பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

5. கூந்தல் எண்ணெய்

தே நாள். சில மணிநேரம் முன்பு.

“ஏய் சாந்தினி! அசமந்தம்! இன்னைக்கு ராத்திரி ட்ரெயின் ஏறணும், சீக்கிரம் சாமானையெல்லாம் எடுத்துவைன்னு நாலு நாழியா கத்தறேன், நீ அசையவே இல்லை! கடைசில சாமானையெல்லாம் நானும் உன் அம்மாவுமே எடுத்து வெச்சுட்டோம். சரி, நீயாவது ரெடி ஆகிக்கக் கூடாதா? இன்னும் குளிக்கக்கூட இல்லை. வந்து உட்கார், எண்ணெய் தடவித் தலைவாரி விடறேன்…”

பாட்டியின் அழைப்புக்குப் பதில் வராமல் போகவே “அந்த செல்போன்ல அப்படி என்னதான் இருக்கோ? வாங்கிக் கொடுக்காதடான்னு சொன்னா என் பையனும் கேட்க மாட்டேங்கறான், அதைப் பரண்மேல விசிறி அடின்னு சொன்னா உன் அம்மாவும் கேட்க மாட்டேங்கறா…” காமுப் பாட்டியின் புலம்பல் தொடர்ந்தது.

“இப்போ என்னத்துக்கு அலறியாறது? ட்ரெயின் டைமுக்குள்ளே எல்லாம் ரெடியாகிடலாம். பாட்டி, பதினொண்ணே முக்காலுக்குத்தான் ட்ரெயினே கிளம்பறது, அதுக்கு இப்பவே ரெடியாகணுமா?” என்று சலித்துக் கொண்டே வந்தாள் சாந்தினி. பதினைந்து வயதில் குழந்தைத்தனம் போகாத குறும்பான முகத்துடன் இருந்தாள்.

“அதென்னடி? பதினொண்ணே முக்காலுக்கு நீ ட்ரெயினேறும்போது உன்னோட ட்ரெஸ் பெட்டியில் தானே பேக் பண்ணிக்குமா? ரெண்டு நாளைக்குச் சாப்பாடு தானே சமைச்சுக்குமா? உங்கம்மா அங்கே கிச்சன்ல தனியா அல்லாடிண்டிருக்கா, உனக்கு ஹெல்ப் பண்ணணும்னு கொஞ்சமாவது எண்ணம் இருக்கா?” பாட்டி கோபப்பட்டாள்.

கையிலிருந்த மொபைல் போனைக் காட்டமாகச் சோபாவில் எறிந்தாள் சாந்தினி. “ஏன், கிச்சன்ல அல்லாடறவ அஸ்வினுக்கும் அம்மாதானே? அவன் ட்ரெஸ் மட்டும் தானே பேக் பண்ணிக்குமா? அவனைக் கூப்பிடணும்னு உங்களுக்குத் தோணித்தா இல்லை அம்மாவுக்குத் தோணித்தா? நீங்க எல்லோரும் மேல் சாவனிஸ்ட்ஸ்!” என்று பொரிந்தாள்.

“இதோ பாருடி, அவனையும் கடை கண்ணிக்கு அனுப்பத்தான் செய்யறோம். பொண்குழந்தேள் ஆத்துக் காரியம் பண்ணினா ஒண்ணும் தப்பு இல்லை. இப்பவே பழகிண்டா தான் நல்லது!”

“யாருக்கு நல்லது? எவனோ பத்து வருஷம் கழிச்சு என்னைக் கட்டிக்கப் போறவனுக்கு! அதுக்காக நான் இப்பவே கிச்சன்ல காயணுமா?”

“ஏண்டி, அம்மா காயல?” என்றவாறே வெளியே வந்தான் அஸ்வின்.

“அம்மா வயசிலே நானும் காய்ஞ்சுக்கறேன். சொல்லப் போனா அம்மா ஏமாளி, காயறா. நான்…”

“போறும் அதிகப்பிரசங்கித்தனம்!” என்று கண்டித்தாள் பாட்டி.

