
தமிழ்நாட்டை தலைமைச் செயலகமாகக் கொண்டு 26 நாடுகளில் கிளைகளைப் பரப்பிச் செயற்பட்டு வரும் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரே மேடையில் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்கள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்கள்.

தற்காப்புக் கலை பயிலும் மாணவிகளான உதயராஜா துவாரகா ஒரு நிமிஷத்தில் 130 ‘நீ ஸ்ட்ரைக் (Knee strikes) செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தார். அதேவேளை, யோகநாதன் துசிதா என்ற மாணவி ஒரு நிமிடத்தில் இரு கைகளாலும் 290 முறைகள் ‘எல்போ ஸ்டிரைக் (Elbow strikes) செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

இவர்களுடைய பயிற்சி ஆசிரியரும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டிற்கான பொதுச் செயலாளருமான புண்ணியமூர்த்தி ராஜ்குமார் 30 நொடிகளில் 67 தண்டால்கள் செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்துள்ளார். இவர்களின் இந்த முயற்சியை காணொளி (இயங்கலை) ஊடாக தமிழ்நாட்டின் சிவகங்கையில் இருந்து கண்காணித்து உறுதி செய்தார்கள் அந் நிறுவனத்தின் நிறுவனர். முனைவர் நிமலன் நீலமேகம் மற்றும் தலைமைச் செயற்குழுவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கௌதம் போன்றோர்.

இவர்களின் இந்த உலக சாதனைகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மக்களும், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் வெகுவாக வாழ்த்திப் பாராட்டினார்கள்.
