அந்தாதிக் கதை | இதயக்கருவ​றையில்! – நித்யா

 அந்தாதிக் கதை | இதயக்கருவ​றையில்! – நித்யா

ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்ட கைதிக்கு உடனேயே விடுதலை கிடைத்து வெளிவிடப்பட்டடால் எப்படியிருக்குமோ அப்படியான மகிழ்ச்சியில் இப்போது தத்தளித்தனர் ராகவனும் லட்சுமியும்.

நீண்ட நாளைக்குப் பிறகு மனம்விட்டுச் சிரித்தார் ராகவன்.

“தீபா…?! தீபா… ?!” இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கமா எல்லாம் எடுத்து வச்சாச்சா நேரமாயிட்டே இருக்கு அப்புறம் கடைசி நிமிஷத்துல இத மறந்துட்டேன் அதை மறந்துட்டேன் சொல்லாத சரியா…?

அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்திவிட்டு,

எல்லாம் ரெடிங்க வண்டி வந்தா கிளம்ப வேண்டியது தான். எட்டு வருஷம் கழிச்சி இப்போதான் மறுபடியும் சென்னைக்கு போறோம்.

பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சுங்க.

காலேஜ் படிக்கும்போது நான், அபி, அனு மூணு பேரும் ரொம்ப நெருங்கிய தோழிகளா இருந்தோம். அபி எப்பவும் துறு துறு ன்னு இருப்பா. அவ எங்க இருக்காளோ அந்த இடமே ரொம்ப கலகலப்பா மாறிடும். மனசுல எவ்ளோ கவலை இருத்நாலும் அதை வெளி காட்டிக்கவே மாட்டா எப்பவும் சிரிச்சிட்டே இருப்பா எல்லாரையும் சிரிக்க வைப்பா. அவளுக்கு இப்படி ஒரு முடிவு வந்து இருக்க கூடாது.

சரி விடும்மா…, அவளோட விதி முடிஞ்சி போச்சு யார் என்ன பண்ண முடியும் .?

விதி…? இந்த ஒன்னு சொல்லி எல்லாரும் அதுமேலயே பழி போட்டு தப்பிச்சிக்கலாம் இல்ல.?

ஆனா அபி விஷயத்துல அப்படி சொல்ல முடியாதுங்க. எப்பவும் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கறவ அபி. பொதுவா நமக்கு பிடிச்சவங்களுக்கு நாம எதெல்லாம் கொடுக்கணும் கொடுக்க கூடாது யோசிப்போம். ஆனா அபி அப்படி இல்லங்க அவகிட்ட வந்து கேட்டா உயிரைக்கூட கொஞ்சமும் யோசிக்காம கொடுப்பா. அப்படித் தான் அவளோட ஆசை,காதல்,கனவு,கல்யாணம் இப்படி தன்னோட ஒட்டு மொத்த வாழ்க்கையையும் விட்டு கொடுத்துட்டு போயிட்டா.

இப்பவும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அவ மனசில இருந்த காதல ஆகாஷ் கிட்ட சொல்றதுகாக அவ காத்திருந்த நாள்.

அனு,அபி,தீபா,ஆகாஷ்,கார்த்திக் அனைவரும் கல்லூரி நண்பர்கள். அனு,ஆகாஷ்,கார்த்திக் மூவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.ஒரே பள்ளி, இன்று ஒரே கல்லூரி, இங்கு தான் அபியும்,தீபாவும் இவர்களுடன் நட்பானது.

மூன்றாண்டு கால நட்பு தான் என்றாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசம் நீ நான் என்று போட்டி போடச் சொல்லும் அளவிற்கு இருந்தது. எப்போது எங்கு சென்றாலும் ஒரே மாதிரி ஒரே நிறத்தில் உடை அணிவது, ஒருவர் பிறந்தநாள் என்றால் மற்ற நால்வரும் சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுப்பது,கேக் வெட்டுவது என்று எப்போதும் ஜாலியாக சுற்றி திரிவார்கள். கல்லூரியில் இவர்களுக்கு பஞ்ச பாண்டவர்கள் என்று ஒரு புனைப் பெயரும் உண்டு.

அன்று ஆகாஷின் பிறந்தநாள். மற்ற நால்வரும் சேந்து என்ன செய்வது என்று திட்டம் போட , மறுபுறம் அபி தன் காதலை எப்படியாவது ஆகாஷிடம் சொல்லி விட வேண்டும் என்று எண்ணினாள்.

