தமிழ்த் தேசிய முன்னோடி அண்ணல் தங்கோ
சுதந்திரப் போராட்டம் இந்தியாவெங்கும் தீவிரமாக நடைபெற்று வெள்ளைக்காரர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின் மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது மொழிவழி மாநிலங்களில் அந்தந்த மொழிப் பற்று வலுமையாக ஏற்பட்டது. அப்போது அந்தந்த மொழி மாநிலங்கள் தங்கள் மொழியில் அந்தந்த மாநிலத் தலைவர்கள் ஒன்றுபட்டு நின்றனர். ஆனால் தமிழகத்தில் அது மாதிரி ஒன்றுபட்டு நிற்கவில்லை. காரணம் தமிழ்நாடு வெள்ளையர்கள் ஆண்டபோது சென்னைத் தலைமையிடமாக வைத்து ஆண்டார்கள். சென்னைத் துறைமுகம், ஊட்டி, கொடைக்கானல்கள் பகுதிகள் அவர்களுக்கு வாழ்விடமாக இருந்தது. பல மக்கள் ஒன்றுகூடும் இடமாக சென்னை திகழ்ந்தது. அதனால் தமிழ்நாட்டில் பல மொழி பேசுபவர்கள் தலைவர்களாக திகழ்ந்தார்கள். தமிழ்பேசும் மாநிலத்தில் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கே பல
போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டுக் கட்சிக்கு தமிழர் கட்சி என்று பெயர் வைப்பதற்கே முடியவில்லை. இன்று வரை அது நடக்கவில்லை என்பது கண்கூடு. அப்போது தமிழ்த் தேசியத்துக்காகவும் தமிழ் மொழியைக் காப்பதற்காகவும் பல தமிழர் தலைவர்கள் போராடினார்கள். அவர்களில் முதன்மையானவர் அண்ணல் தங்கோ.
தமிழ் மொழிக்காகவும் தமிழ் விழுமியங்களைக் காக்கவும் தம் வாழ்வை அப்பணித்தவர் அண்ணல் தங்கோ. 1916-ல் மறைமலையடிகளார் தொடங்கிய தனித் தமிழ் இயக்கத்துடன் இணைந்து, அதை வளர்த்தெடுத்தவர்களில் கு.மு.அண்ணல் தங்கோ முக்கியமானவர். சுவாமிநாதன் என்ற பெயரை அண்ணல் தங்கோ என்று மாற்றிக்கொண்டார். தனது திருமணத்தைத் தானே முன்னின்று திருக்குறளை முன்மொழிந்து தமிழில் நடத்திக் கொண்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர் அண்ணல் தங்கோ.
இவர் 1918ல் காங்கிரசில் சேர்ந்தார். 1923ல் கள்ளுக்கடை மறியல், 1925ல் வைக்கம் போராட்டம், 1927ல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930ல் உப்புசத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியாகிரகப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்று ஐந்து முறை சிறை சென்றார்.
1918-ல் காங்கிரஸில் சேர்ந்த அண்ணல் தங்கோ, 1923-ல் மதுரை வைத்தியநாத ஐயருடன் இணைந்து கள்ளுக் கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தினார். நாக்பூரில் தடையை மீறி கொடிப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார். டாக்டர் வரதராசுலு நாயுடுவுடன் இணைந்து குருகுலப் போராட்டத்திலும் கலந்துகொண்டார்.
அண்ணல் தங்கோவின் தலைமையில் நடந்த நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்தில் காமராஜர் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டிருக்கிறார். நீல் சிலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதற் காக, அப்போது நீதிபதியாக இருந்த பம்மல் சம்பந்தம் அண்ணல் தங்கோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனைக்கு உத்தரவிட்டார். சிறைக்குச் சென்ற அண்ணல் தங்கோ சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கு நாடகத்தில் நடித்து நிதி திரட்டினார்.
சைமன் குழு வருகை எதிர்ப்பு, உப்பெடுக்கும் போராட்டம் என்று காங்கிரஸ் தலைமையில் நடந்த பல சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டவர் அண்ணல் தங்கோ. பின்பு, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, ‘உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை’ எனும் அமைப்பை நிறுவினார். ‘தமிழ்நிலம்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார்.
தமிழில் பெயர் சூட்டுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றவர் அவர். மணியம்மையாருக்கு அரசியல்மணி என்று பெயர் சூட்டியவர் அவர். பின்பு, அப்பெயரில் அரசியல் மறைந்து, மணி மட்டும் நிலைபெற்றது. சி.பி.சின்ராஜ், சிற்றரசு ஆனதும் அவரால்தான். கருணாநிதிக்கும் அருட்செல்வன் என்ற பெயரை அவர் பரிந்துரை செய்திருக்கிறார். கிருபானந்தவாரியாரை அருளின்பக் கடலார் என்பார். ரெங்கசாமியை அரங்கண்ணல் என்று மாற்றியவரும் அண்ணலே !
1936ல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். 1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது திராவிடர் கழகத்துக்குத் தமிழர் கழகம் என்று பெயரிட வேண்டும் என்று அண்ணல் தங்கோ வலியுறுத்தினார். அந்தக் கோரிக்கையை பெரியார், அண்ணா இருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை.
1937ஆம் ஆண்டு வேலூரில் உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938ல் தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார்.
சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படத்தின் முடிவில், ‘எல்லோரும் வாழ வேண்டும்’ என்ற பாடல் முழங்கும். அந்தப் பாடலை இயற்றியவர் தனித்தமிழ் இயக்க முன்னோடியான கு.மு.அண்ணல் தங்கோ. ‘பெற்ற மனம், பசியின் கொடுமை’, ‘ கோமதியின் காதலன்’ ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்கும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் அனைத்தையும் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசுடைமையாக்கிச் சிறப்பித்தார் . வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு.மு.அண்ணல்தங்கோ புகழ் என்றும் மறையாது.