தடுமாறுகிறாரா முதல்வர் ஸ்டாலின்?

புதிய கவர்னராக ஆர்.என்.ரவி ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைக்குக் குறை வில்லை.

உறவுத் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இவரை தமிழகத்துக்கு கவர்னராக ஒன்றிய அரசு நியமித்தபோதே தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குக் கட்டியங்கூறுவது போலவே தற்போது நடந்த ஒரு விஷயம் அமைந்திருக்கிறது.

அவரின் நியமனத்தை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. “கவர்னர் ரவி திட்டமிட்டே தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும்” என்று கே.எஸ். அழகிரி குரல் கொடுத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஆளுநர் ரவி மாற்றப்பட்ட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

திருமாவளவன், கே.எஸ்.அழகிரி

அவர் கவர்னராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சில வாரங்களில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். பிறகு சென்னை வந்தவர், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை வரவழைத்து ஒரு மணி நேரம் பேசினார்.

சில வாரங்களுக்குப் பிறகு “தமிழத்தில் நடக்கும் திட்டங்கள் குறித்து எனக்குத் துறை வாரியாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. அந்தக் கடித விவரங்கள் வெளிவரவில்லை. ஆனால் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். ஒரு கடிதம் அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டதுதான் தமிழகத்தில் பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.

இறையன்பு ஐ.ஏ.எஸ்.

அந்தக் கடிதத்தில் தமிழகத்தில் துறைகளின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள கவர்னர் விரும்புவதால் பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் அவற்றை விளக்க வேண்டும். தயாராக இருங்கள். அதற்கான தேதி, நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என அனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் உத்தரவிட்டிருந்தார். இதுதான் தி.மு.க.வைத் தவிர அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.

தி.மு.க. தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது லட்ச ஒழிப்புத் துறை மூலம் ரெய்டு நடத்திவருகிறது. அது அ.தி.மு.க. தலைவர்கள் மத்தியில் கடுப்பேற்றியிருந்தது. தி.மு.க. பழிவாங்கும் நடவடிக்கையாக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறது. தி.மு.க. கமிஷன், கரப்ஷன் செய்கிறது என்று கவர்னர் ரவியை கவர்னர் மாளிகையில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்திருந்தார் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கவர்னர் ரவியைச் சந்தித்துப் பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி

அந்தச் சந்திப்பில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால் மாநில கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைப் பார்த்து ‘உங்கள் துறை செயலாளர்களை எனக்கு உங்கள் திட்டங்களை விளக்கச் சொல்லுங்கள்’ என்று கேட்பது தமிழகத்தில் நடைமுறையில் இல்லை. அப்படி ஒரு கேள்வி கேட்ட கவர்னரைப் பார்த்து ஒரு பதில் வழங்காமல் தலைமைச் செயலாளர் இறையன்பு மூலம் துறைச் செயலாளர்களுக்கு கவர்னர் கேட்கும்போது பவர் பாயிண்ட் விளக்கம் அளிக்கத் தயாராக இருங்கள் என்று  கடிதம் எழுதியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. கவர்னர் மாளிகையின் கட்டளைகளுக்கேற்ப தலைமைச் செயலாளரின் இத்தகைய உத்தரவு கோட்டையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின்

2017ல் கொஞ்சம் பிளாஷ்பேக்

புதிதாக கவர்னர் சி. வித்யாசாகர் ராவுக்குப் (கூடுதல் பொறுப்பு) பிறகு பன்வாரிலால் தமிழக கவர்னராகப் பதிவியேற்றவுடன் அவர் மாவட்டம்தோறும் மக்களைச் சந்தித்து மனுக்களை வாங்க முற்பட்டார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதற்கு அன்றைய ஆளும்கட்சியான அ.தி.மு.க. எடப்பாடி அரசு கடுமையாக எதிர்த்தது. தி.மு.க. கட்சியினரைக் கைது செய்தது. ஸ்டாலினும் போராட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு ஒரு விஷயத்தில் கவர்னர் ஒரு இளம் பெண்ணின் கன்னத்தில் கைவைத்தார் என்கிற விவகாரத்திற்குப் பிறகு கவர்னர் தன் வாலைச் சுருட்டிக்கொண்டார்.

2019ல் நடந்த நிகழ்ச்சியின் பிளாஷ்பேக்

எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அ.தி.மு.க.வின் கடந்த ஆட்சியில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க் களின் ஊழல் பட்டியலை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அன்றைய கவர்னர் பன்வாரிலால் புரோக்கித்திடம் கொடுத்தார். மனு கொடுத்தவர் பத்திரிகையாளர்களிடம், ‘கவர்னரிடம் ஏன் பட்டியல் கொடுத்தோம் என்றால் புதிய சட்டத்தின்படி கவர்னரே மந்திரிகள் மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று பேட்டி கொடுத்தார்.

