பத்துமலை பந்தம் – 3 |காலச்சக்கரம் நரசிம்மா
3. நவவிஷ நாயகன்
பள்ளங்கி சாலையில் வில்லம்பட்டி கிராமத்தை கடந்து
மலைப்பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினார், நல்லமுத்து.
பூம்பாறை, பள்ளங்கி, குறிஞ்சியாண்டவர் ஆலயம், போகர் பாசறை அனைத்துமே வெள்ளகவி காட்டின் பகுதிகளாகும். போகர் பாசறை தொடங்கி பழனி ஆண்டவன் கோவில் வரை, வெள்ளகவி காடு அடர்ந்திருக்கும். மனிதர்கள் காலடி பதிய இந்த வானமும், மலைகளும்தான் சித்தர்களுக்கு, குறிப்பாக போகரின் சீடர்களுக்கு வாசஸ்தலம். புராணகாலத்தில் இந்தப் பகுதிக்கு ‘ஸ்வேத வனம்’ என்று பெயர். அதற்கேற்றாற்போல், பசுமை மரங்களை மறைக்கும் அருவிகளின் வெள்ளை ஸ்படிகமென சாரல், வெள்ளைக் குரங்குகள் இப்போதும் கூட இங்கே துள்ளி விளையாடுகின்றன. மிகவும் ரம்மியமான இடம். நமது தமிழ் மண்ணிலா இப்படி ஒரு இடம் உள்ளது என்று அங்கே செல்பவர்கள் வியந்து போவார்கள்.
வழக்கமாக, இயற்கைக் காட்சிகளில் லயித்து, அந்த ரம்மியத்தை தனது உடலின் ஒவ்வொரு அணுவிலும், நிறைத்துக்கொண்டேதான் நடப்பார். ஆனால் இன்று, அவரது மனநிலை அதனை ரசிக்கும்படி இல்லை. வழக்கமாக, ஒரு சீப்பு வாழைப்பழங்களை ராஜபாதர் சுமந்து வருவான். அவர்கள் வருவதைப் பார்த்ததுமே, வெள்ளைக் குரங்குகள் பாய்ந்து வந்து அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். ஆனால் இன்று அவர் தனியாக வருவதைப் பார்த்ததும், வெள்ளைக் குரங்குகள் ஒன்றுக்கொன்று கேள்விகளை கேட்டபடி அவரையே உறுத்துப் பார்த்தன.
வெள்ளைக் குரங்குகளை பொருட்படுத்தாமல், தொடர்ந்து நடந்தார், நல்லமுத்து. இவரது பள்ளங்கி வனத்திலிருந்து காரில் சென்றால், சரியாக பதினான்கு கிமீ தொலைவுதான். அரை மணி நேரத்தில் காரில் சென்று விடலாம். ஆனால் இன்று சஷ்டி சாமியுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான், தனியாகச் சென்றுக்கொண்டிருக்கிறார்.
தூண் பாறை என்கிற போகர் பாசறை. குணா குகை என்று இப்போது பெயர் வந்திருந்ததால், நிறையப் பயணிகள் இப்போது அங்கே வந்து குவிந்து வருகின்றனர். வந்து குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் போடுகின்றனர். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாக, இந்த இடம் சொர்க்கபுரியாக இருந்தது.
நல்லமுத்துவின் மெதுவான நடைக்கு, தூண்பாறையை அடைவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். ஆனால் அங்கே செல்வதற்குக் குறுக்கு பாதை ஒன்றை அறிவார். பாதை சற்று சிரமம்தான். ஒரு இடத்தில் வெள்ளருவி நீர் வேகமாகப் பாறைகளில் மோதிப் பாயும். அந்தத் பாறைகளின் மேல் கால் வைத்து தாவி நடக்க வேண்டும். ஒரே ஒரு பகுதியில்தான் இரு பாறைகளுக்கிடையே அகலம் அதிகம். அங்கு மட்டும்தான் எச்சரிக்கையுடன் தாண்டவேண்டும். மற்றபடி, நடை எளிதாகத்தான் இருக்கும். கைத்தடியின் உதவியோடு, செங்குத்தான பாதையில் ஏறி இறங்கி, தூண் பாறையை நோக்கிப் பயணித்தார், நல்லமுத்து.
