எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய ‘கொம்பு முளைத்தவன்’- மதிப்புரை (கிண்டில் பதிப்பு)

எழுத்தாளர் பா.ரா அவர்கள் புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், அரசியல் வரலாறுகள், தனிக் கட்டுரை நூல்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, சிறுவர் நூல்கள் என சுமார் 60 நூல்களுக்கும் மேலாக எழுதி இருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்; தற்போதும் எழுதுகிறார். மிகவும் பிஸியாக இருந்தாலும் திட்டமிட்டுத் தனது செயல்களை ஆற்றுபவர். தினமும் அதிகப் பக்கங்களை எழுதுவதில் எழுத்தாளர் ஜெயமோகனுக்குப் போட்டியாக ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் அது பா.ராகவனாகத்தான் இருக்க முடியும். 

எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் அறிவித்த ஒரு போட்டிக்காக எழுதிய விமர்சனப் பதிவு இது. 

மொத்தம் 16 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாக இந்தக் கொம்பு முளைத்தவன் என்ற நூல் இருக்கிறது. வாசிக்க விறுவிறுப்பாக இருக்கிறது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படித்து முடித்தவுடன் வாசித்த திருப்தியைத் தந்தது.

எழுத்தாளன் என்றாலே கொம்பு முளைத்தவன் என்ற நினைப்பு ஒரு காலத்தில் அதிகமான படைப்பாளிகளுக்கு உண்டு. தற்போதும் சிலருக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கிறது. அதனைப் பகடி செய்யும் விதமாகவே பா.ரா. எழுதியுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு  ‘கொம்பு முளைத்தவன்’ என்ற தலைப்பினை வைத்திருக்கிறார். 

இதற்கிடையில் இந்தப் பதிவு எழுதிய பிறகு ஏற்பட்ட துரதிருஷ்டமான ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். முகநூலில் வாசிப்புக் குழுக்கள் என்பவை பல்வேறுவிதமான வாசகர்கள் தங்களது வாசிப்பனுபவங்களை, வெளிப்படுத்தும் வாசிப்புத் தளங்கள். ஏராளமான அற்புதமான விமர்சனங்கள் குழுக்களில் வெளியாகின்றன. சில சமயங்களில் ஆர்வமிகுதியால் குறைபாடுகள் உள்ள சில விமர்சனங்களும் வெளியாகும். அவ்வளவுதான். பா.ரா.வுக்கும் இவை எல்லாம் ஒன்றும் தெரியாதது அல்ல. ஆனால் அவரது ட்விட்டர் வகைப் பதிவில் பகடி என்ற பெயரில் ‘முகநூலில் வாசிப்புக் குழுக்களில் விமர்சனம் என்ற பெயரில் பலரும் கேங்க் ரேப் செய்கிறார்கள்’ என்று சென்ற ஆண்டு எழுதினார்.

இந்தப் பதிவு பொதுவாகப் பதிவுகள் எழுதும் வாசக எழுத்தாளர் களையும், வாசிப்புக் குழுக்களின் நோக்கங்களையும் இழிவு செய்வதாக உணர்ந்தோம். ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ வாசிப்புக் குழுவின் சார்பில் அட்மின் குழு உறுப்பினர்கள் அவரது பதிவிலேயே இவ்வாறு பகடி செய்வது ஏற்புடையது அல்ல என்று ஆட்சேபணை தெரிவித்தோம். அவர் ‘இது வெறும் பகடிதான்; அதற்குமேல் அர்த்தம் கொள்ள ஒன்றும் இல்லை’ என்று சொல்லி இருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால் அவர் தான் சொன்ன கருத்தினைச் சரிதான் என்று தொடர்ந்து நியாயப்படுத்திப் பேசிக்கொண்டு இருந்ததுதான் பெரிய வேதனையாகப் போய் விட்டது. நிற்க.

எழுத்தாளர் பா.ராகவன் நூலின் தொடக்கத்திலேயே வாசகர்கள், பத்திரிகை யாளர்கள் தன்னிடம் பல்வேறு காலகட்டத்தில் கேட்கப்பட்ட கீழேயுள்ள கேள்விகளுக்கான பதில்களே இந்தத் தொகுப்பின் கட்டுரைகள் என்று சொல்லி விடுகிறார்.

