கல்வியும் சமூகப் பணியும் இரு கண்கள்
அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியர் பணி அரும்பணி. அந்தப் பணியைத் திறம்பட செய்து தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற வர்தான் வசந்தா சித்திரவேலு. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத் துள்ள தோப்புத் துறையைச் சேர்ந்தவர் வசந்தா. இவர் அண்டர்காடு பகுதியல் உள்ள சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரிய ராக 29 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவரின் சேவையைப் பாராட்டி வீரமங்கை வேலுநாச்சியார் விருது, செங்கோல் விருது, அப்துல் கலாம் விருது உள்பட 51 விருதுகள் வழங்கியுள்ளது பல்வேறு சமூக அமைப்புகள். அவரிடம் பேசினோம்.
கல்வி கற்பிக்கும் முறையில் புதிய உத்தியைக் கடைப்பிடிக்கிறீர்களாமே?
“எங்கள் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்களுக்குக் கல்வி எளிதில் புரியும்வண்ணம் யோகா வடிவிலும், நடன அசைவுகள் மூலமும் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன். இதனால் மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. எங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலும் ஒன்றிய அளவிலும் வெற்றி வாகை சூடி யிருக்கிறார்கள். எனது பள்ளி மாணவர்களை ஆங்கிலப் பள்ளிக்கு இணையாக உருவாக்கி வருகிறேன். அதே நேரம் இல்லாதவர்களுக்கு உதவுவதும் எனக்குப் பிடித்த ஒரு விஷயம். என்னைப் பொறுத்தவரையில் கல்வியும் சேவையும் இரண்டு கண்கள். அதனால் பள்ளி நேரம் முடிந்ததும் சேவையில் இறங்கிவிடுவேன்.
இந்த எண்ணம் எப்படி வந்தது?
என் தாயாரின் பல சேவைகளைச் சின்ன வயது முதலே பார்த்து வளர்ந்ததால் எனக்கும் அதேபோலச் செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது. திருமணத்திற்குப் பிறகும் என் கணவருக்கும சேவை செய்யும் எண்ணம் இருத்ததால் அவரின் ஆதரவோடு சேவையை இன்னும் சிறப்பாகச் செய்து வருகிறேன்.
பொருளுதவியை என்னென்ன மாதிரி செய்து வருகிறீர்கள்?
2004 சுனாமியால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் எந்தெந்த முகங்களில் தங்கி இருந்தார்களோ அங்கெல்லாம் நான் ஓடோடிச் சென்று அவர் களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தேன்.
அதன் பிறகு 2018ல் ஏற்பட்ட கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது ஒரு துயரச் செய்தி. அந்த நேரத்தில் நானும் எனது மகள்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மூலமாக சுமார் 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டி எங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்கான உதவிகளை செய்து வந்தேன்.
அதன்பிறகு 2018ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நேரத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு குடைகளை வாங்கி அரசுப் பள்ளி மாணவர் களைத் தேர்வு செய்து கிட்டத்தட்ட 1200 மாணவர்களுக்கு ஒரே நாளில் அந்தக் குடைகளை வழங்கினேன். அதைத் தொடர்ந்து பல பள்ளிகளுக்கு இன்று வரை குடைகள் வழங்கி வருகிறேன்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்த நாள் முதல் இன்று வரை தினம்தோறும் 200 நபர்களுக்கு உணவளித்து வருகிறேன். இந்த உணவு யாருக்கெல்லாம் போய் சேர்கிறது என்றால் நாடோடிகள், மனநலம் குன்றி யோர், விபத்தில் பாதிக்கப்பட்டோர், நரிக்குறவர்கள் போன் றோருக்கு. கொரோனா காலம் முதல் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவில் மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகிறேன்.
வேறு என்னென்ன உதவிகள் செய்கிறீர்கள்?
பொருளுதவியோடு விழிப்புணர்வும் செய்து வருகிறேன். கொரோனா விழிப் புணர்வு பதாகைகளை சுமார் 25 பள்ளிகளுக்கு வழங்கி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். சாலைகளின் நடுவே கொரோனா விழிப்புணர்வு படங்களை வரைந்து பொதுமக்களைச் சமூக இடைவெளியை வலியுறுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். சுமார் 10 லட்சம் மாஸ்க்குகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். நெய்விளக்கு ஊராட்சி யில் தடுப்பூசி போடாத 135 பேர்களை அழைத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு புடைவைகளை அன்பளிப்பாக அளித்து தடுப்பூசி போடவைத்தேன்.
இந்தக் கொரோனா காலகட்டத்தில் தாயை இழந்த, தந்தையை இழந்த குடும்பங்களுக்கு ஒரு மாத காலத்திற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகளோடு ரூபாய் 5000 வீதம் 10 குடும்பங்களுக்கு வழங்கி யுள்ளேன். ரொக்கப் பணமாக ரூபாய் 2000 வீதம் 30 குடும்பங்களுக்கும், ரொக்கப் பணமாக ரூபாய் 1000 வீதம் சுமார் 75 குடும்பங்களுக்கும் வழங்கி யுள்ளேன். சுமார் ஒரு லட்சம் பேருக்கு ஒரு கிட் வழங்கியுள்ளேன். வித்தி யாசமாக சுமார் 25 கிராமங்களில் ஆளில்லா கடைகள் நடத்தினேன்.
தினந்தோறும் வேதாரணியம் பேருந்து நிலையத்தில் நான் உணவு வழங்கி வருகின்ற நரிக்குறவ இனத்தோடு இரண்டு ஆண்டுகளாகத் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறேன்.
வடமாநிலங்களிலிருந்து நாட்டில் பணியாற்றக்கூடியவர்களுக்குத் தேவை யான உணவுகளைத் தேர்ந்தெடுத்து பலமுறை வழங்கியுள்ளேன்.
இந்தக் காலகட்டத்தில் எனது பள்ளி மாணவர்களையும் நான் விட்டுவிட வில்லை. அவர்கள் வீடு தேடிச்சென்று தினந்தோறும் 45 மாணவர்களை அழைத்து கற்றலில் இடைவெளியில்லாமல் பாடம் கற்றுக் கொடுத்தேன். கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தினேன்.
நான் வெளியில் சென்று மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக காவல் ஆசிரியர் என்ற குழுவில் இணைந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அதனால் தடையின்றி மக்களுக்கு உதவ நேர்ந்தது. என்னைப் போலவே எனது கணவரும் என்னுடைய இரண்டு மகள்களும் சேவை செய்வதில் மிகவும் ஆர்வம் மிக்கவர்கள்.
கஜா புயல் நேரத்தில் மரங்கள் எல்லாம் அழிந்துவிட்ட நிலையில் நான் உடனடியாக 2000 மரக்கன்றுகளை உற்பத்தி செய்து 2 ஆயிரம் பேருக்கு வழங்கினேன்.
2019ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நிதி கேட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ரூபாய் 50 ஆயிரம் வழங்கினேன். தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிதி கேட்ட அரை மணி நேரத்திற்குள்ளாகவே ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கிய தமிழ்நாட்டின் முதல் ஆசிரியரானேன்.