நீயெனதின்னுயிர் – 23 | ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 23 | ஷெண்பா

பெரிய பூகம்பத்தை எதிர்பார்த்த வைஷாலிக்கு, அங்கு நிலவிய அமைதி… பெரும் ஆச்சரியத்தையும், எச்சரிக்கையையும் அளித்தது. அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகாமல், நிதானமாகப் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“குட் மார்னிங்ப்பா!” என்றாள் புன்னகையுடன்.

“குட் மார்னிங் கண்ணம்மா!” என்றவர், ஸ்போர்ட்ஸ் பேஜை எடுத்து மகளிடம் கொடுத்தார்.

“என்னப்பா, இன்னைக்கு ஆஃபிஸுக்குக் கிளம்பாம இருக்கீங்க? லீவா?” பேப்பரைப் புரட்டியபடி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“இன்னைக்கு லீவ் போடச் சொல்லி, நேத்தே உங்க அம்மாவோட ஆர்டர் வந்தாச்சு” என்றார் கிசுகிசுப்பாக.

“எதுக்குப்பா? லீவ் போட்டு, சண்டை போடவா” என்று சிரித்த மகளை வாஞ்சையுடன் பார்த்தார்.

“இந்த நிலையிலும் உனக்குச் சிரிப்பு வருது…!” என்று சங்கரன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவள் கேட்காமலேயே ருத்ரா மூலமாக காஃபி வந்து சேர்ந்தது.

“தேங்க்யூ” என்றபடி காஃபியை வாங்கிக்கொண்டு தழைந்த குரலில், “அப்பா! பெரிய இடி வரப்போகுது. அதான் டிஃபன் காஃபியெல்லாம் கொடுத்து நம்மைத் தயார் படுத்தறாங்க” என்று சிரித்தாலும், மகளது மனத்தில் இருக்கும் பயம், அவருக்குப் புரியத்தான் செய்தது.

ஆதரவுடன் அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தார் சங்கரன்.

காலை உணவை ருத்ராவிற்கு கொடுத்து அனுப்பிவிட்டு, தானே இருவருக்கும் பரிமாறினார் தேவிகா. மூவரும் அமைதியாக சாப்பிட்டு எழுந்தனர். கையைக் கழுவியபின்னர் மாடிக்குச் செல்ல விழைந்த வைஷாலியை அழைத்தார்.

“வைஷூ! இங்கே வா. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம் சொல்லணும்” என்றார். உடனே தன் தந்தையைப் பார்த்தவள், அமைதியாக வந்து அமர்ந்தாள்.

“நான் மீனாட்சி வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்த போது, செந்தளிர் அண்ணி ஃபோன் செய்திருந்தாங்க. விக்ரமுக்கு, நம்ம வைஷாலியை பொண்ணு கேட்க, இன்னைக்கு ஈவ்னிங் வரேன்னு சொல்லியிருக்காங்க. கையோட நிச்சயத்தட்டு மாத்திக்கிறா மாதிரியும் சொன்னாங்க. நானும் சரின்னு வரச் சொல்லிட்டேன். அதனால் தான் உங்களை ஆஃபிஸுக்கு லீவ் போடச் சொன்னேன்!” என்று இருவருக்கும் பொதுவாக விஷயத்தைச் சொல்லிவிட்டு மகளைப் பார்த்தார்.

ராகவைப் பற்றி ஏதோ பேசப்போகிறார் என்று நினைத்ததற்கு மாறாக, எதிர்பாராத இந்தச் செய்தி தந்த அதிர்ச்சியில், வைஷாலிக்கு கண்ணீரே வந்துவிட்டது. கலங்கிய விழிகளுடன் தந்தையைப் பார்த்தாள். சங்கரனோ, கோபத்தின் உச்சியில் இருந்தார். மகளது கண்ணீர் அவரது இதயத்தை உலுக்கியது.

பேப்பரை மடித்து டீபாய் மீது தூக்கிப் போட்டவர், “கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டியா? என்னைக்குக் கல்யாணம்?” என்று கேட்ட கேள்வியில், கோபத்தில் எழுந்த நிதானம் தெரிந்தது.