1.எப்படி இப்படி எழுதுகிறீர்கள்?

2.எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்?

3.நேரம் எப்படி கிடைக்கிறது?

4.உங்கள் வீட்டார் எப்படிச் சகித்துக் கொள்கிறார்கள்?

5.எம்மாதிரி சூழலில் எழுத விரும்புவீர்கள் ?

6.எப்படித் திட்டமிடுவீர்கள்?

7.புனைவு என்றால் எப்படி? அபுனைவு என்றால் எப்படி ?

8.ராயல்டி வருகிறதா? எவ்வளவு?

எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நூலில் உள்ள கட்டுரைகளில் பதில் தருகிறார். அது மட்டுமல்ல; அவரது சமகாலத்து எழுத்தாளர்கள் குறித்து, அவர்களது சாதனைகள், பெருமைகள், வழிகாட்டுதல் கள் குறித்தும் பா.ரா. அருமையாக  எழுதியிருக்கிறார்.    

எப்போதுமே திரை ரசிகர்களுக்குத் தங்களுக்குப் பிடித்த திரை நட்சத்திரங் களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் குறித்து அறிய ஆவலாக இருக்கும். அதுபோலவே புத்தகங்களை வாசிக்கும் வாசகர் களுக்குத் தங்களின் பிரியத் துக்குரிய எழுத்தாளர்களின் தனிப்பட்ட குணங்களை அறிய எப்போதும் ஆவலாக இருக்கும். எழுத்தாளர் பா.ரா. அதற்கான விவரங்களை அதிகபட்ச நேர்மையுடன் இக்கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி தருகிறது.  

குறிப்பிடத்தக்க பல படைப்புகளைத் தமிழில் எழுதியும், சீரியல்களில் ஆழமாகத் தடம் பதித்தும் கூட அவர் தன்னைக் குறித்து மட்டுமே எழுதும் கட்டுரைத் தொகுப்பில் மிகக்கவனமாக எங்குமே தன்னைக் குறித்துப் பெருமை பேசிக் கொள்வதையும், விதந்தோதுவதையும் தவிர்த்திருப்பதைக் காணமுடிகிறது. அதேசமயத்தில் அவர் தான் அறிந்த, நேரில் கண்ட மற்ற எழுத்தாளர்களான அசோகமித்திரன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஆதவன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, சுப்ரமணிய ராஜு, ஜெயமோகன், சாரு நிவேதிதா, இரா.முருகன், எஸ்.ரா, ம.வே.சிவகுமார், மாமல்லன், என்.சொக்கன் ஆகியோரின் பெருமைகளைப் பற்றி விரிவாக வஞ்சனையில்லாமல்  இந்தத் தொகுப் பில் பேசுகிறார். இந்தச் செயல்கள் எல்லாம் எழுத்தாளர் பா.ரா. மீதான மரியாதையைக் கூட்டுகிறது. 

ஆழ்ந்து வாசிக்கும் எந்த வாசகனும் முயன்றால் அவன் அனுபவத்தில் இருந்து நல்ல படைப்பைத் தர முடியும் என்று பா.ரா நம்புகிறார். எழுத்து என்பது ஒருவகையான தொழில்நுட்பமே என்கிறார் பா.ரா. எழுத்தாளர் சுஜாதாவுக்கும் இந்தக் கருத்து உண்டு என்பதை எழுத்தாளர் பாவண்ணனின் ஒரு கட்டுரையில் வாசித்த நினைவு.

எழுத்தாளர் பா.ராகவன் எதை எழுதவேண்டும், எதை எழுதக்கூடாது என்பதை எழுத்தாளர் ஹெமிங்வேயிடம் அறிந்ததாகக் கூறுகிறார். ‘கலையின் உச்சம் புனைவில்தான் இருக்கிறது காலம் தன்னை ஒரு 10 வருடங்கள் புனைவு பக்கம் தள்ளிவிட்டபோதும் புனைவுகள் எழுதவே தனக்கு எப்போதும் விருப்பம்; தீராத தாகம்’ என்கிறார் பா.ரா.

