பத்துமலை பந்தம் | 12 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 12 | காலச்சக்கரம் நரசிம்மா

12. அலங்-கோலாகலம்

யக்குனர் விஷ்வாஸ் தனது காரைச் செலுத்திக்கொண்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி, கேட் அருகே சற்று நிதானித்து இடப்புறம் பார்த்தான். தொலைவில் கனிஷ்காவின் கருமை நிற BMW விரைந்து கொண்டிருந்தது. ‘கனிஷ்காவுக்குத் தெரியாமல் நிச்சயதாம்பூலத்திற்கு வரவும்’, என்று மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான் மிதுன் ரெட்டி. கனிஷ்காவுக்கு எவ்வளவு பயப்படுகிறான் என்பதை இன்றுதான் விஷ்வாஸ் புரிந்துகொண்டான். விஸ்வாஸு க்கு மிதுனின் மீது அளவு கடந்த பிரியம். ‘விஷ்வாஸ் இயக்கினால் உடனே டேட்ஸ் கொடுக்கிறேன்’ என்று கூறியே, பல தயாரிப்பாளர்களை இவன் பக்கமாகத் தள்ளியிருந்தான்.

மிதுன் ரெட்டிக்கு ஆந்திராவில் சொத்துகள் குவிந்து கிடந்தன. தெலுங்கானாவிலோ அதற்கு மேல் சொத்துகள். இருப்பினும், தமிழ்த் திரைப்பட உலகத்தில் டாப்பில் இருந்ததால், இங்கேயே குடியேறிவிட்டான். அவன் உழைப்பில் வாங்கிய சொத்துக்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் இருந்தன. அவனது தாய் பாமினியோ மைசூர் அருகேயுள்ள மாண்டியாவைச் சேர்ந்த நிலச்சுவான்தாரின் மகள். மிதுனின் அக்கா நிருபமாவோ, கோவையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரை மணந்திருந்தாள். நல்லமுத்துவின் குடும்பம் போன்று அனைவருமே விவிஐபி.க்கள் இல்லாவிட்டாலும், திருமகள் அவர்கள் குடும்பத்தினரையே சுற்றி வந்தாள். டிஷ்யூ பேப்பருக்குப் பதிலாக ஒரு ஐநூறு ரூபாய்க் கட்டை வைத்து கைகளைத் துடைத்துக்கொண்டாலும் வியப்பில்லை.

விஷ்வாஸ்-ஸுக்கு ஒரு விஷயம் புரியவில்லை. மிதுன் ரெட்டி கனிஷ்காவின் மீது பைத்தியமாக இருந்தான். தன்னைப் பேட்டி காண ஏதாவது டிவி சேனலில் இருந்து அழைப்பு வந்தால், ‘என்னுடன் எனது வருங்கால மனைவி கனிஷ்காவை அழைத்து வருவேன்’ என்பான். ஏன்..! இரண்டு நாட்களுக்கு முன்பு கூட போன் செய்து, ”எனக்கும், கனிஷ்காவுக்கும் நெருக்கமாகக் காட்சிகளை அமைத்துக்கொள் விஷ்வாஸ்..! எங்களுக்கு எப்போது நிச்சயதாம்பூலம் நடைபெறும் என்று தெரியவில்லை. உனது படம், ‘சாமுத்ரிகா’ வின் காட்சிகள்தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம்” என்று சொன்னவன், இன்று திடீரென்று கனிஷ்காவைக் கழட்டி விட்டு, தனது தாய்மாமனின் மகள் சௌரபாவுடன் நிச்சயதாம்பூலத்தைச் செய்து கொள்கிறான். இரண்டு நாளில் எப்படி மனமாற்றம் அடைந்தான்? பர்சில் பத்திரப்படுத்தியிருந்த கனிஷ்காவின் புகைப்படத்தை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பார்த்து உதட்டைக் குவிப்பவன், எதனால் இந்த முடிவுக்கு வந்தான்..?

ஏறக்குறைய இதே போன்ற கேள்விகள் மனதில் எதிரொலிக்கத்தான், அந்தக் காரைத் தொடர்ந்த வாடகைக் காரில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தாள், கனிஷ்கா.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்து சரசமாடும் மிதுன் இவளுக்குத் தெரியாமல் நிச்சயதாம்பூலம் செய்து கொள்கிறான் என்கிற பேரதிச்சி கனிஷ்காவின் மனதில் மெதுவாக கோபமாக மாறிக் கொண்டிருந்தது.

