பார்வை – சிறுகதை | தனுஜா ஜெயராமன்

 பார்வை – சிறுகதை | தனுஜா ஜெயராமன்

கடிகாரத்தை பார்த்தாள் மணி 9. 00 ஆக போகிறது. இன்னமும் பேருந்தை காணவில்லை. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது. அப்படியே அருகிலிருந்தவர்களை வேடிக்கை பார்த்தவாறு கண்களை சுழற்றினாள் இந்து.

பெரிய மீசை வைத்து ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தான் ஒருவன். அவனது பார்வை அலைபாய்ந்து கொண்டிருந்தது. எதையோ நோட்டமிட்டபடி. அவனது கருமை நிறம் மேலும் அவனை கடுமையானவனாக காட்டியது. இந்துவிற்கு அவனை பார்த்ததுமே பிடிக்கவிலலை. ஏனென்றே தெரியாமலே வெறுப்பை காட்டினாள்.

அவனை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பியவாறு நின்று கொண்டு பேருந்து வருகிறதா என கவலையுடன் பார்த்தாள்.

“எஸ்க்யூஸ்மீ. 24 A பஸ் போயிடுச்சா?” என்று வேகமாக ஒடி வந்து அருகில் நின்ற இந்துவிடம் கேட்டான் ஒரு நாகரீக இளைஞன். கையில் ஒரு பைலை பிடித்து கொண்டு பதட்டத்துடன் கடிகாரத்தை பார்த்தபடி.

“இன்னும் வரலீங்க”

“ஓ. தேங்க் காட்.” என தெற்றுபல் தெரிய சிரித்தவன் நடிகர் மோகனை நினைவூட்டினான். அழகாக நாகரீகமாக இருந்தான். பார்த்ததுமே பிடித்துவிடும் நம்பிக்கை தரும் முக அமைப்பு.

“ம். வருகிற நேரம் தான்.” என்றாள் இந்து புன்முறுவல் பூத்தபடி.

பிதுங்கிய புளி மூட்டை போல 24A வந்து நின்றது. எல்லையில் போருக்கு செல்பவர்கள் போலவே ரெடியாக இறங்க காத்திருந்த படியிலே பயணித்த வீரசாகச பயணிகள் சிலர் சரசரவென இறங்கி ஓடினார்கள். பின் மற்றுமொரு கூட்டம் முண்டியடித்து ஏறியது. நிறைமாத கர்ப்பிணி போல பிதுங்கி வழிந்த கூட்டத்தில் பஸ்ஸே ஒரு புறம் சாய்ந்திருந்தது.

எப்படியோ அடித்து பிடித்தபடி ஏறி உள்ளே சென்று கம்பியை பிடித்தபடி பாதுகாப்பாக ஓரமாக நின்று விட்டாள் இந்து. பின்னாடியே எறிய அந்த நாகரீக இளைஞன் எதிரில் புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தான்.

எதேச்சையா ஐன்னலுக்கு வெளியே பார்வையை ஓடவிட்டாள் இந்து. அந்த முறுக்கு மீசை ஆள் இங்கேயே முறைத்து பார்த்து கொண்டிருந்தது போலவே இருந்தது. சட்டென அசூயையாக உணர்ந்தவள் அவனை காண பிடிக்காமல் முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள். ‘இதுக்குன்னே வரானுங்க. பொம்பளைங்கன்னா இவங்களுக்கு கிள்ளுகிறைகள்’ என மனதுக்குள் குமைந்தாள். எதிரே புன்னகைத்த அவனை கண்டு ஸ்நேகமாக சிரித்து வைத்தாள்.

“கொஞ்சம் நகர்ந்து ஓரமா நின்னுக்கங்க. அடுத்த ஸ்டாப்பில் ஒரு கும்பலே ஏற போகுது. நெருக்கி தள்ளுவாங்க.” என அக்கறையுடன் சொன்னான் அந்த இளைஞன் புன்னகை குறையாமலே.

“தேங்க்ஸ்”. என்று சிரித்தபடியே நகர்ந்து ஒரமாக நின்று கொண்டாள்.

