அஷ்ட நாகன் – 2| பெண்ணாகடம் பா. பிரதாப்
நாக சாஸ்திரம் !
பாம்புகளைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. பாம்புகளில் ‘நல்ல பாம்பு’ பெரும்பாலான மக்களால் நம்பிக்கையுடன் இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது. பாம்புகள் பயந்த சுபாவம் கொண்டவை. அவை, அடர்ந்த வனத்திலோ, இருளிலோ அல்லது குளிர்ச்சியான பகுதியிலோ பதுங்கி மறைந்து வாழும். ஒருவர் பாம்பை தாக்க முற்படும் போது, தப்பிக்க வழி இல்லாத காரணத்தால் தான் அப்பாம்பானது மூர்க்கமாக தாக்க முற்படும். பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்பதே நிதர்சனம்.
சில வகையான பாம்புகள் தங்கள் இனத்தில் உள்ள சின்னஞ்சிறிய பாம்புகளை விழுங்கும். பாம்புகள் நம் கனவில் தோன்றுமா? அப்படி தோன்றினால் அதற்கான பலன் என்ன என்பதை இனி நாக சாஸ்திரம் மூலம் அறியலாம்.
இந்து மதத்தை சார்ந்தவர்கள் பாம்புகளை கொல்ல துணியமாட்டார்கள். அதைக் கொன்றால், நாக தோஷம் ஏற்பட்டு தங்கள் வம்சமே அழிந்து விடும் என்று அஞ்சுவர்.
ஆண் குழந்தைகள் வேண்டுவோர், நாக வழிபாடு புரிந்தால் ஆண் வாரிசு கிட்டும் என்று தீர்க்கமாக நம்புகின்றனர். அதேநேரம் யார் ஒருவர் நாகங்களை கொள்கின்றனரோ அவர்களின் 20 சந்ததிகளுக்கு ஆண் குழந்தையே பிறக்காது.
– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-
காலை வேளை!
பறவைகளுக்கு உறக்கம் கலைந்து விட்டது. உற்சாகமாக அனைத்தும் ‘கிரீச்… கிரீச்…’ என்று கீச்சிடத் தொடங்கிட கிழக்கு அடிவானப் பரப்பில் ஒரு ஆரஞ்சு பழமாட்டம் சூரியனும் சுட்டெரிக்க கிளம்பி எழுந்து காணப்பட்டான். இரவு முழுவதும் அப்பிக் கிடந்த இருட்டை பிடித்து ஒரே விழுங்காக விழுங்கிவிடும் வகையில் கதிரவனின் கதிர்க்கிரணங்கள் எங்கும் பிரகாசிக்க ஆரம்பித்தன. அதிகாலைக்கு உண்டான புத்துணர்ச்சியும் ஈரக்குளிர்ச்சியும் எங்கும் நிரம்பி காணப்பட்டது.
அரவிந்தும் நந்தனும் தேரடி பஜாரில் இருக்கும் தங்களின் ‘ஸ்ரீ மீனாட்சி புக் ஸ்டாலு’க்கு செல்வதற்கு ஆயத்தமாக இருந்தனர்.
உண்மையில் அரவிந்தும் நந்தனும் மிகவும் பரிதாபத்துக்குரிய பிறவிகள். அவர்களின் பெற்றோர் யார் என்று அவர்களுக்கே தெரியாது. இருவரும் காலத்தால் இணைக்கப்பட்ட இணைபிரியாத நண்பர்கள்.
இருவரும் தங்கள் இளம்பருவத்தில் கொல்லிமலையில் ஒரு ‘டீ’க்கடையில் வேலை செய்து வந்தனர். மூன்று வேளை சோத்துக்காக மாடு மாதிரி உழைத்தனர். நாளுக்கு நாள் டீக்கடை உரிமையாளரின் கொடுமை அதிகரிக்கவே அங்கிருந்து ஓட்டம் பிடித்து, திருச்சியை வந்தடைந்தனர். பசி மயக்கத்தால் திருச்சி தெப்பக்குளத்தின் ஓரமாக மயங்கிக் கிடந்த அவர்களை ‘நடராஜன் தாத்தா’ தான் காப்பாற்றி ஆதரவும் அரவணைப்பும் வழங்கி வந்தார்.