“என்ன பேசறீங்க நீங்க? அதெப்படி…” என்று எரிச்சலுடன் ஆரம்பித்த மனைவியை இடைமறித்து, “வாயை மூடு. மனுஷியா நீ? உன்னோட இஷ்டத்துக்கு ஆடறதுக்குத் தான் நான் ஒருத்தன் இருக்கேனே. அப்புறம் எதுக்கு என் மகளையும் இந்தப் பாடுபடுத்தற? ச்சே! உன்னையெல்லாம் என்ன செய்தால் தகும்?” என்று கத்தினார்.

“என் பொண்ணு வசதியா, கௌரவமா வாழணும்னு நினைக்கறது தப்பா?”

“நீ நினைச்சது தப்பில்லை. ஆனால், ஒரு நல்ல அம்மாவா, நீ என்ன செய்திருக்கணும்? அவளோட விருப்பத்தைக் கேட்டிருக்கணும். உன்னோட வறட்டுப் பிடிவாதத்தால, அழகா இருக்கும் குடும்பத்தில் எல்லோர் மனசிலும் விரிசலை ஏற்படுத்தற.

உங்கிட்ட, விக்ரம் இந்த வீட்டு மாப்பிள்ளை ஆகணும்ங்கற ஆசையைவிட, ராகவ் இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆகக்கூடாதுங்கற பிடிவாதம் தான் அதிகம் தெரியுது. எங்கே நாம போட்ட சவால்ல ராகவ் ஜெயிச்சிடுவானோங்கற பயம்… அதனால் தான் வைஷுவோட வாழ்க்கையைப் பத்தி நினைக்காமல், இப்படி ராட்சஷி மாதிரி நடந்துக்கற.

இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. வைஷுவுக்கும், ராகவுக்கும் கல்யாணத்தை நடத்தத்தான் போறேன். என் மகளோட சந்தோஷம் மட்டுமே எனக்கு முக்கியம். அதை மீறி நீ ஏதாவது செய்யணும்னு நினைச்ச… இதுவரைக்கும் பார்க்காத சங்கரனை, நீ பார்க்க வேண்டி இருக்கும். ஜாக்கிரதை!” என்று மனைவியை நடுவில் பேசவிடாமல், சொல்ல வந்தவற்றைச் சொல்லி முடித்தார்.

எதுவும் சொல்லமுடியாமல், திகைப்புடன் தங்களைப் பார்த்துக்கொண்டிருந்த மகளிடம், “வைஷூ! நீ மேஜர். உன்னை யாரும்… எதுக்காகவும் கட்டுப்படுத்த முடியாது. உன்னை மீறி எதுவும் நடக்காது. தைரியமாக இரு. யார் வந்து எப்படித் தடுக்கறாங்கன்னு நான் பார்க்கிறேன்” என்று கன்னத்தைத் தட்டிக்கொடுத்துவிட்டு, அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றார்.

கணவரின் ருத்ரதாண்டவத்தில் சற்று நிலை குலைந்து போன தேவிகா கோபமும், ஆத்திரமுமாக மகளைப் பார்த்தார்.

“இப்போ சந்தோஷமாடி உனக்கு? நிம்மதியா இருக்கியா? உன்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த எனக்கு, உன் கல்யாணத்தை முடிவு செய்யும் உரிமை கூட இல்லையா? பார்க்கிறேன், இது எத்தனைத் தூரத்துக்குப் போகுதுன்னு. பொறுமையா எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்கிற ஜென்மம் இல்லையே நீ. அப்படிக் கேட்கறவளா இருந்திருந்தா, எப்பவோ அவனைத் தலை முழுகிட்டு வந்திருப்பியே! எல்லாம் என்னைச் சொல்லணும். உனக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்த்தேன் இல்ல. அதான், இப்போ தீட்டின மரத்துலயே எல்லோரும் கூர் பார்க்கறீங்க.

என்னைக்கு அவன் மேல ஆசைப்படுறன்னு தெரிஞ்சிதோ, அன்னைக்கே உன் காலை உடைச்சிருந்தா, இன்னைக்கு இந்த நிலை வந்திருக்குமா? ஒரே பொண்ணு… ஏகப்பட்ட சொத்து இருக்கு… வளைச்சிப் போட்டா, காலத்துக்கும் காலாட்டிகிட்டே சாப்பிடலாம்னு, அந்தக் குடும்பமே அலையுது. அது புரியாம, அப்பாவும், பொண்ணும் ஆடுங்க!” என்ற அன்னையை, பொறுமை யிழந்து பார்த்தாள் வைஷாலி.

