடாது” என்று காந்தி கண்டிப்பாகக் கூறியிருந்தார். இதன் காரண மாகக் கூட்டத்துக்கு வருகிறவர்களைச் சாதாரண உடையில் போலீசார் கண் காணிக்க வேண்டுமே தவிர, யாரையும் சோதனை போடவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் உத்தரவிட்டிருந்தார்.
இதை அறிந்த ஆப்தே மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் இவர் களுடன் கோட்சே, கோபால் கோட்சே, கார்கரே, மதன்லால் ஆகியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். இந்து மகாசபையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.
இவர்கள் அந்த இடத்திலிருந்து திரும்பிச் செல்லும்போது, மெகர்சிங் என்ற காட்டி லாகா அதிகாரி அங்கு வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். “ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்டார் அந்த அதிகாரி.
“நாங்கள் டெல்லியைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்” என்றான் ஆப்தே. மதன்லால் பஞ்சாபி மொழியில் பேசி, மெகர் சிங்கை நம்பும்படி செய்தான்.
(இந்த மெகர்சிங் பிறகு காந்தி கொலை வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக வந்து கொலையாளிகளை அடையாளம் காட்டினார்.)
மரினா ஓட்டலுக்குத் திரும்பிய இவர்கள் அன்று மாலை காந்தியைக் கொலை செய் யும் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். பின்னர் பிர்லா மாளிகைக்குப் புறப் படத் தயாரானார்கள்.
காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் செல்லும்போது தங்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்று கோட்சேயும், மற்றவர்களும் நினைத்தனர். கோட்சே, மராத்திய பாணியில் உடை அணிந்து கொண்டான். ஆப்தே வேட்டி சட்டை யிலும், மதன்லால் மேற்கத்திய உடையிலும் இருந்தனர். கார்கரே நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு பிராமணர் போலத் தோன்றினான். ஒவ்வொருவருக்கும் புதிய புனை பெயர்கள் சூட்டப்பட்டதுடன், அவரவர்களுக்கு உரிய ஆயுதங்களும் தரப் பட்டன.
கோட்சே, மதன்லால், கார்கரே ஆகியோர் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளில் (டோங்கா) தனித்தனியே புறப்பட்டனர். ஆப்தேயும், மற்றவர்களும் ஒரு காரில் சென்றனர். ஏற்கெனவே திட்டமிட்டபடி, கோபால் கோட்சேயும், சாமியார் பாட்ஜேயும் பிர்லா மாளிகையின் பின்புறமுள்ள குடியிருப்புப் பகுதியின் வழியாக உள்ளே நுழைய வேண்டும். அவர்களை அங்கு கொண்டுபோய் விடுவதற்காக ஆப்தேயும், கார்கரேயும் உடன் சென்றனர்.
வழியில் பிர்லா மாளிகையின் ஊழியர் (கார் கழுவும் சிப்பந்தி) சோதிராம் என்பவர் அவர்களை வழிமறித்து, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார். “காந்தி பிரார்த் தனைக் கூட்டத்தில் பேசும்போது பின்பக்கம் இருந்து அவரை போட்டோ எடுக்கப் போகி றோம்” என்று கார்கரே பதில் அளித்தான்.
“எங்கே கேமராவைக் காட்டுங்கள்” என்று சோதிராம் கேட்க, உடனே ஆப்தே, வெடி பொருள்கள் அடங்கிய பெட்டியை காண்பித்து, “இதற்குள்தான் கேமரா இருக்கிறது” என்றான்.
சோதிராம் தயங்கவே, கார்கரே இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து சோதி ராமின் கையில் அழுத்தினான். உடனே அவர்களுக்கு வழிவிட்டான் சோதிராம்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. “காந்தியைச் சுடும் பொறுப்பை நீ நிறைவேற்று” என்று கோபால் கோட்சேயிடம் கூறிவிட்டு ஆப்தே அங்கிருந்து வெளியே விரைந்தான்.
கோபால் கோட்சே சுவரில் இருந்த ஜன்னலை நோக்கினான். அது மிக உயரத்தில் இருந்தது. தரையில் நின்றுகொண்டு அதன் வழியாக யாராலும் சுடமுடியாது. ஏணி அல்லது நாற்காலி இருந்தால்தான் அதில் ஏறி காந்தியை நோக்கிச் சுடமுடியும். என்ன செய்வது என்று புரியாமல் கோபால் திகைத்தான். உண்ணாவிரதம் இருந்த தால் மிகவும் பலவீனமாக இருந்த காந்திஜியை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து பிரார்த்தனை நடைபெறும் இடத்திற்குத் தூக்கி வந்தார்கள்.
