நீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா

10 months ago
182

“மீதி உனக்குப் புரியலையாக்கும்” என்ற அத்தையைப் பார்த்து அசட்டுத்தனமாய் புன்னகைத்தாள்.

“ரெண்டும் கூட்டுக்களவாணிங்க. இவளுக்கு எதுவும் தெரியாதாம்; அதை நாம நம்பணுமாம்!” என்று அவளது காதைப் பிடித்துத் திருகினார் செந்தளிர்.

“ஆ! வலிக்குது அத்தை” என்று அலறியபடி காதை விடுவித்துக் கொண்டவள், “என்னையே டார்கெட் வச்சிப் பேசுங்க. உங்க செல்லப் புத்திரனை பிடிங்க. அவன் என்னமோ ஒண்ணும் தெரியாதவன் மாதிரியும்… நான்தான் எல்லாத்துக்கும் காரணம் போலவும் என்னையே சொல்லுங்க. என்னதான் ஒரு அப்பாவிப் பொண்ணு தனியா மாட்டிகிட்டாலும், அதுக்காக இப்படியா?”

விட்டால் அழுதுவிடுவேன் என்பது போலப் பேசுபவளைப் பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டனர். “சரிடியம்மா, உனக்கு எதுவும் தெரியாது. நீ அப்பாவி. போதுமா?” என்று சிரித்தார் செந்தளிர்.

“ம், அது!” என்றவள், கலகலவென நகைத்தாள்.

“உனக்கு முதலிலேயே விஷயம் தெரியும் இல்ல. அப்புறம் ஏன் எங்ககிட்ட சொல்லலை நீ?”

“இது நல்ல கதை. உங்ககிட்ட சொல்லிட்டு, அவன்கிட்ட யாரு வாங்கிக் கட்டிக்கிறது?” என்று படபடத்தவள், “ஆனா, இதை உங்ககிட்ட சொல்வேன்னு நீங்க ரெண்டு பேரும் எப்படி நினைக்கலாம்? இது விக்ரமோட வாழ்க்கை. நீங்க எனக்கு அத்தை, மாமாவாக இருந்தாலும், அவன் என் ஃப்ரெண்ட். அவனோட அனுமதியில்லாமல், அவனை உங்ககிட்டயே போட்டுக் கொடுப்பேனா?” என்று மல்லுக்கு நின்றாள்.

“அடேங்கப்பா! பார்த்தியா தளிர்! அவனுக்கு எத்தனை ஸ்ட்ராங் சப்போர்ட்டர் இருக்காங்கன்னு” அவளைச் சீண்டினார் ரவீந்தர்.

“நிச்சயமா. எந்த நிலையிலும், இந்தச் சீமா, விக்ரமுக்கு துணையாக நிற்பேன்… தெரிஞ்சிக்கோங்க” என்றாள் வீராப்புடன்.

“அட அசடே! நாங்க என்ன அவனோட விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கவா போறோம்? கொஞ்சம் முன்னமே தெரிஞ்சிருந்தா, இந்நேரம் வைஷு இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருப்பாளேங்கற ஆதங்கத்தில் சொல்றேன்.”

“ஹவ் ஸ்வீட் அத்தை!” என்று அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டவள், “உங்களை மாதிரி ஒரு அப்பா, அம்மா கிடைக்க… அந்தப் படுபாவி எந்த ஜென்மத்தில், என்ன புண்ணியம் செய்தானோ?” என்று ஆற்றாமையில் புலம்புவது போலச் சொன்னாலும், உள்ளார்ந்த அன்போடு கூறினாள் சீமா.

“நாளைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு. விக்ரமும் இங்கே இருப்பான். ஈவ்னிங் எல்லோரும் வைஷூ வீட்டுக்குப் போய்ப் பேசி, கையோடு நிச்சயத் தட்டையும் மாத்திட்டு, கல்யாணத்துக்கு நாளையும் குறிச்சிட்டு வந்திடலாம்” என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்.

“வைஷாலியோட வீட்டுக்குச் சொல்லியாச்சா?”