கண்டக்டர் விசில் ஊத. நின்ற பேருந்தில் திமுதிமுவென ஒரு கும்பல் நெருக்கி தள்ளி ஏறியது. ஏற்கனவே கூட்டம் பிதுங்கி இருக்க குண்டூசி கூட நுழைய முடியாத இறுக்கம் பேருந்துக்குள். நல்லகாலம் அந்த இளைஞன் எச்சரிக்கை செய்யவில்லையெனில் தன்னை சாத்துகுடி போல ஜூஸ் பிழிந்திருப்பார்கள் என நினைத்து கொண்டாள். அவன் மேல் ஒரு மரியாதை வந்தது.

மறுபடியும் “தாங்ஸ்”. என்றாள் இந்து.

“நோ மென்ஷன் ங்க. நான் இந்த ரூட்ல ரொம்ப நாளாக வரேன். அந்த அனுபவத்தில் தான் சொன்னேன்.” என சிரித்தான். “நீங்க புதுசா? இன்னைக்கு தான் உங்களை பாக்குறேன்.” என்றான்.

“ஆமாங்க. புதுசா வேலையில் ஜாயின் பண்ணியிருக்கேன். இன்னையிலிருந்து தான் இந்த ரூட்ல வரேன். இனிமே தினமும் இதில் தான் வந்தாகணும் பழகிக்கறேன்.” என்றாள்

மறுநாள் வழக்கம்போல பஸ்க்காக காத்திருந்தாள். தூரத்தில் லாப்டாப் பேக் மாட்டியபடி அவன் வருவது தெரிந்தது. ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தாள். கருப்பு நிற பேண்டும் க்ரே கலர் ஷர்ட்டும் அவனுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. போட்டிருந்த ரேபான் கூலிங் கிளாஸ் இன்னும் அழகை மெருகூட்டி காட்டியது.

இந்துவும் அழகு தான் மெல்லிய மெலிந்த தேகம். அழகான பிங்க் நிற கார்ட்டன் புடவை அதே நிற ப்ளவுஸ், கழுத்தில் இருக்கிறதா இல்லையா என தெரியாமல் ஒரு மெல்லிய தங்க சங்கிலி. அதில் ஒரு ஆர்ட்டின் டாலர். காதில் மிக குட்டியான வெள்ளைக்கல் ஜிமிக்கி என தேவதையாக ஜொலித்தாள்.

தூரத்தில் இந்துவை பார்த்து விட்டு நெருங்கி வந்தவன். “இன்னும் பஸ் வரலை. இல்லையா? என்றான் மூச்சு வாங்கியபடி.

“ம்கும். இல்லை.” என்றவள். “நீங்க எங்க ஓர்க் பண்றீங்க.” என்றாள் அவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமுடன்.

“ஓ. சாரி. சொல்ல மறந்துட்டேன். ஐ யம் நரேஷ். இன்போசிஸ் ல ஒர்க் பண்றேன்.” என அறிமுகபடுத்தி கொண்டான்.

“என் பேர். இந்து. இந்துமதி.” என்றாள் சிரித்தபடி.

அப்போது வேகவேகமாக வந்து ஓரமாக தன் பல்ஸரை நிறுத்திய அதே முறுக்கு மீசை ஆள் இவர்களுக்கு சற்று தள்ளி நின்று கொண்டான். இந்துவை நோட்டமிட்டவாறு மொபைலில் யாரிடமோ பேசி கொண்டிருந்தான்.

இந்துவிற்கு பயமாக இருந்தது அவனை பார்க்க. அதை வெளியே காட்டி கொள்ளாமல் திரும்பி நரேஷை பார்த்தாள் சற்று ஆறுதலாக இருந்தது. கூடவே இவன் இருக்கிறானே என்ற தைரியமும் வந்தது.

அதற்குள் பஸ் வந்துவிட, “வாங்க.” என்று அழைத்தவனின் குரலுக்கு ஒடிபோய் பஸ்ஸில் ஏறி கொண்டாள்.

