சரணும் சத்யாவும் பின்னே நானும் | விஜி முருகநாதன்
மலைக்கோவிலின் சுவரில் சாய்ந்து கொண்டு படிகளில் சின்ன சின்னஞ் சிறு புள்ளியாக ஏறி வருபவர்களை ரசித்துக் கொண்டு இருந்தோம். நானும் என் பையன் சித்தார்த்தும்.
அப்போது தூரத்தில் படி ஏறிக் கொண்டு இருந்த அந்தப் பெண் கண்ணில் பட்டாள்.
சத்யாவா? அது? ரொம்ப தூரத்தில் வந்து கொண்டு இருந்ததால் அவ்வளவாகத் தெரியவில்லை. பார்ப்பதற்கு அவளைப் போலவே இருந்தது. பார்த்துப் பத்து வருடங்கள் இருக்குமா. ?
நான் (சாந்தி), சரண், சத்யா மூவரும் கொங்கு ஆர்ட்ஸ் காலேஜ் ல ஒன்றாகப் படித்தோம். கல்லூரியில் எங்கள் செல்லப் பெயர் SSS. குறும்பிலும் சரி, படிப்பிலும் சரி, நாங்கள் தான் முதலில்.
எவ்வளவு குறும்பு சேட்டைகள் செய்தாலும், எங்கள் கல்லூரியில் நடக்கும் போட்டியானாலும் சரி, பிற கல்லூரியில் நடக்கும் போட்டியானாலும் சரி. பரிசைத் தட்டிக் கொண்டு வந்து விடுவதால் எங்கள் கல்லூரி ஆசிரியர்களின் செல்லப் பிள்ளைகள் நாங்கள்.
சரண் பணக்காரன், அழகன், பழகுவதற்கு இனியன். கல்லூரியின் ஹீரோ அவன் தான். ஆனால் அவனோ என்னிடமும் சத்யாவிடமும் மட்டுமே நெருங்கிய நட்புடன் பழகினான்.
சத்யா கல்லூரி திறந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான் சேர்ந்தாள். அதற்கு முன்பிருந்தே நானும் சரணும் நெருக்கமான நண்பர்கள் ஆகி விட்டோம்.
முதலில் கொஞ்ச நாட்கள் சத்யா எங்களுடன் ஒட்டவே மாட்டாள். ஒருதடவை சீனியர்கள் அவளை கலாட்டா செய்த போது உதவி செய்ததால் என்னிடம் ஒட்டினாள். அப்போதும் சரணிடம் விலகியே நின்றாள்.
எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் சரண் அவள் ஒதுங்கலை ஒத்துக் கொள்ள முடியாமல் தவித்தான். அப்புறம் எப்படியோ மெல்ல மெல்ல அவளை பேச வைத்து விட்டான். அப்புறம் கிடைத்த பட்டப் பெயர் தான் SSS.
எப்போது எப்படி என்றெல்லாம் தெரியாத ஒரு உணர்வு என்னுள் வேரூன்றி கிடுகிடு வென்று மரமாக முளைக்க ஆரம்பித்தது.
ஆம் நான் சரணைக் காதலிக்கத் தொடங்கினேன். ஆனால் சொன்னால் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் சொல்லாமலேயே என்னுள்ளேயே மறைத்து வைத்து விட்டேன்.
அன்று கல்லூரியின் கடைசி நாள். கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு மாணவ மாணவியரும் பிரியப் போகும் தவிப்புடன் பைத்தியம் போல் சிரித்தார்கள். அழுதார்கள். கலாட்டா செய்தார்கள்.
இன்றாவது நிச்சயமாக சரணிடம் சொல்லி விட வேண்டும் என்று அவனைத் தேடிக் கொண்டு சென்றேன். கல்லூரி இசைக் குழுவில் பாடி முடித்து பலத்த கை தட்டலுடன் கீழே இறங்கியவன் வேக வேகமாக எங்கோ செல்லத் தொடங்கினான். சத்யா கண்ணில் படவில்லை.
பின்னாலேயே சென்றேன். தனித்த வராண்டாவில் யாருமற்ற தனிமையில் சென்று கொண்டிருந்தவனை பெயரிட்டு அழைத்தேன். “சரண், சரண்.” குரல் கேட்டுத் திரும்பியவன். மலர்ச்சியுடன்அருகில் வந்தான்.