சிற்றிதழ், வணிகஇதழ் குறித்த தனது மதிப்பீட்டையும் எழுத்தாளர் பா.ராகவன் கூறுகிறார். குழப்ப மான எழுத்து நடை உள்ளவர்களே பெரும்பாலும் வார இதழ்கள் குறித்து அன்று குறை கூறியவர்கள்; பின்னாட்களில் கல்கியில் உதவி ஆசிரியராக இருக்கும்போது  ஒரு கதை கேட்டால் ஆலாய்ப் பறந்து வந்து தந்தவர்கள்தான் இவர்களில் பெரும்பாலோர் என்கிறார். தான் தொடக்கத்தில் எழுதிய 93 சிறுகதைகளை வணிகப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவற்றில் ஒன்றுகூடப் பிரசுரமாகாமல் போனதையும், தானும் இலக்கியவாதியாக இருப்பதால்தான் இந்தப் பெரும் பத்திரிகைகள் தனது கதைகளை வெளியிடவில்லையோ! என்று எண்ணி, தான் ஆறுதல் கொண்டதை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். 

ஆனால் அந்த எண்ணம் நெடுநாள் நீடிக்கவில்லை. 

எழுத்தாளர் ம.வே.சிவகுமாரை  ஒருநாள் ரயில் பயணத்தில் சந்தித்தபோது “இலக்கியவாதி என்பவர் எந்தப் பத்திரிகையில் எழுதினால் என்ன? இதெல் லாம் ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்று சொல்வது மாதிரி! யாருமே நிராகரிக்க முடியாதபடி எழுத முடியுதான்னு பாரு! இல்லேன்னா எழுதாதே! எழுத்தாளர்கள் அசோகமித்திரன், தி.ஜா., இந்திரா பார்த்தசாரதி, லா.ச.ரா., ஆதவன், சுப்ரமணிய ராஜு எல்லோரும் வாரப் பத்திரிகைகளில் எழுதியவர் களே! இவர்கள் எல்லாம் இலக்கியவாதிகள் இல்லையா!”  என்று அவர் கூறியதை நினைவுகூர்கிறார் எழுத்தாளர் பா.ரா.  எழுத் தாளர்கள், வாசகர்கள் என அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்தாக இது படுகிறது.

‘தனது ஒருநாள் கழிவது எப்படி?’ என்பது குறித்து பா.ராகவன்  ஒரு கட்டுரையில் விளக்குகிறார். அவர் ஏதோ வெகு சாதாரணமாகச் சொல்லிச் சென்றாலும் வாசிக்கும் நமக்கு அதற்குத் தேவைப் படும் அசுர உழைப்பும், தேவையான பயிற்சியும் விளங்குகிறது. “ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை எழுதி முடிக்கும்போதும் மனதில் எழுகின்ற ஒரு கிளுகிளுப்பு, ஓடி எழுந்து டான்ஸ் ஆடச் சொல்கிற சந்தோஷம், மகிழ்ச்சி. எழுதுவது என்பதே இதற்காகத்தான். இன்னொருத்தர் படிப்பது என்பது எல்லாம் கூடுதல் போனஸ்” என்கிறார் பா.ரா.

ஏராளமான எழுத்தாளர்களை கிழக்குப் பதிப்பகத்தின் வாயிலாக இனம் கண்டு கொண்டதையும், கிட்டத்தட்ட அந்த வகையில் ஐம்பது புத்தகங்களைப் பதிப்பாளராக வெளிக்கொண்டு வந்திருப்ப திலும் அதற்குரிய தகுதியுடன் பெருமைப்படுகிறார் எழுத்தாளர் பா.ரா.

‘இணையம் என்பது விரிந்து, பரந்துபட்ட தகவல்களை அறிய தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்; கற்பக விருட்சம்’ என்கிறார் பா.ரா. புதிய எழுத்தாளர்களைக் கண்டடையத் துணை நின்றதும் இணையம்தான் என்கிறார். ‘எழுத்து எனக்குத் தொழிலல்ல; வாழ்க்கை’ என்று கூறும் எழுத்தாளர் பா.ராகவனின் ‘கொம்பு முளைத்தவன்’  என்ற கட்டுரைத் தொகுப்பு தமிழ் வாசகர்கள் அறிய வேண்டிய நிறைய தகவல்களைத் தருகிறது என்பது முற்றிலும் உண்மை. நீங்களும் வாசித்துப் பாருங்கள் நண்பர்களே!

Pa Raghavan முகநூல் பதிவிலிருந்து…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...