உதிர்ந்த இலைகள் – நூல் விமர்சனம்

 உதிர்ந்த இலைகள் – நூல் விமர்சனம்

உதிர்ந்த இலைகள் 

கவனிக்கப்படாத உணர்வுகளை ஒன்று திரட்டி அதற்கு வண்ணமிட்டு கவிதையாய் வார்த்து இருக்கிறார். கவிதையின் ஆசிரியர் நூர் ஷாஹிதா. ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ அவை ஈர்க்கப்படுவது தலைப்புகளில் ! 20 கவிதைப் பெண்களின் அழகான அணிவகுப்பை பரிசளிக்கும் இந்த மேடைக்கு உதிர்ந்த இலைகள் என்று பெயர் !

இரவின் மடி உறக்கம் கூட இறையே உன் பணி செய்வேன் என்பதைப் போல முதற்பக்கமே இறைவணக்க கவிதை. நட்பின் கோப்பையில் இறைசுவையை வழியவழியத் தந்திருக்கிறார். கடவுளை நண்பனாய் வரித்து பாமாலைச் சூட்டுகிறார்.

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு சொல் நயம் பேசுகிறது. உறவுகளின் உன்னதம், ஒற்றுமை, தாய்மை, ஆண்மை, தோழமை என்று ஏகப்பட்ட மை வண்ணங்களை சுமந்து வந்திருக்கிறது புத்தகம். புரிபடாத வார்த்தைகளில் கவி வடித்து இலக்கிய அன்னம் பகிராமல், எளியோருக்கும் புரியும் வகையில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அதை தொகுத்திருக்கும் வண்மையில் ஆசிரியர் வெற்றி பெற்று இருக்கிறார். படித்தவுடன் சட்டென மனதில் பல வரிகள் நினைவுகளை கீறிவிட்டு செல்கிறது. அன்பையும் நேசத்தையும் மையப்படுத்துகிறது.

கரங்களின் இணைப்புச் சங்கிலியை முகப்பு சித்திரமாய் வைத்து உறவுகளின் உன்னதம் சொல்லும் கவிதை உறவுகள்.

சிற்றெரும்புக்கு மட்டுமல்ல
சிறகு விரித்து பறக்கும்
பறவைகளுக்கும் அடைக்கலமான மரம்….

உறவுகள் உணர்வுகளின் மரம் !
உயிருடன் கலந்த ஒரு வரம் ! என்று உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்த்துகிறது. இக்கவிதை அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். என்ற திருக்குறளின் பொருளை உணர்த்துகிறது.

பெரும்பாலும் கவிதைகள் பெண்களைச் சுற்றி அவர்களை வர்ணிப்பதிலும், அவர்களின் மேன்மையைச் சொல்வதிலும் புனையப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இக்கவிதை தொகுப்பிலும் பெண்மையை மேம்படுத்தி ஒரு கவிதை இருக்கிறது. அதேபோல் பெண் மனசு ஆழமென்று கவிஞர்கள் பாடியிருக்க, அதையே மாற்றி ஆணின் மனதைப் படிப்பது கடினம் என்று புதிய களம் கொண்டு வந்திருக்கும் கவிஞர் அவன் ஒரு விசித்திர கணிதம் என்ற சொல்லாடலை மிதக்க விட்டிருக்கிறார்.

எதிரும் புதிரும் ஒரு கருப்பை தாங்கிய இரு ஜீவன்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டம் இக்கவிதை

தங்கையின் அன்பு கண்சிமிட்டும்
விண்மீனைப் போன்றது
அண்ணனின் அன்பு மின்சாரம்
தடைபட்ட இரவில் ஏற்றப்படும்
மெழுகைப் போன்றது