பின்னால் என்ன நடக்க போகிறது என்று முன் கூட்டியே அறியும் திறன் மட்டும் மனிதனுக்கு இருந்து இருந்தால் யாரும் வாழ்க்கையில் கஷ்டப்பட கூடிய சூழ்நிலை இருந்திருக்காதோ என்னவோ?

“ கண்ணீரும்
தித்திக்கும்
இந்த
காதலில்
மட்டுமே “
ஆனால் அபியின் கண்ணிர் தித்திக்குமா ?
ஹாய் அபி….?!

தீபா வந்துட்டியா ஏண்டி இவ்வளோ நேரம் நான் ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கேன் தெரியுமா?

சாரி செல்லம் வர்ற வழில அப்பா வண்டி பஞ்சர் அப்புறம் ஒரு ஆட்டோ பிடிச்சு வரேன் அதான் லேட் ஆயிடுச்சு.

சரி ஆகாஷ் கிட்ட விஷயத்த சொல்லிட்டியா என்ன சொன்னான் ? ஒக்கேதானே ?

இன்னும் இல்லடி. கொஞ்சம் பயமா இருக்கு.

பயமா உனக்கா…? எங்க அந்த மூஞ்சிய கொஞ்சம் காட்டு பார்ப்போம்.

விளையாடாத தீபா., நான் என் காதலை சொல்லி ஒருவேளை ஆகாஷ் அதை மறுத்துட்டா ? அதான் எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு.

அய்யோ ஏண்டி இப்படி இருக்க ? இன்னும் சொல்லவே இல்ல அதுக்குள்ள இப்படி ஆயிட்டா, அப்படி நடந்துட்டான்னு நீயே ஏன் நினைக்கற? என் அபியை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா என்ன ? உன்னை போல் ஒருத்தி மனைவியா கிடைக்க ஆகாஷ் தான் கொடுத்து வச்சி இருக்கணும். சரி இப்படியே என்கிட்ட பேசி நேரத்தை கடத்தாம நீ போய் பேசிட்டு வா போ. ஆல் த பெஸ்ட் டி .

ஆகாஷ் வரவிற்காக காத்திருந்தாள் அபி. இதோ ஆகாஷ் வந்து விட்டான்.அவனை பார்த்ததும் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறப்பது போல் ஒரு உணர்வு,படபடப்பு,சந்தோஷம்,பயம் என எல்லாம் கலந்த ஏதோ விவரிக்க முடியாத ஓர் உணர்வு அவளுக்குள்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” ஆகாஷ்.

“தேங்யூ அபி”.

ஆகாஷ் இந்தா உன்னோட பிறந்தநாளுக்கு என்னோட சின்ன பரிசு.

என்ன இது.?

அப்புறமா தனியா பிரிச்சி பாரு.

சரி. ம்ம் அபி அனுவை பார்த்தியா வந்ததுல இருந்து தேடிட்டு இருக்கேன் ஆளையே காணோம்.

இல்ல ஆகாஷ் நான் பார்க்கல.அப்புறம் ஆகாஷ் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.

நானும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்று அவன் சொன்னதும், ஒரு வேளை தன் மனதில் இருப்பது போல் அவனுக்கும் தன் மீது காதல் இருக்குமோ என்று யோசித்தாள் அபி.

என்ன விஷயம் ஆகாஷ்?

அத சொல்லத்தான் இந்த அனுவை தேடிட்டு இருக்கேன், ம்… இதோ வந்துட்டா பாரு.

“ஏய்…அனு… இங்க இருக்கோம் என்று கையசைத்தான்.

ஹாய் டா, சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆகாஷ் என்று சொல்லி ஒரு பரிசுப் பொருளையும் தந்தாள்.

ஆகாஷ் ஏதோ பேசணும்னு சொன்னியே ? … அபி.

ஆமா அபி. தீபா எங்க ? அவளையும் வச்சிட்டு பேசினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

தன்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி விட்டு இப்போது தீபாவை வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்கிறான் என்ற குழப்பத்துடன். நான் போய் தீபாவை கூட்டிட்டு வரேன்.

அபி வந்து சொன்னதும், “என்னடி சொல்ற நீ” எனக்கு ஒன்னும் புரியல என்ன விஷயம் கேட்டியா?