“எங்கடா போய்ட்டீங்க. ? காலையில் இருந்து உங்களைப் பார்க்கவே முடியலை.” என்றான்.
பதில் சொல்லாமல், “சரண் உன்னிடம் ஒன்று சொல்லணும்.” என்றேன் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன்.
“என்னடா!” என்றான் .
“நான்… நான்…” வார்த்தை வராமல் தவித்தேன்.
“ஏண்டா! என்ன சொல்.” என்று அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டான்.
என் இதயத் துடிப்பு எனக்கே கேட்கும் போது அவனுக்குக் கேட்காதா. ?
“கூல்டா. ? ஏன் இப்படித் தவிக்கற. ? எதா இருந்தாலும் சொல்.” என்றான்.
அவன் கொடுத்த ஊக்கத்திலும், அவன் கை பற்றல் கொடுத்த தைரியத்திலும் துணிந்து சொல்லி விட்டேன். “நான் உன்னைக் காதலிக்கிறேன் சரண். “
சொல்லி விட்டேனே ஒழிய அவன் முகத்தைப் பார்க்கும் தைரியம் வரவில்லை எனக்கு.
ஆனால் என் கையைப் பிடித்து இருந்த அவன் கை டக் கென்று விடுபடவே நிமிர்ந்து பார்த்தேன். அதிர்ச்சியா.? இல்லை வேறெதாவதா.? அந்த அரையிருட்டில் அவன் முகத்தில் இருந்தது என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
அவனும் வார்த்தை வராமல் “சாந்தி… சாந்தி…” என்று தவித்தவன். “இல்லை. என் நல்ல தோழி நீ… வேறெந்த மாதிரியும் உன்னிடம் பழகவில்லை. மன்னிச்சுக்கடா.” என்று அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்று விட்டான்.
ஒரு அவமானமும் ஆவேசமும் ஏமாற்றமுமான சொல்லத் தெரியாத உணர்வில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் அழுது கொண்டே இருந்தேன். எவ்வளவு நேரம் போயிருக்குமோ தெரியவில்லை.
“என்ன சரண் இது விடுங்க.” என்ற மெல்லிய சிணுங்கலான குரல் மரத்தின் அந்தப் பக்கம் கேட்டது. அந்தக் குரல். அந்தக் குரல். சத்யாவுடையது.
“யார் வரப் போறாங்க கண்ணம்மா.! எல்லோரும் பேர்வெல் பார்ட்டில கவனமா இருக்காங்க.” என்றான் சரண்.
“சாந்தி தேடிட்டு இருப்பா சரண். எப்ப அவகிட்ட நம்ம காதலப் பத்தி சொல்லப் போறேனோ.? தைரியமே வர மாட்டேங்குது.” என்றாள் சத்யா.
ஒரு கணம் மௌனமாக இருந்த சரண். “ஏன்தான் காலேஜ் முடிஞ்சதோ என்று இருக்கு. உன் முகத்தைப் பார்க்காமல், எப்படி இருக்கப் போகிறோனோ.?”
“அப்படியா சார்.? என் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க ஒரு வழி சொல்லட்டுமா.?” என்றாள் சத்யா.
“சொல்லு. கண்ணா.” என்று கொஞ்சினான் சரண்.
“நாளைக்கே உங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்து என்னைப் பெண் கேட்டு கல்யாணம் பண்ணிக்கங்க. அப்புறம் எப்பவும் என் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.” என்று சொன்னவள் சட்டென்று குரல் தழுதழுக்க “ஒத்துக்குவாங்களா.? சரண். உங்க வசதிக்கு.” என்றாள் கண்ணீர்க் குரலில் சத்யா.
“ஏய்! இதென்ன. அம்மா போனதிலிருந்து தாய்க்கு தாயா இருந்து என்னை வளர்கிறவர். எனக்காகவே வாழ்றவர். ஒத்துக்காம போவாரா. முதல்ல கண்ணைத் துடை. இல்லை நானே.” என்றான்.
“ச்சீய். என்ன சரண் இது.?” என்ற சத்யாவின் சிணுங்கல் கேட்கத் தொடங்க ஒலிபெருக்கியில் பரிசு பெறுபவர்கள் மேடைக்கு வரவும் என்ற குரல் கேட்கவே. “வா சத்யா. போலாம்.” என்று நடந்தார்கள்.
