இலக்கிய சாம்ராட் கோவி.மணிகேரன் மறைவு இலக்கியத்துக்கு இழப்பு
வேலூர் மாவட்டம் சல்லிவன்பேட்டையில் 1927-ம் ஆண்டு மே 2-ம் தேதி கோவி.மணிசேகரன் பிறந்தார். தனது 16வது வயது முதல் சுமார் 76 ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றி வந்த கோவி. மணிசேகரன் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாகத் தனது இல்லத்தில் 18-11-2021 அன்று காலமானார். அவருக்கு வயது 95.
கே.பாலசந்தரிடம் 21ஆண்டுகளுக்கு மேலாக உதவி இயக்குநராகப் பணியாற்றி, 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் எழுத்துலகத்துக்குப் பெருமையும் சேர்த்தவர். வரலாற்றுப் புதினமான குற்றாலக்குறிஞ்சியும், தென்னங்கீற்று திரைப்படமும் அவர் பெயரை இன்றும் சொல்லுகின்றன.
இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னடப் படத்தை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய, ‘தென்னங்கீற்று’ படம் தமிழக ரசிகர் மன்ற விருதையும், கர்நாடக அரசின் நீரிசேஷ விருதையும் பெற்றது. கோவி.மணிசேகரன் உடல் தகனம் இன்று நடக்கிறது. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி, மூன்று மகன், ஐந்து மகள்களும், 16 பேரன், பேத்திகளும் உள்ளனர்.
கோவி. மணிசேகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ் எழுத்துலகம் ஒரு மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற எல்லோரைக் காட்டிலும் வரலாற்று நூல்களை மிகவும் அக்கறையோடும் நுணுக்கமாகவும் ஆர்வத்தோடும் படித்து, நாவல்கள் சமைப்பவர் கோவி.மணி சேகரன். ‘செம்பியன் செல்வி’, கலிங்கத்துப் பரணியினை அடியொற்றி எழுதப்பட்ட சுவை மிகுந்த புதினம்.
களப்பிரர் காலத்தையொட்டியெழுந்தது ‘முகிலில் முளைத்த முகம்’, ‘பொற்காலப் பூம்பாவை’ விசயநகர வேந்தர்காலச் சூழ்நிலையில் படைக்கப்பட்ட அருமையான புதினமாகும். ‘பொன் வேய்ந்த பெருமாள்’ தமிழ்ச் சூழ்நிலையில் நடமாடும் நல்ல புதினமாகும். இவர் எழுதிய ‘சந்திரோதயம்’ நினைவில் நிற்கும் புதினமாகும்.
தட்சண பயங்கரன், சேரன் குலக் கொடி, சுமித்திரை, அசோகன், செஞ்சி அபரஞ்சி, குடவாயிற் கோட்டம், தென்றல் காற்று எனும் ரஷ்ய சரித்திரப் புதினம், காஞ்சிக் கதிரவன், ரத்த ஞாயிறு, அஜாத சத்ரு ஆகியவை இவர் எழுதிய நல்ல வரலாற்றுப் புதினங்களாகும்.
இவரது படைப்புகளை ஆராய்ந்து, இதுவரை 23 ஆராய்ச்சியாளர்கள் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டங்கள் பெற்றுள்ளனர். இவர்களில் மூவர், இவரது தமிழ் நடையை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இந்தியாவில் 21 பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகள் பாடநுாலாக வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அவர் எழுதிய ‘குற்றாலக் குறிஞ்சி’ என்ற நூலுக்கு 1992-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது
சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது 2008ஆம் ஆண்டு கோவி.மணிசேகர னுக்கு வழங்கப்பட்டது.
இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்ஷே விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேலூரைச் சேர்ந்த கோவி. மணிசேகரன் வரலாற்றுப் புதினங்களை எழுதுவதில் புகழ் பெற்றவர். 20 வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் மற்றும் இசையில் கற்றுத் தேர்ந்தார். தொல்காப்பியம் முதல் நவீன இலக்கியம் வரை கரை தேர்ந்தவர். 1000க்கும் மேற்பட்ட வரலாற்று புதினங்கள், சமூக சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். 120 நாவல்களையும் அவர் படைத்துள்ளார். சாகித்ய அகாடமி விருது, கலைஞர் விருது, ராஜராஜன் விருது, திரு.வி.க. விருது, எம்.ஜி.ஆர்.விருது உள்பட 44 விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
தனது பார்வையில், ராமாயணத்தை ‘கோவி ராமாயாணம்’ என்று படைத்துள்ளார். இதில் மொத்தம் 4000 பாடல்கள் அடங்கியுள்ளன. தென்னங்கீற்று உள்ளிட்ட அவரது நான்கு நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வரலாற்றுப் புதினத்தை ஜனரஞ்சகமாக எழுதாமல் வரலாற்றுப்பூர்மாகவே எழுதுபவர் கோவி. மணிசேகரன். அவர் தமிழ்மீது வைத்திருந்த பற்று மிகக் கௌரமானது மிகக் கர்வமானதும் கூட. அதனால் அவர் சில கருத்துக்களை துணிந்து எழுதினார். அவரது உண்மையான படைப்புகளுக்காக தமிழக அரசு அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழரிஞர்களின் வேண்டுகோள்.