தெரியல தீபா நீ உடனே வா என்று அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றாள் அபி.

ம்ம்… ஆகாஷ் இதோ தீபா வந்தாச்சு.

என்ன ஆகாஷ் என்ன விஷயம் ஏதோ முக்கியமான பேசணும்னு சொன்னியாம் ?

மம்… ஆமா தீபா ரொம்ப முக்கியமான விஷயம் தான் என்னோட வாழ்க்கை சம்பந்த பட்டது.

ஆகாஷ், சொல்றேன்னு தப்பா நினைக்காத உன் வாழ்க்கை சம்பந்த பட்ட விஷயம்ன்னு சொல்ற கார்த்திக் இல்லாம எப்படி ? கார்த்திக் எங்க ? என்றாள் அபி.

அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை அபி இன்னைக்கு காலேஜ் வர மாட்டேன்னு காலையிலேயே எனக்கு போன் பண்ணி சொன்னான். அது மட்டும் இல்ல நான் இப்போ பேச போற விஷயம் ஏற்கனவே அவனுக்கு தெரியும்.

அய்யா சாமி போதும்டா உங்க வள வள பேச்ச நிறுத்திட்டு விஷயத்துக்கு வாங்க என்றாள் தீபா.

அதைத்தான் எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் யோசிச்சிட்டு இருக்கேன் தீபா.

நீ யோசிக்கிறத பார்த்தா ஏதோ காதல் விவகாரத்துல மாட்டிக்கிட்ட போல இருக்கே…?

நான் எப்படி சொல்றதுன்னு தவிச்சிட்டு இருந்தேன் நல்லவேளை நீயே எடுத்துக் கொடுத்துட்ட.

அடப்பாவி அப்பிராணி மாதிரியிருந்துகிட்டு பெரிய வேலையெல்லாம்செய்திருக்கே ?. சரி பொண்ணு யாரு என்று கேட்ட படியே அபியை பார்த்து சிரித்தாள் தீபா.

ஆகாஷ் தன் பெயரைத் தான் சொல்ல போகிறான் என்ற எண்ணி மனதிற்குள் சிறகுகள் இன்றி பறந்து கொண்டிருந்தாள் அபி.

வேற யாரும் இல்ல தீபா அது நம்ம அனு தான் என்றதுமே அபிக்கு தன் இதயத்தையே இரண்டாக பிளந்தது போல் இருந்தது. காலுக்கடியில் பூமி நழுவி சென்றது போல் இருந்தது.

தீபாவிற்கும் சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போது பார்த்தாலும் எலியும் பூனையும் போல் அடித்துக் கொள்வார்கள் இந்த இருவரும் இவர்கள் எப்படி என்று யோசிக்கும் போதே ஆகாஷ் தொடர்ந்தான்.

அனுவும், நானும் ஒருத்தரையொருத்தர் விரும்பறோம். சின்ன வயசுல இருந்தே நாங்க ஒண்ணா படிச்சோம் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள்ள இருந்த நட்பு எப்போ எப்படி காதலா மாறுச்சுன்னு எங்களுக்கே தெரியல. படிப்பு முடிந்ததும் ஒரு நல்ல வேலைக்கு போய் செட்டில் ஆகிட்டு அப்புறமா ரெண்டு பேர் வீட்லயும் பேசலான்னு இருந்தோம். ஆனா இப்போ அவங்க வீட்ல விஷயம் தெரிஞ்சு பிரச்சினை ஆயிடுச்சு.

சரி எங்க வீட்ல சொல்லி அனுவோட அப்பா அம்மா கிட்ட பேச சொல்லலாம்னு பார்த்தா, அவங்க என்னடான்னா பணம் கூட ஒரு பெரிய விஷயம் இல்ல ஆனா பொண்ணு நம்ம ஜாதியா தான் இருக்கணும்னு கண்டிப்பா சொல்றாங்க.

இப்ப என்ன பண்றதுன்னு தெரியல சரி உங்க எல்லார் கிட்டேயும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்ன்னு யோசிச்சோம்.

ஆனா, ஆகாஷ் அபி உன்னை என்ற தீபாவை தடுத்து நிறுத்தினாள் அபி. எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் கண்ணசைத்தாள். அவள் கண்களில் நீர் தழுதழுத்தது.