ஓரமாக நின்று கொண்டிருந்தவளிடம். “எனி ப்ராளம்?. ஏன் ஓரு மாதிரி இருக்கீங்க?” என கேட்டான்.

“அதில்லைங்க. பஸ் ஸ்டேண்டில் ஒருத்தன் பார்க்க ரவுடி மாதிரி இருக்கான். என்னையே பார்த்து கொண்டிருந்தான். நேத்தும் அவனை பாத்தேன். அதான் பயமா இருந்தது.” என தயங்கியபடி சொன்னாள்.

“என்னங்க நீங்க. அப்பவே சொல்லியிருக்ககூடாது. நான் அவனை திட்டியிருப்பேனே.” என உரிமையுடன் கோபித்து கொண்டான் நரேஷ்.

“இட்ஸ் ஒகே. இனிமே வந்தானென்றால் பாத்துக்கலாம்.”

இந்த ஒரு வார காலத்தில் இந்துவும் நரேஷூம் மிகவும் நெருங்கி விட்டனர். அவன் பேச்சிலிருந்து திருமணமாகாதவன் என புரிந்து கொண்டாள். தினமும் பஸ் நிறுத்தத்திலும், பஸ்ஸிலும் தங்கள் நட்பை வளர்த்து கொண்டனர். இந்த குறுகிய நாட்களிலும் நரேஷின் பேச்சிலும் செயலிலும் மிகுந்த மரியாதையும் ஒரு மயக்கமும் ஏற்பட்டு விட்டது இந்துவிற்கு. அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் வேறு வந்துவிட்டது.

இன்று எப்படியும் தன் காதலை நரேஷிடம் சொல்லிவிட வேண்டும் என மனதுக்குள் நினைத்து கொண்டே வீட்டிலிருந்து கிளம்பி பஸ் நிறுத்தத்தை அடைந்தாள் இந்து. இன்னமும் மணியாகவில்லை. சற்று நேரத்தில் நரேஷ் வந்து விடுவான். ஆனாலும் மிகுந்த பதட்டமாக தான் இருந்தது. எப்படி சொல்வது. என்னவென்பது. ஏதாவது தவறாக புரிந்து கொள்வானோ? அவனே சொல்லும் வரை காத்திருக்கலாமா? என ஒரே சிந்தனையாக இருந்தது.

அப்படியே யோசித்து கொண்டே திரும்பியவள் பல்ஸர் சவுண்ட் வரும் திசையில் பார்த்தாள். அவன் தான். அந்த முறுக்கு மீசை. தூரத்தில் மறைவாக பைக்கை நிறுத்தியவன். இந்துவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களாக இவனை காணவில்லை. மறுபடியும் வந்துட்டானே என பயந்து போனாள். அவன் தூரமாகவே நின்று விட்டான். யாரோடோ மொபைலில் சீரியஸாக பேசிக்கொண்டிருந்தான்.

நரேஷை இன்னும் காணோமே எனற தவிப்புடன் சீக்கிரம் வந்துவிட வேண்டுமே என்று வேண்டிக்கொண்டாள். நரேஷ் வரட்டும் இன்னைக்கு இவனை நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டே ஆகணும் என மனதுக்குள் கருவினாள்.

“க்கும். என்ன பலமான யோசனை?” என அருகில் வந்தான் நரேஷ் சிரித்தபடி. இந்த தெற்றுபல். இதே சிரிப்பில் தான் விழுந்து விட்டாள் இந்து. நரேஷை பார்த்ததும் முகம் மலர்ந்து விட்டது இந்துவிற்கு. சற்று லேசான வெட்கத்துடன், “ஒன்றுமில்லை” என்றாள்.