“அம்மா! உங்களுக்குப் பிடிக்காதுங்கற ஒரு காரணத்துக்காக, அவங்க மேல வீணா பழி போடாதீங்க. ராகவ் ஒண்ணும் என்னைச் சுத்திச் சுத்தி வந்து காதலிக்கல; நானா தான் முதல்ல ராகவிடம் என் காதலைச் சொன்னேன். இதெல்லாம் சரிவராதுன்னு அவர் ஒதுங்கித்தான் போனார். நான்தான்…” என்று மேற் கொண்டு சொல்ல வந்த வைஷாலியின் கன்னத்தில், இடியென இறங்கியது தேவிகாவின் கரம்.

“அசிங்கமா இல்லடி உனக்கு? உன்னை, இப்படியா வளர்த்தேன் நான்?” என்ற அன்னையை முறைத்துப் பார்த்தாள்.

”நீங்கதாம்மா வளர்த்தீங்க. பெத்த பொண்ணு மேல நம்பிக்கை இல்லாமல், அவன்கூடப் பழகாதேன்னு சொல்லிச் சொல்லி வளர்த்தீங்க. நான் ராகவைக் காதலிக்க காரணமே நீங்கதான். ஒண்ணும் தெரியாத வயசுல என்னை எச்சரிக்கை செய்யறேன்னு, தினமும் ராகவைப் பத்தி என்னிடம் பேசிப் பேசி, அவரைத் திரும்பிப் பார்க்க வச்சது நீங்களே தான்.

உங்களுக்குச் சந்தேகம். காலேஜில் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சொன்னா நம்பமாட்டீங்க. ஜோதி வீட்டுக்குப் போனியா… ராகவ் இருந்தானான்னு என்னிடமே துருவித் துருவிக் கேள்வியா கேட்பீங்க. நான் யூ.ஜி. ரெண்டாம் வருஷம் கடைசி எக்ஸாம் எழுதிட்டு வந்தப்போ, யதேச்சையா ராகவ் என்னை வழியில் பார்த்துட்டு வீட்டில் கொண்டுவந்து விட்டதை, நீங்களும், உங்க ஃப்ரெண்டும் சேர்ந்து பேசி, எப்படியெல்லாம் ஊதிப் பெரிசாக்கினீங்க?

பையன் நல்லா இருக்கான். உன் பொண்ணும் அழகா இருக்கா… பஞ்சையும், நெருப்பையும் பக்கத்துப் பக்கத்தில் வைக்காதேன்னு அவங்க சொன்ன போது, நீங்க என்ன சொல்லியிருக்கணும்? என் பொண்ணு, நல்லது கெட்டது தெரிஞ்சவ. அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுன்னு சொல்லியிருக்கணுமில்ல. ஆனா, என்ன சொன்னீங்க? எனக்கும் அதான் பயமா இருக்குன்னு, சொன்னீங்கல்ல?

அன்னைக்குத் தான், ராகவை நான் கவனிக்க ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் மட்டுமில்ல; அதுக்குப் பிறகும் கூட, ராகவ் என்னிடம் நின்னு அநாவசியமா ஒரு வார்த்தை பேசியது கிடையாது தெரியுமா? அப்பா ராகவைப் பத்தி சில விஷயங்கள் சொல்லும் போதும், சின்ன வயசிலிருந்து ஒண்ணா வளர்ந்த ஒரு ஃப்ரெண்ட் மாதிரிதான் அவரை நினைச்சிட்டு இருந்தேன். என்னைக்கு நீங்க என் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசினீங்களோ, அன்னைக்கே உங்க வார்த்தையை மீறினால் என்னன்னு தான் தோணுச்சு எனக்கு.

இது தப்பு; எனக்கும் ஒரு தங்கை இருக்கா. அவளுக்கு நான் தான் முன்னோடி. என்னைப் பார்த்து வளரும் அவளோட பாதை தடம் மாற, நான் வழிகாட்டியா இருக்கமாட்டேன்னு என்னை மறுத்தவர் அவர். அதுக்கப்புறம் தான் அவரை இன்னும் அதிகமா பிடிக்க ஆரம்பிச்சது. இப்படித்தான், நான் ராகவைக் காதலிக்கவே ஆரம்பிச்சேன்.