என்ன தீபா ஏதோ சொல்ல வந்து பாதில நிறுத்திட்டே என்றாள் அனு.

அபி தொடர்ந்தாள்.

முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள். சரி இப்போ என்ன பண்றதா நீங்க யோசிச்சி இருக்கிங்க. கார்த்திக் என்ன சொன்னான்.

இது கடைசி வருஷம் இன்னும் மூணு மாசத்துல படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கஷ்ட பட்டு ஒரு வேலை தேடிட்டு அப்புறம் ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலான்னு இருக்கோம்.

நீ சொல்றதும் சரி தான் முத படிப்பு முடியட்டும். அப்புறம் நீ உனக்கொரு நல்ல வேலையை தேடி செட்டில் ஆகனும் ஆகாஷ். அது வரைக்கும் கொஞ்ச நாள் ரெண்டு பேரும் அடிக்கடி பேசறது பார்க்கறது எல்லாம் குறைச்சிக்கோங்க சமயம் பார்த்து உங்க ரெண்டு பேர் வீட்லயும் மறுபடியும் ஒரு தடவ பேசி பார்க்கலாம். காதல் கல்யாணமா இருந்தாலும் கூட பெத்தவங்க சம்மதம் இருந்தாதான் நல்லா இருக்கும் ஆகாஷ். நம்மள பெத்தவங்க மனச கஷ்ட படுத்தி நாம எப்படி சந்தோஷமா இருக்க முடியும். எங்க எல்லாரோட சப்போட்டும் கண்டிப்பா உங்களுக்கு உங்களுக்கு உண்டு

ஆகாஷ் எனக்கென்னவோ அபி சொல்றது சரின்னு தோணுது. என்றாள் அனு.

ஏண்டி, உனக்கென்ன பைத்தியமா உன் காதல ஆகாஷ் கிட்ட சொல்ல போறேன்னு அவன் காதலுக்கு அவங்க வீட்ல சம்மதம் வாங்க ஐடியா கொடுத்துட்டு வர்ற. உனக்கென்ன மூளை கெட்டு போச்சா என்ன? சொல்ல போன என்னையும் சொல்ல விடாம தடுத்துட்டே. நான் ஒருத்தி இங்க கத்திட்டு இருக்கேன் நீ என்னவோ எதுவுமே நடக்காத மாதிரி இப்படி செஞ்சிவச்ச சிலை மாதிரி நின்னுட்டு இருக்க.

என்ன தீபா பேசற நீ? என் மேல உள்ள பாசத்துல தான் இப்படிலாம் பேசரன்னு எனக்கு புரியுது. அதுக்காக கொஞ்சம் கூட யோசிக்காம எப்படி இப்படி முட்டாள் மாதிரி பேச முடியுது உன்னால.

யாருடி யார் நான் முட்டாளா அப்போ நீ…?

புரியாம பேசாத தீபா நான் ஆகாஷ விரும்பரறன். ஆனால் ஆகாஷ் என்ன விரும்பல அவன் அனுவத்தான் காதலிக்கிறான். அப்படி இருக்கும் போது நான் எப்படி என்னோட காதலை சொல்ல முடியும் .?

அதெல்லாம் சரி தான் ஆனா அவங்க வீட்லதான் அதுக்கு சம்மதிக்கலையே. பணம் கூட பெரிய விஷயம் இல்ல ஆனா பொண்ணு நம்ம ஜாதியா தான் இருக்கணும் அப்படினு அவங்க அப்பா சொன்னதா ஆகாஷ் சொன்னானே அந்த விஷயத்துல உனக்கு பிரச்சினையே இல்ல நீங்க ரெண்டு பேரும் ஒரே ஜாதி தானே?

நிறுத்துடி. எப்படி தீபா இப்படி சுயநலமா உன்னால பேச முடியுது? ஜாதி,மதம் பணம்,காசுனு பார்த்து வர்றது இல்ல காதல். மனச பார்த்து வர்றது தாண்டி காதல். நான் அவன காதலிக்கிறேன், ஆனா அவன் மனசுல வேற ஒருத்தி இருக்கானு தெரிந்ததும் என் காதலை என் மனசுக்குள்ள போட்டு புதைச்சிட்டேன்.

நான் அவனை மனப்பூர்வமா காதலிச்சேன் அதனால தான் அவன் நேசிக்கிற அனு கூட அவன் வாழ்க்கை சந்தோஷமா அமையனும் நினைக்கறேன்.

