விவேக் – சா.கா.பாரதி ராஜா
‘எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்!’
இப்போது உன் வசனம்
எல்லோரின் இதயத்திலும்!
ஏன்?
எதற்கு?
எப்படி?
வினாக்குறி
வியப்புக்குறியாக நின்று கேட்டது
உனது நகைச்சுவையால்!
சிரிப்பிற்கும்
சிந்தனைக்குமிடையே
பாலமாக அமைந்தது
உனது நடிப்பு!
உன்
இறப்பு கூட
ஒரு விழிப்புணர்வை
விதைத்து விட்டிருக்கிறது
எல்லோரையும்
சிரிக்க வைத்தவனே!
இறுதியில்
அழவும் வைத்துவிட்டாய்!
இப்போது
நாங்கள் நீருற்றுகிறோம்!
மரமாய் வாழ்ந்த மனிதனுக்கு
கண்ணீர்த்துளிகளை!
குத்தப்பட்ட ஊசி கூட
வலிக்கவில்லை என்றாய்
மொத்த வலியும்
சேர்ந்து வந்ததோ
இதயத்திற்கு?
கலாமின்
கனவினை சுமந்தவனே!
மண்ணில் நீ விட்ட
ராக்கெட்களெல்லாம்
விண்ணை நோக்கி புறப்பட்டன
மரங்களாக!
இனி
நடப்போகும் மரங்களுக்கு
உரமாகும்
உன் சாம்பல்!
ஆழ்ந்த இரங்கல்