இங்கும் ஒரு குருச்சேத்திரம்

மூத்த தொழிற்சங்கத் தலைவர் இரா.குசேலர்

100க்கும் மேற்பட்ட தொழிசங்கங்களின் தலைவராக இருந்தவர், தற்போதும் 15 சங்கங்களின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் 90 வயது இளைஞர் இரா. குலேசன் அவர்கள். அவர் எழுதிய ‘இங்கும் ஒரு குருச்சேத்திரம்’ என்ற நூலில் தம் தொழிற்சங்கப் போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார். அதன் ஒரு சிறு பகுதி இங்கே.

“1967 பிப்ரவரி மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், சுதந்திரா கட்சி, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அந்த ஆண்டிலேயே நான் தலைமை தாங்கிய தொழிற்சங்கங்களின் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் இந்த ஆட்சி மாற்றத்திந்குத் தீவிரமாகத் தேர்தல் வேலை செய்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த நானும் தீவிரமாகத் தேர்தல் பணிபுரிந்தேன். அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவச்லம் அவர்கள் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதி உட்பட பொன்னேரி, திருவொற்றியூர், குன்றத்தூர், பரங்கிமலை, காஞ்சிபுரம், சென்னை தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற இரண்டு மாத காலம் கடுமையாக உழைத்தேன்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பொதுக் கூட்டத்தை என் தலைமையில் பட்டாபிராமில் நடத்தினேன். அந்தக் கூட்டத்தில் வேட்பாளர் திரு. இராஜ ரத்தினம், தமிழரசு கழகத்தைச் சேர்ந்த தலைவர் எஸ்.கே.பாலசுப்பிர மணியம், நான் மற்றும் எங்களுடன் பிரதான பேச்சாளராக அறிஞர் அண்ணாவும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் நான் தலைமை தாங்கும் தொழிற்சங்கத்தைச் சேர்நத் தொழிலாளர்களும் பொது மக்களும் இருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் நான் பேசியபோது தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். திரு. அண்ணா அவர்கள் முதலமைச்சராவது உறுதி. தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

விஞ்ஞானபூர்வமான சோஷலிசம் தங்களுடைய கொள்கைத் திட்டமென அறிவித்தது. தி.மு.க. ஆட்சி சோஷலிச ஆட்சியாக, உழைக்கும் மக்கள் ஆட்சியாக செயல்பட்டால் மத்தியி லஅமையப் போகும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு அமைச்சரவையை கவிழ்த்த மாதிரி தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்கப் பார்ப்பார்கள்.

அந்தச் சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேடயமாக இருந்து தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்கும். உழைக்கும் மக்கள் நலனுக்கு விரோதமாக தி.மு.க. ஆட்சி நடக்குமானால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த அமைச்சரவையை கூரிய வாளாக இருந்து குத்திச் சாய்க்கும் என்று குறிப்பிட்டேன்.

இதை அறிஞர் அண்ணா அவர்கள் பொறுமையாகக் கேட்டுக் கொண் டிருந்தார். அந்தக் கூட்டத்தில் என் தலைமையில் இருந்த தொழிற்சங்கங் களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமாக இருந்ததால் இந்தப் பேச்சைக் கேட்டு வெகுவாகக் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

என் தலைமையிலான தொழிற்சங்கங்களின் பங்களிப்பு கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற குறிப்பாக திருப்பெரும்புதூரில் பெரிதும் உதவின.

திருப்பெரும்புதூர் பிர்காவில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் திரு. பக்தவச்சலம் அதிகமாகப் பெற்றிருந்தார் என்றாலும் என் தலைமை பொறுப்பில் தொழிலாளர்கள் நிறைந்த ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் போன்ற இடங்களில் பெருமளவில் வாக்குகள் கிடைத்ததால் அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவச்சலம் அவர்கள் தோல்வியுற்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திரு. ராஜரத்தினம் என்பவர் வெற்றி பெற்றார்.

திரு. சி.என்.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் மந்திரிசபை அமைந்ததும் தொழிலாளர்கள் மத்தியில் பெரிய எழுச்சியும், பெரிய எதிர்பார்ப்புகளும், உடனடியாக பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தன. தொழிலாளர்களின் போராட்ட உணர்வு கூடுத லானதே ஒழிய நிர்வாகங்கள் தனது போக்குகளை மாற்றிக் கொள்ளாமல் மாறாக தனது போக்குகளை மேலும் கெட்டிப்படுத்தின.

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் திரு. சி.என். அண்ணாதுரை அவர்கள் முதலமைச்சராக 1967 பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார். முதலமைச்சர் அண்ணா அவர்களின் அமைச்சரவை சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை சட்டப்படி செல்லுபடியாக்கியது. மதராஸ் மாநிலம் என்று இருந்ததை அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.

மே தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்து அடுத்த ஆண்டு அதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் எனவும், 1967ஆம் ஆண்ட மே முதல் தேதியை நிறுவனங்கள் மே தின விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்று ஷாவாலாஸ் நிறுவனம் மற்றும் டபிள்யூ.எஸ். இன்சுலேட்டர் நிறுவனங்கள் தவிர இதர ஏனைய நிறுவனங்கள் சம்பளத்துடன் விடுமுறையை அறிவித்தன.

ஷாவாலாஸ் கம்பெனிக்கு நான் தலைவராக இருந்ததால் நானே சங்கக் கொடியேற்றி மே தினம் விடுமுறையாக பாவிக்கடும் என்று அறிவித்தேன். தொழிலாளர்கள் அனைவரும் விடுமுறை எடுத்துக்கொண்டதற்குப் பின்னால் நிர்வாகத்துடன் பேசி ஊதியம் பெற்றுத் தந்தேன்.

போரூர் டபிள்யூ.எஸ். இன்சுலேட்டர் சங்கம் என் தலைமையில் இல்லை. இத்தொழிலகம் பூவிருந்தவல்லியில் இருந்து சுமார் மூணு மைல் தொலைவில் இருக்கிறது. டபிள்யூ.எஸ். இன்சுலேட்டர் தொழிலாளர்கள் மே தினத்தன்று என்னை அழைத்துப் போய் வாயிலில் சங்கக் கொடி ஏற்றி விடுமுறை அறிவிக்கச் சொன்னார்கள். நானும் அப்படியே செய்தேன். ஆனால் நிர்வாகம் தொழிலாளர்கள் மேல் தொடர்ந்து பரிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மே தினத்திற்கு ஊதியம் கொடுக்கவில்லை.

சுமார் ஆயிரம் பேர் பணிபுரிந்த அந்தத் தொழிற்சாலையில் என் தலைமையில் சங்கம் அமைத்தனர். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காகப் பல்வேறு தொழிற்சங்க இயக்கங்கள் என் தலைமையில் நடைபெற்றன. நிர்வாகம் அசைந்துகொடுக்காமல் நங்கத்தை நசுக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...