“மிதுன்..! காதலை எல்லாம் இப்பவே கொட்டிட்டேன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் போர் அடிக்கும். குழந்தைங்க சாக்லெட்டை வச்சு வச்சு ருசிச்சு சாப்பிடற மாதிரி நம்ம லவ் இருக்கணும். ஐம் யாம் ஒரீட்..! நீ ரொம்ப பொசசிவா இருப்பியா..?” –என்று இவள் கேட்டபோது, அவன் சிரித்து விட்டான்.

“யு நோ..! எங்கப்பா ஆந்திராவுல பெரிய ஆளு. எனவே தினமும் டிடிடி-ல இருந்து ஒரு பாக்ஸ் லட்டு வரும். தினமும் வரும். ஆனா ஒரு நாள் கூட நான் அதைச் சாப்பிடாம இருந்தது இல்லே. முதலுல பாலாஜி மேல இருக்கிற பக்தியால் சாப்பிட்டேன், இப்ப லட்டு மேல இருக்கிற பக்தியால் சாப்பிடறேன். ஒருநாள் கூட எனக்கு அலுக்கலை. நீ எனக்கு திருப்பதி லட்டு..! தினமும் ருசிச்சாலும் பக்தி குறையாது.” –என்றானே..!

இன்று மொட்டை போட்டு, தலை முழுகி விட்டானே ! அவனை சட்டையைப் பிடித்து நாலு போடு போட்டு, ரசாபாசம் செய்து நிச்சயதாம்பூலத்தையே நிறுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் விஷ்வாஸைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

தொலைவில் சென்றுகொண்டிருந்த விஷ்வாஸின் காரையே வெறித்துப் பார்த்தாள்.

இவளுடைய பெயரை தேவானை என்றுதான் வைத்திருந்தார், நல்லமுத்து தாத்தா. ஆனால் சினிமாவுக்காக கனிஷ்கா என்று மாற்றிக்கொண்டபோது, தாத்தா கடுமையாக எதிர்த்திருந்தார். “அழகா எல்லாருக்கும் முருகன் சம்பந்தப்பட்ட பெயரை வச்சிருக்கேன். நீ நொறுங்கி விழுந்த விமானத்தின் பெயரை வச்சிருக்கே. கனிஷ்கர் மன்னர்-னு சொன்னாகூட, அந்த பெயர் எனக்கு அச்சான்யமா படுது.! உயர உயரப் பறக்கிறே..! கீழே விழாமப் பார்த்துக்க..!” –என்றார்.

“தாத்தா..! பத்திரமா இருக்க வேண்டியது, உங்க பையன் வயித்து பெயர்த்தி, மயூரி தான். அவள்தான் விமானத்துல பறக்கிறவ..!” -என்று கிண்டலாகக் கூறியிருந்தாள். ஆனால் இன்று கனிஷ்கா விமானமாக நொறுங்கி விழுந்து விட்டாள். அந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்தவன் மிதுன் ரெட்டி.

முன்னால் காரில் சென்றுகொண்டிருக்கும், விஷ்வாஸை நினைத்துப் பல்லைக் கடித்தாள் !

“துரோகி..! இவளிடம் நட்பு பாராட்டிக்கொண்டு, இவளது எதிர்காலத்திற்காக உயிரையே விடுபவன் போல பேசிக்கொண்டு, இவளுக்குப் பின்னாடி, வேலை செய்கிறான். இவனை அழிக்க வேண்டும். இவன் படத்தில் இன்னும் ஒன்றிரண்டு காட்சிகள் நடித்துக் கொடுத்துவிட்டு, பிறகு டேட்ஸ் கொடுக்காமல் அழிக்க வேண்டும்..!” -தீர்மானித்தபோது ‘பிங்’ என்று செல்போனில் ஒரு அலெர்ட்..!

தம்பி தேஜஸ் வாட்ஸாப் செய்திருந்தான். “பாண்டிமுத்து மாமாவின் மனைவி சத்தியவதி, முன்ஜாமீன் கேட்டு மனு..!” –என்கிற மெசேஜை அனுப்பி இருந்தான். கனிஷ்கா இருந்த மனநிலையில் அந்தத் தகவல் அவளுக்கு அதிர்ச்சியைத் தரவில்லை. இன்னும் சொல்லப் போனால், இவளது மாமா பெண் மயூரிக்கு வருத்தமளிக்கும் விஷயம் என்பதால், அதனைச் சற்று மனதார ரசித்தாள். சிறுவயதில் இருந்தே, மயூரியைக் கண்டால் கனிஷ்காவுக்கு பிடிக்காது.