ராகவை நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும், என்னிடமிருந்து ஒதுங்கியிருக்கச் சொல்லி, அவரை நீங்க மிரட்டினதும் எனக்குத் தெரியும். அவர் ஒரேயடியா ஒதுங்கிட்டாருன்னு நீங்க நினைச்சிட்டீங்க. ஆனா, அவரோட தகுதியை வளர்த்துக்காமல், என்னிடம் தன்னோட காதலைச் சொல்லமாட்டேன்னு தள்ளி நின்னார்.

கடைசி வரைக்கும், நீங்க அவரை மிரட்டியதை என்னிடம் சொல்லவே இல்லை தெரியுமா? இன்னைக்கு, தன் உழைப்பால தங்கைக்குக் கல்யாணம் செய்து வச்சிருக்கார். அவங்க வீட்டையும் பெரிசா கட்டியிருக்கார். தன்னோட தங்கைக்கு, அம்மா இல்லாத குறை தெரியாமல், எல்லாத்தையும் பார்த்துக்கறார். ஒரு நல்ல அண்ணனா… நல்ல மகனா இருக்கும் ராகவைக் கல்யாணம் செய்துக்க, நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்.

ராகவுக்கும், எனக்கும் கல்யாணம் நடக்காமல் போக இந்தச் சொத்து மட்டும்தான் காரணம்னா, இதுல ஒரு பைசாகூட எனக்கு வேண்டாம். கட்டின புடவையோடு போனால்கூட, என்னை ஏத்துக்க ஒரு நொடி கூட யோசிக்க மாட்டார் அவர். இந்தக் கல்யாணம், எல்லாரோட ஆசீர்வாதத்தோடு நடக்கத்தான் போகுது” என்று ஆவேசத்துடன் பேசி முடித்தவள், விடுவிடுவென தன் அறைக்குச் சென்று கைப்பையை எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவளைத் தடுக்கத் தோன்றாமல், கால்கள் தள்ளாட திவானில் அமர்ந்தார் தேவிகா. மனத்தை விடாமல் துக்கம் அழுத்த, இமைகள் ஈரமானது தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

“இதோ, விக்ரமே வந்தாச்சே!” என்ற செந்தளிரின் குரலில், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் வைஷாலி.

உணர்ச்சிகளைத் துடைத்த அவனது முகத்தைக் கண்டதும், தயக்கத்துடன் புன்னகைத்தபடி எழுந்தவள், “எப்படி இருக்கீங்க?” என்றாள்.

கண்கள் இடுங்க, கேள்வியுடன் அவளை அளவிட்ட விக்ரம், ‘ம்’ என்பது போல மெல்லத் தலையை அசைத்தான். மேற்கொண்டு அவன் ஏதும் பேசாத போதும், ஊடுறுவது போன்ற பார்வையைத் தாள முடியாமல் மௌனமாக நின்றாள் வைஷாலி.

அவனது பார்வைக்கான அர்த்தம் புரியாமல், பேச வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரியாமல், தவிப்புடன் செந்தளிரைப் பார்த்தாள்.

அவளது தவிப்பையும், தனது ஏமாற்றத்தை மௌனம் எனும் திரைக்குப் பின்னால் மறைத்தபடி நின்றிருப்பவனின் ஆத்திரத்தையும் உணர்ந்திருந்த சீமா, விக்ரமின் கரத்தை ஜாடையாக இடித்தாள்.

“விக்ரம்! வைஷூ உன்னிடம் ஏதோ அவசரமா பேசணுமாம். கூட்டிட்டுப் போய்ப் பேசு!” என்ற அன்னையின சிரிப்பிற்கான காரணத்தை யூகித்தவனுக்கு இதயம் வலித்தது.

விழிகளை மட்டும் வைஷாலியின் பக்கமாகச் செலுத்தியவன், எதுவும் சொல்லாமல், வலது கரத்தை பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி வேக நடையுடன் மாடிக்குச் சென்றான்.