“நான் காலையிலேயே தேவிகிட்ட பேசிட்டேன். ஏதோ கல்யாணத்துக்குப் போயிருக்காளாம். அதனால் நைட் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், நாளைக்கு நாம வர்றதை சொல்றேன்னும் சொல்லிட்டா. விக்ரமுக்குச் சர்ப்ரைஸாக இருக்கட்டும். நீ எதுவும் உளறி வைக்காதே!” என்றார் செந்தளிர்.

“சர்ப்ரைஸ் தானே? கொடுங்க, கொடுங்க. எல்லாம் நல்லபடியா நடந்தா சரி” என்றவள் சந்தோஷத்துடன் தனது அறைக்குச் சென்றாள்.

ராகவின் அழைப்பிற்காகக் காத்திருந்த வைஷாலி, மொபைல் ஒலித்ததுமே வேகமாக எடுத்தாள். ஆனால், அது சீமாவின் அழைப்பு என்று தெரிந்ததும் மனத்தில் சற்று ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் உற்சாகத்தோடே, “ஹலோ அக்கா! எப்படியிருக்கீங்க?” என்றாள்.

“என்னம்மா ஹீரோயின், முழுசா ரெண்டு ரிங்கூட போகல…, பறந்து வந்து போனை எடுத்துட்ட. யாருக்காக இந்த எதிர்பார்ப்பு?” என்று கேலியில் இறங்கினாள் சீமா.

“உங்களுக்கு இதே வேலைக்கா. உங்க நம்பரைப் பார்த்துத் தான் எடுத்தேன். என்ன விஷயம்கா… இந்த நேரத்தில் ஃபோன் பண்றீங்க?”

“சும்மாதான். ஏன் பேசக்கூடாதா? இல்ல…, உன்னோட ஸ்வீட் டிரீம்ஸை கலைச்சிட்டேனோ!”

“போதுமே. உங்களோட கற்பனைக் குதிரையை ஒரு ஓரமா கட்டிவைங்க” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

“பெரியவங்க சொல்லிட்டீங்க… செய்யாமல் இருப்போமா…?” என்றபின் ஒரு நீண்ட மூச்சை விடுவித்தவள், “சரி, எனக்கு ஒரு ரகசியம் சொல்லு. ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் இருக்கா?”

சீமா, விக்ரமை மனத்தில் நினைத்துக் கொண்டு கேட்க, வைஷாலி சற்றுத் திடுக்கிட்டுப் போனாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லையே” என்றவள் சற்றுத் திணறினாள்.

“ஹேய்! உன் குரலைப் பார்த்தா அப்படித் தெரியலையே… என்கிட்ட எதையோ மறைக்கிறது மாதிரி இருக்கே?” என்று வேண்டுமென்றே கேட்டாள்.

“அது உங்க நினைப்பாக இருக்கும்!” என்றாள் அவள் பட்டென்று.

சீமாவிற்குக் குழப்பமாக இருந்தது. ஒருவேளை விக்ரமைச் சந்தித்ததைத் தன்னிடம் மறைக்கிறாளோ?’ என்று எண்ணியபடி, “அப்போ…” என்று ஆரம்பித்தவள், “விக்ரம் ரத்னகிரி வந்திருக்கான் தெரியுமா?” என்றாள்.

“அவர் நாளைக்குத் தானே வர்றார்” என்று வேகமாகப் பதிலளித்தவள், சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

வைஷாலியின் படபடப்பான பேச்சில், ஏதோ சரியில்லை என்று அவளுக்குத் தோன்ற, “அவன் நாளைக்கு வர்றான்னு, உனக்கு யார் சொன்னது?” என்று கேட்டாள்.

“அது… நேத்து காலைல அத்தை, அம்மாவிடம் சொன்னதா சொன்னாங்க. அதான் சொன்னேன்” என்றதும் சீமாவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தளர்ந்து போனது.

மேலும் இரண்டோரு வார்த்தைகள் பேசிவிட்டு போனை அணைத்த சீமா, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். ‘விக்ரம், அவளைப் பார்க்கப் போகவில்லையா? அவனைப் பார்த்திருந்தால், அதையாவது அவள் சொல்லியிருப்பாளே. ஏன் பார்க்கவில்லை? இல்லை என்னிடம் மறைக்கிறாளா?’ என்று நினைத்தவளுக்கு, ‘முதலில் விக்ரம் ரத்னகிரி வந்தானா?’ என்ற கேள்வி புதிதாக முளைக்க, மனத்திற்குள் தவிப்பு எழுந்தது.

