மறுபடியும் முதலிலிருந்து….

கவிஞர் கலாப்ரியா முகநூல் பக்கத்திலிருந்து…

வங்கியில் வேலைக்குச் சேர்ந்த புதிது. சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு பெண் வந்தார். படிவங்களைக் கொடுத்தேன். “எழுதத் தெரியாது, எங்க வீட்டுக்காரர் இப்ப வந்துருவார், நீங்க ரூவாயை வாங்கிக்கிடுங்க,” என்றார்.

கவிஞர் கலாப்ரியா

”சரி நீங்க பெயர். விலாசம் எல்லாம் சொல்லுங்க, படிவத்தை நான் பூர்த்தி செய்துகொள்கிறேன், கையெழுத்து மட்டும் போடுங்கள்,” என்றேன்.

”அவுக பேரா, ராமச்சந்திரன், நம்பர் 18, சண்முகபுரம் பிராப்பர் தெரு….” என்று ஆரம்பித்து கடகடவென விலாசமெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்.

”கணக்கு யார் பேர்ல ஆரம்பிக்கணும், அவர் பெயரிலா?” என்றேன்.

“இல்லையில்லை. ஏம் பேர்லதான் ஆரம்பிக்கணும்” என்று அவசரமாக மறுத்தவர், அதே பதற்றத்துடன் பணமிருந்த பையையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டார்.

”அப்ப ஒங்க பேரைச் சொல்லுங்க,” என்றதும், அப்படியொரு வெட்கம் முகத்தில் வந்து கவிய.. ”அதூ அதூ அவுக வந்துரட்டும்,” என்றார். பொதுவாக கணவர் பெயரைச் சொல்லத்தான் வெட்கப்படுவார்கள். இந்த அம்மா என்ன தன் பெயரைச் சொல்ல இவ்வளவு கூச்சப்படுதே என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவள் கணவர் வந்தார். அவள் நாணிக் கோணி நிற்பதைப் பார்த்தவுடனேயே சொன்னார், “பேரைக் கேட்டுருப்பிய, சொல்லீருக்க மாட்டாளே…”.

இதற்குள் அலுவலகத்தில் இருந்த அத்தனை பேரும் சில வாடிக்கையாளர் களும் வேடிக்கையாக அருகே கூடி விட்டனர். இப்போது கணவன் முறை. அவர் வெட்கப்பட்டார், ”சார் சொல்லுதேன் சார், நீங்க மத்த வேலையைப் பாருங்க..” என்றார். கிளை மேலாளர் லேசான சிரிப்புடன் மற்றவர்களைக் கலைந்து போகும்படிக் கேட்டுக் கொண்டார். அந்தப் பெண்ணும் தள்ளிப் போய் நின்று கொண்டார்.

“சார் அவ பேர் “ராஜசுலோசனா சார்,’’ என்றார் மெதுவாக.

”இதில வெக்கப்படறதுக்கு என்ன இருக்கு, வீட்ல வேற பேர் சொல்லிக் கூப்பிடுவாங்களா,” என்றேன்.

”வீட்ல கூப்பிடறதுக்குப் பேர் எதுக்கு,” என்று சொன்னபடியே, ”ஏட்டி, இவளே அதைக் கொண்டா, பேரையெல்லாம் எழுதியாச்சு வா..” என்று அழைத்தார். கறுப்புமில்லாத சிவப்புமில்லாத ‘புது(பொது)நிற’த்து முகத்தில் இன்னும் வெட்கம் சிவப்புக் காட்ட அருகே வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு ரேகை பதித்தார். ”உங்க பேரு அதுன்னா இவரு பேர் எம்.ஜி.யாரா,” என்றேன் கொஞ்சம் ஜாக்கிரதையான சிரிப்புடன்.

 ”ஆமா பொறவு, அவுக பேரு ராமச்சந்திரன்தான, அப்பவே சொன்னேன்லா அதைப் பாத்துத்தானே, பேரு வச்ச எங்க அய்யாவே கட்டி வைக்கச் சம்மதிச்சாரு,” என்றாள். இப்போது சகஜமாகியிருந்தாள். ஒரு கலகலப்பான காலையாக ஆரம்பித்து  உற்சாகமாகவே நகர்ந்து கொண்டிருந்தது அன்றைய அலுவலகம்.

திடீரென்று மேலாளர் கூப்பிட்டு, ”இன்றைக்கு நீங்க ‘கிளியரிங் ஹவுஸ்’ போய்ட்டு வந்திருங்க, வேற ஆளில்லை”யென்றார்.