காதல்னா என்னனு தெரியுமா உனக்கு? எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது தான் காதல்.

உனைக் காதலிக்கிறேன்
நீயெனை
விரும்பாத போதும் !
நானுனைக் காதலிக்கிறேன்
நீயெனை
வெறுத்த போதும் !
நானுனைக்
காதலித்து கொண்டே
இருப்பேன் !
இவ்வுலகில் காதல்
வாழும் வரை !
இது தான் காதல் !

நல்ல வேளை நான் என் மனசுல இருக்கிறத சொல்றதுக்கு முன்னாடி ஆகாஷ் அவன் மனசுல இருக்கறத சொல்லிட்டான் நான் மட்டும் கொஞ்சம் அவசரப்பட்டு இருந்தா இந்நேரம் எங்க மூணு பேர் நட்புக்குள்ளேயும் சின்ன விரிசல் வந்து இருக்கும்.

நீ பேசறதுலாம் பேப்பர்ல எழுதறதுக்கும் படிக்கிறதுக்கும்தான் நல்லா இருக்கும்டி, ஆனா நடைமுறை வாழ்க்கைக்கு சரிபட்டு வராது.

இந்த உலகத்தில காதலிக்காதவங்க கூட இருக்கலாம் ஆனால் நட்பு இல்லாத ஒருத்தர் கூட உன்னால காட்ட முடியாது. காதல் புனிதமானது தான். ஆனா நட்பு அதை விட உன்னதமானது. காதல் சில சமயங்களில் தன்னை பற்றி மட்டுமே யோசித்து பெத்தவங்களையே விட்டு கொடுக்க வச்சிரும். ஆனா நட்பு அப்படி இல்ல தீபா.

எப்பவும் எதுக்காகவும், யாருக்காகவும் நட்பை யாரும் விட்டு கொடுக்க மாட்டாங்க. நான் என் நட்புக்காக என் காதலை விட்டு கொடுத்துட்டேன். தீபா இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் நீ யார் கிட்டேயும் சொல்லகூடாது. இது நம்ம நட்பு மேல சத்தியம். அதையும் மீறி நீ சொன்னா அடுத்த நிமிஷமே நமக்குள்ள இருந்த நட்பு முறிந்திடும். நான் சாகர வரை உங்கிட்ட பேச மாட்டேன், உன்னை பார்க்க மாட்டேன்.

கடைசி வரை அவ காதல் அவனுக்கு தெரியாமலே போயிடுச்சு. அபி சொன்னா மாதிரி அவங்க வீட்ல பேசி ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோடு அனு,ஆகாஷ் கல்யாணம் நடந்து முடிந்தது.

ஆனா அபி மட்டும் அவங்க கல்யாணத்துக்கு வரவே இல்ல. வேலை விஷயமாக பெங்களூர் போறதா சொல்லிட்டு அங்கேயே செட்டில் ஆயிட்டா. எல்லாரும் வருஷத்துக்கு ஒருமுறை ஒரே நாள்ல சந்திச்சுக்குவோம்.

அபியோட அம்மா எவ்ளோ வற்புறுத்தியும் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டா. அவங்க அம்மா அவளோட எதிர்காலத்த நினைச்சி வருத்தப்பட்டதை தாங்க முடியாம நான் அவகிட்டே பேச சென்னைபோனேன் ?!

என்ன அபி இது இப்படியே இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டியா உனக்காக இல்லனா கூட உன் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்ல. உனக்கு கல்யாணம் பண்ணி வச்சி நீ சந்தோஷமா வாழரத பார்க்க அவங்க எவ்ளோ ஆசை படறாங்க. இப்படி எதும் பேசாம இருந்தா என்னடி அர்த்தம்.

முடிஞ்சி போன விஷயத்தைப்பத்தி பேச எனக்கு விருப்பம் இல்லனு அர்த்தம் .

காதல்ல தோத்தவங்க யாரும் இன்னொரு கல்யாணம் பண்றது இல்லையா. ஒருத்தர மட்டுமே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னா இந்த உலகத்துல பாதி பேருக்கு கல்யாணமே நடந்து இருக்காது.