“இல்லை பாட்டி, நான் சொல்ல வந்தது என்னன்னா, நாம போகப்போறது ஸ்பெஷல் கோச்! அதிலே டைனிங் கார் அட்டாச்ட்! என்ன வேணும்னானும் ஆர்டர் பண்ணிக்கலாம். அப்புறம் எதுக்குச் சமைக்கறா அம்மான்னுதான்…”

“போறுமே உங்க டைனிங் கார்! அங்கே கிடைக்கற ஐடம்ஸ் எல்லாத்திலும் பூண்டு போட்டிருக்கும்! பாட்டி-தாத்தாக்கு அது சரிப்படாது, அதான் புளியோதரை, வற்றல் குழம்பு சாதம், மிளகாய்ப் பொடி தடவிய இட்லி எல்லாம் தயார் பண்ணிண்டிருக்கேன்” என்றவாறே வந்தாள் சரஸ்வதி, சாந்தினியின் அம்மா.

“பாட்டி-தாத்தாக்குச் சரி, எங்களுக்கெல்லாம் ஒண்ணும் வேண்டாம், எத்தனையோ நாள் கழிச்சு வெளியில் சாப்பிடச் சான்ஸ் கிடைச்சிருக்கு” என்றான் அஸ்வின்.

“கண்டத்தைத் தின்னுட்டு வயித்தைக் கெடுத்துண்டு நிற்காதேடா! பார்த்துச் சாப்பிடுங்கோ! அப்புறம் கொஞ்சூண்டு தயிர்சாதமும் நார்த்தங்காயும் கட்டச் சொல்லியிருக்கேன், அதையும் சாப்பிட்டுட்டுப் படுத்துக்கோங்கோ” என்றாள் காமுப் பாட்டி.

“அட சட்! என்ன இது எப்போ பார்த்தாலும் சாப்பாட்டுப் புராணம்” என்றவாறே உள்ளே நுழைந்தார் தேவசேனாபதி.

“ஆங் சொல்ல மாட்டியோ! ஒரு நாள் சாப்பாடில்லாம வயிறு காய்ஞ்சா தெரியும்! ஏண்டா தேவா, நாம போறது ஸ்பெஷல் கோச்சாமே! டைனிங் காரெல்லாம் இருக்காமே!” என்று ஆச்சரியத்துடன் முகவாயில் கைவைத்தாள் காமுப் பாட்டி.

“ஆமாம்மா! பெரிய இடத்துக் கல்யாணம். நம்ம சுப்பாமணி அரேஞ்ச்மெண்ட். அப்புறம் கேட்பானேன்” என்றார் தேவசேனாபதி.

“பின்னே? சுப்பாமணி எமகாதகன் இல்லையோ? ஆனா அத்தனை நல்லவன் இல்லை அவன், தெரிஞ்சுக்கோ!” என்றாள் காமுப் பாட்டி.

அதற்குள் “தேவா! இங்கே சித்த வந்துட்டுப் போ!” என்று அவர் அப்பா மாடியிலிருந்து அழைப்பதைக் கேட்டதும் படிகளில் ஏறினார் தேவசேனாபதி.

*

“என்னடா, என்ன நடக்கறது கீழே?” என்றார் கலிவரதன். ரிடையர் ஆனபிறகு மாடியில் உள்ள தன் அறையைவிட்டுக் கீழே அவர் அதிகம் இறங்குவதேயில்லை. அங்கேயே பூஜை, சாப்பாடு எல்லாம் நடத்திக் கொண்டு, காமுப்பாட்டியை அதிகாரம் செய்துகொண்டு, வீட்டில் நடக்கிற எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு, படு சௌக்கியமாகச் சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தார்.

“என்ன நடக்கறது? ட்ரெயினுக்குக் கிளம்பணுமோ இல்லையோ? அதான் கீழே பிரளயம் ஸ்டார்ட்டட்!” என்று சொல்லிச் சிரித்தார் தேவசேனாபதி. கலிவரதனும் சிரித்தார்.