அப்போதுதான் நினைவு வந்தவளாக, தனது மொபைலில் வந்திருக்கும் குறுஞ்செய்திகளை ஆராய்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே மிஸ்டர். மல்ஹோத்ரா, ஃபைலை விக்ரமிடம் சேர்ப்பித்துவிட்டதாக தகவல் அனுப்பியிருந்தார்.

‘அப்படியானால் விக்ரம் ரத்னகிரி வந்திருக்கிறான். அப்படியானால், வேலையை முடித்துவிட்டு திட்டமிட்ட படி வைஷாலியைச் சந்திக்கவில்லையா? என்னதான் நடந்திருக்கும்? இவனும் போனை எடுக்க மாட்டேங்க றானே! விக்ரம், நீ எங்கே இருக்க?’ என்ற பயம் மனத்திற்குள் எழ, தவிப்புடன் அவனது மொபைலுக்கு முயன்றாள்.

ஆளுயரக் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தையே, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் விழிகளில் அருவருப்பும், கோபமும் ஒவ்வொரு வினாடிக்கும் ஏறிக்கொண்டிருந்தது.

சீமா சொன்னபடி மிஸ்டர்.மல்ஹோத்ராவை சந்தித்து ஃபைலை வாங்கிக் கொண்டான். அவருடைய வற்புறுத்தலால் ரிசார்ட்டின் பின்புறமிருந்த பீச் ஹோட்டலில், அவருடன் காஃபி அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தான். அவனது அவசரம் புரியாமல் பேசிக் கொண்டிருந்தவர், ஒருவழியாகக் கிளம்பினார்.

நீண்ட பெருமூச்சுவிட்டவன், திரும்பிக் கடற்கரையைப் பார்த்தான். செஞ்சாந்துக் குழம்பாக ஜொலித்தபடி, கடலன்னையின் மடியில் துயில்கொள்ள ஆரம்பித்திருந்த செங்கதிரோனின் அழகில், சற்றே மெய்மறந்து நின்றான். இந்தச் சூழ்நிலையில், தன்னவள் அருகில் இல்லையே என்று ஏங்கிய மனத்தை அடக்க முடியாமல் தவித்தான்.

அவளைக் காணவேண்டும் என்ற உத்வேகம் மனத்தில் எழ, வேகமாகத் திரும்பி இரண்டடி நடந்தவன், சட்டென நின்றான். அதே வேகத்தில் தனக்கு வலது புறத்தில் திரும்பிப் பார்த்தவன், ஸ்தம்பித்துப் போனான்.

சற்று உள்ளடங்கியிருந்த இடத்தில் அமர்ந்திருந்த ராகவையும், அவனது தோளில் தலை சாய்த்து அமர்ந்திருந்த வைஷாலியையும் கண்டவன் சிலையென நின்றான். ‘இது அவர்கள் தானா? இல்லை… அவர்களில் சாயலில் வேறு யாரையும் பார்க்கிறோமா?’ என்று தன் கண்களையே நம்ப முடியாதவனாக மீண்டும் உற்றுக் கவனித்தான்.

ராகவ், அவளது ஒவ்வொரு விரலாகப் பிடித்து ஏதோ சொல்ல, அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டிச் சிரித்தவளது சிரிப்பொலி, அது வைஷாலியே தான் என்று கட்டியம் கூறியது.

நடந்த நிகழ்வெல்லாம் மீண்டும் கண்முன்னால் வர, அவனது கோபம் வெறியாக உருமாறியதில், முழு வேகத்துடன் கண்ணாடியை ஓங்கிக் குத்தினான். உடைந்து சிதறிய துண்டுகள் அவனது பிம்பத்தைப் பிரதிபலித்து, ‘தோற்றுப் போனவன்!’ என்று கேலி செய்வதைப் போல இருக்க, அவனது ஆக்ரோஷம் கட்டுக்கடங்காமல் போனது.