சகோதர உறவில் அன்பிற்கும், குறும்பிற்கும், ஆதரவிற்கும் அக்கறைக்கும் பங்குண்டு என்பதை விளக்கும் கவிதை வரிகள் ரசிக்க வைக்கிறது. நட்பின் அகராதிக்குள் தோழமையின் வாசம் நாசியை நனைக்கிறது தோழி என்னும் கவிதை வரிகளை வாசிக்கும் போது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர்அன்புணர்வுடன் அணுகாதவரையில் எந்த உறவும் தலை நிமிரவே முடியாது. ஆனால் நிறைய பேர்கள் நம் நினைவுகளில் மட்டும் அவ்வப்போது சிட்டுக்குருவின் கூட்டைப்போல் இதமாய் வாழ்வார்கள் அவர்களிடம் ஒரு நேசம் இழையோடியிருக்கும் அது நட்பின் வலிமை கவிதை வரிகளில் தெள்ளத்தெளிவாக ஓவியமாய் வரையப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து பேசப்படுவது மட்டும்
பாசம் என்றில்லை
தொடரப்படாத பேச்சும் பாசம்தான்.

நல்லவர்கெல்லாம் சாட்சிகள் உண்டு ஒன்று மனசாட்சி என்று கவியரசரின் வரிகள் தான் முகமூடி கவிதையை வாசிக்கும் போது தோன்றுகிறது. நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முகமூடியை மனிதன் அணிந்து கொள்கிறான்.

முகத்திற்கு ஒரு நிறம் தான் மூகமூடிக்கு பலநிறங்கள்.. என்ற வரிகள் குறிப்பிடுகிறது. ஒரு சலி சொல்லி அதற்கு நிவாரணம் சொல்லும் ஒரு மருத்துவக் குறிப்பேட்டைப் போல இக்கவிதை.

நம் மன அலகுகளால் கொத்தித் தின்ன அநேக அன்புப் பொறிகள் தூவப்பட்டது இக்கவிதைத் தொகுப்பு, அதிலும் கொரானாவும் நானும். நிகழ்கால நடப்பை பட்டவர்த்தனமாக நெற்றிப் பொட்டில் அறைகிறது.

இலவச கல்வியை இலவசமாக படித்த காலம் போய்
அதை கைப்பேசிக்குள் காசு கொடுத்து
படிக்கும் நிலை வந்து விட்டது.

ரீசார்ஜ் ஏதும் இன்றியே கடைசியில் என்னோடு
சேர்ந்து கைப்பேசியும் பட்டினியால் வாடும்…

இலவசமும் கூட பணவசமானது தான்
கொடுமையிலும் கொடுமை  – இவை நான் ரசித்த வரிகள்

தற்காலிகமானது கவிதைவரிகள் தவிக்க வைக்கிறது வாசிக்கும் தருணத்தில்

நம்மை இலகுவாக்கிக் கொள்ளும் நகை, அதன் மதிப்பிற்கு விலை நம் சிந்தனை என்னும் விதை. எத்தனையோ பதட்ட உணர்வுகளில் பய நிமிடங்களில் நம்மை திடமாக்கிக்கொள்ளும் வலிமை எதிராளியின் புன்னகைக்கு இருக்கிறது. அது எத்தனை நிறங்களில் வெளிப்படுகிறது என்பதை புன்னகை என்னும் கவிதை விளிக்கிறது.

ஏமாற்றம், துரோகம், அவமானம், அலட்சியம், கோபம், கவலை, விரக்தி, சுயநலம், அக்கறை என நவரத்தினங்களால் கோர்க்கப்பட்ட நகை அதுவே புன்னகை

நவரத்தினங்களின் நகை எங்கும் பிரயோகித்துப் பார்க்காத ஒரு வார்த்தை. அருமை

ஒவ்வொரு கவிதையைப் பற்றியும் ஒரு சிறு கட்டுரையே தரலாம் ஆனால் அணிந்துரையில் சிலதை அள்ளித்தெளித்தால் மட்டுமே முழு வர்ணங்களை வாசிக்க புத்தகம் தேடத் தோணும் என்பதால் சில கவிதை வரிகள் உங்கள் பார்வைக்காக நூலில் இருந்து.

