படைத்திறல் பல்லவர் கோன் | 14 | பத்மா சந்திரசேகர்

 படைத்திறல் பல்லவர் கோன் | 14 | பத்மா சந்திரசேகர்

14.வெற்றித்திருமகன்

ந்திவர்மர் வீசிய வாளில் தனது கைவாளை பறிகொடுத்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் தலையை நோக்கி வேகமாக பாய்ந்தது பல்லவ மன்னரின் வாள். ஸ்ரீவல்லபர் வீரசுவர்க்கம் புக தயாரானவர் போல விழிகளை மூடி ஒரு கணம் மதுரை திருவாலவாயுடையாரை மனதிற்குள் பிரார்த்தித்தார்.


மிகுந்த ஆக்ரோஷத்துடன் நந்திவர்மர் வீசிய வாள், ஸ்ரீவல்லபர் தலையை கொய்யவிருந்த அந்த கண நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அந்த மாற்றம் நிகழ்ந்தது. சில கண நேரத்திற்கு முன்னர் ஸ்ரீவல்லபர் இருந்த அதே நிலையை அடைந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். அவரது கரத்திலிருந்த வாள் அவரது கை விட்டு நீங்கி, விண்ணில் பறந்து அவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மண்ணில் விழுந்தது.


நந்திவர்மர் திகைப்புடன் என்ன நடந்ததென பார்த்தார். அவரது எதிரில் ஆவேசத்துடன் நின்றிருந்தார் பாண்டிய இளவரசர் வரகுணவர்மர். இம்முறை வாய்ப்பு அவர் கரங்களில் இருந்தது. அதை சாதகமாக பயன்படுத்த எண்ணினார் வரகுணவர்மர்.
“நான் உயிருடன் இருக்கும் வரை, எனது தந்தையை தங்களால் நெருங்கவியலாது நந்திவர்மரே” கூறியபடி நிராயுதபாணியாக நின்றிருந்த நந்திவர்மர் சிரம் நோக்கி தனது வாளை வேகமாக பாய்ச்சினார்.


ஒரு கணம் தாமதித்திருந்தாலும் நந்திவர்மர் சிரம் உடலிலிருந்து விடை பெற்றிருக்கும். சூழலை புரிந்துக்கொண்ட நந்திவர்மர் விரைந்து தனது அஸ்வத்திலிருந்து இறங்கி, தனது வாளை கைக்கொள்ள எண்ணினார். அவரது எண்ணத்தை புரிந்துக்கொண்ட வரகுணவர்மர் தானும் விரைந்து தனது புரவியிலிருந்து இறங்கி, கீழே கிடந்த நந்திவர்மரின் வாளை தனது கால்கள் கொண்டு மிதித்துக்கொண்டார். அதற்குள் ஸ்ரீவல்லபரும் தனது வாளுடன் நந்திவர்மரை எதிர்க்க தயாராக நின்றார்.
கீழே கிடந்த வாளை காயப்பற்றும் வாய்ப்பும் பறிபோனதால், ஏமாற்றமும், அவமானமும் கொண்டு நின்றிருந்தார் நந்திவர்மர்.


“நந்திவர்மரே. இந்த வாளை கைக்கொள்ளுங்கள்” பல்லவ மன்னருக்கு இடப்புறமிருந்து ஒரு குரல் கேட்டது. அத்துடன், வாள் ஒன்று அவரை நோக்கி வந்தது. வாளை கைப்பற்றி, அந்த குரல் யாருடையது என பார்த்தார். இராஷ்டிரகூட இளவரசர் கன்னரதேவர் தனது படையுடன் தெள்ளாறு அடைந்திருந்தார்.

அடுத்த கணம், மீண்டும் ஆக்ரோஷமான வாள்வீச்சு தொடங்கியது. நந்திவர்மரும், கன்னரதேவரும் இணைந்து ஸ்ரீவல்லபரையும், வரகுணவர்மரையும் எதிர்த்து போரிட்டனர். மீண்டும் போர்க்களம் பல்லவர் வசம் வந்தது. அத்துடன் வெற்றி தேவதையின் பார்வையும் நந்திவர்மரிடம் வந்தது.
தொடர்ந்த போரில், தளர்ச்சியடைந்திருந்த ஸ்ரீவல்லபரை நோக்கி பாய்ந்த நந்திவர்மரின் வாள், அவரது வயிற்றில் காயத்தை ஏற்படுத்தியது. சற்று ஆழமான காயத்தை ஏற்படுத்திய நந்திவர்மரின் வாள், குருதியை பெருக செய்தது. மயங்கி சரிந்தார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர்.


வரகுணவர்மர் தனது தந்தை மயங்கி சரிந்ததைக் கண்டு துணுக்குற்றார். விரைந்து ஓடி வந்து, ஸ்ரீவல்லபரை தனது தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவரை நோக்கி விரைந்தார். பாண்டிய வேந்தர் போர்க்களம் விட்டு அகன்றதால், பல்லவர்கள் வெற்றி எக்காலம் முழங்கத்தொடங்கினர்.