தான் பெரிய நடிகை, கோடிகோடியாகச் சம்பாதிப்பவள், நடிகையாக மயூரியைவிடப் புகழ் பெற்றவள் என்றாலும், கனிஷ்காவும், மயூரியும் ஒன்றாக இருக்கும்போது, அவளுக்குத்தான் மௌசு அதிகமாக இருக்கும். ஒரு முறை மும்பை மால் ஒன்றில் இவளும், மயூரியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. ஒருவரையொருவர் தவிர்க்க முடியாதபடி சந்திக்க நேர்ந்ததால், “லெட்ஸ் ஹாவ் அன் ஐஸ்கிரீம்” என்று வேண்டாவிருப்பாக ஐஸ்க்ரீம் பார்லரில் நுழைய, அங்கு கூட்டமாக ஐஸ்க்ரீம் அருந்திக் கொண்டிருந்த சில மாணவிகள் கனிஷ்காவை அடையாளம் கண்டுகொண்டனர். அவளிடம் ஆட்டோகிராப் கேட்ட அவர்களின் பார்வை மயூரியின் மீது விழுந்தது.

“அவங்களும் நடிகையா..? உங்க பிரெண்டா..?” என்று கேட்க, “அவ என்னோட கசின்” -என்றாள் கனிஷ்கா.

“உங்க கசின் உங்களைவிட அழகா இருக்காங்க.! அவங்க நடிக்க வந்தா, உங்களுக்கு மார்க்கெட் போயிடும்..!” -என்று ஜோக் என்கிற பெயரில் ஒரு குண்டு மாணவி கூற, அன்று கனிஷ்காவுக்கு மயூரியின் மீது வன்மம் அதிகரித்தது.

செங்கல்பட்டைக் கடந்து, மலைவையாவூருக்கு செல்லும் பாதையில், இருந்த பண்ணை வீட்டினுள் விஷ்வாஸின் கார் நுழைய, அந்த வாடகைக் காரும், அதன் பின்னேயே ஊர்ந்தது.

விஷ்வாஸ் ஸ்டைலாகத் தனது காரில் இருந்து இறங்கி, தோட்டத்தின் நடுவில் இருந்த வீட்டை நோக்கி நடந்தான். சுமார் இருபது கார்கள் மட்டுமே அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. நெருங்கிய குடும்பத்தினரைத் தவிர, விஷ்வாஸ் மட்டும்தான் நிச்சயதாம்பூலத்திற்கு அழைக்கப்பட்டிருந்தான்.

விஷ்வாஸின் பின்னால் அடிமேல் அடிவைத்து தனது ஹீல் செருப்பு கான்க்ரீட் பாதையில் சப்திக்காமல் நடந்தாள் கனிஷ்கா. திடீரென்று முகத்திற்கு முன்பாக கிளாப் அடிப்பது போல் சென்று நின்று, மிதுனை அதிர்ச்சி அடையச் செய்ய வேண்டும். நிச்சயதாம்பூலக் காட்சியை ‘கட் இட்’ என்று மிதுனே சொல்ல வேண்டும். ‘பேக் ஆஃப்’ என்று சொல்லி உறவினர்களை விரட்ட வேண்டும்.” என்று எண்ணியபடி கனிஷ்கா நடந்தாள்.

வெளியே எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், நிச்சயதாம்பூல வைபவம் நடக்கும் ஹால் மிகவும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மிதுன் ரெட்டி பட்டு வேட்டி, குர்த்தா அணிந்து கம்பீரமாக நின்றிருந்தான். கையில் ஸ்வர்ண கடா..! கழுத்தில் கனமான செயின்..! கல்யாண மாப்பிள்ளை கெட்டப்பில் அசத்தலாக இருந்தான். ஆனால் இவளுடன் நிச்சயதாம்பூலம் நடந்திருந்தால், அந்த கம்பீரத்தை ரசித்திருக்கலாம். எவளோ ஒருவளுடன் நிச்சயதாம்பூலம் என்கிறபோது, இவள் அவனை ரசிக்க முடியுமா என்ன ?

அதற்கு மேல் கனிஷ்காவால் கட்டுப்படுத்த இயலவில்லை.