நான் ஒன்னும் என் காதல்ல தோத்து போகலையே. ஒரு வேளை நான் என் காதலை அவன்கிட்ட சொல்லி அதை அவன் மறுத்து இருந்தா தான் என் நீ சொன்னா மாதிரி காதல் தோல்வி. நான் தான் என் காதல அவன்கிட்ட சொல்லவே இல்லையே. நான் அவனை ஆத்மார்த்தமாக காதலிச்சேன். அவன் மட்டும் தான் என் வாழ்க்கைன்னு நினைச்சி இருந்தேன் இனிமேலும் அப்படி தான் இருக்க போறேன். என் இதயம் எப்பவும் அவனுக்காக மட்டும் தான் துடிக்கும், துடிச்சிட்டே இருக்கும். நான் இந்த உலகத்தை விட்டு போனாலும் என்னோட காதலை இங்கேயே விட்டுட்டு தான் போவேன்.

அதுக்கப்புறம் நான் அவளை பார்க்கவே இல்ல. நாம இங்க U.S ல வந்து செட்டில் ஆனதும் போன்லே அடிக்கடி பேசுவோம். அப்போ தான் ஒரு தடவ கார்த்திக் போன் பண்ணி ஆகாஷ்க்கு இதயத்திலே ஏதோ பிரச்சினைன்னு சொன்னான். ரொம்ப நாளாக பிரச்சினை இருந்து இருக்கு ஆனா இவங்க கவனிக்காம விட்டதால இப்போ மாற்று இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்லி டாக்டர்ஸ் லாம் சொல்லி இருக்காங்க அப்படினு சொன்னான். உடனே அபிக்கு போன் பண்ணி நான் விஷயம் தெரியுமான்னு கேட்டேன். அவளும் அது விஷயமா தான் சென்னைக்கு போறதா சொன்னா.

அபி வேலை பார்க்கிற கம்பெனி எம். டி மூலமா தெரிஞ்ச ஹாஸ்பிடல், ஆர்ப்பணேஜ், எல்லா இடத்திலும் சொல்லி வச்சி இருக்கிறதா சொன்னா.

எனக்கு இப்போ டெலிவரி டைம் அதனால என்னால வர முடியாமல் போயிடுச்சு அபி. அனுகிட்ட போன்லே பேசினேன். இருந்தாலும் எனக்கு மனசு கேக்கல. நீ அனு பக்கதில் இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லு அபி. கண்டிப்பா சீக்கிரம் இதயம் கிடைச்சு நல்ல படியா ஆப்பரேஷன் நல்ல படியா நடக்கும்.

சரி தீபா நீ இத பத்தி நினைச்சி உன் உடம்ப கெடுத்துகாத, நீ நல்லா சாப்பிட்டு நேராநேரத்துக்கு மாத்திரை எடுத்துக்கோ அப்போ தான் குழந்தை நல்ல படியா பிறக்கும். இங்க அனு பக்கத்துல இருந்து நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். அப்பப்போ உனக்கு போன் பண்றேன்.

அது தான் நான் அவகிட்ட கடைசியாக பேசின போன். அதுக்கப்புறம் கார்த்திக் தான் எனக்கு டெலிவரி முடிஞ்ச பிறகு போன் பண்ணி பேசினான். ஆப்பரேஷன் நல்ல படியா முடிஞ்சது. இப்போ ஆகாஷின் உடம்பு

பரவால்லைன்னு சொன்னான்.

அபி எப்படி இருக்கா கார்த்திக் அவ இன்னும் சென்னைல தான் இருக்கிறாளா ? நான் ரெண்டு நாளாக அவளுக்கு டிரை பண்றேன் அவளுக்கு லைன் கிடைக்கவே இல்ல.

அப்போ அவன் சொன்னத கேட்டதும் என் இதயமே ஒரு நிமிஷம் நின்னுடுச்சு. ஆகாஷ்க்கு ஆப்பரேஷன் பண்ண இதயம் கிடைச்சு எல்லாம் ரெடி பண்ண பிறகு அந்த ஹாஸ்பிடல்ல இருந்து போன் பண்ணி நீங்க கேட்டது A1 பாசிட்டிவ் ஆனா இங்க ரிப்போர்ட் மாத்தி சொல்லிட்டாங்க எங்கங்கிட்ட இருக்கறது Ab நெகட்டிவ் சாரின்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கும் போது தான். ஆகாஷ் அட்மிட் ஆன அதே ஹாஸ்பிட்டல்ல ஒரு பொண்ணுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி மூளைசசாவு ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. அந்த பொண்ணு தான் இருந்த பிறகும் தன்னோட உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சொல்லி எழுதி கொடுத்து இருக்கா. அதனால அந்த பொண்ணோட அம்மா கிட்ட பேசி அந்த பொண்ணோட இதயத்தை நம்ம ஆகாஷ்க்கு பொருத்த டாக்டர்ஸ் கேட்டு இருக்காங்க. அந்த பொண்ணோட பிளட் குரூப் கூட A1 பாசிட்டிவ் தான்.