மகனது போக்கு பெற்றோருக்கு வேறுபாட்டை உணர்த்த, சீமாவைப் பார்த்தனர். சட்டென்று சுதாரித்து வைஷாலியை அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள் சீமா.

”நீங்க பேசிட்டு இருங்க; நான் இதோ வந்திடுறேன்!” என்றவள், விக்ரமின் கரத்தை ஒருமுறை அழுத்திக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

ஆங்கில எடுத்து ‘டி’ வடிவில் அமைந்திருந்த அந்த அறையின் முன் பகுதி ஹாலாகவும், பின் பகுதி படுக்கை அறையாகவும், கண்ணாடிக் கதவுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அறையை ஒட்டியிருந்த விசாலமான பால்கனி, கடற்கரையைப் பார்த்த வண்ணம் இருந்தது.

ஏசியின் குளுமையில் அறையின் நிசப்தமும், விக்ரமின் இயல்பிற்கு மாறான நடவடிக்கைகளாலும் குழம்பிப் போயிருந்த வைஷாலிக்கு, பேச்சை எப்படி எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை.

நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் திரும்பி, “உட்கார்” என்று சோஃபாவைக் காட்டினான்.

“தேங்க்ஸ்” என்றவள், அறையைச் சுற்றி நோட்ட மிட்டபடி. “ரூமோட இண்டீரியர் ரொம்ப அழகா இருக்கு!” என்று சூழ்நிலையை இயல்பாக்கும் நோக்கத்துடன் சொன்னாள்.

“இதைச் சொல்லவா இத்தனைத் தூரம் வந்த?” என்ற அவனது கிண்டலான பேச்சு, அவளது இதழ்களில் படந்திருந்த இளநகையை மறையச் செய்தது.

“இல்ல… ஆனால், எப்படி ஆரம்பிப்பதுன்னு தான் தெரியலை” என்றாள்.

“பேசணும்னு தானே வந்திருக்க… பேசு!”

சிறிதும் ஸ்நேகபாவம் இல்லாத அவனிடம் பேசுவதே கடினமாக இருந்தது. அவள் இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்த்து வரவில்லை. பட்டுத் தெறித்தாற் போன்ற அவனது பேச்சில் சற்று எரிச்சலானாள் வைஷாலி.

“நம்ம ரெண்டுபேர் வீட்டிலும் நடக்கும் பேச்சு வார்த்தையைப் பற்றித் தெரியுமா?”

“எதைப் பற்றி?” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.

“க… கல்யாண விஷயம்…”

“யாருக்குக் கல்யாணம்?”

அவனது விட்டேற்றியான பேச்சில் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. ஆனால், ‘கோபமும், ஆத்திரமும் எதிராளியின் பலத்தை அதிகரிக்கச் செய்து, தன்னைப் பலவீனமாக்கிவிடும்!’ என்பதை உணர்ந்தவளாக சற்று மௌனம் காத்தாள்.

“உங்களுக்கும், எனக்கும்…” என்று இழுத்தாள்.

“ம், தெரியும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் சீமா சொன்னா!”

“அதைப் பத்தி உங்க முடிவு என்ன?” தவிப்புடன் கேட்டாள்.

“எப்போதும் எங்க அப்பா, அம்மா எனக்குப் பொறுத்தமானதைத் தான் தேர்வு செய்வாங்கன்னு நான் நம்பறேன்!” என்றான் அழுத்தமாக.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், உதட்டை அழுந்தக் கடித்தபடி, விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவனது கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. மேற்கொண்டு பேச வார்த்தைகள் வராமல் தவித்தாள்.

“இதைப் பத்தித்தான் பேசணும்னு வந்தியா?” என்று கேட்க, “இல்லை. இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லைன்னு நீங்க சொல்லணும்” என்று வேகமாகச் சொல்லிவிட்டாள்.

கையில் பேப்பர் வெயிட்டை வைத்து உருட்டிக் கொண்டிருந்தவன், அதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவனது பார்வையின் உஷ்ணத்தில், வைஷாலிக்கு மூச்சுத் திணறுவது போலிருந்தது.

