புதுமையாக அசத்தும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படம்
முன்பெல்லாம் திருமணத்தின்போதுதான் மணமக்கள் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். பின்னர் அது கொஞ்சம் மாறி நிச்சயதார்த்தத்தின் போது போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இது எல்லாமே வீட்டிற்குள்ளும், திருமண மண்டபத்திற்குள்தான் நடக்கும். தற்போதைய நிலைமையே வேறு.
திருமணத்திற்கு முன்பாகவே போட்டோ ஷூட், அதாவது திருமணத்திற்கு முந்தைய புகைப்பட படப்பிடிப்பு (Pre Wedding Photoshoot) என்றே தனியாக வைக்கும் வழக்கம் வந்திருக்கிறது. அதுவும் இண்டோரில் அல்லாமல் அவுட்டோரில் போட்டோ ஷூட் செய்து, அதிலும் சினிமாவை போல இன்னும் சொல்லப்போனால் சினிமா காட்சிகளையும் மிஞ்சும் அளவுக்கு அசத்துகிறார்கள்.
இவ்வாறு எடுக்கப்படும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களிம் பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார்கள்.
பெரும்பாலும் அருவியில், மழையில் நனைந்தபடியே போட்டோ ஷுட் எடுத்து பதிவிடுகிறார்கள். டைட்டானிக் போஸ் போலவே போட்டோ எடுக்க விரும்பிய ஜோடி ஒன்று போட் மீது ஏறி நின்று போஸ் கொடுக்கையில் வேகமான நீரினால் போட் கவிழ்ந்து தலைக்காவிரி நீரில் மூழ்கி பலியான பரிதாபம் அண்மையில் கர்நாடகாவில் நடந்தது.
கேரளாவில் திருமணத்திற்கு முந்தைய புகைப்பட படப்பிடிப்பு (Pre Wedding Photoshoot) பழக்கம் அதிகரித்து வருகிறது. அண்மையில் கேரளாவில் ஒரு ஜோடி, இருட்டு அறையில் முரட்டு குத்து பட போஸ்டர் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் அபி -ஜெஸ்டினா ஜோடி கட்டிடத்தொழிலாளார்கள் வேலை செய்வது போலவே முன்திருமணப் படங்கள் எடுத்திருக்கிறார்கள். இந்த வித்தியாசமான முன் திருமணப்படங்கள் வைரலாகி வருகின்றன.
”உழைப்பாளர்களுக்கும், ஆண்-பெண் கூட்டுழைப்பிற்கும் மரியாதை செலுத்தும் மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து மகிழட்டும்” என்று திரைப்பட இயக்குநர் கவிதாபாரதியும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
கட்டிடகாரர்கள் மட்டுமல்ல இன்னும் பல தொழில்கள் இருக்கின்றன அத்தனையையும் பெருமை படுத்த வேண்டும் என்பது பலரின் ஆசையும் விருப்பமும்.