நல்லவேளையாக நன்று வெள்ளருவியின் பாய்ச்சலில் வேகம் இல்லை. மிக எளிதாக நீரிலேயே நடந்து எதிர்ப்புறம் போய்விடலாம் போல இருந்தது. இருப்பினும் பாறைகளின் மேலாகவே, அந்த அருவி ஆற்றைக் கடந்து நடந்தார்.
சற்று தொலைவு நடந்ததும்…
அதோ–
யூகலிப்டஸ் மரங்களின் இடையே, தூண் பாறைகள் உயர்ந்து தெரிய, தான் போகர் பாசறையை நெருங்கி வருகிறோம் என்பதை உணர்ந்தார். சஷ்டி சாமி கண்ணில் படுவாரா..?
திடீரென்று–
பின்னாலிருந்து யாரோ, காய்ந்த சருகுகள் மீது நடந்து வரும் ஒலி, கேட்க திரும்பிப் பார்த்தார். சஷ்டி சாமியேதான்..!
திகைப்புடன் வாய் பிளக்க, சஷ்டி சாமி சிரித்தார்.
“என்ன..! கும்பிட போன தெய்வம் குறுக்கேதானே வரும். இது பின்தொடர்ந்து வருதேன்னு யோசிக்கிறியா..? தெய்வம் குறுக்கே வராது. பின்தொடர்ந்துதான் வரும்.” — என்றபடி அவருடன் வந்து சேர்ந்துகொண்டார். இருவரும், தூண் பாறையை அடைந்ததும், அங்கேயே இரு கற்பாறைகள் மீது அமர்ந்து கொண்டனர்.
பாக்குமரக் குடுவையில் இருந்து நீர் எடுத்து மடக்மடக் என்று குடித்தவர், நல்லமுத்துவிடம் நீட்டினார்.
“தண்ணீர் வேணுமா..?’’
“வேணாம் சாமி..! அருவியிலேயே குடிச்சுட்டேன்..! நான் உங்களை பார்க்கத்தான் வந்திருக்கேன்.” –நல்லமுத்து சொன்னார்.
“நானும் உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கேன், நல்லமுத்து! அதனாலதான் நம்மால் சந்திக்க முடிஞ்சுது. இல்லேனா நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் இந்த காட்டுல போயிருப்போம். நம்மால சந்திச்சிருக்க முடியாது.” –சஷ்டி சாமி கூறினார்.
‘’வாஸ்தவம் சாமி..! என்ன விஷயமா என்னைப் பார்க்க நினைச்சீங்க..?’’ — ‘முதலில் அவர் பேசட்டும்.! பிறகு நாம் பேசலாம்..!’ என்கிற நினைப்புடன் கேட்டார், நல்லமுத்து.
“அடுத்த தைப்பூசத்துக்கு என்ன செய்ய போறே..?!’’ –சஷ்டி சாமி கூறியதும், அதிர்ந்தார் நல்லமுத்து.
“தெரியும் சாமி..! அதைப் பத்தித்தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்.” –நல்லமுத்து கூற, அவரை உறுத்துப்பார்த்தார், சஷ்டி சாமி.
“போகர் ஆசி பெற்ற உன் குடும்பத்துக்கு, தைப்பூசம் எவ்வளவு முக்கியமுன்னு உனக்கு நான் நினைவுபடுத்தணுமா என்ன ? போன வருஷமே நான் உன்னை எச்சரிச்சேன். நீ எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம இருக்கிற , அளவுக்கு வசதி பெருகிடிச்சு இல்லே..?’’ — சற்றே நிஷ்டூரமாக ஒலித்தது சஷ்டிசாமியின் குரல்.
