விலகாத வெள்ளித் திரை – 15 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 15 | லதா சரவணன்

தன் முன் தவிப்பாய் காதலை சொல்லி காத்திருக்கும் பெண்ணிற்கு தான் சொல்லப்போகும் விஷயம் எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதை அவர் உணராமல் இல்லை ஆனால் இதை மறைப்பது இன்னும் எத்தனை மணி நேரங்களுக்கு சாத்தியமாகும். காலையில் எப்படியும் அவளுக்கு உண்மை தெரியத்தானே போகிறது.

“வேணி காலங்கடந்து போச்சு. அறுசுவை விருந்து உனக்கு முன்னாடி பரிமாறப்பட்டபோ மறுத்துட்டு இப்போ அடுத்தவ இலைக்கு போன சாப்பாட்டை சாப்பிட ஆசைப்படறீயேம்மா ?!”.

“நீங்க சொல்றது எனக்குப் புரியலை ஸார்.”

“நாளைக்கு கண்ணனுக்கு கல்யாணம்மா, அதுக்குத்தான் இந்த ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கு. அவன் விரும்பினப்போ நீயும் நீ விரும்பினப்ப அவனும் சேர முடியலை விதியைத்தான் குறை சொல்லணும். வேற என்னத்தை சொல்ல ?!” கடல் போன்ற விழிகள் தெறித்து விழுவதைப் போன்ற அதிர்ச்சி கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

“அப்போ நான் கிளம்பறேன் ஸார் !” பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானவளை வியப்பாய் பார்த்தார்.

“என்னம்மா இந்த நேரத்திலே எங்கே போவே காலையிலே போகலாம் முதல்ல சாப்பிடும்மா !”

“நான் ஒரு நடிகை, எப்ப அழணும் எப்ப சிரிக்கணுமின்னு கேமிரா முன்னாடி பழகிட்டேனே ஸார். இதுக்கு மேல ஏமாற்றம் ஒண்ணும் எனக்குப் பெரிசு இல்லை, பழகிப்போன ஒண்ணுதான். நான் காலம் கடந்து வந்திட்டேன் என் சூரியனைத் தேடி என் வாழ்க்கையில் இனி அது இல்லை அஸ்தமனம்தான்.”

“அதுக்காக இப்பவே கிளம்பணுமாயென்ன ?”

“இது மட்டும்தானே ஸார் என்னால இப்போ முடியும். கண்ணனுக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க வேணியில்லை வேதிகாஸ்ரீயா ?!”

“வேணி…!”

“நான் எவ்வளவோ இழந்திருக்கேன் இப்போதைய இழப்பை தாங்குறதுக்கு எனக்கு சக்தி வேணும், அது கிடைக்கணுமின்னா நான் கண்ணனை விட்டு ரொம்ப தூரம் போகணும். அப்படி போகணுன்னா இப்பவே போனாத்தான் முடியும். என் பாதையை நான் முடிவு பண்ணிட்டேன் போக நினைச்சை தூரத்தை கடக்காம சட்டுன்னு பாதை மாறியதுதான் என்னோட தப்பு.”

“வேணி உன்னோட தவிப்பு எனக்குப் புரியுதும்மா ஆனா …இப்போ எல்லாம் கை மீறிப் போயிட்டது. கண்ணனோட உன் வாழ்வு நல்லா அமையணுன்னு தான் நானும் ஆசைப்பட்டேன் !”.

“ஒவ்வொரு ஜீவராசிகளும் எத்தனையோ நினைவுகள் சுமந்தபடி வாழுகிறது. அதில் மனிதர்களுக்கு சதவிகிதம்தான் அதிகம். நானும் அப்படித்தான் ஸார் இவ்வளவு நேரம் எனக்காக செலவழிச்சதுக்கு ரொம்ப நன்றி ஸார். நாளைய விடியல் என் வரையில் இருட்டாகத்தான் இருக்கப்போகுது. கண்ணனை பத்திரமா பாத்துக்கோங்க !”

“ஊரு உறவுக்குதான் நாங்க பிரிஞ்சிட்டோம் ஆனா என் மனசிலே கண்ணன் எப்போதும் வாழ்ந்துகிட்டுதான் இருக்கார் அவரை என் மனசிலே இருந்து யாராலும் பிரிக்கமுடியாது “ வாத்தியார் ஈர விழிகளோடு தலையசைத்து,

“வேணி நீ ஏதும் தப்பான முடிவுக்கு ?!”

“என்ன தற்கொலை செய்துக்குவேன்னு பயப்படறீங்களா ? எத்தனை முறை ஸார் சாக முடியும், வேணி எப்பவோ செத்துப்போயிட்டா, கண்ணனை கைபிடிக்க முடியுன்னு ஒரு நப்பாசையில் குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்தவ மொத்தமா போயிட்டா இப்போ இருக்கிறது வேதிகாஸ்ரீ அதனால என்னை நீங்க பயப்படாம அனுப்பலாம் !”.