சட்டென எழுந்தவன் அவள் அமர்ந்திருந்த சோஃபாவின் கைப்பிடியின் இருபக்கமும் கைகளை ஊன்றியபடி, “என்னை என்னன்னு நினைச்சிட்டு இருக்க? மனசுக்குப் பிடிச்ச பொண்ணை வேணாம்னு சொல்ல, எனக்கென்ன பைத்தியமா?” என்று வெறி பிடித்தவன் போல் கத்தினான்.

பயத்தில் வைஷாலிக்குக் கை, கால்களெல்லாம் நடுங்கியது. மிரண்ட விழிகளால் அவனைப் பார்த்தாள். கண்கள் கரையுடைக்கவா என்று அனுமதி கேட்டு நின்றது.

அவளது அழகிய விழிகளில் திரண்ட நீர்ப் படலத்தில், அவனது கோபமெல்லாம், காற்றில் கரையும் கற்பூரத்தைப் போல கரைந்து போனது. மிரட்சியுடன் தன்னைப் பார்த்த அவ்விழிகளில் தெரிந்த ஏமாற்றத்தை, அவனால் தாங்க முடியவில்லை. தொடர்ந்து தனது கோபத்தை அவள் மீது வலுக்கட்டாயமாக காட்ட முடியாமல் தடுமாறினான்.

அவளது விழிகளை ஊன்றிப் பார்த்தவன், “என்ன… ரொம்பப் பயமுறுத்திட்டேனா?” என்றபடி நிமிர்ந்து நின்றவன், அழகாகப் புன்னகைத்தான்.

‘நடப்பதெல்லாம் உண்மையா!’ என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தாள் வைஷாலி.

”ஹேய்! வைஷாலி! போதும் போதும் நினைவுலகுக்கு வா” என்றபடி அவளெதிரில் அமர்ந்தான். “சரி சரி சொல்லு. டாமும், ஜெர்ரியுமாக இருந்த நீங்க ரெண்டு பேரும், எப்படிச் சமாதானம் ஆனீங்க?” என்றதும் அதிர்ச்சியில் எழுந்தேவிட்டாள் வைஷாலி.

“பரவாயில்லை. உட்கார்ந்தே சொல்லு…” என்றான் கிண்டலுடன்.

“உங்க…” வார்த்தைகள் நர்த்தனம் ஆடின.

“நேத்து ஈவ்னிங் இதே ரெண்டு கண்ணாலேயும் பார்த்தேன். நம்பலையா?” என்று நெற்றியை ஒரு விரலால் தட்டி யோசிப்பது போலச் செய்தவன், “ராகவ் உன் விரலைப் பிடித்து ஏதோ சொல்ல, நீ ராகவோட தோளில் சாய்ந்து தலையாட்டிச் சிரிக்க…” என்றதும், வைஷாலியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“ப்ளீஸ் விக்ரம்…!” என்று அழகாக நாணத்தில் மிளிர்ந்த அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு, இதயம் கனத்து வலித்தது. ஆனால், அவளது முகத்தில் மலர்ந்திருக்கும் புன்னகைக்காக எதையும் செய்யலாம் என்று எண்ணிக்கொண்ட மறுநொடியே, அவளைக் கேலியில் திக்குமுக்காட வைத்தான்.

அறைக்குள் வந்த சீமா, விக்ரமின் பேச்சையும், சீண்டலையும் பார்த்து மனத்திற்குள் எழுந்த கசப்பை, புன்னகையெனும் சர்க்கரை தடவி விழுங்கிவிட்டாள்.

சீமாவைக் கண்டதும் வைஷாலியின் நாணம் மேலும் அதிகரிக்க, முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

தன்னைப் பார்த்துக் கலங்கிய சீமாவை, பார்வையா லேயே அடக்கினான் விக்ரம். வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு தொண்டையை செருமிக் கொண்டவள், “கள்ளி! நேத்து எத்தனைத் தூரம் துருவித் துருவிக் கேட்டேன். ஒரு வார்த்தை சொன்னியா?” என்றாள் வைஷாலியிடம்.

“ஹய்யோ அக்கா! நீங்களுமா?” என்று குழைந்தாள்.

“இன்னைக்கு உன் விஷயத்தையெல்லாம் என்னிடம் சொல்லாமல், இங்கிருந்து உன்னை அனுப்புவதாக இல்லை. எத்தனை நாளா என்னிடம் மறைச்சிருக்க?” என்று கேட்டாள்.