நல்லமுத்து அமைதி காத்தார்.
“நல்லமுத்து..! என்னோட கதை உனக்கு தெரியும்..! இருந்தாலும் திருப்பிச் சொல்றேன் ! நான் எவ்வளவு பணக்காரன்னு உனக்கு தெரியும் ! என்னோட குடும்பத்துல நான் செல்லப் பையன் வேற..! எங்க அண்ணன், அக்கா எல்லாம் இங்கேயே படிச்சாங்க.! என்னை மட்டும் லண்டன்ல படிக்க வச்சாங்க..! நான் தங்கறதுக்கு பிளாட் வாங்கி, எனக்கு சமைச்சுப் போட ஆளு அனுப்பி, என்னை ராஜாபோல வளர்த்தார் எங்கப்பா..! நானும் நல்லாப் படிச்சு ரசாயனத் துறையில பெரிய ரிசர்ச் ஸ்காலரா வந்தேன்..! ‘சயின்டிஸ்ட் அரவிந்தாக்ஷன்’னு எல்லா யூனிவர்சிட்டிகளும் என்னைக் கொண்டாடின..! ஜப்பானோட ஒசாகா பல்கலைக்கழகம் அத்தனை பணத்தைக் கொட்டி என்னை வாங்க முயன்றது. வீட்டுலயும் செல்லரிக்கிற அளவுக்கு பணம்..! நான் போற இடமெல்லாம் பணம்..! இருந்தாலும், இப்ப எது எனக்கு நிலைச்சுது..? இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு சஷ்டி சாமியா, இந்த வனாந்தரத்துல தெரிஞ்சுக்கிட்டு இருக்கேன்.! ஏன்..?
வெளியுலகத்துக்கு நான் பைத்தியக்காரன்..! ஆனா, பிரபஞ்சக் கணக்குப்படி நான் சித்தர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன்..! அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட வெகு சிலர்ல உன்னோட தாத்தா நாகரத்தினமும் ஒருத்தர்..! அவர் குடும்பத்துல பிறந்த நீ, வாகேச குருக்கள் நினைவுபடுத்தித்தான் தைப்பூசம் வர்றதுனு தெரிஞ்சுக்கணுமா..?”
“தப்புதான் சாமி..! என்னோட குடும்ப சூழ்நிலை அப்படி இருக்கு சாமி..! எல்லோரும் பணத்துக்கும் போகத்துக்கும் அடிமையாயிட்டாங்க. புகழ் போதை, பணவெறி, போலி டாம்பீகம் எல்லாம் என் குடும்பத்துல புகுந்துடுத்து சாமி! என்னால தடுக்க முடியலை..!’’ –நல்லமுத்து குரல் புலம்பலாக உருமாறியது.
“உன்னால தடுக்க முடியலைன்னா, நீயும் மெதுவா அவர்களைப் போல மாறிக்கிட்டேஇருக்கேன்னு அர்த்தம்.” –சஷ்டி சாமி கூற, அவரைக் கவலையுடன் பார்த்தார், நல்லமுத்து.
“உண்மை சாமி..! நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை..! போன தைப்பூசத்துக்கு, பூம்பாறை குழந்தை வேலப்பர் சந்நிதியில் இருந்து போகர் பாசறைக்கு வந்தேன். இரண்டு மணி நேரம் தியானத்துல இருந்தேன். ‘திருப்தியில்லை’ன்னு ஒரு குரல் காதுல எதிரொலிச்சுக்கிட்டே இருந்தது. சொன்னதுபோல, என் குடும்பத்தார் குடிச்ச மூலிகைக் கலவையில் வீர்யம் குறைந்து இருந்தது. அதை மெய்ப்பிக்கிறது போல, குடும்பத்துல பலருக்கும் பல பிரச்சனைகள்..! அது குறித்துத்தான் நான் உங்ககிட்டே பேச வந்திருக்கேன்.’’ நல்லமுத்து கூற, யோசனையுடன் ஒரு தூணைப் பார்த்தார், சஷ்டி சாமி.