‘என்ன இல்லை தன்னிடம்? அழகு, திறமை, பணம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு… என்னதான் இல்லை? ஆனால், இவை எல்லாவற்றிலும் என்னைவிடத் தகுதியில் குறைந்த, தன்னிடம் கைகட்டிப் பணிபுரியும் ஒருவனிடம், தான் தோற்றுவிட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘என்னைவிட எந்தவிதத்தில் அவன் உயந்தவன்? எந்தவிதத்தில் அவன் வைஷாலியைக் கவர்ந்தான்? என்னை ஏன் அவளுக்குப் பிடிக்காமல் போனது? என்னிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசிப் பழகியவளுக்கு, என் மனத்தில் இருப்பது எப்படிப் புரியாமல் போனது?’ என்று குமுறினான்.

நினைவு தெரிந்த நாள் முதல், இதுவரை எதிலுமே தோற்றுப் பழக்கமில்லாதவன், வாழ்க்கையில் விழுந்த முதல் அடியிலேயே நிலை குலைந்து போனான்.

அவனது ஒரு பார்வைக்காக ஏங்கி நின்ற பெண்களை, தன்னருகில் நெருங்க விடாமல் பார்வையிலேயே தள்ளி வைத்தவன் தானே அவன்.

‘எவ்வளவு தான் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், உங்களது வசீகரிப்பு என்னை எதுவும் செய்யாது’ என்று மமதையில் இருந்தவனை, தனது தைரியத்தாலும், துறுதுறுப்பான செயலாலும் நிதானித்துப் பார்க்க வைத்தவள் வைஷாலி மட்டுமே அல்லவா?

அவளது துடுக்குத்தனமான பேச்சும், கலகலப்பான சுபாவமும் அவள் மீது எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் அவனுக்கு உண்டு பண்ணியது. ஆரம்பத்தில் இந்த நினைப்பெல்லாம் சில நாட்களில் மாறிவிடும் என்று அலட்சியமாகத் தான் இருந்தான்.

ஆனால், நாளுக்கு நாள் அவளது நினைவுகள் அவனது எண்ணங்களை மட்டுமல்ல, அவனையுமே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை சற்றுத் தாமதமாகத் தான் புரிந்து கொண்டான் அவன். அதைப் புரிந்து கொண்டபோது, அது மனத்திற்குச் சந்தோஷமாகவே இருந்தது.

பிசினஸை மட்டுமே தனது ஒரே குறிக்கோளாக வைத்து, தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தனக்கென ஒரு இடத்தை நிர்மாணித்துக் கொண்ட தனக்கும் காதல் வரும் என்று ஒரு போதும் அவன் நினைத்ததில்லை.

அவள் வலியில் துடித்து இரத்த வெள்ளத்தில் கிடந்த போது தனது இதயத்தில் எழுந்த வேதனைதான் காதல் என்று அவன் உணர்ந்த அந்த நொடியில், தான் புதிதாகப் பிறந்ததைப் போல உணர்ந்தான். ‘நான் காதலிக்கிறேனா?’ என்று தன்னையே பலமுறை கேள்வி கேட்டுக் கொண்டவனுக்கு, அன்றுதான் தீர்மானமாக, ‘ஆம்’ என்று சொல்லிக் கொள்ள முடிந்தது.

தன் மனத்திற்குள் இத்தனை நாட்களாக வைத்திருந்த அந்தக் காதல், சொல்லப்படாமலேயே உள்ளுக்குள்ளேயே மரித்துப் போனதை அவனால் தாங்க முடியவில்லை. தன் காதல் தோற்றுவிட்ட நிலையில் அவளது இந்த நிராகரிப்பை ஏற்க முடியாமல், அவனது மனம் பட்ட வலியும் அவமானமும் அதிகம்.

ஏகாந்தப் பொழுதுகளில் தன்னுடன் கனவில் பேசிச் சிரித்தவளை, இனி மறந்து விடவேண்டுமே என்ற எண்ணம் ஏற்படுத்திய வலி, எளிதில் ஆற்ற முடியாதது.