”அய்யய்யோ கிளியரிங்கா, சார் எனக்குத் தெரியாதே,” என்றேன்.

“படிச்சுக்கிட வேண்டியதுதான்” என்று சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கி விட்டார். வசூல் செய்ய வேண்டிய காசோலைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அன்றைக்குப் பார்த்து வேட்டி கட்டி வந்திருந்தேன். அறைக்குப் போய் பேண்ட்டை மாற்றிக்கொண்டு போனால் நல்லது என்று தோன்றியது. பேண்ட் கூட நண்பர்கள் உபயமாக தந்ததுதான்.

நான் வேலை பார்த்தது தனியார் வங்கி. ஊதியமெல்லாம் குறைவு. அதுவும் நான் இன்னும் பணி நிரந்தரமாகாதவன். தொகுப்பூதியச் சம்பளம் மாதம் 150/- ரூபாய்தான். அது துறைமுக நகரம். அதனால் அங்கே சென்னைக்கு அடுத்த படியாக எல்லா வங்கியின் கிளைகளும் இருக்கும். காசோலைகள் நிறைய வரும். 

காசோலைப் பரிமாற்றம் நடக்கும் ஸ்டேட் பேங்க் மிகப் பெரியது. எப்போதும் ‘ஜேஜே’ என்றிருக்கும். கிளியரிங் ஹவுஸ் ராகிங் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறேன். அங்கே ஒரு நண்பர் பழக்கமாகி இருந்தார். என் அறை சகாவுக்கு நண்பர்.  அறைக்கருகே உள்ள மெடிக்கல்ஸுக்கு அவர் வருவார். ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அவர் எதற்கு அங்கு வருவாரோ தெரியாது, ஆனால் அது எமெர்ஜென்ஸி நேரமாக இருந்தால்கூட அந்த ஊர் மெடிக்கல் ஸ்டோர்களில் தாராளமாய் ஜிஞ்சர்பரீஸ் புழங்கும். 

முதலில் அவரைப் போய்ப் பார்த்து, வியர்க்க விறுவிறுக்க “கிளியரிங் ஹவுஸ் எங்கே இருக்கு” என்றேன். அவருக்கு உற்சாகம் பிய்த்துக் கொண் டது. “வாங்க சார், மாப்ளை சார் மாட்டினிங்களா, ஏ, மக்கா இந்தா இன்னக்கி கிளியரிங்குக்கு புதுக்கோழி வந்திருக்கு, வாங்க பொரிச்சுருவோம்” என்று   ஸ்பீக்கரில் அலறாத குறையாய்ச் சொன்னார்.

இன்னொருவர், ”மாலை ரெடி பண்ணுங்கப்பா, ட்ரீட்டுக்குச் சொல்லிருவமா…” என்றார். இன்னொருவர், “டேலியாகலைன்னா ட்ரீட் வச்சுக்குவோம், இப்ப விவா டீ போதும்” என்றார்.

“ட்ரீட்டா, அடப்பாவிகளா 150 ரூவாயில் அறை வாடகை, சாப்பாடு போக, ஏற்கெனவே கையிருப்பு குறைஞ்சுகிட்டே இருக்கு, இன்னும் பதினஞ்சு நாள் கழியணும், இன்னைலேருந்து ஒரு ரூவாய்க்கு ‘ஜனதா சாப்பாடு’ சாப்பிட்டால் கூட பட்ஜெட் இடிக்குமே. விவா டீ, ஹார்லிக்ஸ் டீங்கானுவளே, ஒரு டீ 30 பைசான்னாலும் பத்து ரூபாய்க்கு எங்கே போக,” தலை சுத்த ஆரம்பித்தது.

அதற்குள் ஒருவர், கட்டளைதாரரைக் கவனிக்க மாட்டீங்களா, சார் உள்ள வாங்க சார், உக்காருங்க சார்,” என்றார்.

“ஐயோ கட்டளைங்கிறாங்க மண்டகப்படிங்கிறாங்க.. ஆத்தா சந்தனமாரி, இன்னக்கி என்ன செவ்வாக்கிழமையா, சாயங்காலம் கோயிலுக்கு வந்திரு தேன்மா” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே உள்ளே போனேன். 

நீள மேஜை இரண்டு பக்கமும் வரிசையாய் நாற்காலிகள். முப்பது நாற்காலி களாவது இருக்கும். எனக்கு எப்பவுமே தேர்வு எழுதும் காலை வரைதான் காய்ச்சல் இருக்கும்.  விடிந்துவிட்டால் ”போடா, உள்ள விதி போல இருக்கு..” என்று ஒரு தைரியம் வந்துவிடும். 