2020 அக்டோர் மாதம் நடந்தது.

மாநில கர்வனர் ஒரு விஷயம் சம்பந்தமாக முதல்வரிடம் விளக்கம் கேட்கவேண்டும் என்றால் அவரை அழைத்து விளக்கம் கேட்பதுதான் நடைமுறை. ஆனால் இப்போது கவர்னர் ரவி கட்டளைக்கு நேரடியாகத் தலைமைச் செயலாளர் பதில் அளித்திருப்பது எதனால்?  இந்த அணுகு முறை எதைக் காட்டுகிறது? தமிழக அரசை அதிகாரம் செலுத்த அனுப்பப்பட்டவர்தான் கவர்னர் ரவி. ஒன்றிய அரசின் துண்டுதலில் தி.மு.க. அரசை சீண்டிப் பார்க்கிறதா? என்கிற கேள்விகள் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தரப்பிலிருந்து எழுகிறது.

“தமிழக அமைச்சரவையின் ஆலோசனைப்படியும் அறிவுரையின்படியும்தான் ஆளுநர் செயல்பட முடியும். துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. உரிமையும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வைக் காலூன்ற வைக்கும் முயற்சி இது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

“ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறல்களுக்கு இது வழிவகுத்துவிடும். தி.மு.க. அரசின் இத்தகைய செயல் மிகத் தவறான முன்னுதாரணமாகும். இதற்கு இறையன்பு போன்றவர்களும் துணைபோவது ஏமாற்றமளிக்கிறது. ஏழு தமிழர் விடுதலை யில் மாநில அமைச்சரவை இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் தர மறுத்து தனது கடமையைச் செய்யத் தவறும் ஆளுநர், அரசு நிர்வாகத்தை ஆய்வு செய்வதாகச் சொல்வது கேலிக்கூத்து. அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநரின் ஆய்வுகளுக்கெதிராகப் போராடிய தி.மு.க. தற்போது ஆளுநரின் முடிவுக்கு அடிபணிவது மிகப் பெரும் ஜனநாயகத் துரோகமாகும்” என்று குரல் கொடுத்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான்

இதற்கிடையே ”புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன. இந்த நடைமுறை நிர்வாகத்தில் வழக்கமான ஒன்றுதான். நிர்வாகரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும்” என்று விளக்கம் அளித்துள்ளார் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு.

கலைஞர் ஆட்சியில் நடந்த முன்னுதாரங்களைப் பார்ப்போம்.

1969க்கு முன் இந்தியாவில் மாநிலங்களில் கவர்னர்கள்தான் தேசியக்கொடியை ஏற்றும் உரிமை யும் நடைமுறையும் இருந்துவந்தது. அதை மாற்றிக் காட்டி இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் தி.மு.க. தலைவரும் ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் கருணாநிதி.

1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி சுதந்திர தின விழாக்களில் மாநிலத் தலைநகரங்களில் முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையேற்ற மத்திய அரசு, குடியரசு தினங்களில் மாநிலத் தலைநகரங்களில் ஆளுநர்களும் மாநில முதல்வர்களும் கொடியேற்றுவார்கள் என அறிவித்தது. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றினார்.

2020ஆம் ஆண்டு 75ஆவது சுதந்திர தின விழாவில் கருணாநிதியின் மகனும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

இன்னொரு உதாரணம், 2006-2011 கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஊட்டி வெலிங்டனில் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சியளிக்க இந்திய ராணுவம் சென்ற வாகனத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்யவேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் மத்திய அரசு கலைஞர் அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மாலதி ஐ.பி.எஸ்.சுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து தடை செய்வதற்கான ஒரு ரிப்போர்ட்டை தயாரித்து அந்தக் கோப்பினை கலைஞரிடம் எடுத்துச் சென்றார் மாலதி ஐ.பி.எஸ். அதைப் பார்த்துக் கடும் கோபமடைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி,  கோப்புகளை வீசி எறிந்து, ‘என் தலைவர் பெயரில் இருக்கும் இயக்கத்தையே தடை செய்ய என்னிடம் அனுமதி கேட்பீர்களா? தடை செய்ய முடியாது என்று தில்லிக்குக் கடிதம் அனுப்புங்கள்’ என உத்தரவிட்டார்.

அன்றைய முதல்வர் கலைஞரின் வழியில் தற்போதைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி என்கிற மு.க.ஸ்டான், தன் தந்தையின் வழியில் தற்போதைய கவர்னர் ரவியின் கடிதத்தைத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும் அல்லது தக்க பதில் தந்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள் மூத்த அரசியல்வாதிகள்.

இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காத ஸ்டாலின் பாய்வாரா? அல்லது பணிவாரா? என்பது குறித்தும், அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்றும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...