நடராஜன் தாத்தாவும் அவர்களைப்போலவே யாருமற்ற அனாதை. அவரின் நதிமூலம் ரிஷிமூலம் பற்றியெல்லாம் யாருக்கும் தெரியாது. தன்னைப்போலவே அரவிந்தும் நந்தனம் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணிய நடராஜன் தாத்தா, அவர்களைத் தன் சொந்த பேரன்களை போல பாவித்து… தன் வீட்டில் தங்க வைத்து, தான் நடத்தி வந்த புத்தகக் கடையில் வேலையும் போட்டுக் கொடுத்தார். ஆனால், இன்று அவர் உயிரோடு இல்லை. அவர் காலமாகி மூன்று மாதம் ஆகிவிட்டது.
இவ்வாறாக தன் கடந்தகால வாழ்க்கையை பற்றி அசைபோட்டவாறே மர நாற்காலியில் அமர்ந்திருந்தான். அரவிந்த்.
ஆழ்ந்த யோசனையில் இருந்த அரவிந்தை தட்டி எழுப்பி பேச ஆரம்பித்தான், நந்தன்.
“அரவிந்தா… என்ன பலமான யோசனையில இருக்க?”
“அது ஒண்ணுமில்லடா. அந்த கனவு பலிச்சிதுமோன்னு பயமா இருக்கு.”
“போடா முட்டாள்! கனவாவது பலிக்கறதாவது.”
“அப்படி இல்ல நந்தா… விடியற்காலை காணும் கனவு பலிக்குமுன்னு சொல்லுவாங்க. அதான் எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு.”
“டேய்! நம்ம சின்ன வயசுல கொல்லிமலையில ‘டீ’க்கடையில வேலை செஞ்ச காலத்துல எத்தனை நாள் ஆகாய கங்கை அருவியில குளிர்ச்சியிருப்போம். அந்த எண்ணங்கள் தான் உன் ஆழ் மனசுல பதிஞ்சு இப்போ கனவா வந்திருக்கு.”
“அப்போ அந்த கோயில், பாம்புகள், நாக கன்னி இதுவெல்லாம்…”
“அதுவெல்லாம் இதுவரைக்கும் நீ நம்ம பழைய புத்தக கடையில படிச்ச அமானுஷ்ய புத்தகங்கள், பார்த்த சீரியல் மற்றும் சினிமா அதோட பாதிப்பு அவ்வளவுதான்.”
“நந்தா… நீ சொல்றது சரிதானே வச்சிப்போம். ஆனா, அந்த கனவுக்கும் நம்ம நடராஜன் தாத்தாவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.”
“என்னடா சொல்ற?” நந்தன் தன் புருவங்களை உயர்த்தி கொண்டு ஆச்சர்யத்தோடு கேட்டான்.
“ஆமாண்டா… நம்ம நடராஜன் தாத்தா கூட அவரு சாகறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி, தான் செத்துட்டா தன் உடம்பை எரிச்சு அந்த அஸ்தியை ஒரு புனிதமான அருவியில் கரைக்க சொன்னாரே! அது உனக்கு ஞாபகம் இருக்கா?”
“அது எப்படிடா மறக்க முடியும். நாம ரெண்டு பேரும் தானே ஐதிக்கப்படி கட்டயடிக்கி சுத்தி வந்து தண்ணி குடம் உடைச்சு கர்ம காரியங்கள் செஞ்சி கொள்ளிட்டு, தாத்தாவோட அஸ்தியைக் கூட ஒரு சின்ன பானையில அடக்கி நாம வீட்டிலே அவருடைய உருவ படத்துக்கு முன்னாடி வச்சிருக்கோம்.”