நடக்கும் என்று நினைத்து கனவில் களித்த கற்பனை வாழ்க்கை, மண்மேடாகக் கலைந்து போனது.

காற்றில் அலைந்த அவளது கூந்தல், தனது முகத்தை ஸ்பரிசித்ததைக் கண்மூடி ரசித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, அது பாசக்கயிறாக மாறி, கழுத்தை இறுக்குவதைப் போன்று துடித்துப் போனான்.

உடைந்த கண்ணாடியின் சில்லுகள் அவனது கைகளில் குத்தியதில் வழிந்த ரத்தம் தரையில் உறைந்திருந்தது. அவனது மனக் காயத்தின் முன்பு, இந்த உடற்காயம் எந்த விதமான பாதிப்பையும் அவனுக்கு ஏற்படுத்தவில்லை.

‘ஏன் ஷாலு என்னை உனக்குப் பிடிக்காமல் போச்சு…? ஏன்?’ என்ற கேள்விகளோடு கட்டிலில் விழுந்தான்.

அதிகாலை நான்கு மணிக்கு வீட்டுத் தொலைபேசி சிணுங்க, தூங்காமல் விழித்திருந்த சீமா ஓடிவந்து எடுத்தாள்.

“விக்ரம்!” என்றவளது குரல் தவிப்புடன் வந்தது.

“மேடம்! நான் விஜய்துர்க் கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் பேசறேன்” என்றது மறுமுனையிலிருந்த குரல்.

“சொ…ல்லுங்க!” என்றபோதே, அவளுக்குப் பாதி விஷயம் புரிந்து போயிற்று.

“நேத்து நைட் ஒரு மணி இருக்கும் மேடம்… சின்ன முதலாளி கொஞ்சம் நிதானம் இல்லாமல்தான் வந்தார். நான் ஏதாவது வேணுமான்னு கேட்டு பின்னாலேயே போனேன். என்னைத் திட்டி வெளியே தள்ளிக் கதவை பூட்டிகிட்டார். நான் பயத்தோட வெளியேவே நின்னுட்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சி கண்ணாடிச் சாமானெல்லாம் உடையற சத்தம் கேட்டுச்சு மேடம். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை மேடம்.

பக்கத்துல இருந்த தோட்டக்காரனை எழுப்பிக் கூட்டிட்டு வந்தேன். அவன் மாடி ஜன்னல் வழியா உள்ளே போய், சின்ன முதலாளியோட ரூமிற்குள் சாவித் துவாரம் வழியா பார்த்தான். உள்ள எல்லாமே தாறுமாறா இருக்குங்கம்மா… எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. பெரியவங்க ரெண்டு பேரும் பயந்துடப் போறாங்கன்னு தான் யோசிச்சோம். ஆனால், சின்ன முதலாளியையும் பார்க்கணுமே… அதான் ஃபோன் செய்தோம். நல்லவேளை நீங்க இருக்கீங்க. இப்போ நான் என்னங்கம்மா செய்யட்டும்?” என்று கேட்டான்.

“நான் உடனே கிளம்பி வரேன். அதுக்கு முன்னால, விக்ரம் அங்கேயிருந்து கிளம்பாமல் பார்த்துக்கோங்க” என்றபின் போனை வைத்தாள். நெற்றியை அழுந்தத் துடைத்துக்கொண்டவள், அவசர வேலையாக வெளியில் செல்வதால் வந்து விஷயத்தைச் சொல்வதாக குறிப் பொன்றை எழுதி, டைனிங் டேபிள் மீது வைத்துவிட்டுக் கிளம்பினாள்.

ஒன்றரை மணி நேரப் பயணத்தைக் குழப்பத்திலேயே கழித்துவிட்டு, விக்ரம் இருந்த அறைக்கதவை தன்னிடமிருந்த சாவியால் திறந்தவள் திகைத்து நின்றாள். அறை முழுவதும் சிதறியிருந்த கண்ணாடிச் சில்லுகளும், அவற்றில் தெறித்திருந்த இரத்தமும் அவளது பயத்தை அதிகரித்தது.