அதுவரை அவர்கள் உரையாடலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தேன். கண்ணீர் கூட வற்றி விட்டது.
ஐய்யோ! ஐய்யோ! என்று மனதுக்குள் துடித்தேன். சரண். சத்யாவைக் காதலிக்கிறானா. ? எப்படித் துளி கூட தெரியாமல் போயிற்று எனக்கு. நான் காதலிப்பதாகச் சொன்னதும் அவன் அதிர்ந்ததும் தவித்ததும் இப்போது புரிந்தது எனக்கு. எப்படி வருத்தப்பட்டு இருப்பான் என்பதும் தெரிந்தது.
மனதுக்குள் அவர்கள் இருவரையும் வாழ்த்தியவள் எப்போதும் அவர்களின் உற்ற தோழியாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டு மெல்ல மேடையை நெருங்கினேன். சரண் மேடையில் பரிசு வாங்கிக் கொண்டு இருந்தான்.
கீழே சத்யா நின்று கை தட்டிக் கொண்டு இருந்தாள். நானும் அவளுடன் இணைந்து கொண்டேன். அப்போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது.
விழா மேடை சட்டென்று சரிந்தது. என்ன நடந்தது என்று தெரியாதபடி எல்லோரும் கத்திக் கொண்டு ஓடினோம்.
ஒரு மரப்பலகையின் அடியில் மயங்கிக் கிடந்தான் சரண். உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம். முதுகுத் தண்டில் பலத்த அடி. எலும்பு முறிவு. எப்படியோ உயிர் பிழைத்து விட்டான்.
நானும், சத்யாவும் மாறி மாறி அவனைக் கவனித்துக் கொண்டோம். “வலி. வலி.” என்று கதறினான். எப்படியோ கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்தாலும் அவனால் நடக்க முடியவில்லை. கால் மரத்துப் போனது போலவே இருந்ததாகச் சொன்னான்.
அன்று மருத்துவர் இடி போன்ற செய்தியை அவர் அறைக்கு வரவழைத்து சரண் அப்பாவிடம் சொல்லி விட்டார். “முதுகுத் தண்டில் பட்ட அடியால் அவனால் இனி நடக்க முடியாது. ஒரு பெண்ணிற்கு புருஷனாகும் தகுதியையும் அவன் இழந்து விட்டான்.” என்று. என்னிடமும் சத்யாவிடமும் இதைச் சொல்லிக் கதறினார் சரண் அப்பா.
ஆனாலும் விடவில்லை. எல்லா பெரிய மருத்துவர்களையும் பார்த்தார். ஊஹீம் ஒன்றும் பலனில்லை.
அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சத்யாவின் வருகை குறைந்து போய் கடைசியில் அடியோடு நின்று விட்டது.
என்ன ஏது. ? என்று விசாரிக்கப் போனவளுக்கு அவள் சொன்ன தகவல் பேரதிர்ச்சியாய் இருந்தது. அவளுக்கு “ஒரு பெரிய இடத்துப் பையனை நிச்சயம் பண்ணி விட்டார்கள்.” என்று பெருமையாகச் சொன்னாள். வேறெதுவும் பேசத் தோன்றாமல் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்து விட்டேன்.
ஏன் வரவில்லை என்று தவித்த சரணிடம் எதேதோ பொய்க் காரணங்களைச் சொன்னேன். ஆனாலும் ஒரு நாள் சத்யாவின் கல்யாணப் பத்திரிகை தெரிவித்து விட்டது.
தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு, “அவளாவது நல்லாயிருக்கட்டும்.” என்று வாழ்த்தியவன். சிறிது நேரத்தில் உடைந்து என் கையைப் பிடித்துக் கதறினான்.
“சாந்தி! சாந்தி!!” என்று கூப்பிடும் குரல் கேட்கவே சட்டென்று பழைய நினைவுகளிலிருந்து மீண்டேன். எதிரில் நின்றாள் சத்யா.
“என்னடி! எப்படி இருக்க.?” என்று கையைப் பிடித்துக் கொண்டாள்.