“மிதுன்… யு ஸ்கௌண்டரல்..!” –கனிஷ்கா வீறிட்டு அலற, மிதுனின் முகம் பேயறைந்தது போல மாறியது. அவன் தாய் பாமினி, தங்கை நிருபமா, அப்பா கோதண்டராம ரெட்டி, தாய்மாமன், மணப்பெண் சௌரபா என்று அனைவரும் கொந்தளித்து நிற்கும் கனிஷ்காவைக் கலவரத்துடன் நோக்கினர்.

“ஹவ் டேர் யு சீட் மீ..? நான் என்ன அடுத்த வீட்டு அம்புஜமா இல்லை கோடி வீட்டு கோகிலாவா…? ஜஸ்ட் லைக் தட், என்னைத் தூக்கிப் போட..! நான் யார் தெரியுமா..?” — என்றவள் சட்டென்று நடனமாடிக் கொண்டே பாடத்தொடங்கினாள்.

“நான்தாண்டி காத்தி… நல்லமுத்து பேத்தி..! ஒத்தையா… மொத்தமா எத்தனை பேர் வாரீங்க..?” என்றபடி மேடைமீது வைக்கப்பட்டிருந்த மங்கலப் பொருட்களைத் தனது காலால் ஒவ்வொன்றாக எட்டி உதைக்க, தட்டுகள் பறந்து பெரும் சப்தத்துடன் நிலத்தில் விழுந்தன.

கோலாகலமாகத் தொடங்கிய நிச்சயதாமபூல வைபவத்தை, கனிஷ்கா அலங்கோல விழாவாக மாற்ற, அவளை நெருங்கவே அனைவரும் பயந்தனர்.

மிதுன், விஷ்வாஸை நோக்கிக் கண்ணசைக்க, அவன் கனிஷ்காவை நெருங்கி அவளது தோளைப் பற்றி, சமாதானம் செய்ய முயன்றான். அவ்வளவுதான்..! அவனது தீண்டல் அவளது ஆவேசத்தைக் கிளப்ப, ஒரு முறை சுழன்று, ஓங்கி அவனது கன்னத்தில் ஒரு அறை விட, விஷ்வாஸ் நிலைகுலைந்து அங்கிருத்த நாற்காலியில் சரிந்தான். மிதுன் வாயடைத்துப் போய் நின்றான்.

“மிதுன்..! நீ யாருடைய கட்டாயத்தில் இதற்குச் சம்மதிச்சே..?” –கனிஷ்கா அலறினாள்.

“லெட் மீ எக்ஸ்பிளெய்ன்..!” –மிதுனின் அக்கா நிருபமா அவளை நோக்கி நகர்ந்து வர, தனது சுட்டு விரலை நீட்டி அவளை எச்சரித்தாள்.

“நான் விஷயம் தெரிஞ்சு வந்தப்புறம், எனக்கு நீ எக்ஸ்பிளெய்ன் செய்யறியா..? நேத்தியே என்னை எக்ஸ்பிளெய்ன் பண்றதுதானே..! மிஸஸ் பாமினி கோதண்டராமன்..! ரொம்ப அக்கறை உள்ளவங்க மாதிரி, என்னோட ஜாதகத்தை வேறு நீங்க கேட்டு வாங்கினீங்களே..! இப்ப உங்க தம்பி பெண்ணை உங்கள் மருமகளா கொண்டு வர்றீங்க..? அப்ப எதுக்கு என்னோட ஜாதகம் கேட்டீங்க..?” –என்றவுடன் மணப்பெண் சௌரபா திடீரென்று இடைமறித்தாள்..!

“நானும் போனாப் போகுதுனு பார்க்கறேன்… என்ன நீ ஆட்டம் போடறே..? நீ சினிமா நடிகைன்னா அது வெளியில..! என்னோட நிச்சயதாம்பூலத்துல நுழைஞ்சு நீ கலாட்டா செஞ்சே, ஐ வில் கால் தி போலீஸ்.” –சௌரபா கூற, கனிஷ்காவின் கோபம் அதிகரித்தது.

நேராகச் சென்று, மிதுனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தாள்.

“கண்ட கண்ட பிட்ச் எல்லாம் என்னை கேவலமா பேசறது..! கேட்டுக்கிட்டு சும்மா இருக்கே..!” –என்றவள், மீண்டும் பாமினியை நோக்கினாள்.

“சொல்லுங்க..! என்னோட ஜாதகத்தைக் கேட்டு வாங்கினீங்களே. ஏன் எங்க அம்மா கிட்டே பெண் கேட்டு வரலை..?” — கனிஷ்கா கேட்டாள் .

சற்று தயங்கி மிடறு விழுங்கிய பாமினி, சட்டென்று பதில் கூறிவிட்டாள்.