“சரி, சுப்பாமணின்னு ஏதோ காதில் பட்டது?” என்று கேட்டார் கலிவரதன்.

‘கிழத்துக்குப் பாம்பு செவி’ என்று எண்ணிக் கொண்ட தேவசேனாபதி “ஆமாம்ப்பா, கீழே குழந்தைகள் நாம போகிற கோச்ல டைனிங் கார் அட்டாச்டுன்னு பேசிண்டா. அப்போ அம்மா சுப்பாமணி எமகாதகன்னா” என்று தெளிவுபடுத்தினார் தேவசேனாபதி.

கலிவரதன் “அவ எவ்வளவு சரியாச் சொல்லியிருக்கா பார்த்தியா?” என்றவர் தேவாவின் புருவச் சுருக்கத்திற்கு “உங்கம்மா” என்று பதில் சொன்னார்.

“சுப்பாமணி நல்லவர் இல்லைன்னுகூடச் சொன்னா” என்றார் தேவா.

“பாரு! இத்தனைக்கும் அவளுக்கு ஒண்ணும் தெரியாது!” என்று வியந்த கலிவரதன் சற்றுப் பொறுத்து “தேவா! அவன் ஆபத்தானவன். தெரியுமில்லை உன் கல்யாணத்தும்போது என்ன நடந்ததுன்னு? ஏன், மூணு வருஷத்துக்கு முன்னாடி…” என்று ஆரம்பித்தார்.

“அப்பா! அதை இங்கே டிஸ்கஸ் பண்ண வேண்டாம்” என்று இடைவெட்டினார் தேவா.

“சரிடா! ஆனா இந்தச் சுப்பாமணி வாயைச் சாத்தியாகணும்” என்றார் கலிவரதன் குரல் இறங்கி.

“கவலைப்படாதீங்கோ! அந்த வேலையை நான் பார்த்துக்கறேன்” என்றார் தேவா.

அவர் குரலில் உறுதி தெறித்தது.

Illegal possession of firearms

ரவு. மணி சரியாகப் பதினொன்று ஐம்பத்தி மூன்று.

ஹௌரா மெயில் ஆர்ப்பாட்டமாகக் கூவிவிட்டு, தடக் என்று நகர்ந்து தன் இருநாள் பயணத்தைத் தொடக்கிவிட்டது.

“நமஸ்காரம், சுப்பாமணி சார்!”

தன் கூப்பேயில் அமர்ந்து, பெரிய பர்ஸிலிருந்து ஹேர் ஆயில் பாட்டிலையும் சீப்பையும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் வெளியே வைத்துக் கொண்டிருந்த சுப்பாமணி நிமிர்ந்தார்.

வாயிலில் தர்மா நின்று கொண்டிருந்தான்.

“அடடே! டிடக்டிவ்வாள்! வாங்கோ வாங்கோ! உம்ம சகோதரிகளைப் பார்த்துட்டேன். உம்மை இப்பதான் பார்க்கக் கிடைச்சது!” என்று வரவேற்ற சுப்பாமணி, தர்மாவை உட்காரும்படி சைகை செய்தார்.

“என்ன சார், துப்பறியும் சாம்புவைக் கூப்பிடற மாதிரி என்னைக் கூப்பிடறீங்க? இது கேலியா, பாராட்டா?” என்று சிரிப்புடன் கேட்டவாறே அமர்ந்தான் தர்மா.

“சேச்சே! கண்டிப்பா பாராட்டு தான்! நீங்க தப்பா எடுத்துக்கப்படாது! இப்போதான் பக்கத்துக் கேபின்ல ஒரு ஃபேமிலியை ஏத்திட்டு வரேன். அவா கொஞ்சம் கன்ஸர்வேட்டிவ். அங்கே பேசிட்டு வரேனா, அவா பாஷை அப்படியே மெயிண்டெயின் ஆகிடுத்து! அப்புறம் சொல்லுங்கோ, கேபின் வசதியா இருக்கா, ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். ஜஸ்ட் உங்ககிட்ட வந்து ரிப்போர்ட் பண்ணினேன், அவ்வளவுதான். என்ன, இந்த நேரத்தில் சீப்பெல்லாம் எதுக்கு சார்? தூங்கற டைமாச்சு” என்று வேடிக்கையாகக் கேட்டான் தர்மா.