“அதாண்டா நானும் சொல்றேன். கொல்லிமலையும் அருள் அம்சம் நிறைந்த மர்மமான மலை. அங்க இருக்கற ஆகாய கங்கை அருவியும் மூலிகை பலன் நிறைந்த புனிதமான அருவி. எனக்கு என்னவோ தாத்தாவோட அஸ்தியை அவர் கொல்லிமலை அருவியில கரைக்க நினைக்கறதா நமக்கு அந்தக் கனவின் மூலமாக சூட்சமமாக உணர்த்தரோன்னு தோணுது.”
அரவிந்தின் பேச்சை ஆமோதிப்பது போல் நடராஜன் தாத்தாவின் உருவ படத்திலிருந்த ஒரு பல்லியும் சகுனம் சொன்னது.
இருவரும் பல்லியின் சத்தத்தைக் கேட்டு வியப்புற்றனர். அரவிந்தன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.
“டேய்! பாத்தியாடா தாத்தா நமக்கு பல்லி ரூபத்தில் சகுனம் சொல்றாரு.”
அரவிந்தன் வார்த்தைகளை நந்தனால் ரசிக்க முடியவில்லை.
ஆனால், அரவிந்தின் மனம் நோகக் கூடாது என்பதற்காக ஒப்புக்காக தலையசைத்தான்.
பின்பு, இருவரும் நடராஜன் தாத்தாவின் உருவப்படத்தை வணங்கிவிட்டு, தேரடி பஜாரில் “ஸ்ரீ தைலா சில்க்ஸ்” எதிரில் இருக்கும் தங்களின் ஸ்ரீ மீனாட்சி பழைய புத்தகக் கடையை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
அடுத்து அவர்களின் புத்தகக்கடையில் நடக்கப்போகும் அமானுஷ்ய அதிசயம் என்ன? வெயிட் ப்ளீஸ்…
17 Comments
இரண்டாவது அத்தியாயம் படித்தேன். மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செல்கிறது. அருமை. மேலும் தொடருங்கள். நன்றி.
தங்கள் தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி ஐயா.மகிழ்ச்சி.
அருமை நண்பரே.
மிக்க நன்றி இனிய நண்பரே… நீங்கள் தொடர்ந்து வாசிப்பது எனக்கு மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது.
அருமை அய்யா உங்கள் கதை அரூமையாக உள்ளது உங்கள் எழுத்து பனி தொடர என் பரிபுரண வாழ்த்துகள் அய்யா
மிக்க நன்றி ஐயா… மனம் மகிழ்கிறேன்.
விறுவிறுப்பாக செல்கிறது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தால் நன்றாக இருக்கும்
தங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்கிறேன் நண்பரே…இது குறித்து மின் கைத்தடி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.
அருமையா தொடர்கிறீர்கள் தம்பி. ஆனா உடனே தொடரும் போட்டா மாதிரி இருக்கு. வாரம் ஒரு முறை எனும்போது சற்றே நீளமாக அத்தியாயத்தை கொடுக்கலாம். இது என் கருத்து.
தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன் ஐயா… தங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்கிறேன்.
அருமை. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழி.தங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்கிறேன்
அருமையான வரிகள்.. முதலில் ரசிக்க வைக்கிறது உங்கள் வார்த்தைகள் 👌 கருமை அப்பிய இரவு என்றும் சூரியனை ஆரஞ்சு நிறத்திலும் வர்ணிப்பது அவ்வளவு அழகு சகோ 🤝
அடுத்து அவன் நினைவில் தாத்தா உயிர்போடே இருக்கிறார் இன்றும்.
கொல்லிமலை அருவியில் அவர் அஸ்தியை கரைக்க தாத்தா சம்மதம் சொன்ன விதம் அவ்வளவு அழகு 👌
மொத்தத்தில் ரசிக்க வைக்கிறது உங்கள் வரிகள் 👌
வாழ்த்துக்கள் எனதருமை சகோ 💐🤝
மிக்க நன்றி விமல்… தங்கள் விமர்சனம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது… மகிழ்ச்சி.
Interesting one
மிக்க நன்றி தோழி… மகிழ்ச்சி.
மிக அருமையான கதை நகர்வு… ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருப்பது சிறப்பு
எழுத்தாளருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்