
அன்று பாலியல் தொழிலாளி இன்று கேரள திரைப்பட விருதை வென்று சாதனை படைத்தவர் நளினி ஜமீலா. இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு வேண்டுமானால் அதிகம் பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம்.
15 ஆண்டுகளுக்கு முன்னரே சமூகத்தால் பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்டு, பின் தன் அனுபவங்களை ‘ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார் நளினி ஜமீலா. கேரளாவில் மிகப்பெரிய விவாதமாக அன்று அது பேசப்பட்டது. அப்போது அதிகம் விற்கப் பட்ட புத்தகமும் அதுதான். இதை அடுத்து, இதேபோல், ‘ஒரு பாலியல் தொழிலாளியின் காதல் சந்திப்புகள்’ என்று இவர் எழுதிய புத்தகமும் வெளி யாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த நளினி ஜமீலா, 3-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பொருளாதார நிலையில் சிறப்புற்றிருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நளினி, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வறுமையின் காரணமாகக் கூலி வேலைக்குச் செல்கிறார். ஒன்பது வயதில் ‘மண்மடை’யில் முதன் முதலாக வேலைக்குச் செல்லும் போதிருந்தே தொடங்குகிறது ஒரு பெண் மீதான பாலியல் சார்ந்த பிரச்சினைகள். அந்த வயதிலிருந்தே ஆபத்தை எதிரில் கண்டு பயந்து ஓடத் தொடங்குகிறார். கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த நளினி பின்பு வீட்டு வேலைக்குச் செல்கிறார்.

பதினெட்டு வயதில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் தந்தை, அவரை வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறியதால் தன்னுடைய காதலனைத் திருமணம் செய்யலாம் என்று எண்ணி வீட்டைவிட்டு வெளி யேறுகிறார். ஆனால் காதலனைத் திருமணம் செய்ய முடியாமல் அவனோடு தொழில் செய்துவந்த வேறொரு நபரை மணக்க நேரிடுகிறது. மது, மாது ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டதால் மிகக் குறுகிய காலத்திலேயே நளினியை யும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு கணவன் இறந்து விடுகிறான்.
கணவன் இறந்த பிறகு குழந்தைகளைப் பாதுகாக்க தனக்கு ஐந்து ரூபாய் தினமும் தந்துவிட வேண்டும் என்று மாமியார் கூறுகிறார். நளினிக்கு அப்போது கிடைக்கும் அதிகபட்சக் கூலி நாலரை ரூபாய் மட்டுமே. ‘பிள்ளை களைப் பாதுகாக்க;g பெரிய தொகையைச் செலவுக்குத் தரவேண்டுமென்று மாமியார் கூறியதைத் தொடர்ந்துதான் நான் பாலியல் தொழிலுக்கு வந்தேன்’ என்று கூறும் நளினி, தொடர்ந்து ‘நளினி ஜமீலா’வாக மாறியதையும், தன்னு டைய பாலியல் தொழிலில் தான் பெற்ற அனுபவங்களையும், வேதனைகளை யும், பலவிதமான ஆண்களின் மனநிலைகளையும் அவரது நூலில் பதிவு செய்துள்ளார். தொடக்கத்தில் பாலியல் தொழிலாளியாக இருந்தவர் பின்பு ‘ஜூவாலாமுகி’ என்ற அமைப்பில் சேர்ந்து பாலியல் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், அவர்களின் மறுவாழ்விற்காகவும் தொடர்ந்து போராடுதல், ஆவணப்படங்கள் தயாரித்துப் பாலியல் தொழிலாளர்களின் மனவுணர்வு களைப் பிறருக்கு வெளிப்படுத்துதல், தொடர்ந்து வந்த ஊடகத் தொடர்புகள் ஆகியவற்றின் மூலமாகப் ‘பாலியல் தொழிலாளி’ (sex worker) என்ற நிலையிலிருந்து ‘சமூக சேவகி’ (social worker) என்ற நிலைக்கு மாறுகிறார்.

சாதாரண பெண்கள் அனுபவிக்கும் துயரங்களிலிருந்து பன்மடங்குத் துயரங்களைப் பாலியல் தொழிலாளர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்கள் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். காவல்துறையினராலும், ரவுடி களாலும் துன்புறுத்தப்படுதல், கொலை செய்யப்படுதல், செய்யாத தவறுகளும் அவர்கள் மேல் சுமத்தப்படுதல் எனப் பல கொடுமைகளுக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள்.
‘எங்களுக்கு மற்றவர்களது பரிதாபமோ, தயவோ தேவையில்லை. எங்க ளுக்கு அங்கீகாரம்தான் வேண்டும்’ என்று அவர்கள் முன்வைக்கும் கோரிக் கைக்கு இந்தச் சமூகம் வைத்திருக்கும் பதில் கேள்விக்குரியது.

2005 முதல் பிரபல எழுத்தாளராக அறியப்படும் நளினி ஜமீலா, பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உறுப்பினர் என பல அடையாளங் களுடன் சமூகத்தில் பயணித்து வருகிறார். இப்போது தனது 69-ஆவது வயதில் நளினி ஜமீலா பொதுச் சமூகத்தில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். அதற்குக் காரணம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள்.

மணிலால் என்பவர் இயக்கிய, ‘பாரதப்புழா’ திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த நளினி ஜமீலாவுக்கு கேரள மாநில அரசின் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான சிறப்பு ஜூரி விருது இது. பாரதப்புழா திரைப்படம் பாலியல் பிரச்சினைகளைக் கையாளும் பெண்ணை மையமாகக் கொண்ட கதை. நடிகை சிஜி பிரதீப் என்பவர் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். “கதாபாத்திரத்துக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, உண்மையில் பாலியல் தொழிலாளியான அந்தப் பெண்ணின் உருவத்தில் என்னைப் பார்த்தேன். ஆம், என் சிறு வயதில் நான் ஒரு பாலியல் தொழி லாளியாக இருந்தேன். இதுவரை, வாழ்க்கையில் விலையுயர்ந்த புடவைகள் அல்லது ஆபரணங்களை நான் அணிந்ததில்லை. இந்த குணாதிசயங்களை படத்தில் கதாநாயகியின் ஆடை வடிவமைப்பில் பிரதிபலிக்க முயற்சித்தேன்.

“ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, ஒரு பாலியல் தொழிலாளியின் நடத்தை, உடல் மொழியை கதாநாயகிக்குக் கற்றுக் கொடுத்தேன். இந்தப் பணியைச் செய்தபோது கடந்த காலத்தில் நான் சந்தித்த கொடூரமான நினைவுகள் மீண்டும் என் கண்முன் வந்து சென்றன. படத்தில் என் வாழ்க்கையுடன் தொடர்புடைய காட்சிகள் இருக்கின்றன. மிகவும் சவாலான சூழ்நிலையில் தான் இந்தப் பணியைச் செய்தேன்” என்கிறார் நளினி ஜமீலா!