கூட்டம் தொடங்கியது. ‘காந்தி மீது பலமுனை தாக்குதல் நடத்த இதுவே நல்ல தருணம்’ என்று நினைத்தான் கோட்சே. தன் கன்னத்தைச் சொறிந்து ஆப்தேக்கு சமிக்ஞை செய்தான். உடனே ஆப்தே தன் கையை உயர்த்தி குண்டை வெடிக்கச் செய்ய மதன் லாலுக்கு சிக்னல் கொடுத்தான். பிர்லா மாளிகையின் பின்புறச் சுவர் அருகே நின்றுகொண்டிருந்த மதன்லால், தன்வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். குண்டு வெடித்தது. பிர்லா மாளிகையின் பின்புறச்சுவரின் ஒரு பகுதி தகர்ந்தது. இந்தச் சத்தத்தினால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படவே கார்கரே நெரிசலில் சிக்கிப் பின்னுக்குத் தள்ளப்பட்டான். அந்த இடத்திலிருந்து காந்தி மீது அவன் கைக்குண்டை வீசமுடியாத நிலை ஏற்பட்டது.
ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கிச் சுடவேண்டிய கோபால் கோட்சே யும், ஜன்னல் உயரமாக இருந்த காரணத்தால் சுடமுடியவில்லை. காந்திக்கும், அவரைச் சுற்றி இருந்தவர்களுக் கும் என்ன நடந்தது என்பதே தெரியாது.
பிர்லா மாளிகைக்கு அருகே ராணுவத்தினர் எதையாவது வெடித்து ஒத்திகை பார்ப் பது வழக்கம். வெடிச்சத்தத்தைக் கேட்ட காந்தியும், மற்றவர்களும் அதை வழக்க மான ராணுவ ஒத்திகை என்றே நினைத்தனர். பிரார்த்தனைக் கூட்டம் தடங்கல் இன்றி நடந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே பிர்லா மாளிகைப் பூங்காவுக்குத் தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த சுலோசனா தேவி என்ற பெண் வெடிகுண்டை மதன்லால் வெடித்ததை யும், பிறகு அவன் தப்பி ஓட முயற்சிப்பதையும் பார்த்துவிட்டாள்.
“பிடியுங்கள்! பிடியுங்கள்!” என்று கூச்சலிட்டாள். அந்தப் பகுதியில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியும், சில போலீசாரும், மற்றும் சிலரும் மதன்லாலைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டனர். அவன் திமிறிக்கொண்டு தப்பி ஓட முயன்ற போது, சரியான அடி உதை விழுந்தது. அதனால் அவன் சட்டை கிழிந்தது. அவனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பிர்லா மாளிகைக்குள் இழுத்துச் சென்றனர். மதன்லால் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதை தூரத்திலிருந்து கோட்சேயும், ஆப்தே யும் மற்றவர்களும் பார்த்தனர்.
இனி தப்பி ஓடுவதுதான் புத்தசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்து அந்த இடத்தில் இருந்து நழுவத் தொடங்கினர். கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் காரில் தப்பிச்சென்றனர்.
பிறகு கோட்சேயும், ஆப்தேயும் மரினா ஓட்டலுக்குச் சென்றனர். அறையை உடனடி யாக காலி செய்துவிட்டு டெல்லி ரெயில் நிலையத்துக்கு விரைந்த இருவரும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்றபோது அதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்கள். மதன்லாலை போலீசார் இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். இருவரும் போலீசார் கண்களில் படாமல் ரெயிலில் ஏறினார்கள்.
ரெயில் புறப்படும்வரை அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. மறுநாள் கான்பூர் போய்ச் சேர்ந்தார்கள். அடுத்த நாள் அங்கிருந்து ரெயிலில் புறப்பட்டு 23ஆம் தேதி மாலை பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள்.
மறுநாள் (26ஆம் தேதி) இரவு 9 மணிக்கு ஆள் சந்தடி இல்லாத ரெயில்வே குட்ஷெட் யார்டில் அன்றிரவு சந்தித்தனர். 20ஆம் தேதி மேற்கொண்ட காந்தி கொலை முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பது பற்றி அலசி ஆராய்ந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் விவாதித்தனர்.
27ஆம் தேதி காலை 6.30 மணி விமானத்தில் பம்பாயிலிருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். வி.விநாயக்ராவ் என்ற பெயரில் கோட்சேயும் டி.நாராயணராவ் என்ற பெயரில் ஆப்தே யும் பயணம் செய்தனர். தாந்த்வாதேயைச் சந்தித்தனர். அவன், ஜகதீஷ் பிரசாத் கோயல் என்பவன் மூலமாக 300 ரூபாய்க்கு கறுப்பு நிறத் துப்பாக்கி (பெராட்டா பிஸ்டல்) ஒன்றை வாங்கித் தந்தான்.
அங்கு அவர்களை கார்கரே சந்தித்தான். “துப்பாக்கி கிடைத்து விட்டது” என்று அவனி டம் கோட்சே மகிழ்ச்சியுடன் கூறினான். “நாளை (30ஆம் தேதி) காந்தியைச் சுடப் போகிறோம். இன்றிரவு நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்” என்று கோட்சே கூறினான்.