அவங்க அம்மாவும் அதுக்கு சரின்னு சம்மதிச்சு அந்த பொண்ணோட இதயத்தை எடுத்து நம்ம ஆகாஷ்க்கு பொருத்தினாங்க. ஆப்பரேஷன் முடிஞ்சதும் அந்த பொண்ணோட அம்மா வந்து தன்னோட பொண்ணு இதயத்தை வச்சி இருக்க அந்த பையன ஒரு தடவ பார்க்கணும்னு சொன்னதா சொல்லி அவங்க கூட்டிட்டு வந்தாங்க. அப்போ தான் தெரிஞ்சது அந்த பொண்ணு வேற யாரும் இல்ல நம்ம அபிதான்னு .

ஆகாஷைப் பார்க்க அவ ஹாஸ்பிடல் வந்துட்டு இருக்கும் போது ஆக்ஸிடென்ட் ஆகி இதே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்து இருக்காங்க. தலைல அடிப்படு மூளைச்சாவுன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க.

கார்த்திக் சொன்னதும் அபி என்கிட்ட சொன்னது தான் ஞாபகம் வந்தது. நான் இருக்கிற வரை என்னோட இதயம் அவனுக்காக மட்டும் தான் துடிக்கும். நான் இந்த உலகத்தை விட்டு போகும் போது கூட என்னோட காதல இந்த பூமில விட்டுட்டு தான் போவேன் அப்படின்னு அடிக்கடி சொல்வா. எனக்கு அப்போ அதுக்கு அர்த்தம் புரியல. ஆனா இப்போ. அவ உயிரோட இருந்த வரை அவனையே நினைச்சி வாழ்ந்துட்டு இருந்தா. இப்போ அவ விரும்பின ஆகாஷ் மனசுக்குள்ள இருந்து அவனுக்காகவே துடிச்சிட்டு இருக்கா.

அப்போ கடைசி வரை அபியோட காதல் ஆகாஷ்க்கு தெரியவே இல்லையா.

இல்லங்க அவ சொன்னா மாதிரியே அபி கடைசி வரைக்கும் அவனுக்கு ஒரு நல்ல தோழியா இருந்துட்டு போயிட்டா . தன்னோட காதலை மட்டும் அவனுக்காக விட்டுட்டு போயிட்டா.

சென்னை வந்ததும் தீபா ஆகாஷ் வீட்டுக்கு சென்று பார்க்க போகிறாள். அனு,ஆகாஷ், கார்த்திக் மூவரும் தீபாவிற்காக காத்து இருந்தார்கள்.

இன்னைக்கு தான் அபியோட நினைவுநாளா என்று தீபாவின் கணவன் கேட்க, அவர்கள் சொன்னாரகள் இல்லை இன்று தான் எங்கள் தோழி அபி மறுபிறவி எடுத்து வந்து நாள். அவ இன்னும் சாகல ஆகாஷ் மூலமா இன்னும் எங்களோட வாழ்ந்துட்டு தான் இருக்கா. நாங்க எப்பவுமே பஞ்ச பாண்டவர்கள் தான் எங்க நட்பை சாவுல கூட யாரலையும் பிரிக்க முடியாதுண்ணு சொல்லமா சொல்லிட்டா எங்க அபி.

முற்றும்

கமலகண்ணன்

9 Comments

  • super ❤️❤️

    • Wow.. Super. Congratulations..

      • Thanku da ❤️

    • Thanku ❤️

  • Nice

    • Thanku ❤️

  • Wow.. Super. Congratulations..

  • அருமையான காதல் கதை! வாழ்த்துகள்!

    • மிக்க மகிழ்ச்சி நண்பரே நன்றி ❤️

Leave a Reply to Nithyasri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...