மனதை நடுங்கவைத்த சிறப்பு ஆய்வாளர் படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆட்டு திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் நேற்று இரவு நேரக் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடிச் சென்றதைப் பார்த்துள்ளார். இதனையடுத்து அவர் களைப் பிடிக்க எஸ்.ஐ. பூமிநாதன் முயன்றபோது ஏட்டு சித்திரைவேல் ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் அவர்களைத் துரத்திப் பிடிக்க பூமிநாதன் முயன்றுள்ளார்.
பூமிநாதன் பிடியில் சிக்காமல் திருச்சி மாவட்டத்தை கடந்த கொள்ளையர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே வந்தபோது அந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதைத் தாண்டி செல்ல வழியில்லாமல் அங்கு நின்று உள்ளனர்.
இதனையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து வந்த எஸ்.ஐ. பூமிநாதன் ஆடு திருட்டுக் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்று உள்ளார். அப்போது கொள்ளையர்கள் இருவரும் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனைக் கடுமையாகத் தாக்கியதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் நள்ளிரவு இரண்டு மணிக்கு நடந்தது. காலை 4 மணி அளவில் இதனை அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கீரனூர் போலீசார் பூமிநாதன் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் (வயது 50) சொந்த ஊர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு ஆகும். கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி போலீஸ்காரராகப் பணியில் சேர்ந்த இவர் திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றினார். பின்னர் திருச்சி மாவட்டம் மணிகண்டம், திருவெறும்பூர், துவாக்குடி என திருச்சி மாவட்டத்திலேயே போலீஸ் ஏட்டாக பணியாற்றிய பூமிநாதன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவருடைய மனைவி கவிதா (45). இவர்களுக்கு குகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் எஸ்.பி. சுஜித்குமார் ஆகியோரும் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலைச் சம்பவம் குறித்தும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.
கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன், இலுப்பூர் டி.எஸ்.பி. அருள்மொழி அரசு ஆகியோர் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இரண்டு எஸ்.ஐ.கள் உள்ளடங்கிய 4 தனிப்படைகளையும் போலீசார் அமைத்து சி.சி.டி.வி. கேமரா உதவியோடு கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையான பூமிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டன. நாய் அந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப் படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் மர்மநபர்களை வலைவீசி தேடினர்.
இதற்கிடையில் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆடு திருட்டில் ஈடுபடும் நபர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். பக்கத்து மாவட்டங்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து விசாரிக்க கூறினர். மர்மநபர்களை போலீசார் விரட்டி வந்த வழியாக பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
இதில் ஆடு திருடர்களை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விரட்டி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பூமிநாதனின் வாக்கி-டாக்கி, செல்போனை அருகில் உள்ள சுரங்கபாதை தண்ணீரில் மர்மநபர்கள் தூக்கி வீசியிருக்கின்றனர். தண்ணீரை வெளியேற்றியபின் அதில் இருந்து ‘வாக்கி-டாக்கி’, செல்போனை மீட்டனர்.
மேலும் செல்போன் கல்லால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டு இருந்த தாக போலீசார் தெரிவித்தனர். பூமிநாதனின் செல்போனை மர்மநபர்கள் சேதப்படுத்தி தூக்கி வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர்.
இந்தக் கொலை சம்பந்தமாக திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறியதாவது:
ஆடு திருடர்களைத் துரத்திச் சென்றபோது எதிர்பாராதவிதமாக இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் 2 பேராக செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களும் அப்படித்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் இவருடன் சென்ற சித்திரைவேல் என்ற காவலரால் பின்தொடர்ந்து செல்ல இயலாமல் வழி தெரியாமல் சென்றுவிட்டார்.”
இதற்கிடையே இன்று கொலையாளிகளில் 10 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பிடிப்பட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள் ளதாவது: சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், ரோந்து பணியில் இருக்கும்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயர மடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடி யாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் உடல், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாநகரில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருடைய குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் நடந்தன. அப்போது, தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. தாமரைக் கண்ணன், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. (பொறுப்பு) கார்த்திகேயன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனின் உடலை பார்த்து அவருடைய மனைவியும், மகனும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், அப்பகுதி பொதுமக்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப் பட்டது.
இன்று அதிகாலை 3 மணியளவில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பிடிபட்டுள்ளனர். கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆடுகளைத் திருடும் தொழிலை பல வருடகாலமாகச் செய்து வருவதும் போலீசாருக்குத் தெரியவந்ததுள்ளது. கொலையாளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் கொலையாளிகளைப் பிடித்த திருச்சி தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.