பல்லவர்களின் எக்கால ஓசை கேட்டதும் பாண்டியப்படை சற்று குழப்படைந்தது. வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் போரில் வீரசுவர்க்கம் எய்தி விட்டாரோவென அச்சம் கொண்டனர். அதே நேரம், காயப்பட்டு வந்த ஸ்ரீவல்லபரை சோதித்தார் மருத்துவர்.
“இளவரசே. குருதி அதிகம் வெளியேறியுள்ளது. சீக்கிரம் மதுரை கொண்டு சென்று வைத்தியம் செய்யவேண்டும்” மருத்துவர் கூறியதும் வரகுணவர்மர் யானை ஒன்றின் அம்பாரியில் ஸ்ரீவல்லபரை படுக்கவைத்து, உடனே மதுரை நோக்கி அனுப்பினார். மருத்துவரும் அதே யானையில் வேந்தருடன் மதுரை நோக்கி பயணப்பட்டார்.


யானை ஒன்று அவசரமாக புறப்பட்டு செல்வதைக் கண்ட பாண்டிய வீரர்கள் வேந்தர் ஸ்ரீவல்லபருக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக கருதி போரைக் கைவிட்டு, வேந்தரைத் தொடர்ந்து சென்றனர்.
இன்னொரு புரம் பல்லவ வீரர்கள் வெற்றி முழக்கமெழுப்பிய படி உற்சாகத்தில் இருந்தனர். வீரர்களில் சிலர் தப்பியோடிய வீரர்களைத் துரத்தி சென்றனர்.


தந்தையை பத்திரமாக மதுரை நோக்கி அனுப்பிவிட்டு, மீண்டும் போர்க்களம் வந்தார் வரகுணவர்மர். ஆயினும், அதற்குள் படை பின்னேறத்தொடங்கியுருந்தது. வேறு வழியில்லாமல் வரகுணவர்மர் போர்க்களம் விட்டு நீங்க வேண்டியதானது.
வரகுணவர்மர் போர்க்களம் வந்து, நீங்குவதைக் கண்ட சோழ அரசர் குமராங்குசர் தனது புரவியில் தொடர்ந்தார். அதைக்கண்ட நந்திவர்மர், தனது படையில் ஒரு பிரிவுடன் குமராங்குசருடன் இணைந்துக்கொண்டார். பல்லவ நாட்டில் பாண்டியர்கள் கைப்பற்றியிருந்த பகுதிகளைக் கடந்து பாண்டியப் படையை விரட்டி, இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டார் நந்திவர்மர்.


தொடர்ந்து பாண்டியப்படைகளை விரட்டி வந்த நந்திவர்மர் ஓரிடத்தில் அணிவகுத்திருந்த படையைக் கண்டு ஆர்வமானார். அவரை விட மகிழ்ச்சியானார் குமராங்குசர். பழையாறையை நெருங்கியிருந்த பாண்டியப்படையை சுற்றி வளைத்தது சோழப்படை. குமராங்குசர் தனது படையுடன் சேர்ந்து, பாண்டியப்படையை துவம்சம் செய்யத்தொடங்கினர். வரகுணவர்மர் குறைந்த படைபலத்தைக் கொண்டு சோழப்படையுடன் இணைந்த பல்லவப்படையுடன் போரிடும் எண்ணத்தைத் தவிர்த்து, தொடர்ந்து சென்றார்.
பழையாறையில் பல்லவப்படையை தவிர்த்து மேற்கொண்டு பயணித்த வரகுணவர்மரைத் தொடர்ந்தது பல்லவப்படை. துரத்தி சென்ற படை, முன்னால் தப்பி ஓடிக்கொண்டிருந்த பாண்டியப்படையை நள்ளாறு என்னுமிடத்தில் மீண்டும் தாக்கினர். இம்முறையும் தாக்குதல் நடத்தாமல் பாண்டியப்படை தொடர்ந்து தப்பி சென்றது.


பாண்டியப்படை மதுரையை அடையும் வரைத் தொடர்ந்த நந்திவர்மரும், பல்லவப்படையும் பாண்டியப்படை வைகையைக் கடந்து சென்றதும் வெற்றி முழக்கத்துடன் திரும்பினர்.
பல்லவர்களின் சிறந்த போர்களில் ஒன்றான தெள்ளாற்றுப் போர் முடிவுக்கு வந்திருந்தது. பின்னாளில் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மர்” என அழைக்கப்படவிருக்கும் நந்திவர்மர், வெற்றி முரசு ஒலிக்க காஞ்சி திரும்பினார்.

தொடரும்…

ganesh

3 Comments

  • அருமையான எழுத்து நடை! வாழ்த்துகின்றேன்!

  • Goosebumps!!!

    வேற ஒன்னும் சொல்லத்தெரியலை 😍🌺

  • Trilling war

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...