வெளிநாட்டில் MBBS படித்தவர்கள் கவனிக்க வேண்டிய விவரங்கள்

வெளிநாட்டில் மருத்துவம் (MBBS) படித்துவிட்டு இந்தியாவில்

மருத்துவராகப் பணியாற்ற விரும்புவோர் செய்ய வேண்டிய பணிகள் விவரம்.

1. வெளிநாட்டிற்குப் படிக்கச் செல்லும் முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிந்துவிட்டு செல்ல வேண்டும்.

2.இந்திய மருத்துவ கவுன்சில் அதற்கு ஒரு தகுதிச் சான்றிதழ் தரும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3. ஐந்தரை ஆண்டுகள் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய மருத்துவ கவுன்சில் வைக்கும் தேர்வில் (FMGE) வெற்றிபெற வேண்டும்.

இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன் மற்றும் டிசம்பரில் நடக்கும்.

4. FMGE தேர்வில் 150 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி. தேர்ச்சி பெற்றவுடன் இந்தியாவின் எந்த முனையில் இருந்தாலும் அவர்கள் தரும் தேர்ச்சி சான்றிதழைப் பெற டில்லி செல்ல வேண்டும்.

5. இந்தியாவில் எந்த மாநிலத்தில் படித்தீர்களோ அந்த மாநிலத்தின் பள்ளி கல்வித் துறையில் உங்கள் 10 மற்றும் 12 ம் வகுப்புச் சான்றிதழின் பின்னே ரெட் சீல் வைக்க வேண்டும். இதற்கு அந்த மாநிலத்தின் தலைநகருக்குச் செல்ல வேண்டும்.

6. அதன் பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு சான்றிதழை இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தில் ஒப்படைக்க வேண்டும். அந்தச் சான்றிதழில் அவர்களிடம் உறுதிப்படுத்தும் முத்திரையிட வேண்டும்.

7.இப்போது அனைத்து சான்றிதழையும் இணைத்து அந்தந்த மாநிலங்களின் மருத்துவ கவுன்சிலில் பதிய வேண்டும்.

8.அதற்கு முன்பு அனைத்துச் சான்றிதழையும் (50 பக்கம் இருக்கும்) ஆறு நகல் எடுத்து அட்டஸ்ட் பெற வேண்டும். அதில் ஒரு நகலை மருத்துவ கவுன்சிலில் பதிய வேண்டும். பதிவு செய்ததற்கான சான்றிதழை அவர்கள் தருவார்கள்.

9.மாநில மருத்துவ கவுன்சில் கொடுத்த சான்றிதழை அந்தந்த மாநிலத்தின் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் அட்டஸ்ட் பெற்ற சான்றிதழுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது எந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்ற விருப்பமுள்ளது எனத் தெரிவிக்க வேண்டும்.

10. மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் நாம் கேட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆட்சேபனை இல்லாத சான்று (NOC) கொடுக்கக் கேட்டு ஒரு கடிதம் தரும்.

11.அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு நாம் கேட்ட மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து அட்டஸ்ட் பெற்ற சான்றிதழுடன் இணைத்துக் கொடுத்து கேட்க வேண்டும். அவர்களிடம் NOC யைப் பெற வேண்டும்.

12. நாம் கேட்ட மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பாளரிடம் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் கொடுத்த கடிதத்துடன் சான்றிதழ் அட்டஸ்ட் காப்பி இணைத்து NOC கேட்க வேண்டும். அவர்கள் NOC தருவார்கள்.

13. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொடுத்த இரண்டு NOC களையும் எடுத்துக்கொண்டு, அந்த மருத்துவக் கல்லூரி செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அட்டஸ்ட் சான்றிதழ்களுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு NOC தருவார்கள்.

14.மருத்துவப் பல்கலைக்கழகம் கொடுத்த NOC யை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் சென்று ஒப்படைக்க வேண்டும்.

அவர்கள் மருத்துவமனைக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற இறுதி உத்தரவு தருவார்கள்.

15. அவர்கள் கொடுத்த இறுதி உத்தரவை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொடுக்க வேண்டும். அவர்கள் அங்கு பணியாற்ற இறுதி உத்தரவு தருவார்கள்.

16. அதை எடுத்துக்கொண்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கொடுக்க வேண்டும். அவர் ஒரு இறுதி உத்தரவு தருவார்.

17.ஓராண்டு காலம் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்டர்ன்சிப் பணியாற்ற வேண்டும். அதை முடித்தவுடன் சான்றிதழ் தருவார்கள்.

18.அந்தச் சான்றிதழை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பெர்மனட் ரிஜிஸ்ட்ரேசன் என்று பெயர். அதற்கான சான்றிதழைத் தருவார்கள்.

19. அதன் பிறகு அவர்கள் கொடுத்த MBBS லைசென்சை வைத்து பணியாற்றலாம்.

20.FMGE தேர்வில் 175 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே AIIMS உள்ளிட்ட இடங்களில் முதுகலை மருத்துவம் படிக்க விண்ணப்பிக்க முடியும். இல்லையேல் NEET-PG தேர்வு எழுதலாம்.

வெளிநாட்டிலிருந்து வந்தது முதல் இதையெல்லாம் செய்து முடிக்க ஆகும் செலவு ரூ.10 லட்சம் ஆகும்.(லஞ்சம் இல்லாமல்).(வெளிநாட்டில் ஐந்தாண்டுகள் படிக்க ஆகும் செலவு.ரூ.50 லட்சம்.)

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க குறைந்த செலவுதான் ஆகும் என்று ஆரம்பத்தில் கூப்பிடுவார்கள். சென்னை சென்று வர ட்ரெயின் டிக்கெட் 400+400=800 தான். ஆனால் 800 ரூபாயில் சென்று வர முடியாது. 8000 செலவாகும். அதுமாதிரி தான் இதுவும்.

இவை அனைத்தையும் செய்தவுடன் அவர் மருத்துவராகிவிடுவார். அந்தப் பெற்றோர்கள் நோயாளிகள் ஆகிவிடுவார்கள். திரு. சூர்யா சேவியர் எழுதிய பதிவிலிருந்து…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...