“நீங்க ரொம்பவும் நல்ல பொண்ணும்மா கண்ணனால இன்னொரு பொண்ணைக் கல்யாணம் செய்துக்கும் போது உன்னாலேயும் அது முடியும். காலம் எப்பேர்ப்பட்ட காயத்தையும் ஆற்றும் !”

“பார்க்கலாம்…..! நான் நித்திய கல்யாணி ஸார் என்னோட அடுத்த படத்தோட தலைப்பு இதுதான். எனக்காக உள்ளுக்குள்ளே அழுது, பிறத்தியாருக்காக சிரிச்சி, சந்தோஷமா கலகலப்பா இருக்கிறது தான் என்னோட தொழில் அப்பறம் எனக்கு இன்னொரு உதவி கண்ணனை தேடி நான் திரும்பி வந்ததை அவர்கிட்டே சொல்ல வேண்டாம். அது கண்ணனோட எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது இல்லை ?!” பெட்டியோடு வெளியேறும் வேணி என்கிற வேதிகாஸ்ரீ வாத்தியாரின் கண்களுக்குப் புதியதாய் தெரிந்தாள்.

வாத்தியாரிடம் சொன்னபடி வேணியால் இயல்பாய் அந்த ஊரைக் கடக்க முடியவில்லை எது ஒன்று வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதன் மேல் தான் ஆசை அதிகமாகும் அப்படித்தான் கண்ணனின் நினைவுகள் அவள் காலைச் சுற்றிய கொடியாய் கட்டிப் போட்டது. எந்தக் கொட்டகையில் பேச்சை மறந்து பார்வைகளாலேயே அவர்கள் காதலை வளர்த்துக் கொண்டார்களோ அதே கொட்டகையின் வாசலில் வெளிச்சம் தீண்டாத இருளில் நின்றாள்.

விடியல் மெல்ல தலை நீட்டி அவளை வெளிச்சித்திடம் பிடித்து கொடுத்தே தீருவேன் என்று போட்டிபோட, கண்ணன் பட்டுவேட்டி சட்டையில் பளீரென்று தயாரானான். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

மனம் தெளிந்த ஒரு பார்வையினை தன் அருகில் பதுமையாய் அமர்ந்திருந்த புதுமனைவியிடம் செலுத்தினான்.
விநாடிக்கு ஒரு தரம் அந்த முகத்தை மறைப்பதைப் போன்று வேணியின் உருவம் கண்முன் வந்து போக, “மாப்பிள்ளை பொண்ணைப் பார்த்தது போதும் அக்னியை வலம் வாங்க !” என்ற அய்யரின் குரல் கேட்டு அவளுடன் அக்கினியைச் சுற்றினான்.

மேளச்சத்தத்தை காற்று கொட்டகையில் காத்திருக்கும் வேணியின் காதுகளுக்கு எடுத்துச் சென்றது. இந்த ஊருக்கும் உனக்கும் உள்ள பந்தம் பசுமையாய் எங்களுடன் ஒட்டிக் கொண்ட இருக்கிறது போய் வா ! என்று வேப்ப மரம் ஆசிர்வதித்தது கண்களில் நீரோடு காரில் ஏறினாள் வேணி.

“சரி முகூர்த்தம் முடிஞ்சிப்போச்சு மைக்செட்டு காரனை பாட்டைப் போடச் சொல்லு யாரோ ஒருவர் குரல் கொடுக்க கொட்டகையில் மைக்செட் கணீரென்றும் காதலோடும் ….!”

“புதுப்பெண்ணின் மனதை தொட்டுப்போறவறே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க….!”

“இளமனசை தூண்டிவிட்டுப் போறவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க மர்மத்தை சொல்லிவிட்டு போங்க…..!”

என்ற பாடலை ஒளிபரப்பியது….. வலுக்கட்டாயமாய் வேணியின் நடனமும் குரலும் கண்ணனின் செவிகளை நிரப்பியது. கண்ணா அவள் உன் வேணியில்லை இப்போது வேதிகாஸ்ரீ என்ற நினைவு வர தலையை சிலுப்பிக் கொண்டான் கண்ணன் சட்டென அவன் கண்கள் கலங்கியது.

அதே நேரம் கொட்டகை தெருவைக் கடந்து சென்ற வேணியின் நினைவிலும் கண்ணனின் வாசத்தை உணரச் செய்தது. இனி நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டியதால் அப்பாடல் வரிகளை ஆசையாய் உள்வாங்கிக் கொண்டாள் அவள். இப்போது அவள் வேணியில்லை வேதிகாஸ்ரீ இதழோரம் தன் வழிந்த கண்ணீர் அவளின் கசந்த புன்னகையை கரிக்க செய்தது.

இருவரின் கண்ணீர் துளிகளும் வெய்யில் நகரத்தை மேலும் தகிக்க வைத்தது.

முற்றும்.

<பகுதி – 14

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...