திடீரென முறுக்கு மீசை இவர்களை நோக்கி வர. இந்து பதட்டத்துடன். “நான் சொன்னேன்ல இவன். இவன் தான் என்னை பாலோ செய்பவன்.” என நரேஷின் பின் பயத்துடன் பதுங்கி கொண்டாள் இந்து. அவள் காட்டிய திசையில் திரும்பியவன் அதிர்ந்து போனான். சட்டென முகம் மாறி சுதாரித்து கொண்டு ஓட முயன்ற நரேஷை எட்டி சட்டையை கொத்தாக பிடித்தார் முறுக்கு மீசை. “பளார்” என கன்னத்தில் அடியை இறக்கினார். செய்வதறியாது திகைத்து சிலையாக நின்றாள் இந்து.

வேகமாக வந்த போலீஸ் ஜீப் கிறீச்சிட்டு நிற்க. அதிலிருந்து இறங்கிய ஆட்கள் நரேஷை வளைத்து லாடம் கட்ட. மாட்னியா. இவ்வளவு நாளாக. உன்னை தாண்டா தேடிகிட்டிருக்கோம். பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா போச்சாடா?. எவ்வளவு பெண்கள் வாழ்க்கையை நாசம் பண்ணிருக்க. வேலையில்லாத வெட்டிபயலுக்கு சோக்கை பாறேன். உன்னை கண்ணி வைச்சி பிடிக்கத்தான்டா ஒரு வாரமா அலையுறேன்.” என லத்தியால் அடித்து கொண்டிருந்தார் முறுக்கு மீசை.

பஸ் ஸ்டாபில் நின்ற ஒருவர் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம். “என்ன சார் பண்ணான் இவன்? பார்க்க டீசண்டா இருக்கானே?”

“இவனா? மகா ப்ராடு பய. எவ்ளோ பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கியிருக்கான் தெரியுமா? டிப்டாப்பா ட்ரஸ் பண்ணிகிட்டு. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யறேன்னு சொல்லி நாடகமாட வேண்டியது. ஏமாறும் பெண்களை காதல், கல்யாணம் ன்னு நம்பவைத்து கிடைக்குற நகை நட்டை சுருட்டிகிட்டு ஓட வேண்டியது. நல்லவன் மாதிரி நடிச்சே இது வரை பல ஊர்களில் பல பெண்களை ஏமாத்திட்டு ஓடிவந்திருக்கான்.

இவன் மேலே ஏகபட்ட கம்ளைண்ட் ஏமாந்த பெண்களிடமிருந்து. ஆளை பாருங்க. சோக்காவே திரிவான். வெண்ணையா பேசுவான். ஈஸியா பொண்ணுங்க ஏமாந்துருவாங்க. இவன் இந்த ஊரில் சுத்துறதா தகவல் வந்தது. முதல்ல இவன் தானான்னு ஒரு சந்தேகம். இவனை புடிக்கவே எங்க இன்ஸ்பெக்டர் ஒரு வாரமாக வேவு பார்த்து, கோழி அழுக்குற மாதிரி இன்னைக்கு அமுக்கிட்டாரு.” என்றார்.

கேட்டு கொண்டிருந்த இந்துவுக்கு பகீரென்றது.

ஜீப்பிலிருந்த இறங்கிய இதர போலீஸ்காரர்கள் இவருக்கு சல்யூட் அடித்து. “சார். அரெஸ்ட் வாரண்ட் ரெடியாகி வந்தாச்சு.” என்றனர்

“நான் இன்ஸ்பெக்டர் முருகேசன் பேசுறேன் சார். அந்த பொண்ணுங்களை ஏமாத்துற அக்யூஸ்ட்டை அமுக்கியாச்சு.” என தனது மேலதிகாரியிடம் மொபைலில் பேசி கொண்டிருந்தார்.

இவரை போய் தவறாக எடைப்போட்டோமே என மனம் வருந்தி. கடவுள் போல் வந்து தன்னை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கும், இதர போலீஸ்காரர்களுக்கும் மானசீகமாக தன் நன்றியை தெரிவித்தபடி வீட்டுக்கு திரும்பி நடந்தாள்.

கமலகண்ணன்

1 Comment

  • 1 பக்கக் கதை அம்சங்கள் அனைத்தும் நிரம்பிய டைம்பாஸ் கதை. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...