“ஓ சாரி! உங்ககிட்ட நான் சொல்லலையோ? ஒண்ணுமில்லை, இன்னும் பத்து நிமிஷத்தில் டைனிங் கார்ல சின்ன மீட்டிங் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். நீங்க எல்லாரையும்… ஐ மீன்… கோச்சில் வருகிற எல்லோருமே ஒருத்தரை ஒருத்தர் மீட் பண்ணட்டும் என்பதற்காக. சின்ன இன்ட்ரொடக்‌ஷன் மீட்னு வெச்சுக்கோங்களேன்” என்றார் சுப்பாமணி.

“இதில் வரவங்க எல்லோரும் ரிலேட்டிவ்ஸ்னு சொன்னீங்க? அப்புறம் எதுக்கு இன்ட்ரொடக்‌ஷன் மீட்?” என்று கேட்டான் தர்மா, சுப்பாமணியைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு.

“ரிலேட்டிவ்ஸ் தான்… தூரத்துச் சொந்தக்காரங்க. அவ்வளவு கான்டாக்ட் கிடையாது, அதான். அதோட உங்களையும் எல்லோருக்கும் அறிமுகம் பண்ணிடலாம். உங்களுக்கு இங்கே யாரையும் தெரியாதே! எல்லோரையும் நல்லா பார்த்து வெச்சுக்குங்க” என்றார் சுப்பாமணி.

“சார், எதுக்கு அப்படிச் சொல்றீங்க? இங்கே ஏதாவது பிரச்சனை எதிர்பார்க்கறீங்களா? நாம கொல்கத்தா போனதும் கல்யாண மண்டபத்தில்தான் எங்க வேலை ஆரம்பிக்குதுன்னு சொன்னீங்க?” என்றான் தர்மா.

“டிடக்டிவ்வா இருந்தாலும் வக்கீல் மாதிரி நல்லா க்ராஸ்-கொஸ்டின் போடறீங்க! ஒண்ணுமில்ல சார், ரெண்டு நாள் சேர்ந்து பயணம் பண்ணப் போறோம், அதான் பார்த்து வெச்சுக்கோங்கன்னு சொன்னேன். அவ்வளவுதான். உங்க தங்கைகளை அழைச்சுட்டு வந்துடறீங்களா?” என்று கேட்டார் சுப்பாமணி.

தர்மா அவரை உற்றுப் பார்த்தான். ஏதோ பொய் சொல்கிறார். பொய் சொல்பவனுக்கு ஏற்படும் தவிப்பு இவரிடம் காணப்படுகிறது.

சுப்பாமணியிடம் “சரி சார்” என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடம் “கல்யாணம் கொல்கத்தாவில் எங்கே நடக்கிறது?”, “பையன் வீட்டுக்காரங்க தெரிஞ்சவங்கதானா?” என்று லோகாயதமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த நேரம் சுப்பாமணி அறியாமல் அவருடைய கூப்பேயை அவனுடைய கண்கள் அலசின.

அந்த ஷேவிங் செட், காஸ்மெடிக்ஸ் எல்லாம் இருக்கற பர்ஸில் வேறு ஏதோ அடைச்சு வைக்கப்பட்டிருக்கே! அந்தக் கம்ப்பார்ட்மெண்ட் ஜிப்பால மூடப்பட்டிருக்கு, இருந்தாலும் ஷேப்பைப் பார்த்தா… பிஸ்டல் மாதிரித் தெரியலை?

இந்தச் சுப்பாமணியிடம் ஏதோ தப்பு இருக்கிறது.

–பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...