‘ரெண்டு’ என்று விரல்களை மட்டும் உயர்த்திக் காட்டினாள்.

“ரெண்டு மாசம்…” “ரெண்டு வாரம்…” “ரெண்டு நாள்…” என்று அவள் ஒவ்வொன்றாகக் கேட்க, இல்லை என்று தலையாட்டினாளே தவிர, தப்பித் தவறியும் வாயைத் திறக்கவில்லை.

“அப்போ, என்னடி ரெண்டு மணி நேரமா?”

“இல்லை” என்று வெட்கத்துடன் தலையசைத்தாள்.

“எனக்கு ஒண்ணுமே புரியலையே. இப்பவே கண்ணைக் கட்டுதே” என்றவள், “வாயைத் திறந்து சொல்லேன்” என்று சலிப்புடன் சொன்னாள்.

“ரெண்டு வருஷம்” என்றாள் வைஷாலி.

விக்ரமும், சீமாவும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஏய்! ஒழுங்கா எங்களுக்கு விளங்கறா மாதிரி சொல்லேன்” என்றாள் சீமா.

“எங்க ரெண்டு பேர் ஃபேமலியும் எதிரெதிர் வீடு தான். சின்ன வயதிலிருந்து நாங்க ஒண்ணாவே தான் வளர்ந்தோம். ராகவோட தங்கை ஜோதியும், நானும் ஃப்ரெண்ட்ஸ். ஆனா, அம்மாவுக்கு அவங்க குடும்பத்தை ஏனோ ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது” என்று தொடங்கியவள், ராகவைக் காதலிக்க ஆரம்பித்தது முதல், அவனது மறுப்பு, விஷயம் தெரிந்த அன்னையின் மிரட்டல், தந்தையின் இடமாற்றம், ஹாஸ்டல் வாழ்க்கை என்று அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“அப்போ ராகவைப் பார்க்கத்தான் ஆஃபிஸுக்கு வந்தியா?” என்று கேட்டான் விக்ரம்.

“அதுவும் ஒரு காரணம். ஹாஸ்டல் விஷயம் பற்றி அவரிடம் சொல்லி உங்ககிட்ட பேசச் சொல்லிக் கேட்டேன். அவர் விக்ரம் சார் காலேஜ் விஷயத்தில் தலையிடுவது இல்லை; நீ மேனேஜ்மென்ட்டில் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுன்னு சொல்லிட்டார்.

அதனால் தான் நான் நேரடியாக உங்களைப் பார்க்க வந்தது. அன்னைக்கு நீங்க ரிசார்ட்டுக்கு அழைச்சிட்டுப் போய் பார்ட்டி வச்சப்போ, ஃப்ரெண்டுக்குப் பிறந்த நாள்ன்னு கிளம்பிப் போனேன் இல்ல… ஆக்சுவலி அன்னைக்கு ராகவோட பிறந்த நாள்!” என்றாள்.

“ஓ! ஆனா, ஜோதியோட கல்யாணத்தில் உன்னை நான் பார்க்கலையே?” என்றான்.

“ஜோதியோட கல்யாணம் அவசரஅவசரமாக நடந்தது இல்லையா? அப்போ நாங்க குடும்பத்தோடு ஃபாரின் டூர் போயிருந்தோம். அதனால், இங்கே வந்த பின் தான் எனக்கு விஷயம் தெரியும். அவள் பெரிய பணக்காரனை காதலிக்கிறான்னு நீங்க பார்த்து ராகவிடம் சொன்னதும், அவர் அவளைக் கூப்பிட்டு கண்டிச்சார். ரெண்டு பேரும் கோயில்ல கல்யாணம் செய்துகிட்டு யாருக்கும் தெரியாமல் இருந்தபோது, அவங்களைக் கண்டுபிடிச்சி வீட்டோடு கொண்டு வந்து சேர்த்தது நீங்க.

ரெண்டு குடும்பத்திலேயும் பேசி நீங்களும், மாமாவும் தான் சேர்த்து வச்சீங்க. அதுவும் தெரியும். அதனாலேயே அவளுக்கு உங்களைப் பார்த்தால் பிடிக்காமல் போச்சு.இன்னைக்கு அவ தன் கணவனோட சேர்ந்து இருக்க காரணமே நீங்கதான்னும், ராகவ் சொல்லியிருக்கார்.” என்றாள்.