“உங்க குடும்பத்துக்குக் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பை இப்படியா தவற விடுவீங்க..?” சஷ்டி சாமி முணுமுணுத்தார்.
“இதுக்கு ஏதாவது வழி இருக்கா சாமி..? பழையபடி எனது பூஜைக்கு வீர்யம் வரணும்..! எனது குடும்பத்தோட சௌபாக்கியங்கள் குறையவே கூடாது.”
சற்றே பரபரப்புடன் கேட்டார், நல்லமுத்து.
‘’எனக்கு தெரியலை..! போய் அந்த சிலையப் பார்த்தால்தான் என்னால எதுவும் அனுமானிக்க முடியும். ஆனா வீர்யம் குறைஞ்சிருந்தா, ஒண்ணுமே செய்ய முடியாது. எதுக்கும்… வா, போய்ப் பார்க்கலாம்..!” சஷ்டி சாமி எழுந்து கொள்ள, நல்லமுத்துவும் பின்பாகவே எழுந்தார்.
“உன்னோட குடும்பத்தினரோட செயல்பாடுகள் சரியில்லை. அதனால வீர்யம் குறைஞ்சுகிட்டு வரதா, அல்லது வீர்யம் குறைஞ்சதால, உங்க செயல்பாடுகள் சரியில்லாம போறதா…? ஒண்ணும் தெரியலை.”
“இல்லே சஷ்டி சாமி..! போன தடவை பூஜையை முடிச்சு மூலிகை ரசத்தை குடிக்கறப்பவே, சுவை ஒரு மாதிரியாக இருந்தது. அப்பவே எனக்கு சந்தேகம்.”
இருவரும், தூண் பாறையை கடந்து, ‘பூதத்தின் சமையலறை’ என்கிற குணா குகையை கடந்து சரிவில் இறங்கினார்கள். சஷ்டி சாமி அனாயாசமாக இறங்க, நல்லமுத்து சற்றே திணறியபடிதான் இறங்கினார்.
பெயரில்லாத அருவிகள் இரண்டு மூன்றைக் கடந்து நடந்துகொண்டே இருந்தனர் . பகல் பொழுதிலேயே பசுமைப் பந்தலை ஊடுருவத் தயங்குவான் கதிரவன். இன்னும் அவன் அஸ்தமனம் ஆகாத நிலையிலேயே ‘இது எனது சாம்ராஜ்யம்’ என்று முன்பாகவே இருள் பரவத் தொடங்கி இருந்தது.
“பார்த்து நல்லமுத்து.! இருட்டி கொண்டு வருது..! இறங்கச்சே வழுக்கிடப் போறது,’’ என்ற சஷ்டி சாமி, ஒரு அருவியின் ஊடே நுழைந்து அதன் உள்ளே ஆழமாக இறங்கிய குழியில் இறங்கினார். தொடக்கத்தில் சேறும் சகதியுமாகக் காணப்பட்ட அந்த குகை உள்ளே விரிந்து பரந்து கிடந்தது. அதன் உள்ளே நடந்தார்கள்.
வெளியே அடர்ந்திருந்த மரங்களின் வேர்கள் புலப்பட, அவற்றில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. போகும்போதே, வழியில் கிடைத்த சுள்ளிகளையும், இலைகளையும் சேகரித்தபடிதான் நடந்தார் சஷ்டி சாமி.
ஒரு பத்து நிமிட நடைக்குப் பிறகு, குகை ஒரு முடிவுக்கு வந்தது. பாறை ஒன்று இயற்கையாகவே மேடை அமைத்துத் தந்திருக்க, அதன் மீது கம்பீரமாக நின்றிருந்தது…
அது…!
அது என்றால் மூன்றில் ஒன்று..!
அவர் என்றால் ஒருவரில் ஆறு..!