ஆத்தா சந்தனமாரி உபயமா, இல்லை வழக்கமான அசட்டுத் தைரியமா தெரியவில்லை. பட்டென்று தயக்கமும் பயமும் விலகிவிட்டது. உள்ளே போனேன். ஒரு உற்சாக உடல்மொழியுடன், எல்லோருக்குமாக வணக்கம் சொன்னேன். எல்லோரும் ’ஹேய்’ என்று கோரஸ்ஸாகச் சிரித்தார்கள். எனக்கு கல்லூரிக் காலங்கள் நினைவு வந்தது. மீண்டும் உள்ளூர லேசான நடுக்கம். நடுநாயகமாக வீற்றிருந்த அதிகாரி புன்முறுவலாய் அருகிலழைத் தார். ‘பளபள’வென மின்னும் ’ஜெம் கிளிப்பு’களால் கோர்த்த நீள மாலை ஒன்றை அணிவித்தார். ஒரே கை தட்டல்.

“வணக்கம் சொல்லுங்க சார்” என்றார். அனைத்து வங்கிகளிலிருந்தும் வந்திருந்த ஒவ்வொருவரிடமும் போய் கைகுலுக்கி வணக்கம் சொன்னேன். புதிய நண்பர் புதிய விரோதியாகி, “சார், மேஜை மேல் ஏறி நின்று டபுள் சல்யூட் அடிக்கணும், இதெல்லாம் செல்லாது,” என்றார்.

”வாடா மவனே இன்னக்கி ராத்திரி ஜிஞ்சர் பரீஸில் பத்து மேண்ட்ரெக்ஸ் மாத்திரை போட்டுக் கொடுக்கச் சொல்லறேன்” என்று மனசுக்குள் கறுவிக் கொண்டேன். 

அதிகாரி, ”சரி, சரி லேட் ஆகுது ஆரம்பிங்க” என்றார். அவரவர் வங்கிக்குள்ள காசோலைகளைப் பரிமாறிக் கொண்டோம். அந்த நடைமுறைகளை என் சக அலுவலர் ஜி.செல்லப்பா விளக்கியிருந்தார். அது மிக உதவியாய் இருந்தது. தப்பித்தேன் என்று நினைத்தபோது “270 ரூபாய் உதைக்கிறது” என்றார் அதிகாரி.

எல்லோர் கண்களும் என்னையே நையாண்டியாகப் பார்த்தன. இப்போது சந்தனமாரிக்கு சூடன் ஏற்றுவதாய் நினைத்துக் கொண்டேன். வேண்டுமானால் அன்றைக்குப் பனிமய மாதா கோயிலுக்கும் ஒரு நடை போய் விட்டு வரணுமென்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

மனிதன் பலவீனன் ஆகும்போது நம்பிக்கை ஏற்பட எதையெல்லாம் பற்றிக் கொள்ள நேர்கிறது என்று நினைத்துக்கொண்டே நான் கொண்டுவந்து கொடுத் திருந்த காசோலைகள் கணக்கைப் பார்த்தேன். 3630 ரூபாய்க்கு ஒரு காசோலையை சென்ட்ரல் வங்கிக்குக் கொடுத்திருந்தேன்.

”சார் இதை எப்படி எண்ட்ரி போட்ருக்காங்க பாருங்க,” என்று அருகிலிருந்த வரிடம் கொடுத்தேன். அதை 3360 என்று எழுதியிருந்தார். திரும்பவும் ’ஹேய்’ அலறல் அதைத் தொடர்ந்து  ”எங்கே, எங்கே சென்ட்ரல் பேங்க் ஆளைக் கூப்பிடுங்க” என்று பரபரப்பு.

அவர் வெளியே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். முகத்தில் இரண்டு நாள் தாடி சாதாரண வேட்டி சட்டை. விட்டேற்றியான ஆளாக இருந்தார். உள்ளே வந்தவர், ”என்னப்பா தப்பா எண்ட்ரி போட்ருக்கேனா. இந்தாங்க,” என்று பத்து ரூபாய்த் தாளை எடுத்து மேஜையில் போட்டுவிட்டு வெளியேறி இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தார். 

அவரைப் பார்க்கையில் இதுக்குப் போய் வேட்டியை மாற்றி பேண்ட் போட்டு ஸ்பெஷல் மேக்அப்புடன் வந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது. பத்து ரூபாய் தப்பியது என்ற மகிழ்ச்சியில் வங்கிக்குத் திரும்பினேன். 