“உன்னோட ஜாதகம் மிதுன் ஜாதகத்தோட பொருத்தலை..!” –பாமினி சொன்னதும், சற்றே அதிர்ந்தாள் கனிஷ்கா.

“யார் சொன்னாங்க..? மிதுன்..! வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே..? நாம ‘அகழி’ பட ஷூட்டிங்குக்காக கும்பகோணம், போனப்ப, நீதானே என்னை வைத்தீஸ்வரன் கோவில் அழைச்சுக்கிட்டுப் போனே..! ஜாதகம் பொருந்திருக்குனு அங்கே ஒரு ஜோசியர் சொல்லலை..?” –கனிஷ்கா கூறினாள்.

மிதுன் அமைதி காக்க, நிருபமா, சற்றே கோபத்துடன் முன்னே வந்தாள்.

“நீ இவ்வளவு ஆர்ப்பாட்டம் செஞ்சு கேட்கிறதால உண்மையைச் சொல்றேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, மிதுன் ரெட்டி உயிருக்கு ஆபத்து. அதனால என்னோட மாமா பெண்ணுக்கு அவனை மணமுடிக்கிறோம்.” –நிருபமா கூற, கனிஷ்கா அதிர்ந்தாள்..!

”வாட் நான்சென்ஸ்..? எந்த மடையன் சொன்னான்..?” –கனிஷ்கா உறுமினாள்.

முதன்முறையாக மிதுன் ரெட்டியே வாய் திறந்து பேசினான்.

“இட்ஸ் ட்ரூ, கனிஷ்கா..! நமக்கு கல்யாணம் நடந்தால் நான் இறந்து போய்டுவேன்னு சொன்னார். இறக்கிறதை பத்தி நான் கவலைப்படலை..! ஆனால் நீ கொலைகாரியாகக் கூடாதுங்கிறதால் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலை.” –மிதுன் ரெட்டி சொன்னான்.

“என்ன உளர்றே மிதுன்..? நான் ஏன் கொலைகாரியா மாறணும்..?” –திகைத்துப் போய் நின்றாள் கனிஷ்கா.

“ஆமாம்..! நம்ம கல்யாணம் நடந்தால், நீ என்னை கொலை செய்வியாம்..” –மிதுன் கூறியதும், சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது கனிஷ்காவுக்கு.

“இதுக்காகவா என்னை விட்டுட்டு, உன் மாமா பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறே..? எந்தப் பைத்தியக்காரன் இந்த ஜோசியத்தைச் சொன்னான்..?” –கனிஷ்கா கேட்டான்.

“அந்தப் பைத்தியக்காரன் நான்தான் பெண்ணே..!” –சிரித்துக் கொண்டிருந்த கனிஷ்கா, ஒரு சாத்வீகமான குரலை கேட்டு, திகைத்துப்போய் திரும்பினாள்.

“நான்தாம்மா அந்த ஜோசியத்தைச் சொன்னேன். உங்க குடும்பத்துக்கு கஷ்டதசை தொடங்கி இருக்கு. மிதுன் ரெட்டி உன்னைத் திருமணம் செஞ்சுக்கிட்டா, நீ அவனைக் கொன்னுடுவே..! அதனாலதான் அவனுக்கு வேறு இடம் பாருங்கன்னு மிதுனோட அப்பாகிட்டே சொன்னேன்.” -அந்த மனிதர் சிரித்தபடி கூறினார்.

சிரித்துக் கொண்டிருந்த கனிஷ்காவின் வாய் அப்படியே உறைந்து போக, அந்த மனிதரையே வெறித்து பார்த்தாள். அந்த மனிதரின் முகம் அவளுக்கு பரிச்சயமாகத் தோன்றியது. இவரை எங்கோ பார்த்திருக்கிறாள். சட்டென்று அவளுக்குப் புரிந்து போனது. இவர் தாத்தாவுடன் அடிக்கடி தென்படும் சாமியார். அவர் பெயர்…?” –யோசனையுடன் கனிஷ்கா அவரையே வெறிக்க, அவர் கலகலவென்று சிரித்துக் கொண்டே அவளை வெறித்தார்.

“என்னைத் தெரியலையாம்மா..? நான்தான் உங்க தாத்தாவோட ஆலோசகர்..! சஷ்டி சாமி.” என்றார் அவர்.

–தொடரும்…

ganesh

2 Comments

  • Twist

  • Super. Would be really helpful if the link to the next episode is available

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...