ஜெய்பீம்- சாதிப் போச்சு, மதம் வந்தது
1995ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் காவல் நிலையத்தில் கடும் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது எடுத்து நடத்திய வழக்கின் அடிப்படையில் உருவான கதை இது. சிறந்த படமான இது ஒரு சர்ச்சையில் சிக்கியது.
ஜெய்பீம் படத்தில் கொடுமைக்கார இன்ஸ்பெக்டர் தன் வீட்டில் வன்னியர் அடையாள காலண்டர் இடம் பெற்றதற்குக் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்ததை அடுத்து இயக்குநர் த.செ. ஞானவேல் அந்தக் காலண்டரை மாற்றிவிட்டார் அதில் லட்சுமி தேவி இடம் பெற்றுள்ளது. அதுவும் சமூக வலைதளத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை திருட்டு வழக்கில் கைது செய்கிறது விழுப்புரம் போலீஸ். ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கில் சிறைக் காவலில் இருக்கும்போது மரணம் அடைகிறான் ராஜாக்கண்ணு. அவனது மரணத்தை மறைத்து சதியாட்டம் ஆடுகிறார்கள் மூன்று போலிஸ் காரர்கள். ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணி, கணவனைக் காணாது பல இடங்களில் நீதி கேட்டுப் போராடிய பின் வழக்கறிஞர் சூர்யா (சந்துரு) உதவியுடன் உயர் நீதிமன்றம் செல்கிறார். அவருக்கு நீதி கிடைத்ததா என்பதை விறு விறு திரைக்கதையில் பதைபதைக்கப் படமாக்கியிருக் கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.
ஆனால் போலிஸ் இன்ஸ்பெக்டராக வரும் குருமூர்த்தி வீட்டில் தன் இருக்கும்போது அவர் எதிரே காலண்டரில் வன்னியர் குறியீடான 1995ம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஒரு காலண்டர் இருப்பது போலவும் அதில் தீச்சட்டி புகைப்படம் படத்தில் ஒரு காட்சியில் இடம் பெற்றது. அது பெரிய சர்ச்சையாகி சமூக ஊடகத்தில் கண்டிப்புடன் பேசப்பட்டது. அந்தோணிசாமி குருமூர்த்தியானது ஏன்? வன்னியர் சங்கத் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவை அடையாளப்படுத்த முனைகிறார் இயக்குநர் ஞானவேல் என்று அழுத்தமான போராட்டக் குரல்கள் எழுந்தன. காரணம் படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் அதே பெயரில் இருக்க, கொடுமைக்கார இன்ஸ்பெக்டர் பெயர் அந்தோணிசாமி. ஆனால் டைரக்டர் விஷமத்தனமாக அவர் பெயரை குருமூர்த்தி என மாற்றி வைத்ததோடு அவர் வரும் காட்சியில் வன்னியர் தீச்சட்டிக் கலசம் இடம்பெற்ற காலண்டரை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்த்தார்.
உண்மையில் அந்த இன்ஸ்பெக்டர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை வன்னியராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன? இந்த வழக்கில் முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் கோவிந்தன். இதற்காக அவர் மிரட்டப்பட்டார். பேரம் பேசப்பட்டார். எதற்கும் அடிபணியாது இருளர் மக்களின் நீதிக்காக நின்றவர், இந்த வழக்குக் காகவே அவர் திருமணம் செய்யாமல் வழக்கு முடிந்த பிறகு திருமணம் செய்தார். அவர் வன்னியர். இப்படி சுற்றிலும் அனைவரும் நல்லதே செய்திருக்க, கொடுமைக்கார போலிஸை வன்னியராகக் காட்டவேண்டிய கட்டாயம் இயக்குநர் ஞானவேலுக்கும் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவுக்கும் என்ன வந்தது? யார் தூண்டுதலில் இயக்குநர் த.செ.ஞானவேல் இப்படி முடிச்சுப்போடும் வேலையில் ஈடுபட்டார் என்று பல முனைகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்த பிறகு படத்தில் கொடுமைக் கார இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்த வன்னியர் அடையாள காலண்டரை கிராப்பிக்ஸ் மூலம் அமேசான் நிறுவனத்தில் பேசி அந்த காலண்டரில் சுவாமி லட்சுமி படத்தை ஒட்டவைத்து விட்டார்கள்.
ஒரு பிரச்சினை முடிந்தது. இப்போது நிஜ கேரக்டர் அந்தோணிசாமி இந்துவாக மாற்றப்பட்டுள்ளார். இப்போது டைரக்டர் ஞானவேல் இந்து அமைப்புகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த நிலையில், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் இதைக் கண்டித்து வருகிறார்கள். கொடுமைகளில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி பெயர், அந்தோணிசாமி என்பதுதான் வரலாறு. உண்மைச் சம்பவத்தைப் படமாக எடுக்கும்போது அந்தோணிசாமி வீட்டில் எப்படி இந்துக் கடவுள் காலண்டர் இருக்க முடியும்? ஏன் அவரை ஒரு இந்துவாக மாற்றம் செய்தீர்கள்? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
சாதிப் போச்சு மதம் வந்து டும்டும்டும்.
ஒரு நல்ல படத்தை எடுக்கும்போது ஏன் இந்த விஷமத்தனம்?
1 Comment
பாம்புக்கும் கீரிக்கும் சண்டை, பார்க்க மக்கள் கூட்டமாக வருவார்கள், படம் ஓட ஒரு நல்ல செலவே இல்லாத ஒரு விளம்பரமும் கிடைக்கும், என்ன தான் சொல்லியிருக்கான் என்று பார்க்க ரெண்டு ஜாதிக்காரனும் வருவங்க, அப்புரம் என்ன ஒரே கலேக்சன் தான். வன்னியரின் காசும் ஆச்சு, வன்னியர் அல்லாதவரின் காசும் ஆச்சு….. நாவரசு கொலை கேசை படமாக்கினால் கூட, ஜான் பிரிட்டோ வின் பெயரை, ஷண்முகம் என்றோ, முருகன் என்றோ வைத்து கொண்டால் போச்சு, மறந்தும் கூட வில்லன் ஆக ஒரு கிறுஸ்துவரையோ, முஸ்லிமையோ காட்டகூடாது அவ்வளவு தான்