அவனருகில் சென்றவள், அவனிருந்த நிலை கண்டு கண்ணீர் வடித்தாள். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனைச் சிரிப்பும், களிப்புமாகவே கண்டிருந்தவளால், இதைத் தாங்க முடியவில்லை. எந்த நிலையிலும் தனது நிதானத்தைச் சற்றும் இழக்காதவன், இன்றிருக்கும் நிலை கண்டு துடித்தாள்.

அவனது வலது கையில் கண்ணாடிச் சில்லுகள் குத்தியிருப்பதைப் பார்த்து, கண்ணீருடன் நடுங்கும் விரல்களால் மெல்ல ஒன்றைப் பிடித்து இழுத்தாள்.

அரைகுறை உறக்கத்திலிருந்தவன், கையில் திடீரென ஏற்பட்ட வலியில் பட்டெனக் கண்களைத் திறக்க, கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் வேகமாக எழுந்தான்.

உள்ளே சென்றிருந்த மதுவின் கைங்கரியத்தால் அவனுக்குத் தலை சுற்றியது. இருந்தும் அதை ஒதுக்கித் தள்ளியவன், தள்ளாடியபடி எழுந்து நின்றான். “எதுக்கு இங்க வந்த? வெளியே போ!” வார்த்தைகளில் தடுமாற்றம் இருந்த போதும், குரலில் கோபம் தெரிந்தது.

“விக்ரம்! இங்க பாரு” என்றாள்.

“எதுக்கு வந்த? என்னைப் பார்த்து, தோத்துப் போனவன்னு கேலி செய்து சிரிக்கத் தானே?” -ஆத்திரத்தில் கத்தினான்.

“விக்ரம்! நான் உன்னோட ஃப்ரெண்டுடா. உன்னைப் பார்த்து நான் எதுக்குச் சிரிக்கணும்? அப்படி என்ன நடந்தது? உன்னோட ஷாலுவை பார்த்துப் பேசினியா?”

வைஷாலியின் பெயரை கேட்டதும் கண்களை மூடிக்கசப்புடன் புன்னகைத்தவன், “என்னோட ஷாலுவா…? யார் சொன்னது என்னோட ஷாலுன்னு. அவ என்னோட ஷாலுவா ஆகவே முடியாது.”

“விக்ரம்! என்ன சொல்ற?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“ஏன்னா, அவள் ராகவோட வைஷூன்னு தெரியுமா உனக்கு? அவளுக்கு என்னைப் பிடிக்கலை. என்கிட்ட கைநீட்டிச் சம்பளம் வாங்கற, என்னோட வேலைக் காரனைப் பிடிச்சிருக்கு. தெரியுமா… உனக்குத் தெரியுமா?” என்றவன், ஆத்திரத்துடன் சீமாவின் தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.

அதிர்ச்சியில் கண்கள் விரிய, என்ன சொல்வதென தெரியாமல், “அவகிட்ட பேசினியா?” என்றாள்.

”என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தேன். ரெண்டு பேரும் அன்னியோன்யமா சிரிச்சிப் பேசினதை, என் கண்ணால பார்த்தேன்” என்று வெறி பிடித்தவன் போல அலறியவன், “ஏன் சீமா என்னை அவளுக்குப் பிடிக்கல? நான் என்ன செய்யலை அவளுக்காக? என்னைவிட அவன் எந்த விதத்தில் உசத்தி? நான் ஷாலுவை நேசிக்கிற அளவுல பாதியாவது அவன் நேசிப்பானா? உனக்குத் தெரியும் இல்ல… அவள் மேல நான் எந்த அளவுக்கு உயிரை வச்சிருக்கேன். ஆனா, அவளுக்கு மட்டும் ஏன் இது புரியாமல் போச்சு சீமா?

ராகவ் மேல எத்தனைப் பிரியம் வச்சிருந்தேன். என்னோட பிசினஸில் அவனை ஒரு பார்ட்னராக்க நினைச்சேன். அவன் குடும்பத்தை, என் குடும்பமா பார்த்தேன். ஆனால், இப்படி எனக்குத் துரோகம் செய்வானா? அவனைப் பத்தி எவ்வளவு பெருமைப்பட்டிருக்கேன்! அப்படிப்பட்ட என்னை, அவனைப் பார்த்துப் பொறாமைப்பட வச்சிட்டானே!