“ஆனால், ஏன் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும்னு காட்டிக்கவேயில்லை?” என்று எரிச்சலை உள்ளடக்கிக்கொண்டு கேட்டான்.

”அதுக்குக் காரணம் ராகவ்தான். அவர்தான் எங்க அம்மா சொன்னாங்கன்னு என்னிடமிருந்து விலகிவிலகிப் போனாரே. அதனால் நானும் வீம்பாக தெரியாதது போலவே இருந்துட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல இதை எப்படிச் சொல்வது? தெரியும் போது தெரியட்டும்னு விட்டுட்டேன்!” என்றாள் சிரித்தபடி.

“நீ பக்காவா பிளான் போட்டுத் தான் செய்திருக்க! நான் தான் இதில் இளிச்சவாயனா இருந்திருக்கேன்” என்றவனது குரலில், அவனையும் மீறி கோபம் தென்பட்டது.

நிமிர்ந்து பார்த்தவள், “சாரி” என்றாள்.

“ம், பரவாயில்லை. அடுத்து என்ன? அத்தையை கன்வின்ஸ் பண்ணணும்… அதானே?”

“ஆமாம்.”

“சரி, விஷயத்தை என்னிடம் சொல்லிட்ட இல்ல, கவலையை விடு நான் அம்மா மூலமா பேசறேன்” என்று அவளுக்கு உறுதியளித்தான்.

“ரொம்ப தேங்க்ஸ்!” என்றாள் நெகிழ்ச்சியுடன்.

மூவரும் இயல்பாகப் பேசியபடி கீழே வர, சீமாவின் மூலமாக விஷயமறிந்த பெரியவர்கள் இருவரும், கனத்த இதயத்துடன் மகனைப் பார்த்தனர். வைஷாலி சந்தோஷத்துடன் கிளம்பிச் செல்ல, விக்ரம் வேக நடையுடன் அறையை நோக்கி நடந்தான்.

“விக்ரம்!” என்றழைத்த அன்னையின் குரலுக்குச் செவிசாய்த்து, அவரருகில் சென்று முழங்காலிட்டு அமர்ந்தான். கட்டுப் போடப்பட்டிருந்த அவனது வலது கரத்தை திருப்பிப் பார்த்தார். இரு கரத்தாலும் அவனது கையைப் பிடித்துக்கொண்டு, “இந்த அம்மாவை மன்னிச்சிடு கண்ணா!” என்று கண்கலங்கினார்.

“அம்மா! நீங்க என்ன செய்யமுடியும்? நடக்கறது தான் நடக்கும்.”

“நீ விரும்பியதை என்னால கொடுக்க முடியலையே?”

“அவளோட விருப்பம் வேற இடத்தில் இருக்கும்மா. விடுங்கம்மா… கொஞ்ச நாளைக்குக் கஷ்டமா இருக்கும். அப்புறம் பழகிடும். நான் ஏற்கெனவே நொந்து போயிருக்கேன்ம்மா. நீங்களும் அழுது என்னைக் கோழையாக்கிடாதீங்க” என்றவனது கண்கள் கலங்கின.

மகனது வார்த்தைகள், செந்தளிரை வேதனையில் தோய்த்தெடுத்தது. நடுங்கும் விரல்களால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

”விக்ரம்! உன்னோட கவலையை மறைச்சிகிட்டு அவளுக்காகப் பேசினியே…! உன்னை நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா” என்றாள் சீமா.

“அது என்னோட சுயநலம் சீமா. எனக்கும் கோபம், ஆத்திரம், ஏமாற்றம்னு எல்லாமே வந்தது. ஆனால், அவளோட கண்ணீரைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை. அவளோட சந்தோஷத்துக்குத் தடையா என் காதல் இருக்குமானால்…, அப்படிப்பட்ட அந்தக் காதலைத் தூக்கிப் போட… நான் தயாராக இருக்கேன்!” என்றவன் விடுவிடுவென தனது அறையை நோக்கி நடந்தான்.

<பகுதி – 22

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...