சாயந்தரம் பாலகிருஷ்ணா தியேட்டருக்கு எதிரே உள்ள கடையில் எண்ணெய் புரோட்டா சாப்பிடுவோமா என்று தோன்றியது. மனித மனம் எவ்வளவு விசித்திரமானது. மத்தியானம்தோறும் இனி ஜனதா சாப்பாடு என்று முடிவெடுத்த மனமிப்போ பரோட்டா, அதுவும் எண்ணெயில் பொரித்த பரோட்டாவுக்கு அலைகிறது.

மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு மாரியம்மன் கோயில், மாதா கோயில் பக்கம் நடையைக் கட்டினேன். அப்போது இரண்டு ரூபாய் கூட பெரிய தொகை. சாயந்தரம் ஆக ஆக வீசும் கடல் காற்றை  அனுபவித்தபடி நடந் தேன். மாதா கோயிலில் போய் எப்படிக் கும்பிடுவது என்று தெரியவில்லை.  கோயிலைச் சுற்றி மணலில் கால் பதிய நடந்தேன். ஒன்றிரண்டு பேர் முழந்தாளிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். வாசலிலிருந்தே சொரூபம் தெரிந்தது. மானசீகமாக ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு சாலை யில் இறங்கினேன். எங்கள் வீட்டின் பின்னால் குடியிருந்த ஜெசிந்தாவுக்கு இந்த ஊர்தான். அவள் எதிர்ப்பட்டால் நல்லா இருக்குமோ என்று தோன் றியது. 

ஆனால் ”சார், இன்னக்கி தப்பிச்சிட்டீங்க போலிருக்கு,” என்று ஒரு குரல் கேட்டது. புதிய விரோதி மறுபடி நண்பராகி சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்.

”அப்பாவுக்கு நினைவு நாள். அதுதான் கல்லறைக்குப் போய்ட்டு வாரோம்,” என்றார். அவருக்குப் பின்னால் மனைவி நின்று கொண்டிருந்தார். வணக்கம் சொன்னார். பேசிக்கொண்டே நடந்தோம். அப்போதெல்லாம் அங்கே மொத்தமே இரண்டோ மூன்றோதான் டவுன் பஸ் ஊருக்குள் ஓடும். ராலி- டூ- ராலி என்று ஒரு பஸ். அதுதான் மேலூரையும் கீழூரையும் இணைக்கும். அதனால் பெரும்பாலும் நடைதான். வீட்டிற்கு அழைத்தார்கள். போகலாம் என்று தோன்றியது. என் அப்பா இறந்தும் ஒரு வருடம் ஆகப் போகிறது. அம்மா திதி கொண்டாட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள். பணம்தான் பிரச்னையாக இருந்தது. அப்பாவின் நினைவு தினமென்று சொன்னதும் ஏதோ ஒரு ஒட்டுதல் ஏற்பட்டது.

பழைய வீடு. சுவர்கள் எல்லாம் உப்புப் பொரிந்து கற்கள் தெரிந்தன. அங்கே பழைய வீடுகளில் எல்லாமும் இப்படித்தான் செங்கலுக்குப் பதிலாய் அதே அளவுள்ள கற்கள் வைத்துக் கட்டி சுண்ணாம்பு பூசியிருப்பார்கள். அதுவும் சிப்பிச் சுண்ணாம்பு. தரையிலும் ஒரு ஈரப்பதம் தெரிந்தது. ஆனால் வரவேற்பறை போலிருந்த அறையில், சுவரில் பெரிய படங்களும், துணிச் சீலைகளும் மாட்டி அந்தச் சிதிலங்களை மறைக்க முயற்சித்திருப்பது புரிந்தது. கேக்கும் டீயும் வந்தது. அன்றுதான் பெயரைக் கேட்டேன். அந்தோனி பேசில் என்றார். ஒரு பழைய போட்டோ தொங்கிக் கொண்டிருந்தது. ”அதைப் பாருங்க சார், வ.உ.சி.யெல்லாம் இருப்பாரு, தாத்தா கூட” என்றார். 