எல்லாத்திலேயும் ஜெயிச்சே பழக்கப்பட்டவன் நான். ஆனால், எதில் ஜெயிக்கணுமோ அதில் தோற்றுப் போயிட்டேன். எனக்கு, இது எத்தனை பெரிய வலின்னு தெரியுமா சீமா? தாங்கமுடியலை சீமா” என்று புலம்பியவனைக் கலங்கிய விழிகளுடன் பார்த்தாள்.

“விக்ரம் நீ எதுக்குக் கவலைப்படற? வைஷாலி ஒருத்தி தான் பொண்ணா என்ன? உன்னோட காதலை அனுபவிக்கக் கொடுத்து வைக்காத, அவள்தான் துரதிர்ஷ்டசாலி. நீ இல்லை. இங்கே பார்! நடந்ததை மறந்திடு விக்ரம். வைஷாலின்னு ஒருத்தியை நீ சந்திக்கவே இல்லைன்னு நினைச்சிக்க” என்றவள், அவனது முகத்தை தனது கைகளில் ஏந்தினாள்.

“ஹும்!” என்று விரக்தியாகப் புன்னகைத்தவன், “அப்படி நினைக்கணுமா நான்? ஒண்ணு எனக்கு நடந்ததெல்லாம் மறந்து போகணும்…, இல்லை, நான் ஒரேடியாக மறைந்து போகணும்” என்றான்.

சீமா கோபத்துடன், “என்னடா பேசற நீ? அத்தை, மாமாவை நினைச்சிப் பார்த்தியா? உன்னையே வாழ்க்கையா நினைச்சிட்டு இருக்கவங்களை காலம்பூரா கஷ்டபடுத்தப் போறியா? இது உனக்கு மட்டும் வருத்தம் இல்லை. இன்னைக்கு, உனக்காக வைஷாலியை பெண் கேட்டு, கல்யாண ஏற்பாடு செய்யறதுக்கு இருந்தாங்க. ஆனால், எல்லாமே ஆரம்பிக்கும் முன்னாலேயே முடிஞ்சி போச்சு.

பிசினஸில் நீ பார்க்காத இக்கட்டான சூழலா? அதிலெல்லாம் நீ மீண்டு வரலையா? அதைவிடவா ஒரு பொண்ணு மேல நீ வச்ச காதல் உன்னை கோழையாக்கிடுச்சி! உனக்குத் தெரியாதது இல்லை. இன்னைக்குப் பெரிய பிரச்சனையாக தெரியறதெல்லாம், நாளைக்கு ஒண்ணுமே இல்லாமல் போயிடும். இதெல்லாம் நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தது தான். இப்போ, சும்மா உனக்கு அதை நினைவுபடுத்தறேன்” என்றவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“கிளம்பு! நேரமாகுது. டாக்டர்கிட்ட போயிட்டு வீட்டுக்குப் போகலாம். அத்தை, மாமாவை நினைவில் வச்சிக்க. அப்ப, மத்ததெல்லாம் பெரிசா தெரியாது. உனக்குன்னு ஒருத்தி… இனி பிறக்கப் போறதில்லை. நிச்சயம் உன்னைத் தேடி வரத்தான் போறா!” என்று ஏதேதோ பேசி, அவனைச் சமாதானப்படுத்தினாள் சீமா.

அவன் கையிலிருந்த காயத்தைத் துடைத்து சுத்தப்படுத்தியவள், அறையை தூய்மைப்படுத்தச் சொல்லிவிட்டு, விக்ரமை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக வருகிறானே தவிர, அவனது மனத்திற்குள் இருக்கும் போராட்டத்தை அவளுமே உணர்ந்திருந்தாள். ஆனால், இந்த நிலை விரைவில் மாறிவிடுமென்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அவளது சமாதானம் வீட்டிற்குள் நுழைந்த போது முற்றிலும் மாறிப் போனது.

தன் சோகத்தையெல்லாம் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வீட்டில் நுழைந்த விக்ரம், ஹாலில் அமர்ந்திருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தான்.

< பகுதி – 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930