இருண்ட வானம்தானே விடியும்

தோற்றுப் போவது திறமைகள் அல்ல மனங்கள்

உலகின் நடைமுறைகள் எல்லாவற்றையும் தூர இருந்து ரசிக்க விரும்புகிறேன் நான் ஆம், மழையின் ஜில்லிப்பு, பூக்களின் நுகர்வு, இவையெல்லாம் ரசிக்கும் அத்தனை தனிமை பிடித்துப் போயிருக்கிறது. சில நிஜங்கள் பொய்களை தின்று விடுகிறது. தனிமை அத்தனை பலவீனங்களையும் மாற்றும் வல்லமை பெற்றிருக்கிறது.

அதை கவிஞர் இவ்வரிகளில் குறிப்பிடுகிறார்

என் உணர்வுகளை எல்லாம் உமையாக்கிவிட்ட பின்னரும் நான் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா ? என்ற கேள்வியுடன்.

போதுமானது சில கனவுகளுக்கு உறக்கம் தேவையில்லை உழைப்பு போதுமானது. சில கோபங்களுக்கு வார்த்தைகள் தேவையில்லை பார்வை போதுமானது. இக்கவிதையில் ஒவ்வொரு வரிகளுமே மேற்கோள் காட்டவேண்டியவையே.

மெளனம் திமிராக புதிராக ஊமைகளின் மொழியாக, கண்ணீர்த் துளியாக அருமையான வரிகளை வார்த்தைகளாகவும் வடிக்க முடியும் அதை உணர்த்துகிறது மெளனம் கவிதை.

கற்றுக்கொண்டால் அறிவுரைகள் தேவையில்லை
ஏற்றுக்கொண்டால் அனுபவங்கள் தேவையில்லை,

பொய்களுக்கு உள்ள அழகு உண்மைக்கு இருப்பதில்லை ?

கண்ணீர்துளிகள் ஒற்றைப் புன்னகைக்குள் புதைக்கபட்டிருக்கத் தேவையில்லை இதுதான் உலகம்.
நாம் எதை தருகிறோமோ அதையே உலகமும் நமக்குத் தருகிறது. அது தனித்து எங்கோ இயங்கவில்லை நமக்குள்தான் நாம்தான் உலகம். நாம் அனைவரும் வெள்ளைத்தாளாகப் படைக்கப்பட்டு இருக்கிறோம். கடைசி வரையில் வெள்ளைத்தாளாக வாழ்க்கையினை முடித்துவிடாமல் அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம், குப்பையாக கசக்கியும் எறியலாம், அர்த்தமுள்ள ஆயிர
ம் விஷயங்களை எழுதி வைக்கலாம், கவிதையும், காவியத்தையும் பதிந்து வைக்கலாம்.

இந்த கவிதைப் புத்தகத்தின் வெற்றுப்பக்கங்கள் ஆக்கப்பூர்வமான வழிகளை உரைக்கிறது. அக்கறையான அன்பை போதிக்கிறது. உறவுகளை உணருங்கள் என்று உரக்கச் சொல்கிறது. வாசிக்கும் உள்ளங்களில் தன்னம்பிக்கை விதை தூவச்செய்கிறது. தலைப்பு உதிர்ந்திருந்தாலும் அவ்விலைகள் அனைத்தும் மக்கி உரமாக மாறி இன்னொரு விளைநிலத்தை தோற்றுவிக்கும் கிரியாசக்தியாக விளங்குகிறது.

இவை உதிர்ந்த இலைகள் என்று பெயர்பெற்றாலும் தளிர் இலைகளே தன் கருத்து செறிவுகள் மூலம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கவிஞர். நூர் ஷாஹிதா

முதல் கவிதைத் தொகுப்பினைத் தொடர்ந்து இன்னமும் சமுதாயம் சார்ந்த கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு பாராட்டும்.

லதாசரவணன்

எழுத்தாளர்

கமலகண்ணன்

1 Comment

  • எழுத்து துறையில் பெரும் சேவை ஆற்றும் என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
    மென்மேலும் உங்கள் பணிகளை எழுத்துலகில் எதிர்பார்க்கிறோம்.
    உங்கள் வாழ்க்கை கடந்த கால முட்களை களையெடுக்கும் செழிப்பான, சந்தோஷமான வாழ்க்கை யாக அமைய பிரார்த்திக்கிறேன் 🤲

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...