நல்லமுத்து மற்றும் சஷ்டி சாமி தலைக்கு மீது கைகளைக் குவித்து நின்றனர். பிறகு சஷ்டி சாமி, தனது இடுப்பில் கட்டியிருந்த சிக்கிமுக்கிக் கற்களை உராய்ந்து தீப்பொறிகளை பறக்கச் செய்து, சுள்ளிகளையும் இலைகளையும் பற்ற வைத்தார். அந்தத் தீயின் வெளிச்சத்தில் கம்பீரமாகக் காட்சி தந்தது, இவர்கள் தேடி வந்தது..!
பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான்
சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்
தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற
தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த
சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலே
நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு
என்று உருக்கமாகக் கண்மூடிப் பாடிக்கொண்டு சஷ்டி சாமி மெதுவாக தனது கையை அதன் மீது வைத்தார்.
சரியாக பீஜிங் நோக்கி பறந்துகொண்டிருந்த, எரிக் செலுத்திக்கொண்டிருந்த எம்எச்.319 விமானம் ஒரு பெரிய குலுங்கலுடன் ஒரு பத்து அடி கீழே இறங்க, எரிக் அதிர்ச்சியுடன் பக்கலில் இருந்த குகன்மணியைப் பார்க்க, அவனோ அதிர்ச்சியைக் காட்டாமல் தனக்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
இப்போது அந்த சீனக் கிழவி மட்டுமல்ல. விமானத்தில் இருந்த அனைவருக்குமே பயம் தொற்றிக் கொண்டது. அனைவரும் காக்பிட்டைக் கவலையுடன் பார்க்க, மயூரி நெஞ்சம் படபடக்க காக்பிட்டை நோக்கி நடந்தாள்.
–தொடரும்…
12 Comments
அருமையாக உள்ளது ஐயா…சஷ்டி சுவாமி மற்றும் நல்ல முத்து பார்க்கச் சென்ற சிலை நவபாஷாண முருகனா? என்று ஐயம் ஏற்படுகிறது.சோதனைக் கடந்து நல்ல முத்து குடும்பம் சாதனை படைக்கும் என்று நம்புகிறேன்.நன்றி.
Arumai sir
அருமையாய் போயிட்டு இருக்கு சார்! அமானுஷ்யம், சித்தர்கள்னு வருகின்றதால, அப்பப்போ, இந்திரா சௌந்தரராஜன் சார் ஞாபகத்துக்கு வரார்.
Interesting one sir
இரட்டை இலையை பார்த்தல் எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவு வரும்தான். அனால் சிக்கிமிலும் கூட இரட்டை இலை சின்னம் உள்ளது.
Siddhar common point, story narration both are different
அந்த விமானம் கீழ இருந்து விட்டு இறங்குகிறது என்ன நடக்குமோ என்று பயமாக இருக்கு மயூரி குகன் சேர்ந்து எப்படி சமாளிக்கப் போகிறார்கள் இதேபோல் சஷ்டி சாமி பாடிய அந்த கவிதை அர்த்தம் புரியல சார் மேபி அடுத்த அத்தியாயத்தில் அதற்கான விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் பக்தியின் சிரத்தை குறைந்தால் அதன் வீரியமும் குறையும் என்று நல்லமுத்து மூலம் தெரிஞ்சது மேலே அவர் என்ன செய்யப் போகிறார்
ஒருவேளை நல்லமுத்துவின் பேத்தியினால் விமானம் காப்பாற்றப்படுமோ? வில் வெயிட்டிங்!
Very gripping and interesting _ Neo Alchemist!
எதிர்பார்ப்போட அடுத்த பகுதிக்கு காத்திருக்கேன்..
இந்த பகுதியில் கதை சூடுபிடித்துவிட்டது! பரபரப்புத்தொற்றிக்கொள்ள வைத்துவிட்டீர்கள் எங்களையும். அருமை! தொடர்கிறேன்! வாழ்த்துகள்!
Wow… Great going… You have got an amazing gift of story telling…