மறுநாள் காலை ரெயில்வே கேன்டினில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மூவரும் பிர்லா மாளிகைக்குச் சென்றனர். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு காந்தி வரும்போது நேருக்கு நேர் நின்று அவரை சுடப்போவதாக கோட்சே தெரிவித்தான்.
காந்தியை கோட்சே சுடும்போது அவனுக்கு இடைஞ்சலாக எதுவும் நிகழாமல் தடுக்க அவனுக்கு இருபுறத்திலும் ஆப்தேயும், கார்கரேயும் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார்கள். துப்பாக்கியை இயக்குவது எப்படி என்று அங்கு பயிற்சி பெற்றான் கோட்சே.
மொத்தம் இருந்த 20 குண்டுகளில் 13 குண்டுகளைச் சுட்டுப் பழகுவதற்கு செலவிட் டான். காட்டில் இருந்த மரம், அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றை ஆப்தே குறிப்பிட்டுக் காட்ட, மிகச் சரியாகச் சுட்டான் கோட்சே. மீதி 7 குண்டுகளைத் துப்பாக்கியில் நிரப்பிக் கொண்டான். பின்னர் ரெயில் நிலைய ஓய்வு அறைக்குத் திரும்பினார்கள். காந்தியைச் சுடுவதற்கு பிர்லா மாளிகைக்குள் எப்படி நுழைவது என்று ஆலோசிக்கப் பட்டது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் கடைசியாக ஆப்தே ஒரு யோசனையைச் சொன்னான்.
அப்போது, டெல்லி இளைஞர்களிடையே ராணுவ மாடல் உடை என்பது பிரபலமாக இருந்தது. முழுக்கால் சட்டையில் லூசான சட்டையை ‘இன்’ செய்துகொள்ள வேண் டும். இடுப்புப் பகுதியில் சட்டை தொளதொளப்பாக இருக்கும். அந்தப் பகுதியில் சிறிய கைத்துப்பாக்கியைச் சொருகிக் கொள்ளலாம். யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆப்தே சொன்ன இந்த யோசனையை கோட்சே ஏற்றுக்கொண்டான்.
பிறகு கோட்சேயும், ஆப்தேயும் கடைக்குச் சென்று சாம்பல் நிறத்தில் ராணுவ மாடல் உடையை வாங்கிக்கொண்டு ரெயில் நிலைய ஓய்வு அறைக்குச் சென்றார்கள். அந்த அறையில் தங்குவதற்கான நேரம் முடியவும் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கான ஓய்வு அறையை எடுத்து அங்கு தங்கினார்கள். மாலை 4 மணியாகியது. காந்தியைக் கொலை செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் கோட்சேயும், மற்ற இருவரும் புறப்படத் தயாரானார்கள்.
1948, ஜனவரி 30ஆம் தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாளாயிற்று. அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டி யில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண் டார்கள்.
காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய் யும்போது அவரைச் சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லும்போது வழியி லேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
‘காந்தி எப்போது வருவார்?’ என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாகச் சரியாக ஐந்து மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியைச் சந்தித்துப் பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட் டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.
பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர் களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவை யாகப் பேசிக்கொண்டு சென்றார்.
பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமத மாகி விட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கைகூப்பி வணங்கியபடி நடந்தார்.
காந்தி வழக்கமாகச் செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். ‘நம் எண்ணம் எளிதாக நிறை வேறப்போகிறது’ என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்கும் நோக்கத் துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே “வேண்டாம்! பாபு விரும்ப மாட்டார்” என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கீழே குனிந்தார். கண்மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்றுவிட்டன. ஒரு குண்டு இதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத் தது. “ஹே…ராம்” என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வள வும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார் கள்.
சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான்.
பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத் துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தி யின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணு முணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத் தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
இந்தக் கொடுமை காலம் முழுக்க அகிம்சையை வலியுறுத்திய தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு நடந்ததுதான் சோகம் காந்திஜி மறைந்த ஜனவரி 30ஆம் தேதியை தியாகிகள் தினமாக இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கின்றனர்.
மகாத்மா காந்தியின் தியாகத்தையும், சேவையையும் நினைவு படுத்தும் வகையில், இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். சாதி, சமயம், மொழி வேறுபாடுகள் கடந்து காந்தியவாதி கள், மகாத்மாவின் சிறப்பைப் பற்றி பஜனை பாடி கொண்டாடுவர்.
இந்தத் தியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் பாதுகாப்பு குறித்தும் கருத்தில் கொள்வது அவசியம். அவர்களின் கருத்துகளையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்து தியாகிகளின் கனவுகள் நனவாகிட அனைவரும் உழைத்திடு வோம்.