“நல்லாயிருக்கேன்.” என்று விட்டு. “நீ எப்படி இருக்க.” என்று விசாரித்தேன்.
“நல்லா இருக்கேண்டி.” என்றவள், “அருமையான கணவன், இரண்டு பசங்க. ஆனால் நான் இங்கில்லை. கலிபோர்னியா வில் இருக்கேன். விவேக்கிற்கு அங்கேயே வேலை கிடைத்து செட்டிலாகி விட்டோம்.” என்றாள் பெருமையாக. “இப்போ லீவுக்கு வந்திருக்கேன்.”
“நானும் நல்லாயிருக்கேன். இதுதான் என் பையன் சித்தார்த். ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். இங்கே தான் பக்கத்து கிராமத்தில் பண்ணை வைத்து இருக்கிறார்.” என்றேன்.
“சரிடி லேட்டாகி விட்டது. நான் சாமி கும்பிட்டுக் கிளம்பறேன்.” என்று சட்டென்று கிளம்பினாள். இருந்தால் சரண் பற்றிப் பேச நேரிடும் என்று தான் அவசரமாக பேச்சைக் கத்தரிக்கிறாள் என்று புரிந்தது.
பெருமூச்சுடன் வீடு வந்து சேர்ந்தவள். கணவர் கார் நிற்கக் கண்டு “வந்துட்டீங்களா. ?” என்றபடியே வேகமாக உள்ளே சென்றேன்.
“ஏம்மா! எதுக்கு பதர்ற.? சாமி தரிசனம் நல்லா இருந்ததா.?” மென்மையாகக் கேட்டார் சரண்.
ஆம்! சரண் தான். அன்று என்னிடம் கண்ணீர் விட்டுக் கதறிய சரணை அப்புறம் நான் தனியாக விடவில்லை.
என் பெற்றோர் எதிர்த்தனர். ஏன் சரணே ஒத்துக் கொள்ளவில்லை. தியாகம் என்றார் சரண். காதல் என்றேன் நான். அனைவரையும் என் உறுதியான போராட்டத்தால் தோற்கடித்து சரணைக் கைபற்றினேன். ஒரு பையனைத் தத்தெடுத்துக் கொண்டோம். எந்த உறுத்தலுமில்லாத அற்புதமான வாழ்க்கை வாழ்கிறோம்.
“சிஸ்டர். எங்கே போய்ட்டீங்க. காணோம் என்று தவித்துப் போனோம்.” என்றார்கள் அங்கிருந்த பெண்கள். “கோவிலுக்கு…” என்று புன்னகைத்தாள் சத்யா. ஆம் அன்று கலிபோர்னியா கிளம்பும் சேவைக் குழுவில் அவளும் ஒருத்தி. பெருமையாக விவேக்கை கல்யாணம் பண்ணிக் கொண்டவளுக்கு அப்புறம் தான் அவன் சுயரூபம் தெரிந்தது. வெளியே பணக்காரனாகத் தெரிந்த அவனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை. குடித்தே அவன் அழிந்த போது, அவன் சொத்தில் மிஞ்சியது அவர்கள் குடி இருந்த வீடு மட்டுமே. இந்தப் பிறவிக்கு வேண்டிய அத்தனையும் அனுபவித்து விட்ட வெறுப்புடன் அந்த வீட்டை தகுதியான ஒரு சேவை மையத்திற்குக் கொடுத்து விட்டு அங்கேயே தங்கி விட்டாள்.
என்றாவது சத்யாவின் வாழ்க்கை சாந்திக்கும், சாந்தி – சரண் வாழ்க்கை சத்யாவிற்கும் தெரிய வரலாம். அதுவரை காலம் கண்ணாம் பூச்சி விளையாடட்டும்…
3 Comments
எந்த உறுத்தலுமில்லாத அற்புதமான வாழ்க்கை//
இதுதான் காலம் போடும் கணக்கு.
அருமையான கதை.
Unexpected climax.I am sorry to make a comment here.Though boys are bad in their teenage,at times girls are also bad in taking good decisions.ஆனால் இக்கதை மிகுந்த மன நிறைவை அளித்தது.ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.Very crispy and lucid presentation.Congrats and best wishes with Greetings.
எதிர்பாராத திருப்பங்கள்.
வாழ்த்துகள்.