ஆனால் படம் தெளிவில்லாமலிருந்தது. அவர் காண்பித்த வ.உ.சி. தலைப்பாகையெல்லாம் அணியாமல் குடுமியும் கடுக்கணுமாக இருந்தார். கறுப்பான நிறம். பேச்சு, எமர்ஜென்ஸி, சர்க்காரியா கமிஷன், ஊழல் செய்தி கள், எகிறும் தினமலர்  பேப்பர் விற்பனை, கடல், கப்பல், கடத்தல் சரக்கு என்று போனது. வெளிநாட்டு மது வகைகளைப் பற்றி நின்றது.

“நீங்க சாப்பிடுவீங்களா?” என்றார். இல்லையென்றும் சொல்லாமல் ஆமாம் என்றும் சொல்லாமல் தலையை மையமாக ஆட்டினேன். ”இருங்க வாரேன்”, என்று உள்ளே போனார். 

‘இது என்ன வகையான நாள், கலகலப்புடன் ஆரம்பித்தது, பதற்றமும் பயமுமாய்க் கழிந்தது… இப்போ வெளிநாட்டுச் சரக்கா…’ என்று தோன்றியது.

வெறுங்கையுடன் வந்தார். வீட்ல அவ தம்பி வந்து எடுத்துக் கொண்டுபோய் விட்டதாகச் சொன்னார். “உங்களுக்கு நானே கொண்டுவந்து தருகிறேன்” என்றார்.

பேச்சு வாக்கில் பணக் கஷ்டத்தைப் பற்றிச் சொல்லி விட்டேன். ”அடடா இன்னக்கி உங்களை ரொம்பப் படுத்திவிட்டேனே கிளியரிங் ஹவுஸில்” என்று வருத்தப்பட்டார். ஏதோ ஏமாற்றத்தை என் முகத்தில் உணர்ந்தாரோ என்னவோ, புறப்படும்போது அவசர அவசரமாக சட்டைப்பையில் கொஞ்சம் பணம் வைத்தார். எவ்வளவோ தடுத்தும் இரண்டு பேரும் விடவில்லை. அவர்கள் பையன் ஆறு ஏழு வயதிருக்கும் அவன் வேறு பார்த்துக் கொண் டிருந்தான்.

”இது உங்க அப்பா நினைவு நாளுக்கு உபயோகமாயிருக்கும், நான் வேண்டு மானால் பிறகு வாங்கிக் கொள்கிறேன்” என்று வழியனுப்ப எழுந்துவிட்டார். அழுகை எதுவும் வருவதற்குள் நானும் கிளம்பிவிட்டேன்.

அவசர அவசரமாக நடந்தேன். பற்று வைத்துச் சாப்பிடும் ஓட்டல் மூடி விடக்கூடாதேயென்று. மூடவில்லை. ஆனால் வாசலில் அறைக்கு வரும் நண்பர்கள் எல்லாம் நின்று கொண்டிருந்தார்கள். “ஏல சீக்கிரம் சாப்பிட்டுட்டு வாலே.. பாலகிருஷ்ணாவில் ’ஷோலே’ போகணும். டிக்கெட் நீ வந்தாதான் எடுக்க முடியும்…” என்றார்கள்.

தியேட்டருக்கு எங்கள் வங்கியில்தான் கணக்கு. அரை வயித்துக்கு நாலு இட்லியைப் பிய்த்துப் போட்டுவிட்டுக் கிளம்பினேன். சாப்பிட்டுக் கையைக் கழுவும்போதே பையிலிருந்த பணத்தை எடுத்து வேட்டி மடிப்பில் மடியில் கட்டி வைத்துக் கொண்டேன். தியேட்டர் எதிரே  கடையில் பெரிய கல்லில் எண்ணெயில் பொரிந்து கொண்டிருந்தது பரோட்டா. 

மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ”சீக்கிரம் போய் டிக்கெட் எடுலே…” என்று கையில் பணத்தைத் திணித்தார்கள். பிரதான வாசலில் சொல்லி கேட்டை லேசாகத் திறந்து கூட்டத்தைப் பிளந்து  உள்ளே போகும்போது ஒரு பெண் குரல் கேட்டது.

“சார், சார் எனக்கும் ரெண்டு டிக்கெட் சார்” என்று. திரும்பினேன், ராஜசுலோசனாவும் கணவரும். தலையை ஆட்டிவிட்டு உள்ளே போனேன். ஆரம்பித்த இடத்திலேயே முடிவது போலிருந்தது நாள். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்ததும் நண்பர்கள் முகத்தில் பெரிய சாதனைப் புன்னகை. அவள் முகத்தில் வெட்கப் புன்னகை.

நாள், மறுபடியும் முதலிலிருந்து  ஆரம்பிப்பது போல் தோன்றியது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...